Monday, November 14, 2011

7ம் அறிவு

நான் சமீபத்தில் ரொம்பவும் எதிர்பார்த்த திரைப்படம், 7ம் அறிவு. அதற்கு ரெண்டே காரணந்தான்: 1. சூர்யா 2. முருகதாஸ்.

சூர்யா, விதவிதமான கேரக்டர் பண்ணி அசத்திட்டு வர்றார் - அதுல எனக்கு ரொம்பப் பிடிச்ச படங்கள்னா மெளனம் பேசியதே, பிதா மகன், ஜில்லுன்னு ஒரு காதல், காக்க காக்க, கஜினி & அயன். இந்த ஆறு படத்தையும் எத்தன முறை பாத்தேன்னு எனக்கே தெரியாது, குறிப்பா ஜில்லுன்னு ஒரு காதல். திரைக்கு வெளியில, அவரோட "அகரம்" என்னை ரொம்ப ஈர்த்துச்சு. அகரம் மூலமா பயன் பெரும் பிள்ளைகள நான் நேரடியா சந்திச்சு இருக்கிறதால அகரத்தின் செயல்பாடுகள் மேலயும் அவர் மேலயும் ரொம்பவே மதிப்பு வந்துச்சு. இவர் மேடைகள்ல & பேட்டிகள்ல ரொம்ப நாகரிகமா உண்மைய பேசுறதால இவர் எனக்கு ரொம்பப் பிடிச்ச நடிகராயிட்டார்.

முருகதாஸ், ரமணா & கஜினி படங்கள்ல திரைக்கதையிலையும் நல்ல மேக்கிங்-லயும் அசத்தின இயக்குனர். 7ம் அறிவு டிரெயிலர் பாத்துட்டு உண்மையிலேயே அசந்துதான் போனேன். ஹாரிஸ் வேற பாட்டெல்லாம் கலக்கி இருந்தாரு.

இந்த தீபாவளி சூர்யாவோடதான்னு முடிவோடதான் ஊருக்கு போனேன். ஆனா ஊருக்கு போனாத்தான் தெரியுது மொத 3 நாள் புல்லா ஏற்கனவே புக் ஆயிருச்சுன்னு. டேய், நம்ம ஊருல என்னிக்குடா புக்கிங் எல்லாம் ஆரம்பிச்சாங்கன்னு கேட்டா இந்த படத்துக்குதான்னு சொன்னாங்க. கண்ட படத்துக்கெல்லாம் பக்கத்து தியேட்டர்ல டிக்கெட் இருக்குதேடான்னு யோசிச்சப்பதான் தெரிஞ்சுது நம்மல மாதிரியே இந்த படத்த ரொம்ப பேர் எதிர்பாத்துட்டு இருக்காங்கன்னு... தீபாவளி முடிஞ்சு 4 நாள் கழிச்சுதான் எங்களுக்கு டிக்கெட்டும் கெடச்சுச்சு.

படமும் பாத்தாச்சு.... ஹாரிஸ் மற்றும் ரவி.கே.சந்திரன் கூட்டணியோட கஜினி மாதிரி இன்னொரு பிரம்மிப்பை உண்டாக்கும் மிக அருமையான வாய்ப்பு இந்தப் படத்தில் இருந்தது. ஆனா நாம் எதிர்பார்த்த அல்லது அவர்கள் ஏற்படுத்திய பில்ட் அப் அளவுக்கு படம் இல்ல, இருந்தாலும் இந்த படம் நிச்சயம் ஒரு வித்தியாசமான படம்தான். எதனாலன்னு கடைசியில சொல்றேன்.

படத்தோட ஆரம்பத்துல வரும் போதிதர்மன் வரலாறு, பாக்க ரொம்ப நல்லா இருந்தாலும், டல்-லான வசனமும் சுரத்தையே இல்லாத பின்னணி குரலும் நம்மல "ஐயோ"-ன்னு புலம்ப வைக்குது. அதையும் மீறி அந்த பகுதி நல்லா இருந்துச்சுன்னு சொன்னா, அதுக்கு காரணம் ஒளிப்பதிவும், சூர்யாவும்தான். ரெண்டு பேரும் முடிஞ்ச அளவுக்கு பின்னி இருக்காங்க. "போதி தர்மன் பற்றி சிறு குறிப்பு வரைக"-ங்குற கேள்விக்கான பதில்தான் அந்த 20 நிமிடங்கள். போதிதர்மணா வர்ற சூர்யாவோட கண்ணு ரொம்ப பவர்புல், அந்த பவர் திரும்பவும் க்ளைமேக்ஸ்ல சூர்யா கண்ணுல வரும்போது நமக்கு புல்லரிக்குது.

படத்தோட மொத பாதியில சூர்யாவோட கேரக்டர் பத்தி சரியா சொல்லாததால, அவர் ஸ்ருதி-கிட்ட காதல்ல வழியும்போது ரொம்ப செயற்கையா இருக்கு... ஸ்ருதியோட பின்னணி பத்தியும் சொல்லவே இல்ல. கஜினி மாதிரியே ஹீரோ ஹீரோ-இன்னுக்கு அவங்க பின்னணி பத்தி சொல்லாம விட்டுட்டா, மக்கள் ஏத்துப்பாங்கன்னு முருகதாஸ் தப்புக் கணக்கு போட்டுட்டாரா? கஜினியும் இந்த படமும் ஒண்ணா? சூர்யாவ எதுக்கு சர்க்கஸ் செய்றவனா காட்டணும்? சரி, அது போகட்டும். ஸ்ருதி, சூர்யாகிட்ட "நீ போதிதர்மன் பரம்பரையில வந்தவன்"-னு சொன்னதும், சூர்யாவுக்கு எப்பிடி இருந்திருக்கணும்? ஆனா சூர்யா முகத்துல எந்த ரியாக்ஷனும் இல்ல. படத்தோட ஆரம்பத்துல போட்ட அந்த போதிதர்மன் வரலாற, படத்தோட இந்த எடத்துல ஸ்ருதியோட பின்னணி குரல்லயே வச்சு, அத கேட்டவுடனே சூர்யா முகத்துல ஒரு பிரம்மிப்பும் பெருமையும் வர்றா மாதிரி வச்சிருந்தா, படத்தோட முதல் பாதி எங்கயோ போயிருக்கும். ஆனா அப்படி வச்சா அது படத்துல வர்ற வெறும் கதைன்னு மக்கள் நினைச்சுக்குவாங்கன்னு, தனியா படத்தோட ஆரம்பத்துலையே வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

பாட்டெல்லாம் கண்ணா பின்னான்னு சுத்தமா செட் ஆகாத எடத்துல வருது. டூயட்ல ரெண்டு பேரும் ஒட்டியும் ஒட்டாத மாதிரி நடிச்சிருக்காங்க? ஸ்ருதி, சூர்யாவோட காதலுக்கு NO சொன்ன உடனே "எம்மா எம்மா" பாட்டு வருது... அது ஒரு சோக பாட்டு, ஆனா சூர்யா ரொம்ப ஜாலியா ஆடி பாடிட்டு இருப்பாரு, மொகத்துல கொஞ்சம் கூட சோகமே இருக்காது... ரொம்ப எதிர்பார்த்த க்ளைமாக்ஸ் பாட்டு தனியா கேட்க அவ்ளோ அருமையா இருந்துது, ஆனா படத்துல கல்யாண விடியோ ஆல்பம் மாதிரி அங்க என்னமோ ஓடிட்டு இருக்கு, பாட்டு ஒரு பக்கம் தனியா ஓடிட்டு இருக்கு. நமக்கு மறுபடியும் "ஐயோ" புலம்பல்தான்.

அந்த "நோக்கு வர்மம்" கலைய இன்னும் நேர்த்தியாவும் கம்மியாவும் பயன்படுத்தி இருக்கலாம். "நாம முருகதாசுக்கு உதவி இயக்குனரா இருந்திருந்தா கூட, இந்த காட்சிய இன்னும் நல்லா கொண்டு வந்திருக்கலாமே, இவனுங்களுக்கு ஏன் தோன மாட்டேங்குது"ன்னு அடிக்கடி புலம்ப வச்ச இடங்கள் நெறையா இருக்குது படத்துல...

ஆனா இந்த பொலம்பலை எல்லாம் தாண்டி படம் கலக்குச்சுன்னு சொன்னா அது படத்தோட விறுவிறுப்பான ரெண்டாம் பாதிதான். நோக்கு வர்மம், வியாதி பரவுவது, வித்தியாசமான வில்லன், புத்திசாலி ஹீரோ-இன், DNA-வ தூண்டிவிடுறது, போதி தர்மன், தமிழனின் அழிப்பு, திருப்பி அடிக்கிறதுன்னு முருகதாஸ் எந்திரிச்சு நிக்கிறார். இந்தப் படத்தை மத்த படத்துல இருந்து வித்தியாசப்படுத்துறதும் இவைகள்தான்.

ஸ்ருதிய இந்த படத்துல எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அப்பிடியே கமலோட கண்ணு. அவங்க பேசுற தமிழ் கொஞ்சம் நெருடுனாலும் போகப் போக எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. இந்த படத்துல அவங்க கேரக்டர இப்போ இருக்குற எந்த முன்னணி நடிகையும் செஞ்சிருந்தா படமே பெரிய சொதப்பலாயிருக்கும். ஆனா ஸ்ருதி ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. நடனமும் ரொம்ப நல்லா வருது. ஆனா என்ன, கமல் பொண்ணு-ங்குறதால ரொமான்ஸ் பண்ணும்போது சூர்யா கொஞ்சம் கூச்சத்தொடவே நடிச்சிருக்காரு.

கொஞ்சம் லாஜிக் சேத்து, திரைக்கதைய இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தாங்கன்னா ஒரு மைல் கல் படமா வந்திருந்திருக்கும்.