Thursday, December 30, 2010

மழலை தரும் வசந்த காலம்

ஒவ்வொருத்தங்க வாழ்க்கையிலையும் (கொறஞ்சது) ஒரு வசந்த காலம் வரும். அப்பிடி வரும் வசந்த காலம் பல பேருக்கு காதல் அனுபவமாத்தான் இருக்கும். எனக்கு அதெல்லாம் குடுத்து வைக்கலிங்க... ஆனா ஒருத்தங்க காதலிச்சிருந்தாலும் இல்லைன்னாலும், அனுபவிச்சே ஆகவேண்டிய வசந்தகாலம்னா அவங்கவங்க கொழந்தையோட மழலைப்பருவத்த ரசிக்கிறதுதாங்க. இதையெல்லாம் அனுபவிக்க தெரியலைன்னா, இப்போ நீங்க இருக்குற பில்டிங்குல அப்பிடியே மேல ஏறி கடைசி மாடிக்குப் போயி, அங்கிருந்து அப்பிடியே குதிச்சிடுங்க. :)

என் பையனும் பெரியவனா வளரும்போது எத்தனை குறும்பு பண்றானோ, நாங்க சொல்றத கேப்பானோ மாட்டானோ... என்ன என்ன சண்டை எல்லாம் வருதோ, தெரியாது. ஆனா, இப்போ அவன் இருக்குற இந்த வயசுல அவன் செய்யுற குறும்புக்கும், சேட்டைக்கும், அவன் பேசுற மழலைக்கும் நாங்க அப்பிடியே சொக்கிக் கெடக்குறோம்னா, அதுல கொஞ்சம் கூட மிகை இல்லங்க. பொறுமையா சொல்றேன், படிங்க.

அவனோட கோவத்த பத்தி மொதல்ல. கோவம் வந்துட்டா இருக்குற எடம் எதுன்னெல்லாம் பாக்க மாட்டான், அங்கியே அப்பிடியே படுத்து பொரலுறது அவனுக்கு வழக்கம். கோவம் எதுக்கு வரும்னா, அவன் கேக்குறது கெடைக்கலன்னாலோ, நெனைக்கிறது நடக்கலன்னாலோ, அவன் ஆசையா வெளையாடுறப்ப யாராவது தொந்தரவு பண்ணாலோ... கோவம் வரும். காலையில தூங்கி எந்திரிக்கும்போது, "அம்மா"-ன்னு குரல் குடுப்பான், உடனே அவங்க அம்மா (அம்மா மட்டுந்தான்) வந்து பெட்ல இருந்து அப்படியே தூக்கிக்கணும். நான் தூக்குறதுக்கு போனா, அவனுக்கு பயங்கர கோவம் வந்துடும் - கட்டில்லியே அழுது பொரலுவான். அவன் சமாதானம் ஆகணும்னா, அவன் கேட்டது கிடைக்கணும்.

மத்தபடி காலையில நான் ஆபிஸ் போற வரைக்கும் என் பக்கத்துலையே ஏதாவது வெளையாடிட்டு இருப்பான். எவ்ளோ அவசரமா இருந்தாலும் கொஞ்ச நேரம் நான் அவன்கூட வெளையாடிட்டு குளிக்க போயிடுவேன், இல்லேன்னா வருத்தப்படுவனே. இதையே நான் வழக்கமா வச்சிகிட்டதால அவனும் பழகிட்டான்.

குளிச்சுட்டு பாத்ரூம விட்டு வெளியில வந்தவுடனே "அப்பா, பாங்க... புது டிரெஸ் போட்டு"-ன்னு என்னை கூட்டிட்டு போயி புது ட்ரெஸ் (துவைச்ச டிரெஸ் எல்லாமே அவனைப் பொருத்த வரைக்கும் புது டிரெஸ்தான்) போட சொல்லுவான். டிரெஸ் பண்ணிட்டு சாமி கும்பிட போயி நிப்பேன், "அப்பா, நானும் சாம்பி கும்பு"-ன்னு ஒடி வந்திடுவான். சாமி கும்பிடும்போது கையை சரியா குவிச்சு வச்சு கும்பிடனும், இல்லைன்னா அவன் நம்ம கைய புடிச்சு சரியா வச்சுவிடுவான். நெத்தி, கழுத்து, நெஞ்சுக்குழி, மேல் வயிறு, அடி வயிறுன்னு அஞ்சு இடத்திலையும் அவனுக்கு திருநீர நாம வச்சு விட சொல்லி கேப்பான் (அவங்க மாமா டிரெயினிங்). அவன் எனக்கும் அவங்க அம்மாவுக்கும் திருநீர் வச்சு விடுவான்.

அடுத்தது சாப்பாடு. "அம்மா, அப்பாக்கு ஆப்பு போட்டு". நான் சாப்பிடுறப்ப, அவனுக்கு என் மடியில இல்லன்னா பக்கத்துல உக்காந்துக்கணும். பசி இருந்தா ஊட்டி விட சொல்லுவான். நான் அவனுக்கு ஊட்டி விட்டா அடுத்த கை அவனுக்கு குடுக்கும்போது என்னோட கைய புடிச்சு அவன் எனக்கும் ஊட்டி விடுவான் - வேண்டாம்னாவெல்லாம் விட மாட்டான். தட்டுல குழம்பு தீந்துடுச்சுன்னா, "அப்பா... கொம்பு போட்டு"-ன்னு தட்டுல குழம்பு ஊத்திக்க சொல்லுவான். சப்பாத்தின்னா, "அப்பா, சப்பாத்தி போட்டு?"-ன்னு கேட்டு அவனே பரிமாறுவான்.

நான் சாப்பிட்டுட்டு கை கழுவின உடனே, என்னோட சாக்ஸ்-ம் ஷூவும் எடுத்து ரெடியா வச்சிட்டு நிப்பான், அத ரெண்டையும் அவன்தான் எனக்கு போட்டு விடணும்னு அடம் வேற. அப்பறம் என்னோட ஆபிஸ் பேக் எடுத்துட்டு வந்து என் கையில குடுத்துட்டு, லிப்ட்டுக்கு ஓடி, லிப்ட்ல கீழ போற பட்டனை அழுத்திட்டு நின்னுக்குவான். லிப்ட் வந்துடுச்சுன்னா, "அப்பா... பாங்க இப்பு வந்நு"-ன்னு அங்க இருந்தே சத்தமா கூப்பிடுவான். அப்பயும் நான் லிப்ட் பக்கத்துல போகலைன்னா, வந்து கைய புடிச்சு இழுத்துகிட்டு போயி லிப்ட்டுகுள்ள என்னைய தள்ளி விட்டு, "உள்ள போங்க... தோ... பட்டன அத்தி"ன்னு லிப்ட்டுக்குள்ள இருக்குற பட்டன்கள காட்டிட்டு, "டாடா, பாய், சி யூ"-ன்னு அனுப்பி வைப்பான். லிப்ட் கீழ போற வரைக்கும் எடத்த விட்டு நகர மாட்டான். என்னிக்காவது அவசரத்துல அவன்கிட்ட சொல்லாம கில்லாம ஆபிஸ்க்கு போயிட்டேன்னா அவ்வளவுதான் - டெர்ரர் ஆயிடுவான். அப்பா-அம்மா அவங்க கொழந்தைய ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கிறத கேள்விப்பட்டிருப்பிங்க; ஆனா என்னைய தெனமும் இவன்தான் கெளப்பி ஆபிஸ்க்கு அனுப்பி வைக்கிறான்னு என் மனைவி அப்பப்ப கிண்டல் பண்ணுவாங்க... இது வரைக்கும் சொன்னதெல்லாம் தெனமும் காலையில நடக்குற வழக்கமான விஷயங்கள்.

வாரக்கடைசின்னா, அவன குளிப்பாட்டுறதுல இருந்து, டிரெஸ் போட்டு விடுறது, ஊட்டி விடுறது, விளையாடுறது, தூங்குறது, பாத்ரூம் கூட்டிட்டு போறது எல்லாமே அப்பாதான். "நான் பண்ணி விடுறேன்"-ன்னு அவங்க அம்மா போனா, "அம்மா ஏனாம்"-ன்னு என்னைய கூப்பிடுவான். "டேய், என்னடா? வார நாள்ல நானு, வாரக்கடைசில அப்பாவா? இரு இரு... திங்கக்கிழமை எங்கிட்டதான வரணும், அப்போ வச்சிக்கிறேன்"-ன்னு மனைவி செல்லமா அவன மெரட்டுவாங்க. வாரக்கடைசில அவங்க அம்மாவுக்கு அவன்கிட்ட இருந்து complete ரெஸ்ட். :)

அவன குளிப்பாட்டுறது ஒரு ஜாலி விஷயம். குளிக்கும்போது தண்ணில வெளையாடலாம்னு அவனும் குஷியா வருவான். அவன் போக்குலயே அவன கொஞ்ச நேரம் வெளையாட விட்டு குளிக்க வைப்பேன். அவன் டேன்ஸ் ஆடினான்னா நானும் ஆடுவேன். பயங்கர ஜாலியாயிடுவான். தண்ணிய லேசா அவன் மேல தெளிச்சா (தண்ணி வேற ஜில்லுன்னு இருக்கும்) "உய்"-ன்னு சத்தமா கத்துவான், பதிலுக்கு என்மேல தண்ணிய தெளிப்பான், நானும் கத்துவேன். நாங்க ரெண்டு பெரும் பாத்ரூம்ல பண்ற கூத்த கேட்டு மனைவி திட்டுவாங்க. சமாதானம் சொல்லிட்டு நாங்க குளியல கண்டின்யூ பண்ணுவோம். அவனுக்கு நான் சோப்பு போடும்போது "கண்ணை மூடிக்கோடா செல்லம், இல்லைனா சோப்பு கண்ணுல பட்டு கண்ணு எரியும்"-ன்னு சொல்லி சோப்பு போடுவேன். கண்ணை இறுக்கி மூடிக்குவான். அவன் குளிச்ச பின்னாடி, என்னையும் குளிக்க சொல்லிட்டு அவன் பக்கெட் தண்ணில வெளையாடுவான், நானும் குளிப்பேன். எனக்கு அவன்தான் தண்ணி ஊத்தி விடணும்னு அடம் புடிப்பான். சரின்னு நான் கீழ உக்காந்துக்குவேன், எனக்கு ஊத்தி விடுவான். எனக்கு குளிப்பாட்டி விடுறதுல அவனுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். நான் எனக்கு சோப்பு போடுறப்போ "அப்பா, கண்ணு இறுக்கி மூடி... சோப்பு... எய்யி..."-ன்னு எனக்கு எச்சரிக்கை குடுப்பான், நானும் கண்ணை இறுக்கி மூடிக்குவேன். இப்பிடி ஒரு வழியா நாங்க குளிச்சுட்டு வெளியில வர ஒரு முக்கா மணி நேரமாவது ஆகும்.

அடிக்கடி எதையாவது விளையாட கூப்பிட்டுகிட்டே இருப்பான், அவன் வெளையாடனும்னு சொல்றததான் நானும், மனைவியும் வெளையாடனும். வேற எதையாவது வெளையாட கூப்பிட்டா அது புதுசா இருந்தாதான் கேப்பான், இல்லைன்னா அவன் சொல்றததான் வெளையாடனும். அப்படி நாங்க வெளையாடுறதுல சில:

* Ball எடுத்துட்டு வந்து, "அப்பா, எந்திங்க". நான் , "எதுக்கும்மா?". அவன், "எந்திங்க... பாங்க... ball கேச்"-ன்னு என்னை எழுப்பி, அவன் ball போட்டு அத நான் catch பண்ணி வெளையாடுவோம்

* ஆளுக்கொரு டேபிள் டென்னில் பேட் வச்சு ரெண்டு பேரும் எதுத்தாப்புல நின்னு ball அடிச்சு வெளையாடுவோம், இல்லைன்னா கால்ல உதச்சு வெளையாடுவோம்; ரெண்டையுமே அழகா வெளையாடுவான்

* அவன் ஓட ரெடியா நின்னுகிட்டு, "அப்பா, பின்னி ஓடி பாங்க. நிஞ்சி புடிங்க"-ன்னு ஓடுவான். ஓடிப் புடிச்சு வெளையாடுவோம் (எப்பவுமே நான்தான் அவன் பின்னாடி ஓடி அவனை பிடிக்கணும்)

* அப்பறம் வாக்கிங் போலாம்னு அப்பிடியே கெளம்பி போவோம். ஆனா அங்கயும் ஓடி புடிச்சு வெளையாடி, அது ஒரு ஜாக்கிங் ஆயிடும். அப்பிடியே ஒரு மணி நேரம் வெளையாடிட்டு ரெண்டு பேரும் டயர்டாயி வீட்டுக்கு வருவோம். இது வாரத்துல 2-3 தடவையாவது நடக்கும். இதனால நாங்க ரெண்டு பேரும் வாக்கிங்ன்னு கெளம்பினா, மனைவி நாங்க ஓட மாட்டோம்னு உறுதி குடுத்தாத்தான் எங்க கூட வருவாங்க

* "அப்பா... கு.த்.த..."-ன்னு குதிர வெளையாட்டு. நான்தான் குதிர, என் முதுகுல ஏறிக்குவான், ஒரு ரவுண்டு வருவோம். அடுத்து அவன் குதிர மாதிரி நின்னுகிட்டு என்னைய அவன் முதுகுல ஏறிக்க சொல்லுவான், விட மாட்டான். என்ன பண்ண? என்னோட முகத்த அவன் முதுகுல வச்சு, "போலாம் ரைட்"-ன்னா ரொம்ப குஷியா என்னை சுமந்துட்டு போறதா நெனச்சுகிட்டு வெளையாடுவான்

* ஒரு புத்தகத்த எடுத்து வந்து வச்சுகிட்டு "அப்பா, இங்க பாங்க, கிட்ட வந்து உக்காந்னு"-ன்னு கிட்ட உக்கார வச்சு அந்த புத்தகத்துல இருக்குற பொம்மைய அடையாளம் காட்ட சொல்லி எங்களை கேக்க வச்சு பதில் சொல்லுவான்

நாங்க ரெண்டு பேரும் இந்த மாதிரி ராத்திரி 12 மணி வரைக்கும் போடுற சத்தத்துல பக்கத்து வீட்டுக்காரங்க இன்னும் போலிஸ் புகார் குடுக்காம இருக்குறது ரொம்பவே ஆச்சர்யம்தான்

