Saturday, October 9, 2010

கொஞ்சம் பிஸியா இருக்கேன்... எதாவது அர்ஜென்ட்டா?

ஆபிஸ்ல, சாங்காலம் மணி 5 இருக்கும். டீ குடிக்க போலாம்னு டீம்ல கூப்பிட்டதால நானும் அவங்க கூட கெளம்பினேன். டீ குடிச்சுகிட்டே அன்னிக்கு நடந்த கிரிக்கெட் பத்தி பேசிட்டு இருந்தோம். ஆளாளுக்கு ரொம்ப ஆர்வமா பேசிட்டு இருந்தோம். பேச்சு சுவாரஸ்யமா போகும்போது என்னோட மொபைல் ரிங் ஆச்சு. கால் பண்றது அம்மா... அட்டெண்ட் பண்ணினேன்.

நான்: அம்மா...
அம்மா: கண்ணு... ஆபிஸ்-லயா இருக்குற?
நான்: ஆமாம்மா... கொஞ்சம் பிஸியா இருக்கேன்... எதாவது அர்ஜென்ட்டா?
அம்மா: அப்பிடியா... இல்ல இல்ல அர்ஜன்ட் எல்லாம் இல்ல...
நான்: சரிம்மா நான் அப்பறம் பண்றேன்...?
அம்மா: சரி கண்ணு. வச்சிடறேன்...?
நான்: சரி சரி.

டீய குடிச்சுட்டு கிரிக்கெட் பத்தின டிஸ்கஷனையும் முடிச்சுட்டு என்னோட சீட்டுக்கு போயிட்டேன். மெயில்ல நண்பருங்க எல்லாம் அப்ப வந்திருந்த ஒரு படத்த பத்தி ரொம்ப காரசாரமா பேசிட்டு இருந்தாங்க. நானும் என் பங்குக்கு ரிப்ளை பண்ணிகிட்டு பிஸியாயிட்டேன். ஒரு மணி நேரம் கழிச்சு (திடீர்னு நெனப்பு வந்து) அம்மாவுக்கு கால் பண்ணினேன்.

நான்: அம்மா...
அம்மா: சொல்லு கண்ணு... எல்லாரும் நல்லா இருக்குறிங்களா?
நான்: நாங்க நல்லா இருக்கோம்மா, நீங்க?
அம்மா: இங்க எல்லாருமே நல்லாருக்குறோம் கண்ணு... தம்பியும் சவிதாவும் நல்லா இருக்காங்களா?
நான்: ம். எல்லாருமே நல்ல இருக்கோம்.
 அம்மா: சரி சரி. என்ன சாப்பாடு,சாப்பிட்டாச்சா?
நான்: சாப்டாச்சும்மா. எதுக்கும்மா கால் பண்ணின?
அம்மா: சும்மாதான் பண்னேன்... ரெண்டு நாளா நீயும் போனே பண்ணல. சரி பேசலாம்னு பண்னேன்.
நான்: அட... ரெண்டு நாளாச்சா? சரி, இங்கயும் விஷயம் ஒண்ணும் இல்ல... அப்பாக்கு நேத்துகூட போன் பண்ணினேன். அங்கியும் விஷயம் ஒண்ணும் இல்லன்னு அப்பா சொன்னாங்க. சரி, வீக் என்டு பேசலாம்னு இருந்துட்டேன்.
அம்மா: ம்ம்ம். சரி சரி. அப்பறம் வேல அதிகமா?
நான்: அப்படி எல்லாம் இல்ல, ஏம்மா?
அம்மா: இல்ல, நானு கால் பண்ணப்ப பிஸின்னு சொன்ன... திரும்ப கால் பண்றேன்னு சொல்லிட்டு இன்னா வரைக்கும் நீ கால் பண்லியா, அதுக்குதான் கேட்டேன்?
நான்: ஓ அதுவா? இல்ல... இங்க ஆபிஸ்ல முக்கியமான வேலையா (?!) இருந்தேன்... அதான் அப்பறமா பேசறேன்னு வச்சுட்டேன்.
அம்மா: அட... அப்பிடின்னா இனிமேல நானு பகல்ல உனுக்கு போன் பண்ல.
நான்: இல்லம்மா... நானு வேலைய நடுவுல உட்டுட்டு வந்தா பிரச்சினைன்னு அப்பறம் பண்றேன்னு சொன்னென்.
அம்மா: ஓ... சரி கண்ணு. ஒடம்ப பாத்துக்க.
நான்: சரிம்மா. நீ என்ன பண்ற?
அம்மா: நானு... கடலக்கா பொறிக்கிறோம்ல? இன்னிக்கு நேரமா பொறிச்சாச்சு, அதான் கடலக்கா அளந்துட்டு இருந்தேன்.
நான்: அப்பிடியா? எத்தன வள்ளம் ஆச்சும்மா?
அம்மா: இன்னு்ந் தெரில, இப்பதான் அளந்துட்டு இருந்தேன். அளந்ததும் மறந்து போச்சு...
நான்: அய்யோ அம்மா... அப்பிடீன்னா எதுக்கு போன எடுத்த? அப்புறமா நாம பேசிக்கலாமில்ல?
அம்மா: அதுக்கென்ன கண்ணு, பரவால்ல. உங்கிட்டதான பேசறேன், சித்த நேரத்துல அளந்துருவேன்.
நான்: ?!?!?!?!?!
அம்மா: கண்ணு, எனக்கு நீ பேசுறது ஒண்ணுமே கேக்கல....
நான்: ஆங் அம்மா. நீ எப்போ வேனும்னாலும் எனக்கு போன் பண்ணும்மா. இன்னைல இருந்து முக்கியமான வேல எதுவும் எனக்கு இருக்காது...

-சமுத்ரன்

1 comment: