Friday, March 4, 2011

சிங்கப்பூர் to இந்தியா - பிப் 2011

இந்தியாவுக்கு குடும்பத்தோடு வெகேஷன் போயிட்டு வந்தோம்.

பிப் 1ம் தேதி 20 நாள் லீவுல நான் இந்தியாவுக்கு போனேன். எனக்கு ஒரு மாதம் முன்னாடியே மனைவியும் நிரஞ்சனும் ஊருக்கு போயிட்டாங்க. பொங்கலுக்கு முன்னாடியே அவங்க ரெண்டு பேரும் ஊருக்கு போனதுல ஊர்ல எல்லாரும் ரொம்ப குஷியாயிட்டாங்க. என்னோட இந்த பயணத்தின் குறிப்புகள்தான் இந்த பதிவு.

சென்னை:
சிங்கப்பூர்ல இருந்து நான் சென்னைக்கு போனது ஒரு செவ்வாக்கெழம. இருந்தாலும் அன்னிக்கு முழுக்க சௌந்தர் எனக்காக லீவு போட்டுட்டு (அப்பிடித்தான் சொன்னான், எனக்கே கொஞ்சம் டவுட்டாத்தான் இருக்குது), சென்னைல நான் விருப்பப்பட்ட எடத்துக்கு சந்தோஷமா பைக்ல கூட்டிட்டு போனான். ஆனா என்ன, விடாம ஆபிஸ்ல இருந்து போன் மேல போன் போட்டு இவன்கிட்ட சந்தேகம் கேட்டுகிட்டே இருந்தாங்க; போன் பண்ணின அத்தனையும் பொண்ணுங்க (இல்ல, எல்லாமே ஒரே பொண்ணுதானா? - தெரியல!). நீ கெலப்புடா நண்பா. சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம் - எனக்கு டிரெஸ் 3 செட் எடுக்கனும்னு சொன்னேன், சௌந்தரே கடைக்கு கூட்டிட்டு போயி செலக்ட் பண்ணி குடுத்தான் ("அதான பாத்தேன், நீங்க எப்ப இவ்ளோ அழகா செலக்ட் பண்ணினிங்க?" - டிரெஸ்ஸ பாத்துட்டு மனைவியோட கமென்ட் இது). நன்றிடா நண்பா! ரொம்ப நாள் (3-4 வருஷம்) கழிச்சு சென்னைய சுத்தினது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துது. சென்னைய பல விஷயங்கள்ல கடந்த 4 வருஷமா மிஸ் பண்றேன். சென்னை இன்னும் அப்பிடியே இருக்குது (சில இடங்கள்ல புதுசா overbridge வந்திருக்கிறதத் தவிர), அங்கங்க மெட்ரோ டிரெயின் வேலை நடந்துட்டு இருக்குது.

அன்னிக்கு சாயங்காலம், சென்னைல இருந்த மத்த சில நண்பர்களோட (7G, சுரேஷ் & விவேக்) சேர்ந்து, மவுன்ட் ரோட்டுல இருந்த ஒரு வித்தியாசமான ஹோட்டல்ல டின்னர் முடிச்சுட்டு ('பில்'ல என்னோட தலையில கட்டிட்டாங்க), அவசர அவசரமா என்னை பஸ் ஏத்தி விட்டுட்டான் நண்பன் (இதுல உள்குத்து எதுவும் இல்லங்க, லேட்டாயி போச்சு... அதனால அவசரமா போனாத்தான் பஸ்ஸ பிடிக்கமுடியும், அதத்தான் அப்பிடி சொன்னேன்). நடுவுல சில தமிழ் நாவல்/புத்தகங்கள வாங்க முயற்சி பண்ணோம், ஆனா ராத்திரி பத்து மணிக்கு மேல ஆனதால வாங்க முடியல. :(

பெங்களூர்:
ஓரிரு நாள் என்னோட கம்பெனி வேலை விஷயமா பெங்களூர் போனப்போ, பெங்களூர் நண்பர்கள் குடும்பங்களையும் சந்திக்கிற வாய்ப்பு அமைஞ்சுது. ஒரு நாள் ராஜா வீட்டுலயும் இன்னொரு நாள் மாதேஷ் வீட்டுலயும் தங்கி அவங்க கூட பேசிக்கிட்டிருந்தத மறக்கவே முடியாது. பெங்களூர் நண்பர்களோட குடும்பங்களும் என் குடும்பமும் ஒருத்தருக்கொருத்தர் ரொம்பவே மிஸ் பண்றதால, இந்த சந்திப்பு முழுக்க நெகிழ்ச்சியாவே இருந்துது. பூபாலன், சுந்தர், பாபு, பரத், முத்துக்குமார் குடும்பங்களெல்லாம் மாதேஷ் வீட்டுல சந்திச்சுகிட்டோம், அப்புறம் அங்கேயே எல்லாரும் ஒண்ணா சேர்ந்து டின்னர் சாப்பிட்டோம். எல்லாரும் என்னை பாக்கத்தான் வந்தாங்க(அப்பிடித்தான் சொன்னாங்க)-ன்னு தெரிஞ்சு ரொம்ப சந்தோஷமா இருந்துது. "அடுத்த தடவ பெங்களூர் வர்றப்ப மனைவியையும் குழந்தையையும் கூட்டிட்டு வராம வந்தா நடக்குறதே வேற"-ன்னு எல்லாரும் ஒரே மாதிரி சிரிச்சுகிட்டே மிரட்டினாங்க. "சரி"ன்னு சொல்லிட்டு வந்திருக்கேன், பாப்போம். அன்னிக்கு ராம் 'ஆபிஸ் மீட்டிங்'ன்னு எஸ்கேப் ஆயிட்டான், ஆனா அவன் ஊருக்கு வந்தப்ப, அவனை ரோட்டுலயே மடக்கி ரெண்டு பேரோட மொத்த குடும்பமும் சந்திச்சுகிட்டோம். :) நண்பர் ராஜசேகர் என்னை சந்திச்சப்ப, அவர் ரெண்டொரு நாள்ல அப்பா ஆகப்போற குஷியில இருந்தாரு (இப்போ ஆயிட்டார், வாழ்த்துக்கள்).

மாதேஷ் புண்ணியத்துல அவரோட பைக்க எடுத்துகிட்டு பெங்களூரை வழக்கம் போல சுதந்திரமா வளம் வந்தேன்... (நன்றி மாதேஷ்). சென்னைய ரொம்ப நாள் கழிச்சு பாக்குறப்ப மனசுக்கு ஒரு இதமான அனுபவம் தருதுன்னா பெங்களூர் வேற ஒரு இதமான அனுபவமா இருந்துது. ஆனா ரெண்டு ஊரும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஊர், ரெண்டையும் இப்ப மிஸ் பண்ண வேண்டியதாப் போச்சு.

சொந்த ஊர்:
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரே நாள்ல ரொம்ப தூரம் (200+ கி.மீ.) எழுதிங்கள் அழைப்புக்காக (மனைவிக்கு) பைக்ல சுத்திவர வேண்டியிருந்துச்சு, அது ரொம்ப கஷ்டமா இருந்துது. அப்பா சித்தப்பா, மாமாவெல்லாம் எப்பிடி சர்வ சாதாரணமா பைக்ல ரொம்ப தூரம் போயிட்டு வந்து மத்த வேலையையும் பன்றாங்கன்னு ஆச்சர்யமா இருந்துது. சொந்தக்கரங்களோட வீடுகளுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு இப்போதான் போனேன். ஒவ்வொரு வீட்டுக்கு போகும்போதும் சின்ன வயசுல அங்க வெளையாடின நியாபகம் வந்துச்சு. ரொம்ப நாள் கழிச்சு, நானாவே வீட்ட சரியா கண்டுபிடுச்சு போயி பேசி அழைப்பு சொல்லிட்டு வந்தது நல்ல அனுபவமா இருந்துச்சு. வரிசையா எல்லாரோட வீட்டுக்கும் போனதுல, ஆரம்ப உபசரிப்பு + விசாரிப்புகள்ல எல்லாரும் ஒரே மாதிரின்னு நல்லா புரிஞ்சுது. ஆனா பேச்சுலயும் பழகுறதுலயும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். சிலர் நான் சின்ன பையனா இருந்தப்ப என்கிட்டே பேசின மாதிரியே இப்பவும் பேசினாங்க, அவங்க கூட என்னால இயல்பா பேச முடிஞ்சுது, சிலர் புதுசா மரியாதை குடுத்து பேசினாங்க, அவங்க கூட இயல்பா பேச கொஞ்சம் தயக்கம் இருந்தது. எனக்கு இது புதுசு + ஒரு நல்ல அனுபவம். (முக்கிய குறிப்பு: மனைவி வழி சொந்தங்களிடம் வழக்கம்போல் மரியாதை அதிகமாக இருந்தது :))

பிப் 16-ல் நண்பரின் திருமணமும், அதை ஒட்டி அதற்கு முந்தின நாள் நடந்த மனைவியின் எழுதிங்களும் ரொம்ப சிறப்பாகவே நடந்தது மனதுக்கு மிகப்பெரிய சந்தோஷமாக அமைஞ்சுது.

சுற்றும் முற்றும்:
மத்தபடி இந்த தடவ காருலயும் பைக்லயும் மூலைக்கு மூல செம சுத்து சுத்தியாச்சு. இருந்தாலும், ஒரு தடவை உள்ளூரிலும், ஒரு தடவை பெங்களூருக்கும் நானாவே பிளான் பண்ணி பஸ்சுல போனேன். ஏற்கனவே பல தடவ போயிருந்தாலும், சிங்கப்பூரிலிருந்து வந்த பின்னாடி இப்ப நம்ம அனுபவம் எப்பிடி இருக்குதுன்னு பாக்குறதுக்காக அப்பிடி செஞ்சேன். :( பெரிய வருத்தந்தான் மிஞ்சிச்சு. வீட்டத்தவிர வெளியில எதையும் வாங்கி சாப்பிட பயம்மா இருக்குது. இன்னும் சில நூறு வருஷமானாலும் நம்மளால ஒரு சுகாதாரமான, தொந்தரவில்லாத சுற்றுப்புரத்த உருவாக்குறதுக்கு வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி. மக்கள் பொது இடத்துல தேவையில்லாத முரட்டுத்தனத்தோடவும், குறுகிய மனசோடவும் இருக்குறாங்க. :(

மக்கள் ஏற்கனவே தேர்தல் மூடுக்கு வந்துட்டத பரவலா பாக்க முடிஞ்சுது. யாரு யாருகூட கூட்டணின்னு ஆர்வமா பாத்துட்டு இருக்காங்க. எங்க ஏரியாவுல கொங்கு நாடு கழகம் எப்பவும் இல்லாம இப்போ ரொம்பவும் எழுச்சியோட இருக்குறது தெரிஞ்சுது (இது நல்லதா கேட்டதா?).

ஷாப்பிங் பண்ண, ஈரோடுல மார்கெட் ஏரியாவ நல்லா சுத்திவர வேண்டியிருந்துச்சு. சிங்கப்பூர்ல நல்லா நடந்து பழகிட்டதால, ரொம்ப சுலபமா அங்க அத்தன வெயில்லயும் நடக்க முடிஞ்சுது. ஈரோடுல டிராபிக் பயங்கரமா அதிகமாயிடுச்சு, சென்னை மாதிரி டிராபிக் இருக்குது. ஒரு 100 ரூபாய வச்சுகிட்டு கொஞ்சூண்டு ஸ்நாக்ஸ் சாப்பிடுறத தவிர ஒண்ணுமே பண்ண முடியாது - கொடுமைதாங்க. தொட்டதெல்லாம் நான் நெனச்சத விட பயங்கரமா வேலை ஏறிப் போயி கெடக்குது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

சிங்கப்பூர் திரும்பும்முன்:
தோட்டத்துக்குள்ள திறந்த வெளி வீடு, நிரஞ்சனுக்கு வெளையாடுறதுக்கு ஜோடி, தெனமும் சில சொந்தக்காரங்கள பாக்குறது + பேசுறது, ஏதாவது சின்ன சின்ன வேலை, ஆபிஸ் கிடையாது, பைக் / கார்ல சுத்துறது-ன்னு நல்லா அனுபவிச்சாச்சு. இப்பிடி ஊர்ல 20+ நாள் ரொம்ப பிஸியா எல்லார் கூடயும் ஜாலியா இருந்துட்டு, மறுநாள் சிங்கப்பூர் கெளம்புறத நெனச்சப்ப எனக்கும் மனைவிக்கும் கஷ்டமாயிருந்துச்சு. ஆனா, அம்மா ஆப்பரேஷன் நல்ல படியா நடந்தது, அம்மா கூடவே மனைவி இருந்து பாத்துக்கிட்டது, என் தங்கச்சி திவ்யா தெரட்டி, நண்பரின் கல்யாணம், மனைவி எழுதிங்கள்னு ரொம்ப முக்கியமான விழாக்கள் சிறப்பா நடந்தது, அதுல சொந்தங்கள் எல்லாரையும் பாத்து, சந்தோஷமா பேசினத யோசிச்சப்ப, நிம்மதியா சிங்கப்பூர் திரும்ப ஆர்வமாயிடுச்சு. ஆனாலும் அம்மா, பாட்டி, அத்தைக்கெல்லாம் நாங்க ஊருக்கு கெளம்பறப்ப ரொம்ப வருத்தமாயிடுச்சு, மூணு பேருமே அழுதிட்டாங்க. குறிப்பா நிரஞ்சன பிரியத்தான் அவங்களுக்கு மனசில்ல. இன்னும் நாலஞ்சு மாசத்துல அடுத்த டிரிப் வர்றதா அவங்கள சமாதானப் படுத்திட்டு, நாங்க ஜாலியா பிளைட் ஏறிட்டோம்.

- சமுத்ரன்

No comments:

Post a Comment