Saturday, August 14, 2010

சிங்கப்பூர் பத்தி வாங்க நீங்களும் தெரிஞ்சிக்கலாம்

இங்கு நான் வந்து ஒன்றரை மாதங்கள் ஆகின்றது. என் பார்வையில் சிங்கப்பூர்.

 
நாடு:
ரொம்ப சிறிய நாடு (தீவு). எங்கும் கட்டிடங்கள்தான், இருந்தும் எங்கேயும் பச்சை பசேல் என்று மரங்கள். நேர்த்தியான ரோடுகள். அரசு பேருந்துகள் எல்லா இடங்களையும் இனைக்கின்றன. இரயில்களும் அப்படித்தான். ஆங்கிலம், மலாய், தமிழ் மற்றும் சீன மொழிகள் சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன.

 
மக்கள்:
  • சீன, மலேஷிய மற்றும் இந்திய (குறிப்பாக தமிழ்) மக்கள்தான் சிங்கப்பூர் முழுக்க நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் பலர் சிங்கப்பூர் குடி உரிமை பெற்றவர்கள்.
  • எங்கும் மக்கள் கூட்டம்தான். ஆனால் யாருக்கும் எந்த தொந்தரவும் பிரச்சினையும் இல்லை.
  • அவரவர் அவரவர்களின் வழியில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக, வார நாட்களில் காலையில் ஓட்டமும் நடையுமாகத்தான் வேலைக்கு செல்கிறார்கள். யாரும் யாருடனும் பேசவே மாட்டார்கள். நிரம்பி வழியும் இரயில்களில் கூட குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு மௌனம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் மாலையில் தெரிந்தவர்களுடன் பேசி, அரட்டை அடித்து செல்கின்றனர்.
  • பத்தில் ஐந்து பேர்  எப்பவும் செல்போனிலேயே இருக்கிறார்கள். ஒன்று SMS அனுப்பிக்கொண்டிப்பார்கள் அல்லது FM கேட்டுக்கொண்டிருப்பார்கள் அல்லது MP3 player-ல் பாட்டு கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
  • ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம், அதில் மூழ்கியிருப்பார்கள். இளம் ஜோடிகள் பொது இடங்களில் மிகவும் ரொமான்டிக் மூடில்தான் இருக்கிறார்கள். அணைத்தபடிதான் சுற்றி வருவார்கள், அவ்வப்போது முத்த மழையும் இருக்கும்.
  • பல பெண்கள் வயது வித்தியாசமில்லாமல் அரை குறை ஆடைகளில்தான் எப்போதுமே இருக்கிறார்கள்.
  • சீன மக்களில் மிகவும் வயதானவர்களைக் காண முடி்கிறது (70 - 80 வயதுகளில்). அவர்கள் எந்த தடுமாற்றமுமின்றி யாருடைய தயவும் இன்றி ரொம்பவே உற்சாகமாக காணப்படுகிறார்கள். அவர்களில் பலர் இன்னும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
  • நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களில் அதிகமாக தென் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்.
  • தமிழர்களில் பலர் கட்டிட வேலைகளும், மர வேலைகளும், சாலை & பாலம் கட்டும் பணிகளும் செய்யும் தொழிலாளர்களாக உள்ளனர். நீண்ட காலமாக இங்கேயே வாழும் தமிழர்கள் நிறைய உள்ளனர்.
  • வீட்டு வாடகை மிக மிக அதிகம் என்பதால், திருமணமான பல தமிழர்கள் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர். அதை சிங்கப்பூர் அரசாங்கமும் முறையாக அனுமதிக்கிறது.
  • திருமணமாகதவர்கள் 2, 3 பேர் சேர்ந்து மேன்ஷன் போன்ற விடுதிகளில் அறை எடுத்து தங்கி வருகின்றனர்.
  • ஆண் பெண் பேதமில்லாமல் ஏறக்குறைய அனைவருமே ஏதாவது ஒரு வேலையில் இருக்கின்றனர்.
  • பலர் (குறிப்பாக தமிழர்கள்) வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் இரட்டை சம்பளத்துக்காக ஓவர் டைம் வேலை பார்க்கிறார்கள்.

 
சுற்றி வந்ததில்:
  • ஷப்பிங் காம்ப்ளக்ஸ், ஓட்டல்கள், பார்கள் மற்றும் சில்லரைக் கடைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன.
  • சீன மற்றும் மலேஷிய ஓட்டல்கள்தான் எங்கும் அதிகமாக இருக்கின்றன. லிட்டில் இந்தியா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தடுக்கி விழுந்தால் தமிழ் நாடு ஓட்டல்தான் எனும் அளவுக்கு நம்ம ஊர் ஓட்டல்கள். ஓட்டலைப் பொறுத்து விலைகளும் மாறுகின்றன.
  • சிங்கப்பூரில் அனைத்துப் பொருட்களும் இந்தியாவையும் மலேஷியாவையும் விட விலை ரொம்ப அதிகம். எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டும் விலை குறைவு. குறிப்பாக டி.வி.க்கள் விலை ரொம்ப ரொம்பக் குறைவு. அதனால் இங்கிருந்து இந்தியாவிற்கு பலர் டி.வி். வாங்கிச் செல்கின்றனர்.
  • நாட்டில் எந்த மூலையில் (பைப் மூலமாக) கிடைக்கும் தண்ணீரும் மிகவும் சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட குடி நீர்தான் (குளியலறையில் குளிக்கும் நீர் உட்பட). அதனால் தண்ணீர் பிரச்சினை இல்லை, எங்கும் தாராளமாக தண்ணீர் அருந்தலாம்.
  • ஊர் ரொம்பவே சுத்தமாக காணப்படுகிறது. இரயில்களிலும் பேருந்துகளிலும் உணவு உண்ணவும், தண்ணீர் அருந்தவும் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • சட்டங்கள் இங்கு மிகக் கடுமையாகவும் உறுதியாகவும் கடைபிடிக்கப்படுகின்றன. அங்கங்கே அதை மீறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் பிடி பட்டால் எந்தக் கருணையும் கிடையாது. அதற்கான தண்டனையும் கடுமையானது.
  • சிங்கப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் வீடுகள் அனைத்துமே (குறிப்பிட்ட சிலவற்றைத் தவிர) அரசாங்கத்தால் கட்டப்பட்டவை. அதனால் அனைத்து வீடுகளின் அமைப்பும் சில வகைகளில் அடங்கிவிடும்.
  • வீடு மற்றும் அலுவலக கட்டிடங்கள் அனைத்தும் 20 மாடிகள் வரை உள்ளன. அதே போல் லிப்ட் இல்லாத கட்டிடங்களே இல்லை.
  • மழையும் வெயிலும் இங்கு அன்றாட நிகழ்வுகள். எல்லாருடைய கையிலும் குடை கட்டாயம் இருக்கும். ஏறக்குறைய தினமும் மழை பெய்கிறது, பெரும்பாலும் அது கன மழையாகத்தானிருக்கும். மழை விட்ட அடுத்த கனம் எங்குமே மழை பெய்த சுவடே இருக்காது. மழையைக் கண்டு யாரும் ஓடுவதோ இல்லை மழை வருகிறதென்று ஒரு வேலையை ஒத்திப் போடுவதோ இல்லை (ஏனெனில் இங்கு மழை ஆரம்பிதால் பல சமயம் மணிக்கணக்கில் விடாமல் கனமாக பெய்யும்).

 
போக்குவரத்து:
  • குளிரூட்டப்பட்ட இரயிலும் பேருந்தும் எல்லா இடங்களையும் இணைக்கின்றன.
  • இரயிலும் பேருந்திலும் போய் வர ஏ.டி.எம் அட்டை வடிவில் பிரீ-பெய்டு எலக்ட்ரானிக் அட்டை விற்கப்படுகிறது.
  • எவ்வளவு கூட்டத்தையும் எந்த வித பிரச்சினையின்றி சமாளிக்கும் வகையில் இரயிகளும் பேருந்துகளும் வடிவமைக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் குறைந்த நேர இடைவெளியில் இயக்கப்படுகின்றன.
  • சொந்தமாக பலர் கார் வைத்திருக்கிறார்கள். வாடகைக் கார்களும் மிக மிக அதிகம், மீட்டர் சொல்லும் கட்டனம்தான். பிஸியான காலை மற்றும் மாலை நேரங்களில் வாடகை அதிகம். இரவில் அதைவிட அதிகம்.

 
இன்னும் வருகிறது...

 
-சமுத்ரன்

4 comments:

  1. ஒரு மாசத்துல நிறைய தான் பார்த்து (கவனித்து) இருக்கீங்க!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete