Friday, October 30, 2009

என் நண்பர்களைப் பற்றி ஓரிரு வரிகள்

அம்மா: எதையும் சொல்ல தயங்க தேவையில்லாத என் முதல் நண்பர்.  என்னை முழுவதுமாக புரிந்துகொண்ட, யாருக்காகவும் எதற்காகவும் என்னை விட்டுகொடுக்காத, என்மேல் கண்ணாபின்னாவென்று பாசத்தையும் செல்லத்தையும் கொட்டும் எனக்கே எனக்கான நண்பர்.

அப்பா: நான் விரும்பியதை செய்ய முழு மனதோடு அனுமதித்து, முழுமையாக நம்பி என்னை ஆதரிக்கும் என் மிகச்சிறந்த நண்பர் (நான் வீட்டிலிருக்கும் போது அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக்கு்வோம்). அவரது முன்னெச்சரிக்கைக்கும், புத்திசாலித்தனத்துக்கும் நான் அடிமை. பலவிதங்களில் எனது ரோல் மாடல்.

மனைவி: சிறந்த தோழி, இந்தப்பெண்ணைப்போல் திருமணத்திற்கு முன் யாரும் என் கண்ணில் பட்டிருந்தால் நிச்சயம் நானும் காதல் வயப்பட்டிருப்பேன். எங்கள் குடும்பத்துக்கு கடவுளின் வரம்.



Cousin திவ்யா: அவர்கள் வீட்டுக்கு மட்டுமல்ல, எங்கள் வீட்டுக்கும் அவள்தான் குட்டி தேவதை. எங்கள் செல்லத்தைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த அண்ணனுக்காக எதையும் செய்பவள், புத்திசாலி. எங்களின் உயிர்.

ரூபகா: சகோதரியாகவே (அக்கா) அறிமுகமானவர், பல வழிகளில் என்னை பக்குவப்படுத்தியவர். அரட்டை அடிப்போம், அது சண்டையில்தான் போய் முடியும். ஒரு சண்டை முடிவுக்கு வந்த சில நிமிடங்களில் அடுத்த சண்டையில் தீவிரமாக இருப்போம். ஆனால் அந்த சண்டையும் சில நிமிடங்கள்தான் நீடிக்கும் - "சண்டை-சமாதானம்-திரும்ப சண்டை-திரும்ப சமாதானம்". ஒரு நாள் சண்டை இல்லை என்றால் எங்களுக்கு என்னவோ போல் ஆகிவிடும். இன்று குடும்ப பொறுப்புகள் வந்துவிட்டதால் அதிகமாக பேசிக்கொள்வதில்லை, எனவே சண்டை இல்லை.

கோகிலா: என்னைப் பக்குவப்படுத்திய இன்னொரு நண்பி. எதையும் positive-ஆக எடுத்துக்கொள்ளும் மனமுடையவர். நான் அடிக்கும் ஜோக்குக்கும் சிரிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர். தன்னை வருத்தியாவது பிறர் மனம் புண்படாமலிருக்க முயல்பவர். எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறனுடைய சிறந்த உழைப்பாளி. என்னை நன்றாக புரிந்தவர் (நான் எப்போது பொய் சொல்வேன், நான் எப்போது உண்மை சொல்வேன் என்பது உட்பட).

ராஜா: எங்கள் பிணைப்பு பற்றி எனக்கு உண்மையில் சொல்லத் தெரியவில்லை. சுருக்கமாக சொன்னால், என் பூர்வ ஜென்ம புண்ணியம் இவனுடன் எனக்கான பழக்கம்.


சௌந்தரராஜன்: ரஜினி-கமல் நட்பிற்கு போட்டி எங்கள் இருவரது நட்பு. வெள்ளை மனம் மற்றும் வெளிப்படையாக பேசுவதன் பலனை இவனிடம்தான் கற்றுகொண்டேன். பல சமயங்களில் எனக்கு தோள் கொடுத்து என்னுடன் நின்றவன். எங்களுக்குள் போட்டியும் பொறாமையும் இருந்தாலும் அது எங்கள் நட்பை பாதித்ததில்லை. என்னால் நிச்சயமாக ஒன்றில் மட்டும் இவனுடன் போட்டி போடவே முடியாது - அதுதான் அவனது இரக்க குணம். இவனுடன் சண்டை போட்டதில்லை ஆனால் பேசாமல் இருந்திருக்கிறோம். எனக்குள் ஒருவன்.



ராம்குமார்: அனைத்து விதங்களிலும் எனக்கு (மட்டுமல்ல அனைத்து நண்பர்களுக்கும்) உறுதுணையாக இருப்பவன். சோர்ந்தபோதெல்லாம் தன் நண்பர்களை தோள் கொடுத்து தூக்கி விடுபவன். Very active person. நான்கூட அவனிடம் சில சமயங்களில் கோபப்பட்டுள்ளேன், ஆனால் அவன் என்னிடம் கோபப்பட்டதாக எனக்கு நினைவில் இல்லை. தன்னால் இயன்றதை செய்ய எப்போதும் தயாராக இருக்கும் திறந்த மனமுடையவன். எங்கள் நண்பர்கள் வட்டத்திலேயே தைரியசாலி மட்டுமல்ல மிகுந்த திறமைசாலியும் கூட. இவனிடம் இன்னும் நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. நட்புக்கு இவன் இலக்கணம் என்றால் அது மிகையில்லை.

விஜயபாரதி: எங்களுக்குள் பலவிதங்களில் ஒற்றுமைகள் உண்டு. எனது ரசனையுடன் முற்றிலும் ஒத்துப்போனவன். இருவரும் பங்காளிகள், ஆனாலும் சண்டையிடாத பங்காளிகள். :) கல்லூரி முடித்த பின்னும் இருவரும் ஒன்றாகவே பல ஊர்களை சுற்றிக் கொண்டிருந்தோம். நண்பர்கள் கூடி இருக்கும்போது இவனது நக்கல் ஆரம்பிக்காதவரை மட்டுமே situation நமது கண்ட்ரோலில் இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தமானவன்.

சீனிவாசன்: பள்ளி நாட்கள் தொட்டு என்னுடன் பழகி வருபவன். கல்லூரிக்கு சென்றபின் சில வருடங்கள் தொடர்பில் இல்லாமலிருந்து பின் சென்னையில் இணைந்தோம். பிறர் தயவின்று தனது திறமையால் முன்னுக்கு வர வேண்டும் என மன உறுதி கொண்டவன். எனது நலன் விரும்பிகளில் முக்கியமானவன். என்னுடனான நட்புக்கு மிகுந்த மதிப்பளிப்பவன் (நன்றிடா நண்பா). என்னிடமுள்ள நல்ல-கெட்ட விஷயங்களை நயமாக எடுத்துச்சொன்னவன். எனது வளர்ச்சியில் இவனுக்கும் முக்கிய பங்குண்டு.

மாதேஸ்வரன்: குடும்ப நண்பர். அவரும் அவரது குடும்பமும் அனைத்து விதங்களிலும் எங்கள் குடும்பத்துடன் ஒத்துப்போனவர்கள். குறுகிய காலத்திலேயே நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். மணிக்கணக்காக அதிகாலை 3 மணி வரைகூட குடும்பத்துடன் சேர்ந்து அரட்டை அடித்திருக்கிறோம். அதிராமல் எப்போதுமே சாந்தமாக பேசுபவர். திறமைசாலி மட்டுமல்லாது தகவல் களஞ்சியமாக வலம் வருபவர் (அதனால் எனக்கு அவர்மேல் அளவுகடந்த பொறாமை உண்டு). தன்னை வருத்திக்கொண்டு அடுத்தவர்களுக்கு உதவும் மனமுடையவர். இவரை யாரும் எந்த உதவிக்காகவும் எந்த நேரத்திலும் அனுகலாம் என்பதை தன் நடவடிக்கைகள் மூலம் சொல்லாமல் சொல்பவர். இவர் என் நண்பர் என சொல்லிக்கொள்வதிலேயே எனக்கு நிறைய பெருமை.



குறிப்பு: இன்னும் பல நண்பர்கள் இருக்கிறார்கள், என்னுடனும் என் குடும்பத்துடனும் நெருங்கிப் பழகிய நண்பர்களைப் பற்றி மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளேன்.

நீங்கள் அனைவருமே எனது பொக்கிஷங்கள். உங்களின் உதவியும், ஊக்கமும், ஆதரவும், அரவணைப்பும் இல்லையென்றால் இன்று இந்த நிலையில் நானிருக்க வாய்ப்பில்லை. உங்கள் அனைவருக்கும் என் நன்றியை வணக்கமாக செலுத்துகிறேன். நம் பிணைப்புக்குக் காரணமான நம்  உறவுக்கும், நட்புக்கும் என் வணக்கங்கள்.

-முத்துக்குமார்.

No comments:

Post a Comment