இங்க வெளியில கொழந்தைங்க வெளையாடுற எடத்துல தூரியும் (swing) சறுக்கியும் (slide play) இருக்குது. அங்க போயி வெளையாடறதுன்னா இவனுக்கு ரொம்ப இஷ்டம். சில சமயம் அங்க வர்ற மத்த கொழந்தைங்களோட வெளையாடுவான். அவங்க என்ன வெளையாடினாலும் இவனும் அதையே வெளையாடுவான். இதுல அவங்க சைனீஸ் இல்லன்னா இங்கிலிஷ்லதான் பேசுவாங்க, அது ரெண்டும் இவனுக்கு புரியாது. இவன் தமிழ்லதான் பேசுவான், அது அவங்க யாருக்கும் புரியாது. ஆனா எல்லாரும் ஒண்ணா வெளையாடுவாங்க. மத்த பசங்க ஓடுனா, இவனும் அவங்க கூட பின்னாடியே ஓடுவான், நின்னா இவனும் நின்னுக்குவான், அவங்க சிரிச்சா இவனும் கெக்கே பெக்கேன்னு சிரிப்பான், இப்பிடியே அவங்க கூட பேசாமையே இவன்பாட்டுக்கு ஜாலியா அவங்க கூட வெளையாடுவான். இத்தனை நடந்தாலும் நானோ, இல்ல அவங்க அம்மாவோ அவன் பார்வைல இருக்கணும் - எவ்ளோ குஷியா வெளையாடினாலும் எங்கள அப்பப்போ பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு நாங்க அங்கதான் இருக்கோமான்னு செக் பண்ணிக்குவான்.

ஒரு தடவ எனக்கு ப்ளு காய்ச்சல் வந்து ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருந்தேன். அப்போ என்கிட்டே யாரும் வரக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். "அப்பாக்கு காய்ச்சல் வந்துடுச்சுடா குட்டி, காய்ச்சல் நால்லாகற வரைக்கும் நிரஞ்சு குட்டி அப்பாகிட்ட வரக்கூடாது"-ன்னு இவன்கிட்ட சொல்லிட்டோம், அவனும் என் கிட்ட வரல. "அப்பாக்கு காய்ச்சல்"-ன்னு என்னோட கழுத்த தள்ளி நின்னு அப்போ அப்போ தொட்டு தொட்டு பாத்துட்டே இருப்பான். நான் சாப்பிட்டு முடிச்ச உடனே, "அப்பா இந்தாங்க மாத்த"-ன்னு ஓடி போயி மாத்திரைய எடுத்துட்டு வந்து சாப்பிட சொல்லுவான். ஒரு தடவ, மறந்துட்டு என்கிட்ட வந்துட்டான், நான் அவனை நிறுத்தி "அப்பாகிட்ட வரக்கூடாதும்மா, அப்பாக்கு காய்ச்சல் இல்ல?"-ன்னு சொன்னேன். உடனே கொஞ்சம் தள்ளி நின்னு "அப்பா, நிஞ்சி இங்க நின்னு?"-ன்னு 'இங்க நின்னுக்கட்டுமா?'ன்னு கேட்டான், நான் அப்பிடியே அழுதுட்டேன். அந்த ரெண்டு நாளும் அவன்கிட்ட போகாம, அவன தூக்காம, அவன் ஆசையா வர்றப்ப கிட்ட விடாம நான் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சம் இல்ல.

ஒரு நாள் ராத்திரி மனைவிக்கு தலை வலிக்குதுன்னு சொல்லி விக்ஸ் பாட்டில் கேட்டாங்க. சரின்னு லைட்ட போடாம இங்கதான் இருக்கணும்னு நெனச்சு ஒரு டேபிள்ல தேடிட்டு இருந்தேன், அவன் என் பின்னாலையே எந்திரிச்சு வந்து நேரா இன்னொரு டேபிளுக்கு போயி விக்ஸ் பாட்டில் எடுத்துட்டு வந்து "அப்பா.... ஐ"-ன்னு என்கிட்டே காட்டினான் (இத்தனைக்கும் இருட்டு). நாங்க ரெண்டு பெரும் அசந்துட்டோம்.

அவனோட சேட்டைகள்ல இன்னும் சில:

* அவனுக்கு முன்னாடி நான் அவங்க அம்மாவையோ, இல்ல அவங்க அம்மா என்னையவோ திட்டுறத உடுங்க, லேசா குரலை ஏத்திகூட பேசுறதுக்கு இல்ல "அப்பா.... அம்மாட்ட பேச ஏணாம்..."-ன்னு எங்களை பேசவே விட மாட்டான். மீறி நாங்க பேசினோம், அவ்ளோதான் - ரெண்டு பேருக்கும் அடி விழும். அவன்பாட்டுக்கு வெளையாடிட்டு இருக்கான்... நம்மள கவனிக்கலன்னு நெனச்சு பேசிட்டு இருப்போம். ஆனா எங்க குரல்ல கொஞ்சம் வித்தியாசம் தெரிஞ்சுச்சுன்னா போதும், உடனே எங்கள திரும்பி பாப்பான்

* அவன் ஏதாவது தப்பு பண்ணிட்டா, அவனே அதை சொல்லிடுவான் - கார ஒச்சிட்டேன் (கார உடைச்சிட்டேன்), அம்மாவ அச்சிட்டேன் (அப்பாவ அடிச்சிட்டேன்), பெட்ல ஒண்ணு உட்டுட்டேன்

* காலையில பால் தேய்க்க அவங்க அம்மாவோட மல்லு கட்டுற விதம்

* அவன தூங்க வக்கிறது இன்னும் சுவாரஸ்யம். கட்டிலுக்கு போன பின்னாடி, தூக்கம் வரலைன்னா, "அப்பா, தட்டி"-ன்னு அவனை நெஞ்சு மேல லேசா தட்டி விட சொல்லுவான். சில சமயம் அவன் நம்மள தட்டி விட்டு தூங்க சொல்லுவான். "அப்பா, கத சொல்லுங்க"ன்னு கதை நல்லா கேப்பான். "பாட்டு ஏணும்"-ன்னு பாட்டு பாட சொல்லி கேப்பான். பல சமயம் அவனுக்கு முன்னாடி நாங்க தூங்கிட்டா, அப்படியே அமைதியா படுத்துகிட்டே ஏதாவது அவன் பாட்டுக்கு பேசிட்டு/வெளையாடிட்டு இருந்துட்டு அப்படியே தூங்கிடுவான். தூக்கத்துல இருந்து அவன் எந்திரிச்சுட்டான்னா (காலையிலையோ இல்ல ராத்திரிலையோ) அப்ப நாங்க ரெண்டு பேரும் தூங்கிட்டு இருந்தோம்னா எங்களை தொந்தரவு செய்யவே மாட்டான். அப்படியே சமத்தா அவன் பாட்டுக்கு பேசிகிட்டு படுத்திருப்பான். எங்கள்ல யாராவது முழிச்ச உடனே, சந்தோஷமா "அம்மா, நிஞ்சி எந்திட்டேன்"-ன்னு ஆசையா கட்டி புடிச்சுக்குவான்

* அவனா விரும்பினாலொழிய நாம சொல்றோமேன்னு போன்ல யாராயிருந்தாலும் ஒரு வார்த்தை கூட பேச மாட்டான், தலைகீழா நின்னாலும் முடியாது

* வெளியில நடந்து போகும்போது, ரோட்ட கடக்க வேண்டி இருந்தா, "பாத்து போடா செல்லம், வண்டி எதுவும் வரப் போகுது"-ன்னு அவன் கைய புடிப்பேன். அவன் உடனே அவங்க அம்மாவையும் "அம்மா... அம்மா, சிக்கிரம் பாங்க"-ன்னு கைய புடிச்சு கூட்டிட்டு போவான்

* அவனுக்கு கார், பஸ், லாரி, டிராக்டர் இந்த மாதிரி வாகன பொம்மைனா உயிரு. அந்த வகையில புதுசா ஏதாவது வாங்கிட்டு வந்தா பயங்கர குஷியாயிடுவான். அடுத்த ரெண்டு நாளைக்கு அந்த பொம்மையதான் வெளையாடுவான். குட்டிக்கரணம் போட்டாலும் அத யார்கிட்டயும் குடுக்க மாட்டான். கையில புடிச்சுகிட்டே தூங்குவான், நல்லா தூங்கின பின்னாடிதான் அவன் கையில இருந்து அத வாங்க முடியும். காலையில தூங்கி எந்திரிச்ச உடனே மொத வேலையா அந்த பொம்மைய கேட்டு அழ ஆரம்பிச்சுடுவான்

* வெளியில போகும்போது சில சமயம், நாம அவன தூக்கிகிட்டே போகணும்னு அடம் பிடிப்பான். "அப்பாக்கு/அம்மாக்கு முதுகு வலிக்குதுப்பா"ன்னு ஒரு சீன் போட்டாதான் விடுவான்

* அடுப்புல குக்கர் விசில் சத்தம் கேட்ட உடனே, அவன் வெளையாடுறத விட்டுட்டு, "அம்மா... ஆப்பு இஸ்ஸிலு வந்நு... போங்க, ஆப் பண்ணுங்க"-ன்னு வெரட்டுவான்

* நாம அவனுக்கு என்ன செஞ்சாலும் அதை திருப்பி நமக்கும் செய்யனும்னு ஆசப் படுவான். அது ஓகேதான். ஆனா அவன் என் மேல குதிர ஏறுறா மாதிரி அவன் மேல நான் ஏறனும்னு அடம் பிடிக்கிறது, நான் மல்லாக்க படுத்துகிட்டு அவன என் வயித்து மேல படுக்க வச்சு தட்டி குடுத்து தூங்க வைக்கிறா மாதிரி அவனும் (எனக்கு டயர்டா இருக்கும்போது) மல்லாக்க படுத்துட்டு என்னை அவன் வயித்து மேல படுத்து தூங்க சொல்லி அடம் பிடிக்கிறது, நான் அவனை குளிப்பாட்டினா மாதிரி அவன் என்னை குளிப்பாட்டுவேன்னு அடம் பிடிக்கிறது இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கும்... ஆனா இப்பல்லாம் அவன் கேக்குற எதையும் நான் செய்ய மாட்டேன்னு சொல்றதுல்ல. அவன் அந்த மாதிரி நாம பண்ணத நமக்கே ஆசையா திருப்பி பண்ணும்போது சந்தோஷமா இருக்கும்

* அவங்க அம்மா அவனுக்கு தலைக்கு எண்ணெய் வச்சுவிட்டா, உடனே என்னோட தலைக்கும் தேய்க்க சொல்லி பாட்டில எடுத்துட்டு வந்துருவான். சில சமயம் அவனே அவன் கைல எண்ணைய ஊத்தி என் தலையில தேச்சும் விடுவான். அதுவே நாங்க எண்ணெய் தேச்சு குளிக்கிறப்போ, நான் அவனுக்கு தேச்சு விட்டா, அவன் எனக்கு தேச்சு விடுவான்

* அவனுக்கு சில சமயம் சளி பிடிச்சு உடம்பு சரியில்லைன்னா, அவன் அந்த 'சிரப்' குடிக்கிறது தனி கதை. பல சமயம் சாப்பாடு சாப்பிட்ட உடனே, அவனே வந்து "அம்மா மந்து"-ன்னு மருந்து கேட்டு வாங்கி குடிப்பான். சில சமயம் மருந்து கசக்கும், அப்போ எல்லாம் குடிக்க மாட்டேன்னு அடம் புடிப்பான், அந்த மாதிரி நேரத்துல நான் அவன் கைய இறுக்கி புடிச்சுக்குவேன், மனைவி அவனுக்கு வாயில மருந்து ஊத்துவாங்க, குடிக்க மாட்டேன்னு கத்துவான், விடாம மருந்த வாயில ஊத்திடுவோம். ஆனா இதுல விசேஷம் என்னன்னா, அடுத்த வேலைக்கு (அதே) மருந்து சாப்பிட கூப்பிட்டா, "அப்பா, பாங்க.. நிஞ்சி கைய புடிச்சு"-ன்னு அவனாவே என்னைய கூப்பிட்டு அவன் கைய இறுக்கி புடிச்சுக்க சொல்லுவான். ஆனா மருந்து குடிக்கும்போது திமிரிக்கிட்டு குடிக்கமாட்டேன்னு கத்துவான். அந்த நேரத்துல இவன் பண்றது சிரிப்பாவும் ஜாலியாவும் இருக்கும்

* எப்பவாவது நாங்க டிவி போட்டாலும், பெருசா கண்டுக்க மாட்டான். அவன் பாட்டுக்கு வெளையாடிட்டு இருப்பான். National Geo சானல்ன்னா விரும்பி பாப்பான். மத்தபடி Mr. Bean & ரஜினி வந்தா அவங்க பேர சொல்லி கத்துவான் (பீன் மாமா, அஜ்ஜி தாத்தா), அவனுக்கு ரொம்ப பிடிக்கும்

* வீட்டுல சில சமயம் போரடிக்கிறப்ப வெளிய வராண்டாவுல வந்து நின்னு (எங்க வீட்டுக்கு முன்னாடி ரோடு) வேடிக்கை பாப்போம். அப்போ, ரோட்டுல போற வர்ற வண்டிங்கள பாத்து ஜாலியாயிடுவான். "அப்பா.... எல்லோ காரு" (yello car), "பின்னி எட்டு காரு போருச்சு" (அதுக்கு பின்னாடி red car போயிடுச்சு), "பூ கார் திப்பி போது" (blue car திரும்பி போகுது), "அப்பா.... பஸ்சு", "கூல் பஸ்சு பின்னி போச்சு" (ஸ்கூல் பஸ்சு பின்னாடி போகுது), "அக்கா செப்பல்லு போட்டு, பூஷட்ட (புது சட்டை) போட்டு, பேக்கு தொப்பல்ல மாட்டி அங்க போறாங்க", "அந்த கார் இஸ்சு (reverse) போது"... இப்பிடி அலுக்காம தொடர்ந்து ரன்னிங் கமெண்ட்டரி குடுத்துட்டே இருப்பான்

* எப்பவாவது கடற்கரைக்கு போனோம்னா, அங்க இருக்குற மணல்ல அவன் பாட்டுக்கு நேரம் போறதே தெரியாம (மணிக்கணக்குல) மணலை அள்ளி கடல்ல வீசி எரிஞ்சுக்கிட்டு வெளையாடுவான்

* நான் புத்தகம்னு எடுத்து வச்சு எதையும் படிக்க ஆரம்பிச்சா, கிட்ட வந்து உக்காந்து ஒரு நிமிஷம் அப்பிடியே என்னை பாப்பான். அப்பறம் அந்த புத்தகத்த அவன் படிக்கணும்னு அழுது அடம் புடிக்க ஆரம்பிச்சுடுவான். அவன் அத வாங்கி ஸ்டைலா படிக்கிறா மாதிரி act பண்ணுவான். அடுத்தடுத்த பக்கத்தை எல்லாம் திருப்பி படிப்பான். ஆனா, புத்தகத்த எப்பிடி அவன் கிட்ட குடுத்தாலும் (அதுல படம் இருந்தாலும் இல்லைன்னாலும்) புத்தகத்த நேரா திருப்பிக்குவான்

* அதே மாதிரி எழுதுறது. நாம் ஏதாவது எழுதினோம்னா அதே பேனாவும் பேப்பரும் வேணும்னு அடம் பிடிப்பான். சரின்னு குடுத்தா, வாங்கி கோடு கோடா போடுவான் (இப்போ A போட்டு பழகிட்டான்)

இது எல்லாத்துக்கும் மேல அவன் பேசுற மழலை பேச்சு... அந்த அழக விவரிக்க முடியாதுங்க. அவங்கவங்க கேட்டுதான் அனுபவிக்கனும்.

ஒரு குழந்த வளந்து ஆளான பின்னாடி ஆயிரத்தெட்டு பிரச்சினைங்க இருக்குது. இப்பல்லாம் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிட்டாலே பிரச்சினைதான். அத படி, இத படி, அத கத்துக்க, இத கத்துக்க, மார்க் ஏன் கொறஞ்சுபோச்சுன்னு டார்ச்சர் ஆரம்பிச்சுடுது. அதனால ஸ்கூல் போற வரைக்கும் நம்ம கொழந்தைய கொழந்தையா, சந்தோஷமா வச்சுக்கிறது ரொம்ப முக்கியம். இப்பவே அத படி, இத எழுது, உனக்கென்ன எப்ப பாத்தாலும் வெளையாட்டு, அமைதியா உக்காந்து டிவி பாரு, என்னை தொந்தரவு பண்ணாத-ன்னு அவங்கள நோகடிக்கக் கூடாதுங்குறது என்னோட எண்ணம். இப்போ இருக்குற வாழ்க்கை முறையில அவங்களுக்கு வீட்டுல இருக்கும்போது வெளையாட அவங்க வயசுல வேற குழந்தைங்க இல்ல. அவங்களுக்கு பிரச்சினை இதுதான் - நெனச்ச நேரத்துல என்கூட வெளையாட ஆள் வேணும். நமக்கு ரெண்டாவது கொழந்த வர்ற வரைக்கும் அதுக்கு வாய்ப்பு இல்ல :). அதனால அவங்களுக்கு நாமதான் இன்னொரு கொழந்தையா அவங்க கூட வெளையாடனும் (எப்பிடி நம்ம தத்துவம்?).

இதுல பல நல்ல விஷயங்களும் இருக்குது:

* கொழந்தைங்க நம்ம கூட வெளையாடுறதுனால பாதுகாப்பான வெளையாட்ட மட்டுமே வெளையாடுவாங்க

* அவங்களுக்கு வெளையாடனும்னு தோணுறப்போ நம்மகிட்ட எந்த தயக்கமும் இல்லாம கேப்பாங்க

* கொழந்தைங்க கூட நமக்கிருக்குற attachment அதிகமாகும்

* நாமளும் கொழந்தையா மாறி அவங்ககூட வெளையாடும்போது, நமக்கிருக்குற வேற எந்த கவலையும் மறந்து போகும் (நமக்கும் வேற relax தேடி ஓட வேண்டியதில்ல)

* சும்மா டிவி முன்னாடியோ, இல்ல வீடியோ கேம்ஸ் முன்னாடியோ, இல்ல லேப்டாப் முன்னாடியோ கொழந்தைங்கள பாழாக்க வேண்டிய அவசியமில்ல

* கொழந்த எதுல ஆர்வமா இருக்குது, எதுல திறமையா இருக்குதுன்னு (எதுல தடுமாறுராங்கன்னும்) ஈசியா கண்டுபிடிக்கலாம், அதுல அவங்கள ஊக்குவிக்கலாம் / வழி நடத்தலாம்

* நமக்கு இது மிகப்பெரிய உடற்பயிர்ச்சி (அவங்க கூட வெளையாடிப் பாருங்க தெரியும்)

கொழந்த இருக்குறவங்க அவங்க கூட வெளையாடித்தான் பாருங்களேன், அப்பறம் சொல்லுங்க நான் சொல்றது சரியான்னு.

