Monday, October 26, 2009

365 நாட்கள் முழுதாய் கடந்துவிட்டன‌




குழலும் யாழும் கசந்து 365 நாட்கள் முழுதாய் கடந்துவிட்டன‌
எங்கள் அன்புச் செல்லமே இன்று உன‌க்கு பிறந்த நாள்

உறவுமுறை பெயர் சொல்லி எப்போதாவது நீ அழைத்ததும்
-(அம்மா, அப்பா, தாத்தா, மாமா, அத்தை)
உருகி உருகி திரும்பச் சொல்லக் கேட்கும்போது நீ காட்டும் பிகு என்ன

உன் அசைவும் அழுகையும் எமக்கு தலைப்புச் செய்தியென்றானபின்
அரசியலும் அறிவியலும் பெட்டிச் செய்தியானதில் வியப்பென்ன

அயர்ந்து வீடு சேர்கையில் 'அப்பா' என தவழ்ந்து நீ என் மடி சேர்கையில்
நான் அடைந்தது ஆனந்தத்தின் உச்சம் அன்றில் வேறென்ன

நீ உறங்குகையில் மறுபக்கம் ஓடிச் சென்று கட‌மைக்காக‌ ஒளி கொடுத்து
உன் குறும்புகளை தரிசிக்க‌ சூரியனும் முன்னமே உதயமாவதென்ன‌

அழுகைக்குப்பின் அரவணைப்பை அறிந்த நீ இப்போது
அழுது அழுதே வேண்டியதை சாதிக்கும் குறும்பென்ன

கரும்புகூட‌ கசக்கும் என்றால் இவ்வுலகமும் நம்புமா
உன் மழலையைக் கேட்ட‌பின் அதே உலகம் மறுக்கவும் இயலுமா

கள்ளமில்லா உன் வெடிச்சிரிப்பு எம் புத்துணர்ச்சிக்கு உரமானவை
காட்சியில்லா அழகு ஓவியங்கள் கைகளால் காற்றில் நீ வரைபவை

உன் குரல் வழியே வார்த்தெடுக்கலாம் பலப்பல‌ ச‌ந்தங்கள்
உன் வரவு எமக்குச் சொன்னது ஆயிரமாயிரம் சங்கதிகள்

உன் கண்சிமிட்டலில் மதிமயங்கிய கதையை என்னிடம் தினமும் சொல்லுது நிலவு
உனை நிதமும் கைகளில் ஏந்திட ஏங்கும் இந்த மனதுக்கு வேறேது உலகு

உனக்கு வாழ்த்து சொல்ல வழி செய்த இந்த இணைய வழி கடிதத்துக்கு எம் நன்றி!
காரணம் எதுவாயினும் இந்த இடைக்கால பிரிவைக் கொடுத்த காலத்துக்கும் எம் நன்றி!

அன்பு மகனுக்கு முதல் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

-முத்துக்குமார்

2 comments:

  1. அன்பு நிரஞ்ஜனுக்கு, மாமாவின் இனிய பிறந்த நாள் வழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!!

    பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை...
    உறவோடு சில காலம், பிரிவோடு சில காலம்
    நாம் வாழ்வோம் வா..

    ReplyDelete
  2. //பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை...
    உறவோடு சில காலம், பிரிவோடு சில காலம்
    நாம் வாழ்வோம் வா.//
    அய்யோ, பின்றடா சீனி. 'செப்டம்பர் மாதம்' பாடலிலிருந்து சரியாக சுட்டிக்காட்டப்பட்ட வைரமுத்துவின் அருமையான வரிகள்.

    ReplyDelete