Friday, October 23, 2009

திருவண்ணாமலை to திருச்சி...

கல்லூரி முடித்தபின் பல நாள் தேடலுக்குப் பின் வேலை தானாக ஒரு சிறு தனியார் நிறுவனம் மூலமாக என்னைத் தேடி வந்தது. சில காலம் (ஒரு மாதம் என நினைக்கிறேன்) சென்னையில் அந்த நிறுவனத்தில் website developer ஆக பணியாற்றினேன். அந்த காலகட்டம் கணினி வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை மிகவும் பின் தங்கி இருந்ததால் என்னைப் போன்ற புதியவர்களுக்கு வேறு வகையான வேலை காத்திருந்தது. அதுதான் கற்பித்தல் பணி. என்னை ஒரு ஆசிரியர் என்று சொல்லிக்கொள்ள இயலாவிட்டாலும், அந்த வேலை அப்படிப்பட்டதுதான். அப்போதுதான் JAVA program பிரபலமாகி வந்த நேரம், எனவே அதனை கல்லூரி மாணவர்களுக்கு கற்றுத்தரும் பொருட்டு என்னைப்போன்றவர்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து அந்த தனியார் நிறுவனம் சார்பாக பல்வேறு கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அப்படி ஒரு குழுவில் (மூவர்) முதலாவதாக நான் சென்றது அருணை பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை. அதுவரை திருவண்ணாமலை பக்கம் நான் வந்ததில்லை. அருணாசலேஸ்வரர் கோயிலை தரிசிக்கும் வாய்ப்பும் அப்போதுதான் கிடைத்தது. தெய்வீகமான ஊர், ஆனால் அடிப்படை வசதிகளிலும், மக்களின் படிப்பறிவு மற்றும் பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கிய ஊர். எளிமையான ஆனால் பார்ப்பதற்கு கரடுமுரடான மக்கள். தொழிலாளர்கள் நிறைந்த ஊர் என்பதால் நிறைய தியேட்டர்கள், நிறைய குறைந்த விலை ஓட்டல்கள் உண்டு. அருணாசலேஸ்வரரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் எப்போதும் உண்டு. திருவண்ணாமலை சிறிய நகரம் என்றாலும் பேருந்துப் போக்குவரத்து அதிகம் கொண்டது. ஆந்திரா (சித்தூர், திருப்பதி), கர்நாடகா (பெங்களூர்) மாநிலம் செல்லும் பேருந்துகளும் மிக அதிகம்.


அருணை கல்லூரியைப் பொறுத்த வரை ஒரு பரந்த, செழிப்பான மற்றும் அழகான கல்லூரி. ஒரு மாணவனாக இருந்ததற்கும் இப்போது ஒரு பொறுப்புள்ள வேலைக்காக கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதற்கும் மனநிலையில் பல வேறுபாடுகள் உள்ளதை அறிந்தேன் - உண்மையில் உள்ளுக்குள் நிறைய பயமே இருந்தது. எங்களுக்கு அக்கல்லூரியின் விடுதியில் தங்கவும் உண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்கள் நிறுவனத்தின் திட்டப்படி கல்லூரி முடிந்த பின், மாலையில் JAVA கற்றுக்கொள்ளும் ஆர்வமுடைய மாணவர்களுக்கு அக்கல்லூரி வளாகத்திலுள்ள கணினிக்கூடத்திலேயே வகுப்புகள் நடைபெற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. மொத்தம் ஒன்பது மாணவர்கள் மட்டுமே JAVA கற்க விருப்பம் தெரிவித்திருந்தனர். மாணவர்களின் எண்ணிக்கையை கூட்டுவதும் எங்களுக்கு கொடுக்கப்பட்ட இன்னொரு பணி.

முதல் நாள். வகுப்பறையில் நுழைந்ததும், மாணவர்கள் எழுந்து "good evening sir" என்று சொன்னவுடன் மனதுக்குள் என்னவோ செய்தது. இதற்கு நான் தகுதியானவன்தானா? தெரியவில்லை... அப்போது ஒரு கணம் என் அப்பாவை நினைத்துக் கொண்டேன். என்னை ஒரு ஆசிரியராக்கவே அவர் விரும்பினார் (ஏனென்றால் அவரும் ஒரு ஆசிரியர், என்னை அதற்காக வற்புறுத்தவில்லை), நான்தான் ஒரு பொறியாளனாக விரும்பி BE படித்தேன். இப்போது அவர் விரும்பிய மாதிரியே சில மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராக வந்திருக்கிறேன். ஒரு விதத்தில் என் அப்பாவின் ஆசையையும் நிவர்த்தி செய்துள்ளேன்.

முதல் நாள் வகுப்புக்கு செல்லும் முன் ஏதேதோ பேச தயார் செய்தும் வகுப்பறையில் அதனை முழுமையாக வெளிக்கொணர முடியவில்லை. "45 நிமிடம்தானே வகுப்பு எடுக்கப் போகிறோம், பார்த்துக்கொள்ளலாம்" என எண்ணியதில் மண் விழுந்தது. நான் தயார் செய்து வந்ததை முதல் பத்து நிமிடங்களுக்குள் எடுத்து முடித்துவிட்டேன். சற்றும் யோசிக்காமல் மீதி நேரத்தை என் பொது அறிவுக்கு எட்டியதை வைத்து முடிந்தவரை கோர்வையாக எடுத்தேன் (முதல் நாள் ஆயிற்றே, ஆசிரியர் சரியில்லை என்று அடுத்த நாள் இந்த மாணவர்களும் வகுப்பிற்கு வராமல் போய்விட்டல்?). ஆச்சரியம், அதுவரை தேமே என்று உட்கார்ந்து இருந்த மாணவர்களிடம் இப்போதுதான் புத்துணர்ச்சி தெரிந்தது. சரி, இதுதான் நமது பாதை என்று முடிவு செய்து கலந்துரையாடல் மூலம் வகுப்புகளை நடத்த ஆரம்பித்தேன். என் அப்பா வகுப்பெடுப்பதை நான் சிறு வயதிலேயே பார்த்திருந்ததால் இது எனக்கு எளிதாக முடிந்தது என நினைக்கிறேன். அனாயசமாக அவர் வகுப்பெடுப்பதை பள்ளியில் அவருடன் சில நாட்கள் கூட இருந்து பார்த்திருக்கிறேன். ஒரு தமிழாசிரியராக வெறுமனே பாடத்தை மட்டும் நடத்தாமல் மாணவர்களுக்கேற்ற நகைச்சுவை கலந்து கண்டிப்பு குறையாமல் அழகாக வகுப்புகளை நடத்துவார். (சாதரணமாக அவர் யாருடனும் உரையாடும்போது் கூட அதில் சுவாரஸ்யம் கலந்திருக்கும்).

மாலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே வகுப்புகள் என்பதால் அடுத்த வகுப்புக்கு தயார் செய்ய நிறைய நேரம் கிடைக்கும். அதேபோல் வார விடுமுறை நாட்களில் அதிகமாக தியேட்டருக்கும் ஓரிரு முறை கோயிலுக்கும் சென்று வந்தோம். சரியாக மூன்று வாரங்களில் என்னை திருச்சி ஜே ஜே கல்லூரிக்கு அதே வேலைக்கு மாற்றினார்கள்.

திருவண்ணாமலையப் போலவே திருச்சியும் தெய்வீகமான ஊர்.

வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள். திருச்சி மக்களின் படிப்பறிவு, வாழ்க்கை தரம் ஆகியவை திருவண்ணாமலையை விட பன்மடங்கு அதிகம், நாகரிகமான மக்கள். வகுப்பை பொறுத்தவரை திருவண்ணாமலையின் கதையே இங்கும் தொடர்ந்தது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் இன்னும் ஆர்வமாக வகுப்புகளை எடுக்க முடிந்தது. மாணவர்களுடனான புரிதல் அதிகம் என்பதால் சிரத்தையின்றி பாடங்கள் வேகமாக முடிந்தன. பின்னர் செமஸ்டர் விடுமுறையில் மாணவர்கள் அவரவர் ஊருக்கு சென்றுவிட்டதால் என்னை வேறு ஒரு கல்லூரிக்கு அனுப்ப என் நிறுவனம் தயாரான போது 'எப்படியும் ஆசிரியர் தொழில்தான் என ஆயிற்று, அதை ஊர் ஊருக்கு மாறி மாறி செய்யாமல் இங்கேயே சேர்ந்துவிட்டால் என்ன?' என எண்ணி நான் ஜே ஜே கல்லூரியிலேயே கல்லூரி ஆசிரியராக பணி மாறினேன். திருச்சி பிடித்துப்போனதும் ஒரு காரணம்.

என்னைப் பொருத்தவரை ஜே ஜே கல்லூரியில் பணியாற்றியபோது சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமே இல்லை. நான் அங்கு ஆசிரியராக சேர்ந்த சில நாட்களிலேயே என் நண்பன் சௌந்தரும் வந்து ஆசிரியராக சேர்ந்தான். நாங்கள் படிக்கும்போது கல்லூரியில் அடித்த லூட்டிக்கு நேரெதிராய் நடந்துகொண்டோம் (இது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?). அவனும் என்னைப்போலவே முதலில் வகுப்பறையில் கொஞ்சம் கஷ்டப்பட்டான், ஆனால் என்னைவிட விரைவாக சமாளித்துவிட்டான். நாங்கள் கணினிப் பிரிவை சார்ந்ததால் எங்களுடன் சேர்த்து மொத்தம் மூவர் மட்டுமே ஆண்கள், மற்ற ஆறு பேரும் பெண்கள். நல்ல நாளிலேயே நாங்கள் இருவரும் பெண்களிடம் பேசியதில்லை, இதில் இங்கே என்னடா சோதனை என இருவரும் புலம்பினோம். ஆனால் போகப்போக அந்த ஆறு பேரும் எங்களிடம் ரொம்ப இயல்பாக பழக அங்கு ஒரு நட்பு வட்டம் உதயமானது. அது மற்ற பிரிவு ஆசிரியர்களிடம் பொறாமைத் தீயை எண்ணையூற்றி வளர்க்கும் அளவுக்கு வளர்ந்தது வேறு கதை.

ஜே ஜே கல்லூரியில் பணிபுரிந்த போது நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகள்:

