Wednesday, October 20, 2010

நிஞ்சி

"நிஞ்சி" - "உன்னோட பேர் என்ன?"ன்னு என்னோட மகனைக் கேட்டா, அவனோட பதில் இது.

இதே வயசுள்ள என் நண்பர்ங்களோட குழந்தைங்க எல்லாம் நெறைய வார்த்தைங்க அழகழகா பேசுறத பாத்தா, நம்ம பையனும் எப்போ இப்பிடி பேசுவான்னு ஆசையா இருக்கும். இப்ப இந்த ஒரு மாசமா இவனும் நெறைய பேசறான். என்ன வார்த்தை சொன்னாலும் திருப்பி சொல்றான் அல்லது சொல்ல டிரை பண்றான். பல சமயங்கள்ல எதையாவது அவனாவே நம்மகிட்ட சொல்றதுக்கு டிரை பண்ணுவான், அதையும் கைய கால எல்லாம் ஆட்டி ஆட்டி சொல்லுவான் - அவன் சொல்ல வர்றத அவன் கை-கால் ஆட்டுறத வச்சே புரிஞ்சுக்கலாம். (மோனோ ஆக்டிங்ல   கலக்கப் போறான்).

சமீபத்துல ஒரு நாள், நான் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தேன். மனைவியும் மகனும் ஆளுகொண்ணா அவங்க வேலை ஏதோ பண்ணிட்டு இருந்தாங்க. நான் போன உடனே "ராஜா... பால் வெளையாடலாமா?"-ன்னு கேட்டேன். உடனே என் மனைவி, "அப்பாவ கை கால எல்லாம் கழுவிட்டு வர சொல்லுங்க"ன்னு என்னோட மகனைப் பாத்து சொல்ல, அவன் என்கிட்டே வந்து "அப்பா... அப்பா... கையீ காலு"-ன்னான். "கையீ காலுக்கு என்னம்மா?"-ன்னு கேட்டேன். "அப்பா... கையீ காலு..."-ன்னு சொல்லிட்டு அவனோட கை கால தேச்சு காட்டினான். நானும் விடாம புரியாத மாதிரி இருக்க, அவன் என்னைய கைய புடிச்சு கூட்டிட்டு போயி பாத்ரூம் கதவ தெறந்து என்னை உள்ள கொண்டு போயி விட்டுட்டு வந்துட்டான். :)

சுவாரஸ்யமான இன்னொரு சம்பவம் - போன வாரம் நாங்க மூணு பேரும் நண்பன் வீட்டுக்கு போயிருந்தோம். அவங்க வீட்டுக்கு வந்த இன்னொரு நண்பனோட பையன்கூட இவனுக்கு சண்டை வந்து இவன் அவனை அடிச்சிட்டான். அப்புறமா சமாதானம் ஆயி வெளையாடினாங்க. வீட்டுக்கு வந்ததும் "எதுக்கு அந்த அண்ணாவ அடிச்ச? யாரையும் அடிக்கக் கூடாதுன்னு எத்தன தடவ சொல்றது?"ன்னு குரலை கொஞ்சம் ஏத்தி கேட்டேன். உடனே அவங்க அம்மா பக்கம் திரும்பி "அம்மா... அம்மா... அண்ணா"-ன்னு நிறுத்தினான். மனைவி, "அண்ணாதான், எதுக்கு அண்ணாவ அடிச்சன்னு அப்பா கேக்கறாங்க"ன்னு மனைவி சொல்ல, "அண்ணா கார் ஓட்டி, நானு டேயினு (டிரெயின்) ஓட்டி. அப்பம் (அப்பறம்) அண்ணா டேயினு ஓட்டி. நானு? டமானு. அப்பா... திட்டி..." - முதல் முதலா ஒரு நிகழ்ச்சிய அவனாவே சொன்னான். மனைவி உடனே "அண்ணா டிரெயின ஓட்டினா, நீ கார ஓட்ட வேண்டியதுதான... அதுக்கெல்லாம் அண்ணாவ அடிக்கிறதா?"-ன்னு கேட்க, "அண்ணா கார புங்கி (பிடுங்கி)..."-ன்னு குரலை டல்-லா வச்சுகிட்டு அவன் சொன்னப்ப நானும் மனைவியும் ஆகாயத்துல பறந்துகிட்டிருந்தோம்.

அவருக்கு கார், பஸ், லாரி, பிளைட் ஓட்டுறது மாதிரியே பந்த உதச்சிகிட்டு வெளையாடுறது-ன்னா ரொம்ப பிடிக்கும். பந்து விளையாட என்னை அவன் கூப்பிடுற அழகே தனிதான். 'ஒதைச்சு வெளையாடலாம்'-ன்னு சொல்ல வராது. அதனால, "அப்பா... எந்தி(எந்திரி)... பாங்க(வாங்க)... பால்"-ன்னு சொல்லிகிட்டே கால தூக்கி உதச்சி காட்டுவான். அத திரும்ப திரும்ப ரசிக்கிறதுக்காகவே "என்னப்பா?"-ன்னு கேட்டு அப்படியே உட்கந்திருப்பேன். அவனும் விடாம அதே மாதிரி திரும்ப கூப்பிடுவான். ஆனா 2-3 தடவைக்கு மேல கூப்பிட்டு நான் வரலைன்னா அப்பிடியே கீழ படுத்துட்டு அழ ஆரம்பிச்சுடுவான். :)

இன்னும் இந்த மாதிரி பலப்பல கதைங்க இருக்கு.

"அப்பா, பா........ங்க",
(அவராவே அவர் முகத்த மூடிகிட்டு) "நிஞ்சிய கா...னாம்?"
"அம்மா, தூ...யி, கீ...ழ, போ...லாம்" (கீழ தூரி வெளையாட போலாம்)
"ஈ...ட்டுக்கு போ...லாம்" (வீட்டுக்கு போலாம்)
"பஸ்ல போ...லாம்" (பஸ்ல ஏறி போலாம்)
"அப்பா, ஆபீஸ் போ...ங்க. கேக்(cake) ஆ...ங்கி(வாங்கி) பா...ங்க(வாங்க)"
(குக்கர் விசில் சத்தம் கேக்கும்போது) "அம்மா, ஆ...ப்பு இசிலு. ஆப் பண்ணு போ...ங்க"-ன்னு அவனோட மழலை குரல்ல ஒவ்வொரு வார்த்தையோட மொத எழுத்த ராகம்போட்டு இழுத்து சொல்றத நாள் முழுக்க கேட்டுகிட்டே இருக்கலாம்.

இதுல அப்பப்ப மிமிக்ரி கூட பண்ணுவார். அவன் பசியா இருக்குறப்ப, மனைவி அப்பத்தான் பால் காய வச்சு ஆத்திகிட்டு இருப்பாங்க. இவனுக்கு பசியில பால் ஆற வரைக்கும் பொறுமை இருக்காது "ஊத்தி... ஆத்தி..."-ன்னு அழுதுகிட்டே சொல்லுவான். பால் குடிச்சுட்டு ஜாலியா இருக்குறப்போ, "ராஜா, எப்பிடி அழுதுகிட்டே பால சிக்கிரமா ஆற வைக்க சொன்னீங்க?"-ன்னு கேட்டா அவன் அப்போ எப்பிடி அழுதுகிட்டே "ஊத்தி ஆத்தி"-ன்னு சொன்னானோ அதே மாதிரி முகத்தையும் குரலையும் மாத்தி சொல்லுவான்.

எப்பவாவது அவன் குறும்பு பண்ணி, அதுக்கு நாங்க அவனைத் திட்டி / அடிச்சு புட்டு, அவன் அழறதுக்கும் முன்னாடி எங்க மனம் வாடுறத எப்பிடி நிறுத்துறதுன்னுதான் எங்களுக்கு வழி தெரியல. :)

-சமுத்திரன்

1 comment:

  1. wow.. so cute. i could only imagine how Ninji :) would be doing all these and more!
    missing him..

    ReplyDelete