Sunday, November 15, 2009

கல்யாண ஆல்பம் - சிறுகதை

தேவியின் திருமண ஆல்பமும், வீடியோவும் வந்திருந்தது. தேவி, தேவியின் கணவர், அப்பா, அம்மா, தம்பி, பாட்டி என அனைவரும் வீடியோவைவிடவும் ஆல்பத்தை பார்ப்பதில்தான் ஆர்வமாய் இருந்தனர். ஒவ்வொருவரின் கை மாறி அந்த ஆல்பம் வலம் வந்து கொண்டிருந்தது. மணமக்களுடன் திருமணத்திலும் வரவேற்பிலும் அவரவர் நின்று எடுத்துக்கொண்ட போட்டோக்களை பார்ப்பதும் அதுபற்றி கேலி கிண்டல் செய்துகொண்டும் இருந்தனர். பாட்டியிடம் யாரும் ஆல்பத்தை காட்டவோ அல்லது  கேலி கிண்டலை அவரிடம் பகிர்ந்துகொள்ள விரும்பவோ முனையவில்லை. அதற்கு தன் முதுமைதான் காரணம் என்பதும் பாட்டிக்கு தெரியாமல் இல்லை.

அனைவரும் பார்த்தபின் அந்த ஆல்பம் நடு ஹாலில் கேட்பாரின்றி இருந்தது. தேவியின் தம்பி திருமண வீடியோவை ப்ளே செய்தான். அனைவரும் டீவி முன் அமர்ந்தனர். தம்பதிகளின் அசைவுகளை அனைவரும் கிண்டல் செய்தவாறு பார்த்தனர். தேவியும் அவளின் கணவரும் அனைத்தையும் வெட்கத்துடன் ஜோடியாக அமர்ந்தவாறு ரசித்துக் கொண்டிருந்தனர். பாட்டி இவற்றை ஒரு ஓரமாக இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

பாட்டிக்கு என்னவோ தோன்ற, எழுந்து தள்ளாடி உள்ளே சென்றார். நாற்காலியில் ஏறி எதையோ எடுக்க முயன்று கீழே விழுந்துவிட்டார். உடனே அனைவரும் அவரை தூக்கி கட்டிலில் படுக்க வைத்தனர். ஆளாலுக்கு அறிவுரை வழங்கினர்.

"என்ன பாட்டி உங்களுக்கு வேனும்? இந்த வயசான காலத்துல எதுக்கு இந்த வேலை?" - இது பேத்தி.
"வயசான காலத்துல தேவையில்லாத வேலை எல்லாம் எதுக்கு பாட்டி பண்ற?" - இது பேரன்.
"சேர் மேல ஏறி தனியா அலமாரில அப்பிடி என்னதாம்மா தேடுன?" - இது மகன்.

பாட்டி எதுவும் பேச வில்லை. எல்லோரின் பேச்சும் பாசத்தின் வெளிப்பாடுதான் என்பது பாட்டிக்கு நன்றாகவே புரிந்தது. அதுவே ஆறுதலாகவும் இருந்தது.

"நல்ல வேல அடி எதுவும் படல. கேக்குறாங்கல்ல, சொல்லுங்க அத்த.." - இது மருமகள்.

"கல்யாண ஆல்பம்" - பாட்டி பேசினார்.

இதைக் கேட்டவுடன் தேவியின் தந்தைக்கு ஏக கோபம், "கல்யாண ஆல்பம்தான் அங்க அவ்ளோ பெருசா ஹால்ல இருக்குல்ல? கண்ணு தெரியுதா இல்லையா. இத்தன பேர் இருக்கோம்ல... எங்ககிட்ட கேக்க வேண்டியதுதான...?".

"இல்லடா, உன்னோட கல்யாண ஆல்பம்" - பாட்டி தன் மகனைப் பார்த்து சொன்னார்.

"என்னம்மா? அத எதுக்கு இப்ப கேக்குற? அது இப்ப எங்க இருக்குன்னு எங்களுக்கே தெரியல." தன் மனைவியை அதை தேடி எடுத்து குடுக்க சொல்லிவிட்டு தேவியின் அப்பா வெளியே சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் தன் மகனின் திருமண ஆல்பம் பாட்டியின் கைக்கு வந்தது. அனைவரும் அங்கிருந்து செல்லும்வரை அந்த ஆல்பத்தை அவர் தொடவில்லை. பின் சொல்லி வைத்தவாறு அந்த கருப்பு-வெள்ளை ஆல்பத்தின் ஒரு குறிப்பிட்ட பக்கத்தை புரட்டினார். அங்கே மணமக்களுடன் பாட்டியும் தாத்தாவும் தம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே சேர்ந்து நின்று எடுத்துக்கொண்ட போட்டோ. அதை தன் கையால் தடவினார் - பாட்டியின் கண்களில் கண்ணீர். அந்த கண்ணீரில் ஆயிரம் கதைகள் இருந்தாலும், அதற்கு அர்த்தம் ஒன்றுதான் இருக்க முடியும் என்பதும் அந்த கண்ணீருக்கு முதுமை என்பதே இல்லை என்பதும் சொல்லத்தேவையில்லை.

-சமுத்ரன்

No comments:

Post a Comment