1. நானும் சௌந்தரும் சமைக்க கற்றுக் கொண்டது, மேலும் எவ்வளவு கேவலமாக சமைத்திருந்தாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிடவும், சாப்பிட்ட பின் கை கழுவுறோமோ இல்லையோ மறக்காமல் "சாப்பாடு நல்லாருக்குடா"ன்னு சொல்லவும் கற்றோம்.
2. அடுப்பு, சட்டி எதுவுமே இல்லாமல் (ஏன் கடலையே இல்லாமல் கூட) மணிக்கணக்காக கடலை வறுத்தெடுக்கக் கற்றது.
3. எனக்கு மிகவும் பிடித்த தேசிய மாணவர் படையில் (NSS) துணை பொறுப்பாசிரியர் பணியாற்றும் வாய்ப்பு. ~60 மாணவர்களுடன் தங்கிய அந்த 13 நாட்களை என்னால் மறக்கவே முடியாது. அதிலும் மேடையில் பல முக்கிய பிரமுகர்களின் முன் யதேச்சையாக அமைந்த எனது கண்ணிப் பேச்சு அனைவரின் பாராட்டை பெற்றது முக்கியமானது (வழக்கமாக அந்தப் பணியை செய்யும் பொறுப்பாசிரியர் அன்று அங்கு இல்லாததால் நான் பேசும்படி ஆனது).
4. கல்லூரிக்கென்று தனியாக இருக்கும் இசைக் குழுவினருடனான தொடர்பு. அவர்கள் ஒரு கச்சேரிக்கு தயாராகும் பாங்கை காண அவ்வளவு அழகாக இருக்கும் (அதில் உள்ள பல்வேறு சிரமங்களையும் அறிய முடிந்தது).
5. மாணவர்களுடன் கிரிக்கெட் ஆடியது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான ஒரு போட்டியில், வழக்கம்போல் பலவித பந்தா செய்து பேட்டை பிடித்து நான் நிற்க, அம்பயர் (என் நேரம் அவனும் ஒரு மாணவன்), "சார், பேட்ட இப்பிடி திருப்பி புடிங்க சார்"-னு என் மானத்தை வாங்கினான்... "எல்லாம் தெரியும், வேணும்னுதான் இப்பிடி புடிச்சிருக்கேன், நீ பந்த போட சொல்லுப்பா"-ன்னு சமாளித்து தொலைத்தேன்.
6. கல்லூரியில் பணிபுரிவோர் சிலரின் குடும்பத்துடனான தொடர்பு. நானும் சௌந்தரும் போகுமிடமெல்லாம் தாயன்புடன் பழகுவோரின் தொடர்பு நிச்சயம் கிட்டும், இங்கேயும் அப்படியே.

7. கணினி பிரிவு ஆசிரியர்களுக்குள்ளே இருந்த ஒற்றுமை HOD கொடுக்கும் வேலையை முடிக்காமல் எல்லோருமாக சேர்ந்து டிமிக்கி கொடுப்பது முதல் தியேட்டர் சென்று படம் பார்ப்பது வரை இருந்தது.
8. என் நெருங்கிய நண்பன் ராஜாவின் சகோதரனை இழந்தது.
9. கல்லூரியில் சேர்ந்த முதல் வாரத்தில் திருச்சி பேருந்தி நிலையத்தில் நின்றிருந்த சில கல்லூரி பெண்களை (ஜே ஜே கல்லூரியில் படிப்பவர்கள் என தெரியாமல்) லுக் விட்டபடியே கடந்து சென்றபோது அப்பெண்கள் எங்கள் இருவரையும் பார்த்து "good evening sir" சொன்னது ('நாங்க அப்பிடியே shock ஆயிட்டோம்' என்பதை சொல்லவும் வேண்டுமா?).
.... இப்படி இன்னும் பல.

"ஆக, பாடம் நடத்துவதைத் தவிர மற்ற எல்லாத்தையும் பண்ணி இருக்கீங்க"-ன்னு நீங்க நினைக்கிறதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன். நான் JAVA கற்றுக்கொடுக்கும்போது இருந்த சுவாரஸ்யம் கல்லூரி ஆசிரியரான பின் இல்லை, காரணம் - தியரியை அதுவும் புத்தகத்தில் இருப்பதை அப்படியே படித்து அதை வகுப்பில் ஒப்பிப்பது எனக்கு ஒத்துவரவில்லை (மென்பொருள் சார்ந்த அல்லது அதன் உருவக்கத்தில்தான் என் நாட்டம இருந்தது எனவும் வைத்துக் கொள்ளலாம்). சரியான வாய்ப்பு ஒன்று எனது மற்றொரு நெருங்கிய நண்பன் ராம்குமார் மூலம் என்னைத் தேடி வர, திருச்சி நண்பர்களின் வேண்டுகோளுக்கு மாறாக சென்னை வந்துவிட்டேன். அதன்பிறகு திருச்சி செல்லும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை. "ஈரம்" படம் பார்க்கும்போது திருச்சியின் நினைவுகள் எனக்குள் வந்து சென்றது - என்ன ஒரு அழகான ஊர்.

No comments:

Post a Comment