இதுல பலபேர் கொஞ்சம் வளந்த உடனே கொழந்தைங்கள விடுதியில தங்கி படிக்க விட்டுட்டு இவங்க தனியா வாழறாங்க, இதுல எனக்கு உடன்பாடு இல்ல. என்னதான் தேவையோ/கஷ்டமோ இருந்தாலும் கொழந்தைய விடுதியில விட்டு அவங்களையும் கொடுமைப் படுத்த தேவை இல்ல. என்னைப் பொருத்தவரைக்கும் அவங்க அந்த கொழந்தையோட வாழ்க்கைய பாழாக்குறதும் இல்லாம தங்களோட வாழ்க்கையையும் வீணடிக்கிறாங்க. அப்படிப்பட்ட கொழந்தைங்க மனதளவுல பாதிச்சு பின்னாடி வேண்டாத காரியங்கள செய்ய காரணமாயிடுது.

நம்ம கொழந்தைங்களோட சேந்து வாழ்க்கைய கொண்டாடலாம் வாங்க.


குறிப்பு: இந்த பதிவு விரைவில் அப்பாவாகவிருக்கும் என் நண்பர்கள் L.சுரேஷ் மற்றும் சீனிவாசனுக்கு (7G)ம், சமீபத்தில் அப்பாவான நண்பன் அருண்குமாருக்கும் சமர்ப்பணம்.

-சமுத்ரன்

6 comments:

  1. "அப்பாகிட்ட வரக்கூடாதும்மா, அப்பாக்கு காய்ச்சல் இல்ல?"-ன்னு சொன்னேன். உடனே கொஞ்சம் தள்ளி நின்னு "அப்பா, நிஞ்சி இங்க நின்னு?"-ன்னு 'இங்க நின்னுக்கட்டுமா?'ன்னு கேட்டான், நான் அப்பிடியே அழுதுட்டேன். அந்த ரெண்டு நாளும் அவன்கிட்ட போகாம, அவன தூக்காம, அவன் ஆசையா வர்றப்ப கிட்ட விடாம நான் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சம் இல்ல.



    very much touching ..

    I believe that not only care is what we owe to our children but also the pride that we give to our children that he is blessed with Good Parents..

    Hope,belive and pray that he is blessed so..

    -Raja

    ReplyDelete
  2. I strongly second this post.. superb.. i too was interested to write a similar post.. but my tamil wont be good.. !!!!

    I would certainly tell anyone that the toddler age is the one where the parents can enjoy the most admiring each and every action of thier kid..

    my son is also in the same age group and he is also in the similar lines. WOW fantastic.. nothing can be equated to this.. u guys need to enjoy this and find out..!!! good luck..!!! Madhes would be in the similar state..!!! Boobalan crossed this already..!! others wecome to this state soon..!!!!

    -Ram

    ReplyDelete
  3. Hi Muthu,

    What a writing this is!!!
    The way u have described the relation between parents and kid, Kid's life style, their charmness, etc., are awesome.
    Really, this one shows me how should I mentally prepare for my kid.
    I am eagarly waiting (few more months) for that vasantha kaalam :-)

    நிஞ்சி is lucky to have parents like you both...
    Have more fun...

    Convey my regards to Savitha and நிஞ்சி...

    --Suresh L

    ReplyDelete
  4. Machi... Very Super da... This is first time i see your messages in blog :-( I had not noticed your blog before and i read your post from email only).. ..

    We are happy to see your joyful life and I think we can take lot of good things from your life, because nowadays we are acting like we are very busy person and not able to speak with others also..

    Niranjan is a lucky boy (You too) since most activities you described were done by grandmother and grandfather.. You are covering everything J !!...

    I really touched each and every statement of yours... Keep post da machi…

    By,
    (Kumar) Ananth with Love....

    ReplyDelete
  5. “குழல் இனிது; யாழ் இனிது’ என்ப-தம் மக்கள்
    மழலைச் சொல் கேளாதவர்”

    “மக்கள்மெய் தீண்டல் உடற்கு இன்பம், மற்று அவர்
    சொல் கேட்டல் இன்பம், செவிக்கு”

    இந்த பதிவை படிக்கும் போது, மேற்ச்சொன்ன குறள்களுக்கான விளக்கவுரையையே.. நீ சற்று அனுபவித்து எழுதி இருப்பது தெரிகிறது.

    நீ உன் குழந்தையின் ஒவ்வொரு வார்த்தைகளையும், நடவடிக்கைகளையும் எந்த அளவுக்கு அனுபவித்து ரசிக்கிறாய் என்பதற்கு இந்த நீ…….ண்….ட பதிவே சாட்சி.

    Regards,
    Seenivasan

    PS: Sorry for my late comment since I was bit busy at office

    ReplyDelete
  6. முத்து நீங்க கூறியது போல குழந்தைகளுடன் இருப்பதன் அருமை புரியாம ஒரு சிலர் இருக்காங்க.... நீங்க உங்க மகனை எந்த அளவிற்கு விரும்பறீங்க என்பதை உங்க எழுத்தே கூறுகிறது. ரொம்ப ரசித்து எழுதி இருக்கீங்க.

    நானும் முன்பு எழுதி இருக்கிறேன்.. திரும்ப எழுத நினைத்துள்ளேன் ஆனால் நேரம் தான் இல்லை. உங்கள் பாசம் தொடர என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete