Sunday, November 15, 2009

கல்யாண ஆல்பம் - சிறுகதை

தேவியின் திருமண ஆல்பமும், வீடியோவும் வந்திருந்தது. தேவி, தேவியின் கணவர், அப்பா, அம்மா, தம்பி, பாட்டி என அனைவரும் வீடியோவைவிடவும் ஆல்பத்தை பார்ப்பதில்தான் ஆர்வமாய் இருந்தனர். ஒவ்வொருவரின் கை மாறி அந்த ஆல்பம் வலம் வந்து கொண்டிருந்தது. மணமக்களுடன் திருமணத்திலும் வரவேற்பிலும் அவரவர் நின்று எடுத்துக்கொண்ட போட்டோக்களை பார்ப்பதும் அதுபற்றி கேலி கிண்டல் செய்துகொண்டும் இருந்தனர். பாட்டியிடம் யாரும் ஆல்பத்தை காட்டவோ அல்லது  கேலி கிண்டலை அவரிடம் பகிர்ந்துகொள்ள விரும்பவோ முனையவில்லை. அதற்கு தன் முதுமைதான் காரணம் என்பதும் பாட்டிக்கு தெரியாமல் இல்லை.

அனைவரும் பார்த்தபின் அந்த ஆல்பம் நடு ஹாலில் கேட்பாரின்றி இருந்தது. தேவியின் தம்பி திருமண வீடியோவை ப்ளே செய்தான். அனைவரும் டீவி முன் அமர்ந்தனர். தம்பதிகளின் அசைவுகளை அனைவரும் கிண்டல் செய்தவாறு பார்த்தனர். தேவியும் அவளின் கணவரும் அனைத்தையும் வெட்கத்துடன் ஜோடியாக அமர்ந்தவாறு ரசித்துக் கொண்டிருந்தனர். பாட்டி இவற்றை ஒரு ஓரமாக இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

பாட்டிக்கு என்னவோ தோன்ற, எழுந்து தள்ளாடி உள்ளே சென்றார். நாற்காலியில் ஏறி எதையோ எடுக்க முயன்று கீழே விழுந்துவிட்டார். உடனே அனைவரும் அவரை தூக்கி கட்டிலில் படுக்க வைத்தனர். ஆளாலுக்கு அறிவுரை வழங்கினர்.

"என்ன பாட்டி உங்களுக்கு வேனும்? இந்த வயசான காலத்துல எதுக்கு இந்த வேலை?" - இது பேத்தி.
"வயசான காலத்துல தேவையில்லாத வேலை எல்லாம் எதுக்கு பாட்டி பண்ற?" - இது பேரன்.
"சேர் மேல ஏறி தனியா அலமாரில அப்பிடி என்னதாம்மா தேடுன?" - இது மகன்.

பாட்டி எதுவும் பேச வில்லை. எல்லோரின் பேச்சும் பாசத்தின் வெளிப்பாடுதான் என்பது பாட்டிக்கு நன்றாகவே புரிந்தது. அதுவே ஆறுதலாகவும் இருந்தது.

"நல்ல வேல அடி எதுவும் படல. கேக்குறாங்கல்ல, சொல்லுங்க அத்த.." - இது மருமகள்.

"கல்யாண ஆல்பம்" - பாட்டி பேசினார்.

இதைக் கேட்டவுடன் தேவியின் தந்தைக்கு ஏக கோபம், "கல்யாண ஆல்பம்தான் அங்க அவ்ளோ பெருசா ஹால்ல இருக்குல்ல? கண்ணு தெரியுதா இல்லையா. இத்தன பேர் இருக்கோம்ல... எங்ககிட்ட கேக்க வேண்டியதுதான...?".

"இல்லடா, உன்னோட கல்யாண ஆல்பம்" - பாட்டி தன் மகனைப் பார்த்து சொன்னார்.

"என்னம்மா? அத எதுக்கு இப்ப கேக்குற? அது இப்ப எங்க இருக்குன்னு எங்களுக்கே தெரியல." தன் மனைவியை அதை தேடி எடுத்து குடுக்க சொல்லிவிட்டு தேவியின் அப்பா வெளியே சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் தன் மகனின் திருமண ஆல்பம் பாட்டியின் கைக்கு வந்தது. அனைவரும் அங்கிருந்து செல்லும்வரை அந்த ஆல்பத்தை அவர் தொடவில்லை. பின் சொல்லி வைத்தவாறு அந்த கருப்பு-வெள்ளை ஆல்பத்தின் ஒரு குறிப்பிட்ட பக்கத்தை புரட்டினார். அங்கே மணமக்களுடன் பாட்டியும் தாத்தாவும் தம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே சேர்ந்து நின்று எடுத்துக்கொண்ட போட்டோ. அதை தன் கையால் தடவினார் - பாட்டியின் கண்களில் கண்ணீர். அந்த கண்ணீரில் ஆயிரம் கதைகள் இருந்தாலும், அதற்கு அர்த்தம் ஒன்றுதான் இருக்க முடியும் என்பதும் அந்த கண்ணீருக்கு முதுமை என்பதே இல்லை என்பதும் சொல்லத்தேவையில்லை.

-சமுத்ரன்

யாரு டாடி அவங்கள்லாம் - சிறுகதை (with English translation)

"டாடி..."
"யெஸ், என்னப்பா?"
"யாரு டாடி அவங்கள்லாம் அந்த கோயில் முன்னாடி?"
"அவங்க பிச்சைகாரங்க..."
"அப்படின்னா என்ன டாடி?"
"சும்மா கோயில் வாசல்ல உட்காந்துகிட்டு கோயிலுக்கு வர்றவங்ககிட்ட பிச்சை கேட்டு காசு வாங்கி பொழைக்கிற சோம்பேரறிங்கடா"
"சோம்பேறின்னா என்ன டாடி?"
"சோம்பேறின்னா... கை கால் நல்லா இருந்தும், ஒடம்ப வளைக்காம, மத்தவங்க உழைப்புல வாழறவங்க..."
"ஏன் டாடி அவங்கள்லாம் இப்பிடி இருக்காங்க?"
"almost எல்லாருக்குமே இதுதான் தொழில். கேட்டா வறுமை, பசி, பஞ்சம்னு ஏதாவது காரணம் சொல்லுவாங்க. ஆனா நெஜம்மா பாத்தா பிச்சையெடுத்தே வீடு நெலம்னு வாங்கி போட்டிருப்பாங்க. ஒரே இடத்துல பிச்சை எடுத்தா மக்களுக்கு தெரிஞ்சுடும்னு ஊரு மாத்தி ஊரு கோயில் மாத்தி கோயில்னு போயி பிச்சையெடுக்கிறாங்க... இவங்களாலதான் நம்ம நாடே இப்பிடி உருப்படாம இருக்கு... இவங்களுக்கு காசு போடறவங்கள சொல்லனும்... அவங்களாலதான் இவங்கள இப்பிடி வளையாம சொகுசா வாழ சொல்லுது"

இடையில் அலைபேசி அழைப்பு வந்து போகிறது.

"என்ன டாடி குஷியா இருக்கீங்க? யாரு டாடி கால் பண்ணாங்க?"
"Coming Monday நாம US கெளம்பறோம்"
"போன வாரம்தான டாடி அங்கயிருந்து வந்தோம்? அதுக்குள்ள திரும்பி போறோமா?"
"ஆமான்டா. அம்மா பேர்ல தாத்தா வாங்கின நெலத்த ரெஜிஸ்டர் பண்ணறதுக்குதான் இந்தியா வந்தோம். பண்ணியாச்சு, இப்ப திரும்பி போறோம்."
"ஏன் டாடி, நாம இங்கியே இருக்க முடியாதா?"
"டாடி வேலைக்கு போணுனும் இல்ல..."
"உங்களுக்கு இங்கயே வேலை கிடைக்காதா டாடி?"
"இல்லடா, US-அ விட இங்க வேலை செய்றது கஷ்டம், சம்பளம்லாம் இங்க எனக்கு ஒத்துவராது"
"அந்த பிச்சைகாரங்களும் கஷ்டம்கிறதால வேற வேலை செய்யாம இப்பிடி சொகுசா பிச்சை எடுத்து சம்பாதிக்கிறாங்கன்னு சொன்னீங்க, அப்படின்னா, அவங்களுக்கும் உங்களுக்கும் இருக்குற எடந்தான் வித்தியாசமா டாடி?"
"?!?!?!"

English version for those who can't read Tamil...


"Dad"
"Yes, dear"
"Who are those sitting in front of the temple?"
"They are beggars"
"beggars?"
"yes, beggars. They just sit there and ask to obtain free money"
"why do they do so, dad?"
"its become their job. They are not ready to do any other work though they are able to. This is simply because they take advantage of those who feel pity for them and give money. These beggars have every non-sense reason to do this as a job. Most of them have become wealthy by just doing this and lead an effortless life on the other side. These beggars did spoil the country's growth."

Meantime, the dad attends a call on his cell phone.

"Whats up dad, you seem to be happy after attending the call?"
"Yes, dear. Our return to US is confirmed by next Monday"
"Why dad? We just came to India last week. Aren't we staying here anymore?"
"No dear, we are in India to complete the formalities for a land registration on mom's name. Dad has to join back to my job, right?"
"Can't you find a job here itself, Dad?"
"Well, the job won't be suitable for me, dear. Have to suffer a lot to work in India than in US.
"
"you said those beggars also want to earn money without suffering, also they are not willing to do any other job. So, the only difference between you and them is the place of work, dad?"
"?!?!?!?"

-சமுத்ரன்

Thursday, November 12, 2009

அழகு - கவிதை

பார்வை ரெண்டும் சந்திக்கும் வேளையில்
பெண்மையை புகழ்ந்துபார், அங்கு
பொய்யும் அழகு

பொங்கியெழும் தோழன் முன்
மௌனத்ததை பரிசளித்துப்பார்
பொறுமையும் அழகு

வெற்றியாளனை விலக்கி
வெற்றிக்கான இலக்கினை மட்டும் பார்
பொறாமையும் அழகு

உண்மையான உழைப்பின் ஒரு பங்கு ஊதியத்தை
வறியோர்க்கு வழங்கிப்பார், அன்றைக்கு
உறக்கமும் அழகு

இல்லாத உறவின் நெருக்கத்தை
காதலியின் காதில் கிசுகிசுத்துப்பார்
ஊடலும் அழகு

இரவில் வீடு திரும்பும்போது விவாதம் செய்யாத
காலில்லா அந்த ஆட்டோ முதலாளியைப்பார்
ஊனமும் அழகு

மீறுவதற்கான வழிகள் இருந்தும்
அதன் வரையறை வரை சென்று திரும்பிப்பார்
கொள்கையும் அழகு

சுகமான தருணத்தில்
இதமாக சீண்டிப்பார்
கோபமும் அழகு

துவண்ட நட்புக்கு
தோள் கொடுத்துப்பார்
கண்ணீரும் அழகு

இயல்பான அனைத்தையும்
நிதமும் இரசிக்கப் பழகு
இம்சைகூட அழகு!

-சமுத்ரன்

Tuesday, November 10, 2009

ஆங்கிலமும் நானும்...

அப்பல்லாம் துவக்கப்பள்ளிகள்ல, மூனாங்கிளாஸ்லதான் A B C D மொத மொத சொல்லிக் கொடுத்தாங்க. எனக்கும் எங்கூட படிக்கிறவங்களுக்கும் இரண்டாங்கிளாஸ் முடியும்போதே கிலி புடிச்சுருச்சு. அடுத்த வருஷம் A B C D எல்லாம் படிக்கனுமே! அத கேக்கும்போதே எங்களுக்கு பயம். இப்ப Appraisal meetingல மேனேஜர பாக்குற மாதிரியே மூனாங்கிளாஸ் போனப்புறம் எங்க வாத்தியார பார்த்தோம். ஆனாலும் உள்ளுக்குள்ள ஒரு குஷி இருந்துச்சு, நாமலும் இங்கிலீஷ் கத்துக்க போறோம்னு.

வாத்தியாரும் அந்த 26 எழுத்த அடிச்சு உருட்டி மெரட்டி எங்கள கத்துக்க வச்சாரு. கொஞ்ச நாள்ல 26 எழுத்தையும் எழுதத் தெரிஞ்சுகிட்டேன். சில பேருக்கு என்ன முட்டினாலும் எல்லா எழுத்தையும் எழுத வரல, அப்படியே எழுதினாலும் எது எந்த எழுத்துன்னு சரியா கண்டுபுடிக்க தெரியல (A for Apple எல்லாம் நான் படிக்கும் போது சொல்லித்தரலை). 'முத்துக்குமார், A B C D எழுதி அத எல்லாருக்கும் படிக்க சொல்லிக்குடு'ன்னு வாத்தியார் எங்கிட்ட சொல்லிட்டார், எனக்கு கை கால் புரியல. 'இங்கிலீஷ்ல நாந்தான் பெரிய ஆள் தெரியுமில்ல?'ன்னு திரிஞ்சேன். சிலேட்டுல எழுதிக்காட்டி எல்லாருக்கும் சொல்லியும் குடுத்தேன்.

அப்பிடியே அஞ்சாங்கிளாஸ் போயாச்சு. எங்க பெரியப்பா பையன் அப்ப ஆறாங்கிளாஸ் போனான். அவன் வந்து ஒரு நாள் சொன்னான் 'ஆறாவதுல இருந்து running A B C D -ன்னு புதுசு புதுசா எழுதச் சொல்றாங்கடா'ன்னு ஒரு குண்ட தூக்கி போட்டான். 'அது என்ன மாதிரி A B C D டா, எழுத்தெல்லாம் எப்பிடிடா இருக்கும்?'னு கேட்டா, 'அது எல்லாமே புதுசு புதுசா இருக்குதுடா, எதுவுமே அஞ்சாவதுல படிச்ச மாதிரி இல்ல'ன்னு அவன் எழுதியிருந்த நோட்ட காட்டினான். 'அப்பறம் எதுக்குடா அஞ்சாவது வரைக்கும் இத சொல்லி குடுக்குறாங்க?'-ன்னு எனக்கு ஏகப்பட்ட டென்ஷன், கூடவே பயம்.

அஞ்சாங்கிளாஸ் முடிச்சவுடனே நோட்டு பேனா எல்லாம் மொத மொதல்ல எனக்கு அப்பா வாங்கிக் குடுத்தப்ப எனக்குள்ள அப்படி ஒரு feeling இருந்துச்சு. அந்த புது நோட்டு, புது புத்தகத்த தெறந்து முகர்ந்து பார்த்தா ஒரு அருமையான smell வருமே, அதையெல்லாம் ரசிச்சுகிட்டு பயமும் சந்தோஷமும் கலந்து ஆறாவதும் போயாச்சு. மொதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் போகப்போக எல்லாருமே ஈஸியா running a b c d ய கத்துகிட்டோம். அப்பாடான்னு சந்தோஷப்படுறதுக்குள்ள dictation, spelling, grammarனு வரிசையா புதுசு புதுசா சொல்லி குடுத்தாங்க. இருந்த சந்தோஷம் எல்லாம் போயே போச். இங்கிலீஷ் கிளாஸ்னாலே வெறுப்பா இருக்கும். மண்டையெல்லாம் ஒரு மாதிரி 'திம்'னு ஆயிடும்.

எப்படியோ ஒரு வழியா ஆறாவது, ஏழாவது முடிச்சு எட்டாவது போயாச்சு. அங்க இருக்குறது போதாதுன்னு இங்கிலீஷ் புத்தகத்துல கதைன்னு புதுசா சேத்திருந்தாங்க (அது கதைன்னு எனக்கு பத்தாவது வந்த பின்னாடிதான் தெரியும்). அந்த கதைல இருந்து பரீட்சையில கேள்வி வேற கேப்பாங்க. அப்ப இங்கிலீஷ்னாலே எல்லாருக்கும் master notesதான். அந்த புத்தகத்த வாங்கி அதுல இருக்குற short questions, essay, grammarனு எல்லாத்தையும் மனப்பாடம் செஞ்சோம். அஞ்சு பாடம் இருக்கும் இங்கிலீஷ் புத்தகத்துல. சில சமயம் ஒரே கேள்விதான் மொத பாடத்துலயும் நாலாம் பாடத்துலயும் இருக்கும் ஆனா ரெண்டுக்கும் வேற வேற பதில் (ஏன்னா, ரெண்டும் வேற topic).

அஞ்சு பாடத்துல இருந்தும் வரிசையாதான் பரீட்சையில கேள்வி கேப்பாங்க. ரெண்டாம் பாடத்துக்கான இடத்துல அந்த கேள்வி வந்துச்சுன்னா ரெண்டாம் பாடத்துக்கு கீழ master notesல என்ன போட்டிருக்கானோ அதை எழுதனும், அதே மாதிரிதான் நாலாம் பாடத்துக்கான இடத்துல அந்த கேள்வி கேட்டிருந்தா master notesல நாலம் பாடத்துக்கு கீழ அந்த கேள்விக்கு என்ன பதில் போட்டிருக்கானோ அத எழுதனும்.

இப்பிடியே எந்தவித முன்னேற்றங்களும் இல்லாமலேயேதான் பன்னிரெண்டாம் கிளாஸ் வரைக்கும் படிச்சோம். master notes-ஐ எப்படி மனப்பாடம் பண்றது, அதுக்கு குறுக்கு வழி என்ன அப்படிங்கிறதுதான் எங்களுக்கு எல்லா ஆசிரியர்களுமே சொல்லிக் குடுத்தாங்க (ஒண்ணு ரெண்டு பேரத் தவிர). master notesதான் பிரதானம், எவனுக்கும் இங்கிலீஷ் புத்தகத்த வச்சும் பரீட்சைக்கு படிக்கலாம்னே தெரியாது. master notesல இல்லாத ஒரு கேள்வி பரீட்சையில வந்துட்டா அது out off syllabusனு (வாத்தியார் உட்பட) சத்தியம் பண்ணுவோம்.

அப்படியே காலத்தை ஓட்டி காலேஜ் வரைக்கும் வந்தாச்சு. இங்கதான் பெரிய பிரச்சினை. இது வரைக்கும் எப்பிடியோ நல்லா படிக்கிற பையன்னு(?!) பேரு வாங்கியாச்சு. இப்போதான் நம்ம வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏற போவுது. இத்தன நாளா அந்த ஒரு இங்கிலீஷ் பாடத்த, பரீட்சை எழுதி முடிச்சவுடனே 'அப்பாடா, ஒழிஞ்சதுடா'ன்னு தூக்கி போடுவோம். இங்க பரீட்சைக்கு எல்லா பாடத்தையும் இங்கிலீஷ்ல இல்ல எழுதனும்? நடத்துறவங்களும் இங்கிலீஷ்ல இல்ல நடத்துவாங்க? என்னதான் 'காலேஜ் வந்துட்டோம்டா'ன்னு ஒரு சந்தோஷம் இருந்தாலும் இதுதான் அப்ப என் மண்டைய போட்டு கொடஞ்சுட்டு இருந்துச்சு.

அந்த தீக்குள்ள எண்ணைய ஊத்துனா மாதிரி காலேஜ்ல மொத நாள் மொத கிளாஸே படம் படமா வரைஞ்சி (engineering drawing) ஒரு வாத்தியார் இங்கிலீஷ்ல சொற்பொழிவு ஆத்து ஆத்துனு ஆத்துனார். அதுவும் மூச்சுகூட விடாம தொடர்ந்து 3 மணி நேரம். எனக்கு ஒண்ணுமே புரியல. எதாவது பொறுமையா கவனிக்கலாம்னு கவனிக்க பாத்தா தூக்கம் தூக்கமா வந்துச்சு. இதுல அவரு கேக்குற கேள்விக்கு படார் படார்னு பல பேர் இங்லீஷ்ல பதில் சொல்றாங்க, பல பேர் பதில் சொல்ல கை தூக்குறாங்க. எனக்கு கேள்வியே புரியாது. அப்பப்ப இங்கிலீஷ்லயே வத்தியார் ஜோக் அடிப்பார், பல பேர் சிரிப்பாங்க. எனக்கு அங்க எதுவுமே பிடிக்கல.

நமக்கு மட்டுந்தான் இப்பிடியா இல்ல கம்பெனிக்கு ஆள் இருக்குதான்னு பாக்கலாம்னு பக்கத்துல இருக்குறவங்கிட்ட 'ஏங்க, சார் பேசறதெல்லாம் உங்களுக்கு புரியுதா?' கேட்டேன். 'ம்... எனக்கு நல்லா புரியுதுங்க'ங்குறான். 'அய்யோ, எங்கப்பா என்னைய teacher training போக சொன்னங்க, நாந்தான் இப்பிடி விவரந்தெரியாம engineering எடுத்துட்டோம்டா'ன்னு நெனச்சி அழுவாச்சி அழுவாச்சியா வந்துச்சு. உட்டுட்டு ஊருக்கு ஓடிப் போயிடலாமான்னும் தோனுச்சு. ஆனா பக்கத்துல அழகழகா வித விதமான கலர்ல பொண்ணுங்க வேற உக்காந்துட்டு இருந்தாங்க, அதனால விட்டுட்டு போறதுக்கும் மனசு வரல (ஹி ஹி).

மொத நாள் சாய்ங்காலம் hostelல போயி அப்பிடியே உக்காந்திருந்தேன். ஆனா 'எனக்கு கிளாஸ்ல இங்கிலீஷ்ல நடத்துறது ஒண்ணுமே புரியலை'ன்னு  யார்கிட்டயும் சொல்லல (ஈகோதான் பிரச்சினை). இங்கிலீஷ் கத்துக்கலாம்னு அப்பா வாங்கிக் குடுத்த டிக்ஷனரிய எடுத்து பார்த்தேன். 'இத்தனை வார்த்தைங்க இருக்குது, என்னிக்கு நாம இதெல்லாம் படிச்சு, அது புரிஞ்சு, அப்புறம் நெனப்பு வச்சு... செத்தோம் போ'-ன்னு தோனுச்சு. வீட்டு நெனப்பு வேற வந்து அப்பிடியே உக்காந்திருந்தேன்.

Hostelல என்னோட roomல இருக்குறவங்க அப்பிடியே ஒவ்வொருத்தரா அறிமுகப்படுத்திகிட்டு பேச ஆரம்பிச்சோம். அதுல பல பேர் என்னை மாதிரி தமிழ் மீடியம்ல இருந்து வந்தவங்கதான், சில பேர் மட்டும் இங்கிலீஷ் மீடியம் (அந்த roomல மொத்தம் 21 பேர், இருந்தாலும் எல்லாருமே தாராளமா தங்குற மாதிரி ரொம்ப பெரிய room). ஆனா, என்னோட மனக்கஷ்டத்த அவங்ககிட்ட சொல்லிக்கலை. ஈகோன்னு மட்டுமில்ல, 'இங்கிலீஷ்ல பாடம் நடத்துறது எங்களுக்கெல்லாம் புரியுதே'ன்னு அவங்க சொல்லிட்டா அப்புறம் நான் என்ன ஆவேன்னே தெரியாது. ஒவ்வொருத்தரா பேசிக்கிட்டிருக்கும்போது ஒரே வரில சௌந்தர் இதுக்கெல்லாம் மருந்து போட்டான் 'ஏங்க இன்னிக்கு கிளாஸ்ல நடத்துனது சுத்தமா புரியல இல்ல?'ன்னு சிரிச்சுகிட்டே 'அந்த படம் நல்லா இருந்துச்சுல்ல?'ன்னு சொல்றா மதிரி ரொம்ப casualஆ சொல்லிட்டான். எனக்கு தலையில இருந்த பாரமெல்லாம் நொடியில போயே போச்சு . 'ஆமாங்க, எனக்குந்தாங்க... சுத்தமா புரியல போங்க'ன்னேன். அப்பிடியே அங்க இருந்த 5-6 பேரும் இதையே சொல்ல, எனக்கு ஒரே ஜாலி. நாங்க அப்பிடியே ஒண்ணா சேர்ந்து பிளான் பண்ணினோம் - இதுக்கு என்ன பண்ணலாம்னு. அதுக்கும் சௌந்தர்தான் வழி சொன்னான். ஒரு நாளைக்கு ஆளுக்கு 5 வார்த்தை டிக்ஷனரில அர்த்தம் படிச்சு அதை ஒரு நோட்டுல எழுதி வச்சு மத்தவங்களுக்கும் சொல்லி குடுக்கனும். மாத்தி மாத்தி கேள்வி கேக்கனும். இப்பிடி பல பிளான் பண்ணினோம்.

2 நாள் கழிச்சு கிளாஸ்ல மறுபடியும் புயலடிச்சுச்சு. மொத நாள் 3 மணி நேரம் இங்கிலீஷ்லயே கத்துன வாத்தியார் திரும்பவும் வந்தார். இன்னிக்கும் அவர் தொடர்ந்து 3 மணி நேரம் பேசப் போறேன்னு வந்தவுடனேயே சொல்லிட்டார் (இதையெல்லாம் தமிழ்ல சொல்றார், ஆனா பாடம் மட்டும்?). 'கிழிஞ்சுது போ'ன்னு உக்காந்துட்டேன். என்ன என்னமோ பேசினார், போர்டுல வரைஞ்சார், கேள்வி கேட்டார், ஜோக் அடிச்சார், அதுக்கு சிரிச்சாங்க...

நான் அப்பிடியே உக்காந்துட்டு இதை எல்லாம் பாத்துட்டு இருக்கேன், ஆனா மனசு வேற எங்கியோ இருக்கு (பக்கத்துல பொண்ணுங்க வேற, ச்ச... அது ஒரு மாதிரி இருக்கும்பா - இதுக்கு ஒரு பதிவு தனியா போடுறேன்). திடீர்னு நெனப்பு வந்து பாத்தா, வாத்தியார் எதோ கேள்வி கேட்டிருப்பார் போல அதுக்கு பதில் தெரிஞ்சவங்க கையை தூக்கி பதில் சொல்லிட்டு இருந்தாங்க. எல்லாத்தையும் 'தப்பு தப்பு'ன்னு சொல்லிட்டு வந்தார்- எல்லாமே இங்கிலீஷ்தான்.

ஒரு ஸ்டேஜ்ல யாருமே கையை தூக்கல, அதனால 'நீங்க சொல்லுங்க'ன்னு அவரா கை காட்டி கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டார். எனக்கு 'பக்'ன்னுது. எனக்கு கேள்வி என்னான்னே தெரியல. பக்கத்துல இருக்குறவன்கிட்ட கேள்வி என்னான்னு கேட்டேன் 'define straight line'-ன்னான்.  கேள்விய குறிச்சு வச்சுகிட்டேன்.

பதில் சொல்லாதவங்களை அப்படியே நிக்க வச்சுட்டே வந்தார். இன்னும் யாருமே சரியான பதில் சொல்லல, இப்போ யாரும் கையும் தூக்கல. அதனால அவருக்கு கோபம் வேற. 'நம்மல கேட்டா எதாவது சொல்லனும், சொல்லாம நிக்கக் கூடது'ன்னு யோசிக்கும்போதே எனக்கு பதில் தெரிஞ்சுடுச்சு, அதாவது 'இரு புள்ளிகளை மிகக்குறைந்த துரத்தில் இணைக்கும் பாதைதான் நேர்க்கோடு'-ன்னு. அவர் என்னை இன்னும் கேக்கல. நானே கை தூக்கி பதில் சொல்லனும்னு எனக்கு ஆசை, ஆனா இத இங்கிலீஷ்ல சொல்லனுமே. இதுக்கு இங்கிலீஷ்ல என்னான்னு பக்கத்துல இருக்குறவங்கிட்ட கேட்டா அவன் எந்திரிச்சு அவன் சொன்னா மாதிரி சொல்லிட்டான்னா என்னா பண்றதுன்னு அவன்கிட்டயும் கேக்கல.

இன்னும் யாரும் சரியான பதிலும் சொல்லல. நானே ஒரு தைரியத்துல கையை தூக்கிட்டேன். 'yes, tell me'-ன்னார். 'two points short distance connecting'-ன்னு சொல்லி கைல சைகையும் பண்ணேன் (எப்படியும் அவருக்கு என்னோட இங்கிலீஷ் புரியாது, சைகை பண்ணியாவது சொல்ல வந்ததை புரிய வைக்கலாமேன்னுதான்). 'நீங்க தமிழ்லயே சொல்லுங்க'-ன்னு அவரை தமிழ் பேச வச்சேன். சொன்னேன். கிளாஸ்ல மேடைக்கு வரவச்சு பராட்டினார். 'டேய், நானும் பதில் சொல்லியிருக்கேன் பாருங்கடா...'-ன்னு தோனுச்சு (பொண்ணுங்க எல்லாம் என்னை ரொமான்டிக்கா பாக்குறதா எனக்கு தோனுச்சு, கொஞ்சம் ஓவரா போறனோ? சரி சரி உடுங்கப்பா).

அன்னிக்கு சாய்ங்காலம், hostelல சௌந்தர் சொன்னான் - 'ஏங்க இன்னிக்கு அந்த இங்கிலீஷ் மீடியம் பசங்களுக்கு செருப்பால அடிச்சா மாதிரி இருந்திருக்குங்க, ஓவராதான் ஆடுனாய்ங்க. வச்சீங்கல்ல ஆப்பு. கலக்கிட்டீங்க. தமிழ் மீடியம் பசங்கன்னா சும்மாவா? கை குடுங்க'-ன்னு பாராட்டினான். உண்மையில இப்போ நெனைக்கும்போது அந்த பதில்ல எனக்கு மட்டுமில்லாம கிளாஸ்ல இருந்த தமிழ் மீடியம் பசங்க அத்தனை பேருக்கும் ஒரு நம்பிக்கை, தைரியம் வந்திருக்குன்னு தெரியுது. அப்பறம் அதுவரைக்கும் வெறுப்பா இருந்த engineering drawing, எனக்கு ரொம்ப புடிச்ச பாடமாச்சுங்கறது வேற கதை.

அதுக்கப்புறம் முட்டி, மோதி, கொத்தி, கொதறி இப்போ அதுல பொழப்பையே ஓட்டுற அளவுக்கு வளந்துட்டாலும், இந்த வளர்ச்சிக்கான விதை எனக்குள்ள விதைக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியிலதான். மனதளவுல தயாரானதும் அதுக்கப்புறம்தான்.

இதுல எனக்கான இன்னொரு முக்கியமான பாடம் என்னான்னா, முன்னாடி மனசு ஒடஞ்சு உக்காந்திருந்தப்போவும், இப்ப குஷியா இருக்குறப்போவும் சௌந்தரோட அந்த வெளிப்படையான பேச்சாலதான் இரண்டையும்விட்டு என்னால ஈஸியா வெளிய வர முடிஞ்சுது. எதையுமே freeஆ பேசிட்டா பாதி பிரச்சினை முடிஞ்சுது. இப்பிடி பல நல்ல விஷயங்கள இன்னிக்கும் சௌந்தர் எனக்கு சொல்லாம சொல்லிக்குடுத்துட்டுதான் இருக்கான்.

-சமுத்ரன்

Friday, November 6, 2009

என் முதல் விமானப் பயணம்

ஆக. 4 2005 வெள்ளிக்கிழமை இரவு 9 மணி. அப்பா, அம்மா, சித்தப்பா, நண்பர்கள் படை சூழ முதல் முதலாக சென்னை விமான நிலையத்தில் காலடி எடுத்து வைக்கிறேன். வெளிநாடு செல்லும் கனவு பலிக்கப்போகிறது. அன்பான பெற்றோர்கள், பாசமான நண்பர்களை விட்டு 3 மாதத்திற்கு பிரிய போகிறேன்.

"இன்னும் சில மணி நேரத்தில் விமானம் ஏறப்போகிறோம். பயணம் எப்படி இருக்கும்? ஜன்னல் ஓரம் உட்கார்ந்தால் கீழே ஊர் ஊராக வேடிக்கை பார்க்கலாமே"-மனதில் பலவித எண்ணங்கள். நண்பர்கள் வழக்கம் போல் கேலியும் கிண்டலுமாய். இவர்களுடன் இப்படியே ஜாலியாக இதுவரை இருந்துவிட்டோம். இவர்களை எல்லாம் பிரிந்து நான் எப்படி தனியே இருக்கப்போகிறேன்? இதயத்தின் படக்... படக்... துடிப்பு எனக்கு காது வழியே கேட்குமளவுக்கு பலமாக இருக்கிறது. என் அம்மா அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் மனதில் ரொம்பவே கவலை இருந்திருக்க வேண்டும். மூவரும் சகஜமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள ரொம்பவே சிரமப்பட்டது நன்றாக தெரிந்தது. இரவு 10.30 மணி அளவில் உள்ளே செல்ல ஆயத்தமானேன். அப்பா, அம்மா, சில நண்பர்கள் விமானம் கிளம்புவதை பார்வையாளர்கள் பால்கனியிலிருந்து பார்த்துவிட்டுத்தான் கிளம்புவோம் என்பதில் உறுதியாக இருந்தனர். எல்லோருக்கும் டாடா காட்டிவிட்டு பெட்டிகளை உருட்டிக்கொண்டுஉள்ளே சென்றேன்.

கையில் இருக்கும் விமான டிக்கெட்டை பார்த்து வழி காட்ட அங்கங்கே விமான நிலைய ஊழியர்கள் இருந்தனர். டெல்டா விமான சேவைக்கான வரிசையில் போய் நானாக நின்று கொண்டேன். ஒரு பணிப்பெண் வரிசையில் நிற்பவர்களின் பெட்டிகளில் ஏதோ ஒரு tag-ஐ மாட்டிவிட்டுக்கொண்டே வந்தாள். கூடவே ஒவ்வொருவரையும் சில கேள்விகளையும் கேட்டுக்கொண்டே வந்தாள். அதாவது "நீங்கள் வைத்திருக்கும் பெட்டிகளை யார் pack செய்தார்கள்?, வெளிநாட்டிலிருக்கும் யாருக்காவது கொடுக்கச்சொல்லி வேறு யாரும் கொடுத்த பொருட்களை வாங்கிக்கொண்டு வருகிறீர்களா? உங்கள் பெட்டியில் என்ன என்ன இருக்கிறதென்று உங்களுக்கு முழுமையாக தெரியுமா?" போன்ற கேள்விகள். உண்மை எப்படி இருந்தாலும் "பெட்டியில் உள்ளவை எல்லாம் என்னுடையது மட்டும்தான், நான்தான் pack செய்தேன்" என்கிற வகையில் பதில் இருக்க வேண்டும். சிலபேர் "ஆமாம் என் நண்பன் குடுத்தான், அங்க குடுக்கச்சொல்லி" என்று வெகுளியாக சொன்னாலும், அந்த பணிப்பெண் "இல்ல சார், அப்படி சொல்லக்கூடாது, அப்படி யாரும் குடுக்கலன்னு சொல்லுங்க" என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள். ம்ம்ம்ம்ம். இந்த நிலையில் இருக்குது நம் விமான சேவை என நினைத்துக்கொண்டே வரிசையில் நகர்ந்தேன்.

என் முறை வந்தவுடன், அந்த வரிசைக்கு boarding pass கொடுக்கும் பணிப்பெண் என் பாஸ்போர்ட்டை மட்டும் வாங்கிக்கொண்டு ஒரு நிமிடம் எதையோ கணினியில் தேடிவிட்டு "San Antonio?" என்றாள். "yes, San Antonio, U.S." என்றேன். "Seat preference?"
"Means?"
"your preference for seating - inside or window side?"
"oh. yeah. window, window seat".
ஒரு மாதிரி பார்த்தாள் (ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டேனோ?), சிரித்து வைத்தேன். ஒன்றும் பேசாமல் என் 2 பெரிய பெட்டிகளும் (check-in baggage) அதற்கான எடை வரம்புக்குள் இருக்கிறதா என சரிபார்த்துவிட்டு rolling belt வழியே அவற்றை எங்கோ அனுப்பி விட்டாள் (அவற்றை நாம் போகும் விமானத்தின் அடிப்பகுதியில் அதாவது டிக்கியில் வைத்துவிடுவார்கள்). பின்னர் San Antonio செல்லும் வரை இந்த விமானம் மற்றும் 2 தொடர் விமானங்களுக்கான (connecting flights) boarding pass-களை பாஸ்போர்ட்டுடன் சேர்த்து என் கையில் கொடுத்தாள். அதனை வாங்கிக்கொண்டு எனக்கு முன்னால் நின்றிருந்தவர் எந்தப் பக்கம் சென்றாரோ அதே திசையில் எனது கைப்பெட்டியுடன் (carry bag) நானும் சென்றேன்.


Escalator வழியாக மேல் மாடிக்கு சென்றேன். அங்கே பாதுகாப்பு சோதனைக்காக ஒரு பெரிய வரிசை நின்றது. நானும் சென்று நின்று கொண்டேன். எந்த நாட்டுக்கு செல்பவராக இருந்தாலும் எந்த விமானத்திற்கு செல்பவராக இருந்தாலும் இந்த சோதனையை கடந்தாக வேண்டும். அந்த நீ......ண்ட வரிசை நகர்ந்து என் முறை வருவதற்குள் ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். போட்டிருக்கும் பேண்ட் சட்டை தவிர அனைத்தையும் கழட்டி தனியே ஒரு பெட்டியில் வைத்து அவற்றை லேசர் சோதனையும் என்னை தனியே மெட்டல் டிடெக்டர் சோதனையும் செய்தனர். என் கைப்பெட்டியில் பிளேடு இருந்தது அந்த லேசர் சோதனையில் தெரிந்துவிட்டதால், அதனை எடுத்து குப்பையில் போட வேண்டியதாகி விட்டது. மேலும் நடந்து சென்று என் விமானம் புறப்படும் terminal ஐ அடைந்தேன்.

ஆக. 5 அதிகாலை 12.30 மணி. விமானம் புறப்பட இன்னும் 1.20 மணி நேரம் இருக்கிறது. அப்படியே ஓரிடத்தில் அமர்ந்து வருவோர் போவோரை எல்லாம் பராக்கு பார்த்துக்கொண்டிருக்கிறேன். மணி 1.15. விமானத்தில் ஏற அழைப்பு வருகிறது. எல்லாரும் தானாக ஒரு வரிசையில் நிற்கிறோம். boarding pass-ஐ சரி பார்த்துவிட்டு ஒவ்வொருவராக உள்ளே அனுப்புகிறார்கள். ஒரு சிறிய பாதை வழியாக சென்று விமானத்தின் கதவு வழியே உள்ளே செல்கிறோம். அனைவரையும் அந்த விமானத்தின் பணியாளர்களில் ஒருவர் "Welcome sir, have a good flight" சிரித்தபடி வரவேற்கிறார்.




உள்ளே நான் நினைத்ததைவிட அழகாக அதன் உள் கட்டமைப்பு. ஒவ்வொரு seat-க்கும் அதிக இடைவெளி, அகலமான seat என பார்க்கவே அருமையாக இருக்கிறது. எனது seat எண்ணை நோக்கி அப்படியே நடந்து பின்னாடி போகிறேன். முதல் இருபது வரிசை கடந்த பின் நம்ம ஊர் அரசு பேருந்து seat போல வரிசை ஆரம்பிக்கிறது. இப்போதுதான் புரிகிறது முதலில் இருப்பவை business class seats என்று.

இது் economic class. "இந்த மாதிரி seat-லதான் நான் உக்காரனுமா? எனக்கு வேற கால் முன்னாடி சீட்ல இடிக்குமே? 2-3 மணி நேரம்னா பரவால்ல, 10 மணி நேரமாச்சே?"-புலம்பல்ஸ். ஒரு வரிசைக்கு 2-4-2 என மூன்று பிரிவாக 8 பேர் அமரும் வகையில் இருக்கிறது. ஆண்டவனை வேண்டிக்கொண்டு மேலும் நடந்து என் இருக்கையை அடைகிறேன். என் இருக்கை நடு பிரிவில் இடது ஓரமாக இருந்தது. "என்னடா இது? window seatதான கேட்டோம்? இங்க எப்பிடி? அய்யோ, இப்ப வேடிக்க பாக்க முடியாதே?" என புலம்பிக்கொண்டே என் கைப்பெட்டியை மேலே உள்ள rack-ல் வைத்துவிட்டு என் இருக்கையில் அமர்கிறேன்.


சிறிது நேரத்தில் ஒரு அழகான பெண் (அட கேரளா...) வருகிறாள். "அப்பாடா, ஒரு அழகான பொண்ணுப்பா. எங்க உக்காருதுன்னு பாத்து வச்சுக்கனும், அப்பப்போ பாத்துக்கலாம்" - என் கண் பார்த்து முடிப்பதற்குள் என் மனம் கணக்கு போட்டுவிட்டது. அந்த பெண் என் வரிசை வந்ததும் அவளது கைப்பையை மேலே rackல் வைத்துவிட்டு "Excuse me" என்கிறாள் என்னிடம். அதுவரை அந்த பெண்ணை கவனிக்காத மாதிரி, சிவாஜியின் பாவனையில் "yes" என்றேன். "thats my seat" என் பக்கத்து இருக்கையை கை காட்டினாள். "அய்யய்யோ, நமக்கு பக்கத்து seatஆ?". எழுந்து அந்த பெண்ணுக்கு வழி விட்டேன். "நமக்கு புதுசா ஒரு பொண்ணுகிட்ட கடலை போடறதுன்னா சுத்தமா வராது. site அடிக்க மட்டும்தான் வரும், இப்போ அதுக்கும் வழி இல்லாம போச்சே. அட ச்ச..."

30 நிமிடம் கழித்து விமானம் கிளம்பத் தயாரானபோது இதயத்தில் படபடப்பு மீண்டும் அதிகரிக்கிறது. பெல்ட் போட சொல்லி எல்லோரிடமும் பணிப்பெண் வேகமாக சொல்லிச் செல்கிறாள், சரி என பெல்ட்டை எடுத்தால் அது புது விதமாக இருக்கிறது. எப்படி போட்டாலும் மாட்ட மாட்டேன் என்கிறது. அதை வைத்துக்கொண்டு நான் முழிப்பதை பார்த்து பக்கத்திலிருந்த பெண் "this way" என சரியான முறையை சைகை செய்கிறாள். "thanks" என்றேன். அவ்ளோதான் அந்த பெண்ணிடம் நான் போட்ட கடலை.


விமானம் புறப்படுகிறது. பேருந்து போலவே (குலுக்கல்களுடன்) புறப்படும் போது இருக்கிறது, மெல்ல மெல்ல வேகம் எடுத்து சிறிது தூரத்தில் சக்கரங்களின்றி பறக்க ஆரம்பித்தவுடன் குலுக்கல்களின்றி (ஆனால் இஞ்சினின் இரைச்சலுடன்) மேல் நோக்கி பறக்கிறது. என் இருக்கையில் இருந்தவாறு எட்டி எட்டி ஜன்னலை பார்க்கிறேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. உள்ளே பார்த்தால், பல பேர் என்னை வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றனர். சரி, என மற்றவர்கள் போல் நானும் உறங்க முயன்றேன். குளிரடித்தது. வேறு யாருக்கும் குளிரவில்லை போல. எழுந்து நான் கொண்டு வந்திருந்த சிகப்பு நிற சால்வையை எடுத்து போர்த்திக்கொள்கிறேன். இப்பவும் என்னை வேடிக்கையாக பார்க்க சில பேர். "என்னடா நான் போர்த்திக்கிறத அப்பிடி பாக்குறீங்க? எனக்கு குளுருதுடா?" என மனதில் எண்ணிக்கொண்டே அமர்ந்து உறங்கி்விட்டேன். ரொம்ப நேரம் தூங்கி இருக்க வேண்டும். விழித்தால் 'ர்ர்ர்ர்ர்ர்ர்' என்னும் எஞ்சினின் சத்தம் மட்டும் கேட்கிறது, லேசாக காது அடைத்த மாதிரி இருக்கிறது. எச்சிலை விழுங்கிப் பார்க்கிறேன், ம்ம்.. என்ன செய்தாலும் அப்படியேதான் இருக்கிறது.

என் அருகிலிருக்கும் பெண் இப்போது ஒரு நீல நிற சால்வையை போர்த்திக்கொண்டு இருந்தாள். என்னை எழுப்பவே இல்லை, எப்ப இதை அவள் பெட்டியிலிருந்து எடுத்திருப்பாள்? - தெரியவில்லை. சுற்றிலும் பார்த்தால் எல்லோருமே அதே நீல நிற சால்வையை போர்த்தியிருந்தனர். "flightல போகும்போது நில நிற சால்வைதான் எடுத்துட்டு வரனும் போல"ன்னு நினைத்துக் கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் சிறிதாக ஒரு பேப்பரை பணிப்பெண்கள் கையில் கொடுக்கிறார்கள், அதை அனைவரும் முகத்தில் வைத்து துடைத்துக் கொள்கிறார்கள். நானும் துடைக்கிறேன், அது வெது வெதுப்பாக ஈரமாக இருக்கிறது. முதலில் ஒரு மாதிரி இருந்தாலும் "இப்பிடித்தான் மூஞ்சி கழுவிக்கனும் போல"ன்னு துடைத்துக்கொள்கிறேன். அனைவருக்கும் சாப்பாடு கொடுத்துக்கொண்டு வருகிறார்கள். வேண்டாம் என சொல்லாமல் எல்லாருமே வாங்கி சாப்பிடுகின்றனர், யாரும் பல் துலக்கியதுபோல் தெரியவில்லை.


என்னிடமும் வந்து "veg or omelet?" என்கிறாள் அந்த பணிப்பெண். omelet என்றேன். ஆம்லெட்டுடன் சிறிய ரொட்டியும், விரும்பிய soft drinkம் கொடுக்கிறார்கள். பசியில்லை என்றாலும் உணவு நன்றாகத்தான் இருக்கிறது (ஆம்லெட்டின் வாசனைதான் வித்தியாசமாக இருக்கிறது). சாப்பிட்டாச்சு (ஷ்... அதான் யாருமே பல்ல வெலக்கலன்னு ஒரு 'பிட்'ட போட்டிருக்கோம்ல... அப்பிடித்தான் நாங்களும்).


சில பேர் அங்கும் இங்கும் உளவுகிறார்கள். "சரி, எவ்ளோ நேரந்தான் உக்கார்ந்தே இருக்குறது"-ன்னு எழுந்து வந்தால் ஒரு மூலையில் toilet. "அதான, இது இல்லாம எப்படி?". சிறிது நேரத்தில் எனக்கும் உணர்வு வர (அது என்னன்னு கேட்கப்பிடாது), நானும் வரிசையில் நின்று 10நிமிடம் கழித்து உள்ளே செல்கிறேன். "அப்பாடா" என்றபின் பார்த்தால் தண்ணி இல்லை, வெறும் பேப்பர்தான். "அய்யோ, கருமம் கருமம்". முடித்துவிட்டு திரும்ப வந்து இருக்கையில் அமர்கிறேன் (இப்ப உக்கார ஒரு மாதிரி இருக்குது).

விமானம் பறக்கும் திசை, வேகம், உயரம், கடந்து வந்த தூரம், இன்னும் போக வேண்டிய தூரம்-நேரம், வெப்பநிலை, சேரும் இடத்தில் தற்போதைய நேரம் என மாறி மாறி முன்னால் இருக்கும் டிவி போன்ற சற்றே பெரிய திரையில் காண்பிக்கிறார்கள். பிறகு ஆங்கில சப் டைட்டிலுடன் அண்ணாமலை படம் போட்டார்கள். தலைவர் படம் என்றவுடன் குஷியாக பார்த்தேன் (அருகிலிருந்த பெண் அவளுடைய லேப்டாப்பில் ஏதோ ஆங்கில படம் பார்த்துக்கொண்டு வந்தாள்).


விமானம் பாரிஸ் விமான நிலையத்தை நெருங்குகின்றது. பெல்ட்டை திரும்ப அணிய வலியுருத்துகிறார்கள். விமானம் புறப்படும் போது இருந்த படபடப்பு திரும்ப தொற்றிக்கொள்கிறது. சத்தமின்றி இறங்கும் விமானம், சக்கரங்கள் தரையில் உருள ஆரம்பித்தவுடன் பேருந்துபோல குலுங்கியபடியே அதி வேகமாக ஓடுகிறது. சிறிது தூரத்திற்குள் அதனை நிறுத்துகிறார் விமான ஓட்டி. விமானம் நின்றவுடன் எல்லோரும் நீல நிற சால்வையை அப்படியே seatல் போட்டுவிட்டு கிளம்புகின்றனர். அப்போதுதான் எனக்கு புரிகிறது அந்த சால்வை விமானத்திலேயே ஒவ்வொரு பயணிக்கும் கொடுக்கப்பட்டதென்று. "எனக்கு ஏன்டா எவனும் குடுக்கல?"ன்னு நினைத்துக்கொண்டே என் இருக்கையிலிருந்து எழுந்து கவனிக்கிறேன், இருக்கையில் எனக்கான நீல நிற சால்வை, அதன்மேல் உட்கார்ந்துதான் இவ்வளவு நேரமும் வந்திருக்கிறேன். அட ராமா.

குறிப்பு: தொடர் விமானத்தை பிடிப்பதும் இதே போன்ற நடைமுறைகளை கொண்டதுதான் என்றாலும் அப்போது கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என்ற தகவலுடன் விடைபெறுகிறேன் (போரடித்தது போதும்). மீண்டும் சந்திப்போம் (மறுபடியுமா?).

-சமுத்ரன்

Tuesday, November 3, 2009

திரும்பிச் சென்றுவிடு - ஓர் சுய அலசல்

தனியார் கணினித்துறையில் பல வருடங்களாக வேலை செய்யும் நண்பனே! சில நிமிடங்கள் செலவிட்டு, இதை முழுதும் படிக்க முயற்சி செய்! எனக்காக அல்ல, உனக்காக.

கல்லூரிக்கு செல்லும்போது ஒரு 5000 ரூபாய் மாத வருமானத்தில் ஒரு நல்ல வேலை கிடைக்க கடவுளை வேண்டிக்கொண்டாய். இப்போது அதுபோல் குறைந்தது பத்து மடங்கு சம்பளம் வாங்குகிறாய். இந்த வாழ்க்கையும் சம்பளமும் நீ சில வருடங்கள் முன் வரை கனவிலும் நினைத்திராதது. அனைத்து வசதி வாய்ப்புகளும், பொழுதுபோக்கு அம்சங்களும், கை நிறைய சம்பளமும் கொட்டும் பரபரப்பான ஒரு நகரத்தில் வாழ்க்கை. அதாவது நீ நினைத்ததைவிட அதிக சம்பளம், நினைத்ததைவிட சுகமான வேலை, நினைத்ததைவிட அதிகமான விதவிதமான மனிதர்களுடனான பழக்கம், நினைத்ததைவிட அதிக தூர சொகுசு பயணம் - இப்போது நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்.

காவல், காத்தல், கற்பித்தல், பூட்டுதல், இயக்குதல், புதுப்பித்தல், ஆராய்தல், கண்டுபிடித்தல் என பல துறைகளையும் விட்டுவிட்டு எல்லோரும் இந்த துறையை மட்டும் நோக்கி படையெடுத்தீர்கள்... எடுக்குறீர்கள். மற்ற துறைகள் போட்டியின்றி கேட்பாரன்றிக் கிடக்கிறது. அதிலும் வினைபொருள் ஆக்கல், விளைவித்தல், பராமரித்தல் போன்ற சொற்ப வருமானமும் அதிக உடல் உழைப்பும் தேவைப்படும் துறைகளை சீண்ட ஆள் இல்லை. இருக்கட்டும், வாய்ப்புக் கிடைத்தால் யார்தான் விடுவார்கள்? பணம் பணம் பணம். இதுதான் இன்றைக்கு பிரதானம். அதுவும் லட்சக்கணக்கில். இதற்காகத்தான் உன் துறையில் வேலை தேடி, நகரங்களை நோக்கி நீ உள்பட எல்லோரும் படை எடுக்குறீர்கள். உன்னைப்போல வந்து குவிந்திருப்பவர்கள்தான் இந்த நகரம் முழுக்க. வருமானமும் வசதிகளும் பரவலாக எல்லா துறைகளிலும் சீராக இருந்திருக்க வேண்டும், விட்டுத்தள்ளு... அது உன் கைகளில் இல்லை.


சொகுசு வேலை+சம்பளம், வருடத்துக்கு 10-50% வருமான உயர்வு, சிறந்த மருத்துவம், குழந்தைகளுக்கு உலகத்தரத்தில் படிப்பு, பொழுதுபோக்க விதவிதமான இடங்கள், விரும்பிய இடங்களில் இன்பச் சுற்றுலாவிற்கான வாய்ப்பு இப்படியான சகல வசதிகளும் நிறைந்த ஒரு வாழ்க்கைதான் உனது. ஆனால், அதற்காக 100 பேர் தங்கி வாழக்கூடிய ஒரு இடத்தில் 5000 பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட இடத்தில் ஏற்படும் சகஜமான ஒன்றுதான் நீ இருக்கும் நகரங்களில் ஏற்பட்டிருக்கிறது - சுவாசத்தில் சுத்தமில்லை, குளிக்க சுத்தமான நீரில்லை, கண்ணுக்கெட்டிய வரை பசுமை இல்லை, அமைதியான இரைச்சலற்ற சுற்றம் இல்லை, வீட்டை விட்டால் தனிமைச் சுதந்திரம் இல்லை, மனிதாபிமானம் இல்லை, இப்படி பல 'இல்லை'-கள் இருக்கின்றன இங்கு. உண்மையில் இந்த நகரத்தில் எல்லாம் இருந்தன, உன்னைப்போன்றவர்களின் படையெடுப்பினால் இப்போது அவை அனைத்தும் 'இல்லை' என்றாயின.


நீ இந்த நகருக்கு வந்தாய். பின் திருமணம் செய்து ஒரு பெண்ணையும் கூட்டிட்டு வந்தாய். அப்புறம் குழந்தை. உன்னைப் போல உன் துறையை நோக்கி வேலை தேடி வந்து பின் இப்படி குடும்பம் என்று நகரத்தை ஆக்கிரமித்தவர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? நீயே கணக்கிட்டுக்கொள். மேலும் இதற்கு ஒரு முடிவும் இல்லாமல், உனது நண்பன், அவனது நண்பன், உன் தம்பி, உன் நண்பனின் தம்பி, அவனது நண்பனின் தம்பி, உன் தம்பியின் நண்பன், இப்படி இன்னும் பலர் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வந்து கொண்டுதானே இருக்கிறார்கள் இந்த நகரத்தை நோக்கி? எல்லோரும் நகரத்தை நோக்கினால், கிராமங்களை யார் நோக்குவது? மற்ற துறைகளின் நிலை என்ன? இது எங்கே போய் முடியும்? அந்த முடிவாவது உன் கையில் இருக்கிறதா? ஆம், இருக்கிறது.


வேலை தேடி சென்ற பத்து-பன்னிரெண்டு ஆண்டுகளில் நீ சொந்த ஊர் திரும்பியாக வேண்டும். ஆமாம், உனது சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுவிட வேண்டும். உனக்கு வாரி வழங்கிய துறைக்கு நீ நன்றிக்கடனாக எதுவும் செய்ய வேண்டிய நிலையில் அந்தத்துறை இல்லை, எனவே நீ எங்கிருந்து புறப்பாட்டாயோ அந்த இடத்திற்கே மீண்டும் செல்வதே அதற்கு தீர்வு. உன் உடம்பில் இரத்ததிற்கு பிடித்தமான இடம் உன் மூளை என்பதற்காக, இரத்தம் அனைத்தும் மூளைக்கே செல்ல முடிவெடுத்தால் உன் நிலைமை? மற்ற உறுப்புகளின் இயக்கம்? அப்படித்தான் இதுவும். கேட்பதற்கு கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் இருக்கலாம், இதில் உள்ள உண்மைகளை நீ விரைவில் புரிந்துகொள்வாய்.

உனக்கு சொந்த ஊர் எது? நீ பிறந்து வளர்ந்த ஊர், உன் அப்பா பிறந்து வளர்ந்த ஊர் இதில் ஏதோ ஒன்று இன்னும் கிராமமாகவோ, அல்லது வளர்ச்சியற்ற ஒரு சிறிய ஊராகவோ, நகரமாகவோ இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உன்னுடன் தொடர்புடைய ஒரு இடத்திற்குத்தான் நீ இப்போது குடிபெயர வேண்டும். இப்போது இருக்கும் சொகுசான நகரத்தையும் வேலையையும் விட்டுவிட்டு வசதிகளற்ற உன் சொந்த ஊருக்கு செல்ல உனக்கு விருப்பமில்லை என்பது புரிகிறது, அதாவது:


1. சம்பளம் + சொகுசு வேலை: உனக்கு இந்த சம்பளம் இல்லை, இன்னும் பல லட்சம் கொடுத்தாலும் போதாது. நீ நினைத்த வெறும் 5000 ரூபாய் சம்பளத்தில் அரசு வேலை கிடைத்திருந்தால்? "அதான் இல்லையே" - அதுதான் இப்போது பிரச்சினை. வாழும் காலம் முழுக்க அமெரிக்கன் என்றவன் இளிச்சவாயனாகவே இருக்க வேண்டும், பணத்தை வாரி வாரி வழங்க வேண்டும், உன் பண மோகமும் தணியக்கூடாது, நீ மட்டும் லட்சங்களாக சம்பாதிக்க வேண்டும், மற்ற துறையில் சொற்ப சம்பளத்துக்கு வேலை செய்து பொருட்களை உனக்கு விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

இப்போது மற்ற துறைகளில் வேலைசெய்ய விரும்புவோர் கூட்டமின்றி காற்று வாங்குவதால் வெறும் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு பொருளுக்காக நீயும் உன் துறை நண்பர்களும் அடித்துக்கொண்டு அலையும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லையடா. பல நாடுகளை, பலதரப்பட்ட மக்களை படித்த நீ பக்குவமான முறையில் முயன்றால் உன் சொந்த ஊரில் உனக்கு ஏற்ற துறையில் காலூன்றி வெல்லலாம். அதன் முதலீட்டுக்குத் தேவையான பணம் உன்னிடம் ஏற்கனவே இருப்பதே போதும், மனம்தான் தேவை.


2. மருத்துவ வசதி: நகரத்தில் இருக்கும் மருத்துவ வசதி உன் சொந்த ஊரில் இல்லை. அதனால் சொந்த ஊருக்கு போக மாட்டேன் என்கிறாய். நாகரிகம் என்று சொல்லி கண்ட கண்ட நோய்களை விலைக்கு வாங்குவதும் பரப்புவதும் முக்கியமாக நீதான். உன்னைபோன்ற படித்த அனைவரும் நகரம் நகரம் என்று நகரத்தை நோக்கி ஓடித்தான் உன் சொந்த ஊரில் ஒரு வசதியும் இல்லை, இருந்தும் இன்னும் பல ஜீவன்கள் அங்கு வாழ்கின்றன. அவர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்குத்தான் ஏதாவது வேலை செய்து பிழைக்கிறார்கள். ஒன்று இல்லை என்பதற்காக அது இருக்கும் இடத்தை நாடி அலையும் சுயநலவாதியாக இனிமேலும் இல்லாமல், இல்லாததை உருவாக்கும் பயனாளியாக இரு. உன் ஊரில் இருந்து படித்து் மிகச்சிறந்த மருத்துவராக ஏதோ ஒரு நகரத்தில் உன் நண்பனும் உன்னைப்போல் பணத்துக்காக அலைந்து கொண்டிருப்பான், அவனையும் ஊர் திரும்பச் செய். இல்லாத மருத்துவ வசதியை உன் சொந்த ஊருக்கு ஏற்படுத்த நீயே தூண்டுகோளாக இரு.


3. குழந்தைகளுக்கு உலகத்தரத்தில் கல்வி: உலகத்தரத்தில் கல்வி என் சொந்த ஊரில் இல்லை. இப்போது இருக்கும் அதீத போட்டி நிறைந்த உலகத்தில் என் குழந்தையும் ஜெயிக்க வேண்டாமா? அதனால் என் சொந்த ஊரில் உள்ள ஏதோ ஒரு பள்ளியில் என் குழந்தையை படிக்க வைக்க மாட்டேன் என்கிறாய்.

எந்த கல்வி உலகத்தரம்? எந்த கல்வி போட்டிபோடும் உலகை வெல்ல வழி செய்கிறது? ஆங்கிலம் பேசி, நல்ல் மதிப்பெண் பெற்றுவிட்டால் போதுமா? எங்கேயோ, கண்ணுக்கு தெரியாத எவனுடனோ பிழைப்புக்காக பேசவேண்டி, ஆங்கில மோகத்தில் நிகழ்காலத்தில் அக்குழந்தையின் இயல்பினை கொலை செய்து அடுத்த தலைமுறையின் மனநிலையில் விஷத்தைக் கலக்கிறாய். ஆங்கிலம் தேவைதான், அதற்காக ஆங்கிலம் ஆங்கிலம் என நாக்கில் நுழையாத உலகின் ஏதோ ஒரு மூலையில் இருப்பவனின் பாஷையில் குழந்தையை குளிப்பாட்டுவது புத்திசாலித்தனமல்ல. குழந்தையை குழந்தையாக இருக்க விடாமல் 3 வயதில் நடனம், 4 வயதில் கராத்தே, 5 வயதில் குங்பூ. என்ன இது? அது யாருடன் போய் சண்டை போடப் போகிறது? அதன் இயல்பை விற்று எதற்கு நளினம், நடனம்? 'மாலை முழுதும் விளையாட்டு' எங்கே, விளையாட்டு சுதந்திரம் எங்கே? அட விளையாட இடம்தான் எங்கே? சேர்ந்து விளையாட அக்கம் பக்கத்து குழந்தைகள் எங்கே? அதற்கான சூழல் எங்கே? கணினியிலும், டீவியிலும் வீடியோ கேம் இருக்கே அதை விளையாடட்டும் என்கிறாய் நீ.


நீ மட்டும் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று உன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாய். நாளை உன் மகனோ பேரனோ இப்படி ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவர்களும் ஒரு நகரத்திலிருந்து உன்னை பார்க்க இன்னொரு நகரத்திற்குதான் வர வேண்டுமா? அப்படி அவர்கள் வருவதால்தான் என்ன பயனை காணப் போகிறார்கள்? அல்லது வயதான பின் நீ உன் சொந்த ஊருக்கு சென்று விடுகிறேன் என்கிறாயா? இப்போதே அங்கு செல்ல மனமில்லாத உனக்கு, வயதான பின் எந்த கடையில் மனதை விற்றுவிட்டு அங்கு செல்வாய்?

எல்லாமே மனசுதான். அரசாங்கம் செய்ய வேண்டியது கிடக்கட்டும், முதலில் நீ செய்ய வேண்டியதை செய். உன்னை 'போதும்' என்று நினைக்க சொல்லவில்லை, கிடைத்ததற்கும் சேர்த்ததற்கும் பலனாக உன்னைப்போல் வேலை தேடி வரும் நண்பர்களுக்கு அந்த நகரத்தில் வழிவிட்டு, உன் சொந்த ஊரில் குடியேறி உன் அனுபவங்களை அங்கு விதைக்க சொல்கிறேன். சம்பாதிக்கனும், போட்டி போடனும், சொத்து சேர்க்கனும், ஜெயிக்கனும்னு நினைக்கிறது தப்பில்லை, இயல்பு மாறாமல் அதை நம் சொந்த ஊரில் இருந்து செய்வதும் அதன் வளர்ச்சியில் பங்கு பெறுவதும்தான் பிறந்த ஊருக்கு நாம் செய்யும் பெருமை.

-சமுத்ரன்

Sunday, November 1, 2009

உள்ளாட்சித் தேர்தல் - கவிதை

<அக்டோபர் 2006ல் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வன்முறைகளை பார்த்தபின், நான் எழுதிய கவிதை இது.>


உள்ளாட்சித் தேர்தல்


ஊராட்சியையும் நகராட்சியையும் தம் வசமாக்கிட
அசுரர்களை ஆடவிட்டு அராஜகத்தை அரங்கேற்றிய
ஆளுங்கட்சியை கண்டு எங்களுக்கு அச்சமில்லை!

அரிவாளும் ஆயுதமுமாய்
கொடுவாளுடன் கொடூரமுமாய்
வாக்குச்சாவடியை சூரையாடிய
ரவுடி என்னும் அசுரனைக் கண்டுகூட
என்குலை அசையவில்லையடா!

அமைதியை ஆக்குவோம் என்றும்
அராஜகத்தை அறுப்போம் என்றும்
அச்சத்தை அண்டவிடோம் என்றும்
சத்தமாய் சத்தியபிரமாணம் எடுத்துவிட்டு

சண்டாளர்களின் கொலை வெறியாட்டங்களை
வெட்கமின்றி வேடிக்கையிட்டு
ரவுடிகளுக்கு வழிவிட்டதோடல்லாமல்
நீ காத்து நிக்க வேண்டிய மக்களையே
பேய் போல கொலை தாக்குதல் தொடுத்துக் கலைத்த காவல் துறையே
உன்னைப் பார்த்துதானடா இன்று ஊரே அஞ்சுகிறது...

அங்கே நீ கலைத்தது மக்களை அல்ல
காவல்துறை மீதி எமக்கிருந்த கொஞ்ச நஞ்ச காதலை.
ஆயிரம் நடப்பினும் நம்மை காத்து நிக்க
இருக்கிறான் என் காக்கி வீரன் - என நம்பி அல்லவா
சனநாயக கடமையாற்ற சாவடி நோக்கி வந்தோம்?
ஊக்கியிட்டு உளவவிடப்பட்ட ஊமைப் பொம்மையாய் நடந்துகொண்டாயே!

'எனை இப்படி ஊமைகளாய் ஆட்டுவிக்கும் கட்சியை
மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் ஏற்றிவிட்டாய்,
மறுபடியும் விரல் நுனியில் மை பூசி
முகத்தில் கரி பூசிக்கொள்ள வந்துவிட்டாயா?' - என
சாவடி முன் எம்மீது காவடி எடுத்துவிட்டாயோ?
எப்படியாயினும் எமை காப்பது உன் கடமையல்லவா?

"இனி இங்கு தேர்தல் நடத்த இராணுவம் தேவை"
இது வெறும் கூக்குரல் அல்ல!
எமை காத்திட நீ உண்டு என நம்பி
அயல்நாட்டு சதியிலிருந்து நம்மை காத்திட
வெளிநோக்கி துப்பாக்கி ஏந்தி நிற்கும் நம் இராணுவ நண்பனை
உள்நோக்கி காவல் காக்க வைத்துவிடாதே!

- சமுத்ரன்

Friday, October 30, 2009

என் நண்பர்களைப் பற்றி ஓரிரு வரிகள்

அம்மா: எதையும் சொல்ல தயங்க தேவையில்லாத என் முதல் நண்பர்.  என்னை முழுவதுமாக புரிந்துகொண்ட, யாருக்காகவும் எதற்காகவும் என்னை விட்டுகொடுக்காத, என்மேல் கண்ணாபின்னாவென்று பாசத்தையும் செல்லத்தையும் கொட்டும் எனக்கே எனக்கான நண்பர்.

அப்பா: நான் விரும்பியதை செய்ய முழு மனதோடு அனுமதித்து, முழுமையாக நம்பி என்னை ஆதரிக்கும் என் மிகச்சிறந்த நண்பர் (நான் வீட்டிலிருக்கும் போது அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக்கு்வோம்). அவரது முன்னெச்சரிக்கைக்கும், புத்திசாலித்தனத்துக்கும் நான் அடிமை. பலவிதங்களில் எனது ரோல் மாடல்.

மனைவி: சிறந்த தோழி, இந்தப்பெண்ணைப்போல் திருமணத்திற்கு முன் யாரும் என் கண்ணில் பட்டிருந்தால் நிச்சயம் நானும் காதல் வயப்பட்டிருப்பேன். எங்கள் குடும்பத்துக்கு கடவுளின் வரம்.



Cousin திவ்யா: அவர்கள் வீட்டுக்கு மட்டுமல்ல, எங்கள் வீட்டுக்கும் அவள்தான் குட்டி தேவதை. எங்கள் செல்லத்தைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த அண்ணனுக்காக எதையும் செய்பவள், புத்திசாலி. எங்களின் உயிர்.

ரூபகா: சகோதரியாகவே (அக்கா) அறிமுகமானவர், பல வழிகளில் என்னை பக்குவப்படுத்தியவர். அரட்டை அடிப்போம், அது சண்டையில்தான் போய் முடியும். ஒரு சண்டை முடிவுக்கு வந்த சில நிமிடங்களில் அடுத்த சண்டையில் தீவிரமாக இருப்போம். ஆனால் அந்த சண்டையும் சில நிமிடங்கள்தான் நீடிக்கும் - "சண்டை-சமாதானம்-திரும்ப சண்டை-திரும்ப சமாதானம்". ஒரு நாள் சண்டை இல்லை என்றால் எங்களுக்கு என்னவோ போல் ஆகிவிடும். இன்று குடும்ப பொறுப்புகள் வந்துவிட்டதால் அதிகமாக பேசிக்கொள்வதில்லை, எனவே சண்டை இல்லை.

கோகிலா: என்னைப் பக்குவப்படுத்திய இன்னொரு நண்பி. எதையும் positive-ஆக எடுத்துக்கொள்ளும் மனமுடையவர். நான் அடிக்கும் ஜோக்குக்கும் சிரிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர். தன்னை வருத்தியாவது பிறர் மனம் புண்படாமலிருக்க முயல்பவர். எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறனுடைய சிறந்த உழைப்பாளி. என்னை நன்றாக புரிந்தவர் (நான் எப்போது பொய் சொல்வேன், நான் எப்போது உண்மை சொல்வேன் என்பது உட்பட).

ராஜா: எங்கள் பிணைப்பு பற்றி எனக்கு உண்மையில் சொல்லத் தெரியவில்லை. சுருக்கமாக சொன்னால், என் பூர்வ ஜென்ம புண்ணியம் இவனுடன் எனக்கான பழக்கம்.


சௌந்தரராஜன்: ரஜினி-கமல் நட்பிற்கு போட்டி எங்கள் இருவரது நட்பு. வெள்ளை மனம் மற்றும் வெளிப்படையாக பேசுவதன் பலனை இவனிடம்தான் கற்றுகொண்டேன். பல சமயங்களில் எனக்கு தோள் கொடுத்து என்னுடன் நின்றவன். எங்களுக்குள் போட்டியும் பொறாமையும் இருந்தாலும் அது எங்கள் நட்பை பாதித்ததில்லை. என்னால் நிச்சயமாக ஒன்றில் மட்டும் இவனுடன் போட்டி போடவே முடியாது - அதுதான் அவனது இரக்க குணம். இவனுடன் சண்டை போட்டதில்லை ஆனால் பேசாமல் இருந்திருக்கிறோம். எனக்குள் ஒருவன்.



ராம்குமார்: அனைத்து விதங்களிலும் எனக்கு (மட்டுமல்ல அனைத்து நண்பர்களுக்கும்) உறுதுணையாக இருப்பவன். சோர்ந்தபோதெல்லாம் தன் நண்பர்களை தோள் கொடுத்து தூக்கி விடுபவன். Very active person. நான்கூட அவனிடம் சில சமயங்களில் கோபப்பட்டுள்ளேன், ஆனால் அவன் என்னிடம் கோபப்பட்டதாக எனக்கு நினைவில் இல்லை. தன்னால் இயன்றதை செய்ய எப்போதும் தயாராக இருக்கும் திறந்த மனமுடையவன். எங்கள் நண்பர்கள் வட்டத்திலேயே தைரியசாலி மட்டுமல்ல மிகுந்த திறமைசாலியும் கூட. இவனிடம் இன்னும் நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. நட்புக்கு இவன் இலக்கணம் என்றால் அது மிகையில்லை.

விஜயபாரதி: எங்களுக்குள் பலவிதங்களில் ஒற்றுமைகள் உண்டு. எனது ரசனையுடன் முற்றிலும் ஒத்துப்போனவன். இருவரும் பங்காளிகள், ஆனாலும் சண்டையிடாத பங்காளிகள். :) கல்லூரி முடித்த பின்னும் இருவரும் ஒன்றாகவே பல ஊர்களை சுற்றிக் கொண்டிருந்தோம். நண்பர்கள் கூடி இருக்கும்போது இவனது நக்கல் ஆரம்பிக்காதவரை மட்டுமே situation நமது கண்ட்ரோலில் இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தமானவன்.

சீனிவாசன்: பள்ளி நாட்கள் தொட்டு என்னுடன் பழகி வருபவன். கல்லூரிக்கு சென்றபின் சில வருடங்கள் தொடர்பில் இல்லாமலிருந்து பின் சென்னையில் இணைந்தோம். பிறர் தயவின்று தனது திறமையால் முன்னுக்கு வர வேண்டும் என மன உறுதி கொண்டவன். எனது நலன் விரும்பிகளில் முக்கியமானவன். என்னுடனான நட்புக்கு மிகுந்த மதிப்பளிப்பவன் (நன்றிடா நண்பா). என்னிடமுள்ள நல்ல-கெட்ட விஷயங்களை நயமாக எடுத்துச்சொன்னவன். எனது வளர்ச்சியில் இவனுக்கும் முக்கிய பங்குண்டு.

மாதேஸ்வரன்: குடும்ப நண்பர். அவரும் அவரது குடும்பமும் அனைத்து விதங்களிலும் எங்கள் குடும்பத்துடன் ஒத்துப்போனவர்கள். குறுகிய காலத்திலேயே நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். மணிக்கணக்காக அதிகாலை 3 மணி வரைகூட குடும்பத்துடன் சேர்ந்து அரட்டை அடித்திருக்கிறோம். அதிராமல் எப்போதுமே சாந்தமாக பேசுபவர். திறமைசாலி மட்டுமல்லாது தகவல் களஞ்சியமாக வலம் வருபவர் (அதனால் எனக்கு அவர்மேல் அளவுகடந்த பொறாமை உண்டு). தன்னை வருத்திக்கொண்டு அடுத்தவர்களுக்கு உதவும் மனமுடையவர். இவரை யாரும் எந்த உதவிக்காகவும் எந்த நேரத்திலும் அனுகலாம் என்பதை தன் நடவடிக்கைகள் மூலம் சொல்லாமல் சொல்பவர். இவர் என் நண்பர் என சொல்லிக்கொள்வதிலேயே எனக்கு நிறைய பெருமை.



குறிப்பு: இன்னும் பல நண்பர்கள் இருக்கிறார்கள், என்னுடனும் என் குடும்பத்துடனும் நெருங்கிப் பழகிய நண்பர்களைப் பற்றி மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளேன்.

நீங்கள் அனைவருமே எனது பொக்கிஷங்கள். உங்களின் உதவியும், ஊக்கமும், ஆதரவும், அரவணைப்பும் இல்லையென்றால் இன்று இந்த நிலையில் நானிருக்க வாய்ப்பில்லை. உங்கள் அனைவருக்கும் என் நன்றியை வணக்கமாக செலுத்துகிறேன். நம் பிணைப்புக்குக் காரணமான நம்  உறவுக்கும், நட்புக்கும் என் வணக்கங்கள்.

-முத்துக்குமார்.

Tuesday, October 27, 2009

பிளாக் எழுதி நான் சாதித்ததென்ன?

இது என்னை பரிசோதிச்சு எனக்கு நானே எழுதும் பதிவு. ம்... பிளாக் எழுத ஆரம்பிச்சு ஒரு மாத காலம் ஆவுது. ஆரம்பிச்ச புதுசுல நான் எழுதுன சில பதிவுகளை நண்பர்கள் ஆர்வமா படிச்சுட்டு ஆஹா ஓஹோன்னு புகழ்ந்ததை நம்ம்ம்ம்ம்பி, அடுத்தடுத்த பல பதிவுகளை அரங்கேற்றினேன். பதிவுகளை அரங்கேற்றிவிட்டு படிக்க சொல்லி மெயில் அனுப்பினேன். படித்தாரில்லை, மெயிலுக்கு பதிலுமில்லை.

சரி எல்லாரும் பிஸி போலன்னு 2 நாள் பொறுத்திருந்து பார்த்துட்டு சௌந்தருக்கு போன் செஞ்சேன் (அவந்தான் மாட்டினான்). அப்பிடியே அவன உட்கார வச்சு படிக்க வச்சேன். அன்னையோட அவன் internet பக்கமே வர்றதில்ல, இன்னைக்கு வரைக்கும் 4 நாள் ஆச்சு. அப்பயாவது எனக்கு புரிஞ்சுதா? இல்லை. அடுத்து சீனிவாசன் onlineல் வந்தான். அவனை அப்படியே அமுக்கி என் பிளாக்கிற்கு இழுத்து பதிவுகளை படிக்க வச்சேன். நல்லா இருக்கு ஆனா நீ ஏன் சினிமா அரசியல் ஏதாவது interesting (?!)ஆ எழுத மாட்டேங்குற?-ன்னு டீசன்ட்டா சொல்லி பாத்தான். "அப்பிடி இல்லடா சீனி"-ன்னு ஒரு பத்து நிமிஷம் விளக்கம் குடுத்தேன். அன்னைல இருந்து அவன் நடுசாமத்துக்கு அப்பறந்தான் பூனை போல் onlineல் வர்றான். அப்பவும் நான் அவன புடிச்சு "சீனி, புதுசா பதிவு போட்டிருக்கேன்டா"-ன்னு ஆரம்பிச்சேன், "நீ இன்னும் தூங்கலியாடா"-ன்னான். அப்பவும் எனக்கு புரியல. அவனும் internet கனெக்ஷனையே கட் பண்றத பத்தி யோசிப்பதாக தெரியுது. ஆனாலும் என் பிளாக்ல இது வரைக்கும் பின்னூட்டம் இட்ட ஒரே ஆள் சீனிதாங்குற பெருமை (??) அவனுக்கு உண்டு.

அடுத்து மாதேஸ். எப்போதும் அலுவலகம் வீடு என்றில்லாமல் தமிழ் பிளக்கிலேயே வாழ்றவர். வீடு மாற்றிய பின் internet கனெக்ஷனுக்கு விசாரிச்சுட்டிருந்தார். நான் பிளாக் தொடர்ந்து எழுதுறதை தெரிஞ்சுட்டவர் "internet வீட்டுல எதுக்குங்க வீணா, நீங்க இந்தியா வாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே கனெக்ஷன் வாங்கலாம்"னு சொல்றார் (ஏன்னா இந்தியா வந்துட்டேன்னா பிளாக் எழுத மாட்டேன் இல்ல?). சரி ஆபீஸ்-ல எப்பவுமே பிளாக் தான் படிப்பாரே அங்கயாவது என்னோட பிளாக் படிக்கலாமே-ன்னு போன் பண்ணி கேட்டேன், போன் நம்பரையே மாத்தற யோசனையில இருக்குறதா சொன்னார். என் புத்திய என்ன சொல்ல? அப்பவும் புரியல.

அப்புறம் ராம். நான் அனுப்புற வீடியோ லிங்கை அரை மணி நேரம் பார்த்து இமெயிலுக்கு பதில் அனுப்புவான் ஆனா என்னோட பிளாக் படிச்சியாடான்னா "பிஸியா இருக்கேன்டா, இந்த வீக் என்ட் ட்ரை பண்றேன்"னான். ட்ரை பண்றானா? என்ன எல்லாரும் ஒரே பிஸியா இருக்காங்கன்னு நெனச்சுட்டு என்னோட பதிவ திருப்பி திருப்பி நானே படிச்சு பார்த்து "எவ்ளோ நல்லா இருக்கு, இந்த இடத்துல ஒரு இன்டெரெஸ்டிங் ட்விஸ்ட், எப்பிடிடா முத்து, உன்னால மட்டும்?"ன்னு மெச்சிட்டு இருந்தேன். அப்புறம் கணேஷ்க்கு போன் பண்ணேன், "என்னப்பா பதிவு எதாவது படிச்சியா?"-ன்னு. "நான் இன்னும் படிக்கல, ஆனா எங்க அப்பாக்கு லிங்க்க அனுப்பி வச்சேன், என்னடா எதோ ஒரு home sick கிறுக்கி வச்சிருக்கறத எல்லாம் எனக்கு அனுப்பிட்டு இருக்கன்னு கேட்டார்"னான். "சரி நான் அப்புறம் பேசுறேன்"-னு நானே போன வச்சுட்டேன்.

நாம யாரு, மெயில் அனுப்புறத நிறுத்தறதா இல்ல. ஆர்வத்துல என்னோட offshore teamக்கு அநுப்புன  official இமெயில்ல கூட பிளாக் லிங்கை போட்டு அனுப்பிட்டேன்னா பாருங்களேன். அஞ்சு நிமிஷம் கழிச்சு offshore teamலருந்து ஒருத்தர் 'என்ன language இது'ன்னு ரிப்ளை பண்ணார் (அவருக்கு தமிழ் பறைய வரும், but படிக்க அறியில்லா), அப்பதான் தெரிஞ்சுது நான் ரொம்ப ஆர்வக்கோளாறுன்னு. "சரி, நம்ம டீம்லதான் ஒரு தமிழ் ஆளு இருக்காரே, அவர் எங்க?"-ன்னேன். "ஓ அவரா, இப்போதான் ஒரு நிமிஷம் முன்னாடி தலைவலின்னு பர்மிஷன் போட்டுட்டு வீட்டுக்கு போறார்"னாங்க. "எதுவும் சொன்னாரா?"-ன்னு ஆவலா கேட்டேன் "ஆமா, முத்து எப்போ இந்தியா வருவார்?"-ன்னு கேட்டுட்டு போனார்னாங்க, அப்போதான் எனக்கு கொஞ்சம் பொறி தட்டுச்சு நம்ம பிளாக்க ஓப்பன் பண்ணியிருப்பாரோன்னு.

இப்ப கூட சௌந்தருக்கு போன் பண்ணினேன் , "எங்கடா இருக்க?"ன்னேன், "வீட்டுக்கு போயிட்டிருக்கேன் தோ பக்கதுல போயிட்டேன்?"னான். "அது ஒண்ணுமில்ல, கவிதை ஒண்ணு எழுதினேன் படிக்க ஆளே இல்லடா, வந்து படிடா"ன்னேன், "வீட்டுக்கு வந்தா படிக்கிறேன்"னான், "வீட்டுக்கு வர எவ்ளோ நேரம்டா ஆகும்னேன்", "ஆபீஸ்ல இன்னிக்கு புரடக்ஷன் மூவ் இருக்கும் போல இருக்கு, நான் இப்போ திரும்பி ஆபீஸ்க்கு போறேன்"ன்னான் (நான்தான் கெடச்சனாடா உனக்கு? - அவன் மனசாட்சியும் கூடவே பேசுச்சு). "திடீர்னு என்னடா உனக்கு புரடக்ஷன் மூவ்"னு கேட்டேன், "இல்லடா இப்போதான் நெனப்பு வந்துச்சு, நானே அப்புறம் உனக்கு போன் பண்றேன் நீ பண்ணாத உனக்கு எதுக்கு வீண் சிரமம்..."ன்னு டொக்னு போன வச்சுட்டான். அட, அப்பகூட இந்த பாழா போன புத்திக்கு தெரியலங்க.

ஆனா இப்போ என் மனைவிக்கு போன் பண்ணி பிளாக்ல புதுசா ஒரு பதிவு போட்டிருக்கேன்னு ஆரம்பிச்சேன், முடிக்க கூட இல்ல - "ஏங்க... மாமா பேசுறாங்களாம்"னு எங்க அப்பாகிட்ட போன குடுத்துட்டு "அப்புறமா பேசுறேன்னு சொல்லிருங்க மாமா, நான் சமையல் செய்யபோறேன்"னுட்டு போயிட்டா, மத்தியானத்துல என்ன சமையல் பண்றாங்கன்னு யோசிக்கும்போதுதாங்க இந்த மரமண்டைக்கு புரிஞ்சுது. புரிஞ்சுட்டிருக்கும்போதே எங்க அப்பா போன்ல "சொல்லு ராஜா"ன்னாங்க. அது வந்துங்கப்பா பிளாக்ல புதுசா ஒரு கவிதைய பதிவா போட்டிருக்கென்னேன். எங்க படி பார்ப்போம்னாங்க, படிச்சேன். நல்லா இருக்கே இப்பவே வந்து பிரிண்ட் போட்டுட்டு வர்றேன்னு கிளம்பி 20 கி. மீ பஸ்ஸுல வந்து பிரிண்ட் போட்டுட்டு போறாங்க. அவருக்காவது புரிஞ்சுதே என்னோட தவிப்புன்னு இப்போதான் கொஞ்சம் நிம்மதி.

இது எல்லாத்துலயும் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னன்னா நான் எப்போ பதிவு போட்டிருக்கேன்னு சொன்னாலும் சரின்னு உக்காந்து படிக்கிறது ரூபகா மட்டும்தான். என்மேல அப்பிடி என்ன பரிதாபமோ தெரியல.

இவங்கள எல்லாரையும் தண்டிக்க ஒரே வழி நான் தொடர்ந்து எழுதனும், எழுதனும் எழுதிட்டே இருக்கனும். இதவிட்டா அவங்கள பழி வாங்க வேற வழியே இல்ல.

Monday, October 26, 2009

365 நாட்கள் முழுதாய் கடந்துவிட்டன‌




குழலும் யாழும் கசந்து 365 நாட்கள் முழுதாய் கடந்துவிட்டன‌
எங்கள் அன்புச் செல்லமே இன்று உன‌க்கு பிறந்த நாள்

உறவுமுறை பெயர் சொல்லி எப்போதாவது நீ அழைத்ததும்
-(அம்மா, அப்பா, தாத்தா, மாமா, அத்தை)
உருகி உருகி திரும்பச் சொல்லக் கேட்கும்போது நீ காட்டும் பிகு என்ன

உன் அசைவும் அழுகையும் எமக்கு தலைப்புச் செய்தியென்றானபின்
அரசியலும் அறிவியலும் பெட்டிச் செய்தியானதில் வியப்பென்ன

அயர்ந்து வீடு சேர்கையில் 'அப்பா' என தவழ்ந்து நீ என் மடி சேர்கையில்
நான் அடைந்தது ஆனந்தத்தின் உச்சம் அன்றில் வேறென்ன

நீ உறங்குகையில் மறுபக்கம் ஓடிச் சென்று கட‌மைக்காக‌ ஒளி கொடுத்து
உன் குறும்புகளை தரிசிக்க‌ சூரியனும் முன்னமே உதயமாவதென்ன‌

அழுகைக்குப்பின் அரவணைப்பை அறிந்த நீ இப்போது
அழுது அழுதே வேண்டியதை சாதிக்கும் குறும்பென்ன

கரும்புகூட‌ கசக்கும் என்றால் இவ்வுலகமும் நம்புமா
உன் மழலையைக் கேட்ட‌பின் அதே உலகம் மறுக்கவும் இயலுமா

கள்ளமில்லா உன் வெடிச்சிரிப்பு எம் புத்துணர்ச்சிக்கு உரமானவை
காட்சியில்லா அழகு ஓவியங்கள் கைகளால் காற்றில் நீ வரைபவை

உன் குரல் வழியே வார்த்தெடுக்கலாம் பலப்பல‌ ச‌ந்தங்கள்
உன் வரவு எமக்குச் சொன்னது ஆயிரமாயிரம் சங்கதிகள்

உன் கண்சிமிட்டலில் மதிமயங்கிய கதையை என்னிடம் தினமும் சொல்லுது நிலவு
உனை நிதமும் கைகளில் ஏந்திட ஏங்கும் இந்த மனதுக்கு வேறேது உலகு

உனக்கு வாழ்த்து சொல்ல வழி செய்த இந்த இணைய வழி கடிதத்துக்கு எம் நன்றி!
காரணம் எதுவாயினும் இந்த இடைக்கால பிரிவைக் கொடுத்த காலத்துக்கும் எம் நன்றி!

அன்பு மகனுக்கு முதல் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

-முத்துக்குமார்

Sunday, October 25, 2009

என்னை மன்னித்துவிடு - சிறுகதை

சேகரும் மலர்விழியும்  ஒரே கம்பெனியில் வேலை செய்யும் நீண்ட நாள் நண்பர்கள். ஒரு மாலை வேலையில் shopping சென்றுவிட்டு நடந்துகொண்டே அவர்களது உரையாடல் (மலர்விழிதான் ஆரம்பித்தாள்):

"டேய், உன்கிட்ட ஒண்ணு கேட்பேன், நீ உண்மைய சொல்லனும்..."

"ஒண்ணு என்ன ரெண்டு கூட கேளு,என்னிக்கு நான் பொய் சொல்லி இருக்கேன்?"

"அது சரி. காலேஜ்ல நாம பழக ஆரம்பிச்சதிலருந்து, இப்போ ஆறு வருஷம் ஆச்சு. இத்தன நாள் பழக்கத்துல என்ன தெரிஞ்சுகிட்ட?"

"ஒரு பொண்ணுகூட ரொம்ப நாள் பழகுறது கஷ்டம்னு தெரிஞ்சுகிட்டேன்."

"ப்ச்! சீரியஸ்-ஆ கேக்குறேன்ல, சொல்லுடா."

"அப்ப நான் சொன்னது  ஜோக்குங்குற.... "

"கடி போடாத, சொல்லு."

"சரி, நீ என்ன தெரிஞ்சுகிட்டேன்னு சொல்லு, அத base பண்ணி நான் சொல்றேன்."

"எப்பவும் கிண்டலும் கேலியும் பண்ணிட்டு எல்லாரையும் சந்தோஷமா வச்சிருக்குறது உன்கிட்ட ரொம்ப பிடிக்கும். எனக்கு personal-ஆ சந்தோஷத்தையும் சோகத்தையும் பகிர்ந்துக்க ஒரு நல்ல தோழன் கிடைச்சிருக்கான்னு புரிஞ்சுகிட்டேன்."

"அப்டியா யாரு அது, எனக்கு தெரியாம?"

"எப்ப பாத்தாலும் உனக்கு வெளையாட்டுதான். படுத்தாம, என்னை பத்தியாவது என்ன நினைக்கிறேன்னு சொல்லேன்."

"என்னோட friends-ல நீ மட்டும்தான் பொண்ணு, உன்ன பத்தி பெருசா சொல்றதுக்கு ஒண்ணும் இல்லன்னாலும் என்னோட friends-ல உன்னை ரொம்ப பிடிக்கும்."

"உண்மையாவா?"

"நான் ஏற்கனவே சொன்னேன் இல்ல? நான் என்னிக்குமே பொய் சொன்னதில்லன்னு."

"ம்... ரொம்ப நாளா உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்னு நெனச்சுட்டிருக்கேன், அது உனக்கும் தெரியும்னு நினைக்கிறேன், சொல்லட்டுமா?"

"என்ன, லவ்வா?"

"நான் ஆமான்னு சொன்னா நீ என்ன சொல்லுவ?"

"யாரந்த பாக்கியசாலின்னு கேட்பேன்."

"ம்... உங்க தாத்தா"

"அய்யய்யோ, அப்ப எங்க பாட்டி நெலம?"

"வெளையாடாத, வெக்கத்த விட்டு கேக்குறேன் சொல்லு..."

"அப்பிடி அவசரப்பட்டு உன்கிட்ட இல்லாததை எல்லாம் விட்டுடாத, யோசிச்சு நாளைக்கு சொல்றேன்."

"டேய் என்ன அழ வைக்காத. இப்பவே சொல்லு. என்னால இந்த விஷயத்துல wait பண்ண முடியாது."

"தயவுசெஞ்சு அழ மட்டும் செய்யாத. என்னோட இந்த தயக்கத்துக்கான காரணத்த நாளைக்கு சொல்றேன், நீயே புரிஞ்சுப்ப."

......
அவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. பேசாமலேயே அவளை வழக்கம்போல் அவளது வீட்டில் விட்டுவிட்டு அவன் சென்றுவிட்டான். எப்போதும் சொல்லும் "bye" கூட அன்று சொல்லவில்லை அவள்.

எப்போதும் மனதில் பட்டதை உடனே சொல்லிவிடும் அவன் ஏன் யோசிப்பதாக சொன்னான் என அவளுக்கு புரியவில்லை. ஒருவேளை என்னை அவனுக்கு பிடிக்கவில்லையா? அவசரப்பட்டுவிட்டேனோ? அவன் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைக்கும்போதே அவளுக்கு மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது.

அடுத்த நாள் மலர்விழி அவளது இருக்கையில் இருக்க, சேகர் அவளின் டேபிள் மேல் அவளிடமிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு கடிதத்தை வைத்துவிட்டு சென்றுவிட்டான்... ஒன்றும் புரியாமல் அவசரமாக அதனை எடுத்து படித்தாள்:

"உன்னை முதலும் கடைசியுமாக ஏமாற்றுவதற்கு sorry. உன்னை எனக்கு பிடிக்கும், ஆனால் நான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே office-ல உன் பக்கத்திலிருக்கும் friend-டிடம் என் மனதை பறிகொடுத்துவிட்டேன், அவளை விட்டு வேறொரு பெண்ணை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதை உன் முகம் பார்த்து சொல்ல தைரியம் இல்லாமல்தான் இந்த லட்டர். என்னை மன்னித்துவிடு."

இதை அவள் எதிர்பார்க்கவில்லை, அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. அழுகையை தீவிரப்படுத்துவது போல் அவள் அருகில் அமர்ந்திருக்கும் அகிலா "ஏன் அழற?" என்றாள். அவளை முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டாள். இப்போது சேகர் அவள் அருகில் வந்தான். அவனை நிமிர்ந்து பார்க்கும் சக்தி அவளிடத்தில் இல்லை. தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணி உள்ளுக்குள் குமுறினாள்.

இப்போது சேகர் பேசினான்: "ஆமா மலர், அதுல நான் எழுதி இருக்குறதெல்லம் உண்மைதான். ஆனா இது உனக்கு எழுதினதில்ல, அது அவங்களுக்கு எழுதின லட்டர்" என மலர்விழியிடம் இருந்து கடிதத்தைப் பிடுங்கி அவள் அருகில் அமர்ந்திருக்கும் அவள் friend அகிலாவிடம் கொடுத்தான். இப்போதுதான் மலர்விழிக்கு புரிந்தது சேகரின் விளையாட்டு. "டாய்....... உன்னை..." என்று அவள் கத்த, அவன் சிரித்தபடியே விலகி ஓட, மலர்விழி அவனைத் துரத்தினாள். அகிலாவுக்கு ஒன்றும் புரியவில்லை, விழித்தபடி கையில் கடித்தத்துடன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

-சமுத்ரன்

Friday, October 23, 2009

திருவண்ணாமலை to திருச்சி...

கல்லூரி முடித்தபின் பல நாள் தேடலுக்குப் பின் வேலை தானாக ஒரு சிறு தனியார் நிறுவனம் மூலமாக என்னைத் தேடி வந்தது. சில காலம் (ஒரு மாதம் என நினைக்கிறேன்) சென்னையில் அந்த நிறுவனத்தில் website developer ஆக பணியாற்றினேன். அந்த காலகட்டம் கணினி வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை மிகவும் பின் தங்கி இருந்ததால் என்னைப் போன்ற புதியவர்களுக்கு வேறு வகையான வேலை காத்திருந்தது. அதுதான் கற்பித்தல் பணி. என்னை ஒரு ஆசிரியர் என்று சொல்லிக்கொள்ள இயலாவிட்டாலும், அந்த வேலை அப்படிப்பட்டதுதான். அப்போதுதான் JAVA program பிரபலமாகி வந்த நேரம், எனவே அதனை கல்லூரி மாணவர்களுக்கு கற்றுத்தரும் பொருட்டு என்னைப்போன்றவர்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து அந்த தனியார் நிறுவனம் சார்பாக பல்வேறு கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அப்படி ஒரு குழுவில் (மூவர்) முதலாவதாக நான் சென்றது அருணை பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை. அதுவரை திருவண்ணாமலை பக்கம் நான் வந்ததில்லை. அருணாசலேஸ்வரர் கோயிலை தரிசிக்கும் வாய்ப்பும் அப்போதுதான் கிடைத்தது. தெய்வீகமான ஊர், ஆனால் அடிப்படை வசதிகளிலும், மக்களின் படிப்பறிவு மற்றும் பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கிய ஊர். எளிமையான ஆனால் பார்ப்பதற்கு கரடுமுரடான மக்கள். தொழிலாளர்கள் நிறைந்த ஊர் என்பதால் நிறைய தியேட்டர்கள், நிறைய குறைந்த விலை ஓட்டல்கள் உண்டு. அருணாசலேஸ்வரரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் எப்போதும் உண்டு. திருவண்ணாமலை சிறிய நகரம் என்றாலும் பேருந்துப் போக்குவரத்து அதிகம் கொண்டது. ஆந்திரா (சித்தூர், திருப்பதி), கர்நாடகா (பெங்களூர்) மாநிலம் செல்லும் பேருந்துகளும் மிக அதிகம்.


அருணை கல்லூரியைப் பொறுத்த வரை ஒரு பரந்த, செழிப்பான மற்றும் அழகான கல்லூரி. ஒரு மாணவனாக இருந்ததற்கும் இப்போது ஒரு பொறுப்புள்ள வேலைக்காக கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதற்கும் மனநிலையில் பல வேறுபாடுகள் உள்ளதை அறிந்தேன் - உண்மையில் உள்ளுக்குள் நிறைய பயமே இருந்தது. எங்களுக்கு அக்கல்லூரியின் விடுதியில் தங்கவும் உண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்கள் நிறுவனத்தின் திட்டப்படி கல்லூரி முடிந்த பின், மாலையில் JAVA கற்றுக்கொள்ளும் ஆர்வமுடைய மாணவர்களுக்கு அக்கல்லூரி வளாகத்திலுள்ள கணினிக்கூடத்திலேயே வகுப்புகள் நடைபெற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. மொத்தம் ஒன்பது மாணவர்கள் மட்டுமே JAVA கற்க விருப்பம் தெரிவித்திருந்தனர். மாணவர்களின் எண்ணிக்கையை கூட்டுவதும் எங்களுக்கு கொடுக்கப்பட்ட இன்னொரு பணி.

முதல் நாள். வகுப்பறையில் நுழைந்ததும், மாணவர்கள் எழுந்து "good evening sir" என்று சொன்னவுடன் மனதுக்குள் என்னவோ செய்தது. இதற்கு நான் தகுதியானவன்தானா? தெரியவில்லை... அப்போது ஒரு கணம் என் அப்பாவை நினைத்துக் கொண்டேன். என்னை ஒரு ஆசிரியராக்கவே அவர் விரும்பினார் (ஏனென்றால் அவரும் ஒரு ஆசிரியர், என்னை அதற்காக வற்புறுத்தவில்லை), நான்தான் ஒரு பொறியாளனாக விரும்பி BE படித்தேன். இப்போது அவர் விரும்பிய மாதிரியே சில மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராக வந்திருக்கிறேன். ஒரு விதத்தில் என் அப்பாவின் ஆசையையும் நிவர்த்தி செய்துள்ளேன்.

முதல் நாள் வகுப்புக்கு செல்லும் முன் ஏதேதோ பேச தயார் செய்தும் வகுப்பறையில் அதனை முழுமையாக வெளிக்கொணர முடியவில்லை. "45 நிமிடம்தானே வகுப்பு எடுக்கப் போகிறோம், பார்த்துக்கொள்ளலாம்" என எண்ணியதில் மண் விழுந்தது. நான் தயார் செய்து வந்ததை முதல் பத்து நிமிடங்களுக்குள் எடுத்து முடித்துவிட்டேன். சற்றும் யோசிக்காமல் மீதி நேரத்தை என் பொது அறிவுக்கு எட்டியதை வைத்து முடிந்தவரை கோர்வையாக எடுத்தேன் (முதல் நாள் ஆயிற்றே, ஆசிரியர் சரியில்லை என்று அடுத்த நாள் இந்த மாணவர்களும் வகுப்பிற்கு வராமல் போய்விட்டல்?). ஆச்சரியம், அதுவரை தேமே என்று உட்கார்ந்து இருந்த மாணவர்களிடம் இப்போதுதான் புத்துணர்ச்சி தெரிந்தது. சரி, இதுதான் நமது பாதை என்று முடிவு செய்து கலந்துரையாடல் மூலம் வகுப்புகளை நடத்த ஆரம்பித்தேன். என் அப்பா வகுப்பெடுப்பதை நான் சிறு வயதிலேயே பார்த்திருந்ததால் இது எனக்கு எளிதாக முடிந்தது என நினைக்கிறேன். அனாயசமாக அவர் வகுப்பெடுப்பதை பள்ளியில் அவருடன் சில நாட்கள் கூட இருந்து பார்த்திருக்கிறேன். ஒரு தமிழாசிரியராக வெறுமனே பாடத்தை மட்டும் நடத்தாமல் மாணவர்களுக்கேற்ற நகைச்சுவை கலந்து கண்டிப்பு குறையாமல் அழகாக வகுப்புகளை நடத்துவார். (சாதரணமாக அவர் யாருடனும் உரையாடும்போது் கூட அதில் சுவாரஸ்யம் கலந்திருக்கும்).

மாலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே வகுப்புகள் என்பதால் அடுத்த வகுப்புக்கு தயார் செய்ய நிறைய நேரம் கிடைக்கும். அதேபோல் வார விடுமுறை நாட்களில் அதிகமாக தியேட்டருக்கும் ஓரிரு முறை கோயிலுக்கும் சென்று வந்தோம். சரியாக மூன்று வாரங்களில் என்னை திருச்சி ஜே ஜே கல்லூரிக்கு அதே வேலைக்கு மாற்றினார்கள்.

திருவண்ணாமலையப் போலவே திருச்சியும் தெய்வீகமான ஊர்.

வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள். திருச்சி மக்களின் படிப்பறிவு, வாழ்க்கை தரம் ஆகியவை திருவண்ணாமலையை விட பன்மடங்கு அதிகம், நாகரிகமான மக்கள். வகுப்பை பொறுத்தவரை திருவண்ணாமலையின் கதையே இங்கும் தொடர்ந்தது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் இன்னும் ஆர்வமாக வகுப்புகளை எடுக்க முடிந்தது. மாணவர்களுடனான புரிதல் அதிகம் என்பதால் சிரத்தையின்றி பாடங்கள் வேகமாக முடிந்தன. பின்னர் செமஸ்டர் விடுமுறையில் மாணவர்கள் அவரவர் ஊருக்கு சென்றுவிட்டதால் என்னை வேறு ஒரு கல்லூரிக்கு அனுப்ப என் நிறுவனம் தயாரான போது 'எப்படியும் ஆசிரியர் தொழில்தான் என ஆயிற்று, அதை ஊர் ஊருக்கு மாறி மாறி செய்யாமல் இங்கேயே சேர்ந்துவிட்டால் என்ன?' என எண்ணி நான் ஜே ஜே கல்லூரியிலேயே கல்லூரி ஆசிரியராக பணி மாறினேன். திருச்சி பிடித்துப்போனதும் ஒரு காரணம்.

என்னைப் பொருத்தவரை ஜே ஜே கல்லூரியில் பணியாற்றியபோது சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமே இல்லை. நான் அங்கு ஆசிரியராக சேர்ந்த சில நாட்களிலேயே என் நண்பன் சௌந்தரும் வந்து ஆசிரியராக சேர்ந்தான். நாங்கள் படிக்கும்போது கல்லூரியில் அடித்த லூட்டிக்கு நேரெதிராய் நடந்துகொண்டோம் (இது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?). அவனும் என்னைப்போலவே முதலில் வகுப்பறையில் கொஞ்சம் கஷ்டப்பட்டான், ஆனால் என்னைவிட விரைவாக சமாளித்துவிட்டான். நாங்கள் கணினிப் பிரிவை சார்ந்ததால் எங்களுடன் சேர்த்து மொத்தம் மூவர் மட்டுமே ஆண்கள், மற்ற ஆறு பேரும் பெண்கள். நல்ல நாளிலேயே நாங்கள் இருவரும் பெண்களிடம் பேசியதில்லை, இதில் இங்கே என்னடா சோதனை என இருவரும் புலம்பினோம். ஆனால் போகப்போக அந்த ஆறு பேரும் எங்களிடம் ரொம்ப இயல்பாக பழக அங்கு ஒரு நட்பு வட்டம் உதயமானது. அது மற்ற பிரிவு ஆசிரியர்களிடம் பொறாமைத் தீயை எண்ணையூற்றி வளர்க்கும் அளவுக்கு வளர்ந்தது வேறு கதை.

ஜே ஜே கல்லூரியில் பணிபுரிந்த போது நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகள்:

1. நானும் சௌந்தரும் சமைக்க கற்றுக் கொண்டது, மேலும் எவ்வளவு கேவலமாக சமைத்திருந்தாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிடவும், சாப்பிட்ட பின் கை கழுவுறோமோ இல்லையோ மறக்காமல் "சாப்பாடு நல்லாருக்குடா"ன்னு சொல்லவும் கற்றோம்.
2. அடுப்பு, சட்டி எதுவுமே இல்லாமல் (ஏன் கடலையே இல்லாமல் கூட) மணிக்கணக்காக கடலை வறுத்தெடுக்கக் கற்றது.
3. எனக்கு மிகவும் பிடித்த தேசிய மாணவர் படையில் (NSS) துணை பொறுப்பாசிரியர் பணியாற்றும் வாய்ப்பு. ~60 மாணவர்களுடன் தங்கிய அந்த 13 நாட்களை என்னால் மறக்கவே முடியாது. அதிலும் மேடையில் பல முக்கிய பிரமுகர்களின் முன் யதேச்சையாக அமைந்த எனது கண்ணிப் பேச்சு அனைவரின் பாராட்டை பெற்றது முக்கியமானது (வழக்கமாக அந்தப் பணியை செய்யும் பொறுப்பாசிரியர் அன்று அங்கு இல்லாததால் நான் பேசும்படி ஆனது).
4. கல்லூரிக்கென்று தனியாக இருக்கும் இசைக் குழுவினருடனான தொடர்பு. அவர்கள் ஒரு கச்சேரிக்கு தயாராகும் பாங்கை காண அவ்வளவு அழகாக இருக்கும் (அதில் உள்ள பல்வேறு சிரமங்களையும் அறிய முடிந்தது).
5. மாணவர்களுடன் கிரிக்கெட் ஆடியது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான ஒரு போட்டியில், வழக்கம்போல் பலவித பந்தா செய்து பேட்டை பிடித்து நான் நிற்க, அம்பயர் (என் நேரம் அவனும் ஒரு மாணவன்), "சார், பேட்ட இப்பிடி திருப்பி புடிங்க சார்"-னு என் மானத்தை வாங்கினான்... "எல்லாம் தெரியும், வேணும்னுதான் இப்பிடி புடிச்சிருக்கேன், நீ பந்த போட சொல்லுப்பா"-ன்னு சமாளித்து தொலைத்தேன்.
6. கல்லூரியில் பணிபுரிவோர் சிலரின் குடும்பத்துடனான தொடர்பு. நானும் சௌந்தரும் போகுமிடமெல்லாம் தாயன்புடன் பழகுவோரின் தொடர்பு நிச்சயம் கிட்டும், இங்கேயும் அப்படியே.

7. கணினி பிரிவு ஆசிரியர்களுக்குள்ளே இருந்த ஒற்றுமை HOD கொடுக்கும் வேலையை முடிக்காமல் எல்லோருமாக சேர்ந்து டிமிக்கி கொடுப்பது முதல் தியேட்டர் சென்று படம் பார்ப்பது வரை இருந்தது.
8. என் நெருங்கிய நண்பன் ராஜாவின் சகோதரனை இழந்தது.
9. கல்லூரியில் சேர்ந்த முதல் வாரத்தில் திருச்சி பேருந்தி நிலையத்தில் நின்றிருந்த சில கல்லூரி பெண்களை (ஜே ஜே கல்லூரியில் படிப்பவர்கள் என தெரியாமல்) லுக் விட்டபடியே கடந்து சென்றபோது அப்பெண்கள் எங்கள் இருவரையும் பார்த்து "good evening sir" சொன்னது ('நாங்க அப்பிடியே shock ஆயிட்டோம்' என்பதை சொல்லவும் வேண்டுமா?).
.... இப்படி இன்னும் பல.

"ஆக, பாடம் நடத்துவதைத் தவிர மற்ற எல்லாத்தையும் பண்ணி இருக்கீங்க"-ன்னு நீங்க நினைக்கிறதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன். நான் JAVA கற்றுக்கொடுக்கும்போது இருந்த சுவாரஸ்யம் கல்லூரி ஆசிரியரான பின் இல்லை, காரணம் - தியரியை அதுவும் புத்தகத்தில் இருப்பதை அப்படியே படித்து அதை வகுப்பில் ஒப்பிப்பது எனக்கு ஒத்துவரவில்லை (மென்பொருள் சார்ந்த அல்லது அதன் உருவக்கத்தில்தான் என் நாட்டம இருந்தது எனவும் வைத்துக் கொள்ளலாம்). சரியான வாய்ப்பு ஒன்று எனது மற்றொரு நெருங்கிய நண்பன் ராம்குமார் மூலம் என்னைத் தேடி வர, திருச்சி நண்பர்களின் வேண்டுகோளுக்கு மாறாக சென்னை வந்துவிட்டேன். அதன்பிறகு திருச்சி செல்லும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை. "ஈரம்" படம் பார்க்கும்போது திருச்சியின் நினைவுகள் எனக்குள் வந்து சென்றது - என்ன ஒரு அழகான ஊர்.

Wednesday, October 21, 2009

நானும் நியூயார்க் போனேன்

நியூயார்க் - அமெரிக்காவின் இதயம், அதன் அழகைக் காண்பது என் நெடுநாள் கனவு
நகரம் உறங்கும் போதும் அதன் இருட்டிலும் கூட அவ்வளவு அழகு
நேரம், தனிமை, பணம் - இவற்றை எளிதில் தொலைக்க அலையும் மக்கள் கூட்டம்
அடர்ந்தது - அந்நகர வீதிகள், நாம் சென்றது குளிர்காலமாதலால் வெண்
பனியும் படர்ந்து சுளீரென நம் தோல்களை குளிரில் சுண்டி இழுத்தன

கப்பல் ஏறி வலம் வந்தோம், சுதந்திர தேவி சிலையின் அழகை ரசித்தோம்
இறங்கியே மெல்ல நடந்தோம், கடல் நடுவே அந்நகரத்தின் அழகில் மெய்சிலிர்த்தோம்
காற்றும் குளிரும் ஒரு சேர நம் உடம்பை உறைய வைக்க, அங்கே
கரையில் நடந்தது பற்றி சொல்லித் தெரிய ஏதுமில்லை


நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குள்ளே நானும் வலம் வந்தேன் - கண்ணாடி மாளிகைகளாலான வீதிகள்.
மெழுகுவர்த்தியும், தனிமை தேடும் ஜோடிகளும் அங்கங்கே காபி கடை மேசைகளில்...
தனிமையோ அமெரிக்கர்களின் நாட்டுடைமை மட்டுமல்ல பிறப்புரிமையும் கூட! அதில்
கொடுமை யாதெனில் விருப்பப்பட்டோருடன் தனிமையை அனுபவிக்கலாம்! எனது
கொடுமையோ அப்போது அங்கே என்னவள் அருகில் இல்லை என்பதுதான்!

<மேலே உள்ள வரிகளில் இருந்து ஏதும் உணரமுடிகிறதா? ("அதுவே ஒரு மொக்கை, இதுல இது வேறயா?" என்றெல்லாம் உண்மையை வெளியே சொல்லக் கூடாது...) தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்>


<மேலே உள்ள வரிகளின் முதல் சில வார்த்தைகளை மட்டும் சேர்த்து படித்தால் ஒரு பாடல் வருமே.... அந்த தடித்த வார்த்தைகளை மட்டும் கோர்வையாக மீண்டும் படித்து பாருங்களேன் - ஏதோ என் புத்திக்கு தோன்றிய ஒரு புது முயற்சி...

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது... கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது...
நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்!
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ...

அந்த பாடலின் சரணம் கீழே தொடருகிறது>

பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீயில்லை
தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீயில்லை

விழியில் விழும் தூசி தன்னை எடுக்க நீயிங்கே இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீயிங்கேயில்லை

நான் இங்கே நீயும்மங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ
வான் இங்கே நீலம் இங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ

(நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்...)

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எரும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
ஜில்-என்று பூமி இருந்தும் இந்த தருனத்தில் குளிர்காலம் கோடையானதேனா
வா அன்பே நீயும் வந்தால் செந்தனல் கூட பனிக்கட்டி போலே மாறுமே

(நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்...)


திருமணத்திற்குப்பின் தனிமையில் இருப்போருக்கு மனதை இதமாக வருடும் பாடல். இப்பாடலை எழுதிய வாலியைப் பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை.

-சமுத்ரன்

Tuesday, October 20, 2009

சமீபத்தில் நான் ரசித்த திரைப்படங்கள்


1. உன்னைப் போல் ஒருவன்: பேசும் படம், குருதிப்புனல் வரிசையிலான ஒரு கமல் படம். தொடர் தீவிரவாதங்களையும் அதற்குக் காரணமானவர்க‌ளை தண்டிப்பதில் சட்டத்தின் தாமதப் போக்கையும் காணும் ஒரு வெகுஜன இந்தியனின் மனப்போக்கை கதை பிரதிபலிக்கிறது.


பாடல்களே இல்லாமல் ஒன்றரை மணி நேரத்தில் படம் முடிந்து விடுவது படத்தின் விறுவிறுப்பிற்கு பலம். அங்கங்கே வசனத்தில் உள்குத்து அரசியல் புகுந்து விளையாடியிருக்கிறது (பல வகைகளில்). சில வசனக்களும், காட்சிகளும், பாத்திரங்களும் சர்ச்சையை உண்டுபண்ணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன‌. குறிப்பாக காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க வைக்க கமல் சொல்லும் வசனம், ஒரு முஸ்லிம் தீவிரவாதி பேசுவதாக வரும் 'மோதிப்பார்' வசனம், மர்ம தொலைபேசி அழைப்பை trace செய்ய‌ க‌ணிப்பொறி வல்லுனர் ஒருவரை அழைக்க மோகன்லால் பேசும் வசனம், அந்த கணிப்பொறி வல்லுனரின் பாத்திரப் படைப்பு, இப்படி இன்னும் பல‌. கமல் தன் செயலை நியாயப்படுத்தி தன் தரப்பு பாதிப்புகளை சொல்லும் மிக முக்கியமான இடத்தில் வசனம் நம் மனம் ஒத்த விஷயங்களை விட்டுவிட்டு எதை எதையோ நோக்கிச் சென்று தடுமாறுகிறது. அந்த இடத்தில் வசனத்தில் தேவையான‌ கூர்மையில்லை. மோகன்லாலின் உடல் மொழி அற்புதம். இந்த படத்தில் கமல் நடிப்பை குறிப்பிட்டு சொல்ல ஒன்றும் இல்லை. லாஜிக்கில் பல ஓட்டைகள். அதனாலென்ன, ரசிக்கும்படி எடுத்திருக்கிறார்கள். விறுவிறுப்பான படம்.

2. வண்ணத்துப்பூச்சி: நீண்ட நாட்களுக்கு முன்பே வெளிவந்த, யாருமே பார்த்திராத நாடகப்பாணியிலான ஒரு படம். ஆறு முதல் எட்டு வயதே இருக்கும் ஒரு பெண் குழந்தைதான் கதையின் மையம். சென்னையில் கதை துவங்குகிறது. வேலை வேலை என எப்போதும் பிஸியான அப்பா அம்மா, பெரும் வசதி படைத்த வெறும் இயந்திரமான வாழ்க்கை - இரண்டுமே அக்குழந்தைக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.

அப்பா அம்மாவைத் தவிர எந்த உறவுமே தெரியாத அந்தக் குழந்தை, ஒரு விடுமுறையில் தன் தாத்தாவைப் பார்க்க அவர் இருக்கும் கிராமத்திற்கு செல்கிறாள். கரடு முரடான அதே சமயம் வெள்ளந்தியான‌ அக்கிராம மக்களுடன் இந்தக் குழந்தையின் பிணைப்பும், அதன் விளைவுகளும் என்பதே இப்படத்தின் கரு. நன்றாக வந்திருக்க வேண்டிய படம், அதன் நாடகத்தனத்தால் தத்தளிக்கிறது. ஆனாலும் வித்தியாசமான கள‌ம், அந்தக் குழந்தையின் குரல் மற்றும் நடிப்பிற்காக‌ ஒருமுறை பார்க்கலாம்.

3. திரு திரு துரு துரு: மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் படம். மில்லிய த்ரில்லிங் கலந்த, ஒரு கலகலப்பான 'feel good' காதல் கதை. மெளலியைத் தவிர அனைவரும் புதியவர்கள். ஆனால் நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் பின்னி பெடலெடுக்கிறார்கள். குறிப்பாக நாயகி சர்வ‌ சாதாரணமாக நடித்திருக்கிறார்.

காட்சிகள் படு இயல்பாக நகர்கின்றன. நாயகனும் நாயகியும் காதல் வயப்படுவது ரொம்பவே யதார்த்தம். பாடல்களை படம் பார்க்கும்போது பிடிக்கவில்லை, மறுமுறை கேட்கும்போது பிடித்திருந்தது. திரைக்கதையில் அங்கங்கே தொய்வு, படத்தொகுப்பிலாவது சரி செய்திருக்கலாம். நாயகனும் நாயகியும் மிகப் பொருத்தமான தேர்வு. இருவருக்குமே நல்ல எதிர்காலம் உண்டு. ஒரு அழ‌கான‌ கைக்குழந்தையும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் ஒரு பெண் என்பது பாராட்டத்தக்கது. வரவேற்கப்பட‌ வேண்டிய ஒரு நல்ல படம்.

4. நியூட்டனின் மூன்றாம் விதி: எஸ் ஜே சூர்யாவின் திரைப்படங்களை பார்ப்பதில்லை என ஒரு வைராக்கியத்தில் இருந்தேன், என் தனிமை இப்படத்தைப் பார்க்க வைத்தது.

எதிர்பார்த்தது போலவே படத்தின் ஆரம்பத்தில் அவரின் வழக்கமான பாணியில் காதல் காட்சிகள். ஆனால் போகப்போக கதை வேறு பாதையில் சென்றது எதிர்பாராத ஆச்சரியம். அதன்பின் படம் விறிவிறுப்பாகவே சென்றது. படமும் நன்றாகவே இருந்தது. பிறகு படம் ஏன் ஓடவில்லை என தெரியவில்லை (என்னை போலவே எல்லோரும் எஸ் ஜே சூர்யாவிற்கு பயந்து படம் பார்க்கவில்லையா எனத் தெரியவில்லை). சில இடங்களில் சூர்யாவின் நடிப்பு அசத்தலாக இருந்தது. இன்னும் பார்க்காதவர்கள் வாய்ப்பு கிடைத்தால் தாராளமாக பார்க்கலாம்.


5. ஈரம்: ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் + த்ரில்லர் படம்.

ஒரே சீரான திரைக்கதை. இந்த வகைப் படங்களில் யாரும் லாஜிக் பார்க்க போவதில்லை என்றாலும் காட்சிகளும் காரணங்களும் நம்பும்படி இருக்க வேண்டும். அந்த வகையில் இது ஏமாற்றவில்லை. சில இடங்களில் நாயகியின் கண்களே பேசுகின்றன, நல்ல நடிப்பு. அந்த போலீஸ் அதிகாரியின் நடிப்பும் தேர்ந்த நடிகரின் நடிப்பு போல இருந்தது. நாயகியின் கணவன் பாத்திரம் ஏதோ முழுமை பெறாதது போன்ற ஒரு உணர்வு. பாடல்கள் ரசிக்கும்படி இல்லை. மற்றபடி தாராளமாக பார்க்கலாம்.

6. யாவரும் நலம்: இதுவும் சஸ்பென்ஸ் + த்ரில்லர் வகை. எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட திரைக்கதை. மாதவன் மிக நன்றாக நடித்துள்ளார்.

சில காட்சிகள் நம்பும்படியாக இல்லை என்றாலும், திரைக்கதை அமைப்பில் அவை காணாமல் போய் விடுகின்றன. இருந்தும் இந்த படம் ஏன் ரசிகர்களை முழுமையாக சென்றடையவில்லை எனத் தெரியவில்லை. முதல் பாதியில் நாயகனுக்கு மட்டும் lift இயங்க மறுப்பது, ஆணி அடிப்பதில் சிக்கல் போன்ற சில காட்சிகளின் தேவையற்ற நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இந்த படத்தை ஒரு இரவு நேரத்தில் பார்த்துவிட்டு அந்த இரவு பயத்தில் தூக்கம் வராமல் தவித்தேன். த்ரில்லரை ரசிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

-சமுத்ரன்

Wednesday, October 14, 2009

நாங்க ஆடுன கிரிக்கெட்

நானும் கிரிக்கெட்டில ஒரு சிறந்த batsman, fielder மற்றும் bowler-ங்க. ஹல்லோ, இப்பிடி எல்லாம் சிரிக்கப் பிடாது. சொன்னா பேசாம கேக்கனும் sorry படிக்கனும். படிங்க.

காலேஜ்ல நாங்க அப்போ 2nd year. எங்க Hostel நண்பர்கள் ஒண்ணா சேர்ந்து நேரம் போறதுகூட தெரியாம சாப்பிடாம கொள்ளாம கிரிக்கெட் விளையாடுவோம். ஆமாங்க கிரிக்கெட்தான். ஆனா கிரிக்கெட்னா கிரிக்கெட்டே இல்ல (ஷ் ஷ், இல்ல இல்ல, அய்யோ மேல படிங்களேன்), ஒரிஜினல் கிரிக்கெட்டுல இருந்து கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். என்ன வித்தியாசம்னா? விளையாடுற இடம் 10 X 15 அடி - வேற எங்கயும் இல்ல, hostel room-தான். பந்து, கோலி குண்ட விட கொஞ்சம் பெரிசா இருக்கும், காத்தடிச்சா பறந்து போயிடும் அந்த அளவுக்கு 'கணமா' இருக்கும். hostel-க்கு வெளிய ரோட்ல கிடந்த தென்னமட்டைதான் எங்களுக்கு Bat. Hello, அப்பிடி எல்லாம் பக்காதிங்க. இதுக்கே இப்பிடி பார்த்தா எப்பிடி? மேல படிங்க.

Rules இதுதான் (இதுக்கெல்லாம் கமிட்டி எதுவும் கிடையாது, இத இங்க படிச்சுட்டு என்கூட விளையாடினவங்களே 'அப்படியா'-ன்னு கேப்பாங்கன்னா பாருங்களேன்!):
1. Stumpன்னு சொல்லி ஒரு பலகைய வச்சுடுவோம் (கிடைக்கிற பலகை, ஒல்லியா அகலமான்னு எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை), அந்த பலகைல பந்து பட்டுட்டா out
2. தொடர்ந்து 3 பந்து batல படாம உடம்புல பட்டுட்டா bowled - out (பின்ன, அருணை எல்லாம் எப்பிடிதான் out பண்றது?)
3. பந்து batல பட்டு நேரா சுவத்துல பட்டுடுச்சுன்னா sixer கிடையாது, அது out (இது செளந்தருக்காக கொண்டு வந்தது, ஆனா இந்த ruleனால நாந்தான் பல தடவ out ஆனேன்)
4. One pitch catch & straight catch - ரெண்டுமே out-தான்
5. பந்து sideல இருக்குற சுவத்துல உருண்டோடி பட்டா 2 runs
6. அதே பந்து உருண்டோடி bowler-க்கு பின்னாடி இருக்குற சுவத்துல பட்டா 4 runs (படிக்கிறது ஈஸி, வந்து ஆடிப் பாருங்க தெரியும்)
7. batsmanக்கு பின்னாடி இருக்குற சுவத்துல பந்து எப்படி பட்டாலும் எதுவும் கிடையாது
8. ஒருத்தன் Batting பண்றப்போ மத்த எல்லாரும் fielding பண்ணனும்
9. ஒரு ஓவருக்கு 6 பந்து (எல்லாம் நேரம்)

நானு, சுரேஷ், மோகனசுந்தரம், கனேஷ், விவேக், அருண், ராஜா இப்பிடி பல பேர் சேர்ந்து விளையாடுவோம். எத்தன பேர் வந்தாலும் no சொல்லாம எல்லாரையும் சேர்த்துகிட்டு ஜாம் ஜாம்னு களத்துல sorry roomல இறங்கிடுவோம். செளந்தர், சுப்பு, பாலமுருகன்-னு இவங்க எல்லாம் ஒரிஜினல் கிரிக்கெட் விளையாடுறவங்க, அவங்க அப்பப்ப எங்ககூட இப்பிடி விளையாடுறப்ப எங்ககிட்ட training எடுதுக்குவாங்க (சுப்பு, இதுக்கு போயி அருவாள தூக்கலாமா? உண்மை சில சமயம் கசக்கும்தான், விடு). Fielding setup எல்லாம் யார் வேணும்னாலும் பண்ணுவோம் (கண்ணுல வர்ற ரத்தத்த துடைச்சுட்டு மேல படிங்க). நான் Bowling பண்ணும்போது பந்து நல்லா spin ஆகுதுன்னு ராஜாவும் செள்ந்தரும் சொல்வாங்க ('அந்த பொண்ணு உன்னையே பாக்குறாடா'ன்னும் அவிங்கதான் சொன்னாய்ங்க, அதனால அவங்க சொன்னது எந்த அளவுக்கு உண்மைங்கறத உங்க சாய்ஸ்-க்கே உட்டுடறேன்).

சுரேஷ்: எப்பவுமே முதல் பந்துல அவுட் ஆவுறதே இவனுக்கு வழக்கம். ஆனா ரொம்ப ஸ்டைலிஷா விளையாடுவான். அதுவும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமா out ஆவான். out ஆன பின்னாடி சோகமா batஅ குடுத்துட்டு போவான் பாருங்க, எனக்கு century அடிச்சா மதிரி அப்பிடி இருக்கும் (ஏன்னு கேக்காதிங்க). ஆனா சில சமயம் ஆடுவான் ஆடுவான் அவுட் ஆகாம அடிகிட்டே இருப்பான்.

அருண்: இவன பத்தி சொல்லனும்னா ஒரு incident-அ சொல்லியே ஆகனும். 2nd yearல எங்களுக்கும் 1st yearக்கும் முக்கியமான கிரிக்கெட் போட்டி. ஸ்கூல்ல கிரிக்கெட் விளையாடியிருக்கேன்னு இவன் சொன்னத நம்பி டீம்ல சேத்துகிட்டாங்க. 4, 5 விக்கெட் போயிடுச்சு. கடைசி ஓவர். win பண்ண இன்னும் 12 ரன் அடிக்கனும். இவந்தான் பேட்டிங் பண்றான். முதல் பந்து ட்ராவிட் டெஸ்ட் மேட்ச்-ல உள்ள வந்தவுடனே வைப்பார் பாருங்க அந்த மாதிரி ஒரு டொக். 2வது - இது 2வது பந்தா இல்ல முதல் பந்தோட replayவான்னு கூட-ஆடுன இன்னொரு batsmanக்கே சந்தேகம் வந்திருக்கும். 3வது பந்துல 2 ரன். இப்ப எல்லருக்கும் ஒரே tension. 4வது பந்து well left (இவனை recommend பண்ண VB நெலமைய யோசிச்சு பாருங்க). ஜெயிக்க 10 ரன் வேணும். கடைசி பந்து, அவன் கால்கிட்டயே அடிச்சுவுட்டுட்டு "yes... yes..."னு ஒரு ரன்னுக்காக partnerஐ இவன் கூப்பிட்டான், அவன் திருப்பி பார்த்த பார்வைல அதுக்கப்புறம் பேச்சுக்கு கூட கிரிக்கெட் கிரவுண்டு பக்கம் அவன் தல வச்சு படுக்கல. ஆனா இங்க indoor cricketல (அதாங்க நாங்க விளையாடுறது) இவன out பண்றதுக்குள்ள எங்களுக்கு போது போதும்னு ஆயிடும். பந்து அவன்கிட்ட போறது மட்டுந்தான் தெரியும், அவன் காலவிட்டு வெளில வராது. திடீர்னு ஒரு பந்துல அவுட் ஆயிடுவான், ஆனா அவுட்னு ஒத்துக்கவே மாட்டேன் "batல படவே இல்லடா"-ன்னு நின்னுக்குவான், நாங்களும் "ஆடித் தொல"-ன்னு பெருந்தன்மையா(?!) விட்டுகுடுப்போம். இவனுக்காகவே கொண்டு வந்ததுதான் rule # 2. (rulesஐ நாங்க அப்பிடி strict-ஆ follow பண்ணுவோம்).

செளந்தர்: ஒரிஜினல் கிரிக்கெட்-ல அப்ப அப்ப 4, 6-ன்னு அடிச்சு அசத்துவான். அடிக்க ஆரம்பிச்சுட்டான்னா பந்து பறக்கும் (அட, இது மெய்யாலுமே உண்மைங்க). அதனால இவனுக்கு எங்க காலேஜ் ராபின் சிங்-னு பேரு. இங்க indoor cricketலயும் அப்பிடிதான் அடிப்பான், பந்து பறக்கும். இவனுக்காகவே கொண்டு வந்ததுதான் rule#3. ஆனா பின்னாடி உஷாராயிட்டான். எங்களுக்கு இவன அவுட் பண்றதுக்கு வழியே தெரியாதப்போ, புதுசா இன்னொரு rule கொண்டு வந்தோம் - அதாவது ஒருத்தன் 3 ஓவருக்கு மேல bat பண்ண கூடாதுன்னு (வேற வழி?).

சுப்பு: எங்க காலேஜ் சச்சின். கிரிக்கெட்ல ஆல்ரெளண்டர். Opening bowler and opening batsman. நிதானமா நேர்த்தியா விளையாடுவான். சுப்புவோட கிரிக்கெட் பத்தி நான் இதுக்கு மேல கமெண்ட் பண்ணினா இந்த பதிவு அப்பறம் ஒரு சீரியஸ் பதிவாயிடும். [காத குடுங்க: உண்மை என்னன்னா, எங்ககூட கிரிக்கெட் விளையாடும்போது ரொம்ப தெனறுவான், அதுவும் குறிப்பா என்னோட பவுளிங்ல (முடியல)].

பாலமுருகன்: "என்னோட bowling-la 4 விக்கெட் எடுத்தேன்டா அப்புறம் battingல 35 ரன் அடிச்சேன், நீங்க பாக்காம போயிட்டீங்களேடா"-ன்னு எப்பல்லாம் நாங்க மேட்ச் பாக்கலியோ அப்பல்லாம் சொல்லுவான். சரிடா இன்னிக்கு நீ ஆடு, நாங்க பாக்குறோம்னு பார்த்தன்னிக்கெல்லாமே டக் அவுட்தான். ஆனாலும் நாங்க அடிக்கிற நக்கல கண்டுக்காம டக் அவுட் ஆனதுக்கு காரணம் சொல்லுவான் பாருங்க. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். சரி அத வுடுங்க. இவன் கொஞ்சம் அதிரடி பிரியன்கிறதால அங்க காட்ட வேண்டியதெல்லாம் இங்க indoor cricketல காட்டி 6 அடிச்சு அவுட் ஆயிடுவான் (எப்புடீ எங்க ரூல்ஸ்?).

ராஜா: இவன் ஒரு பாராட்டு மன்னன். பந்து ஒரு பக்கம் போவும், நாம ஒரு பக்கம் batஅ காத்துல சுத்துவோம், அத கூட "யோவ் batting style கலக்குறய்யா"-ன்னு பாராட்டுவான். ஆனா அவன் உண்மையிலயே battingல கலக்குவான். ரொம்ப நேரம் அவுட் ஆகாம அவன் ஆடுறா மாதிரி நமக்கு தோன்றதுக்கு முன்னாடியே நம்ம மனச புரிஞ்சுகிட்டு அவனாவே அவுட் ஆயிட்டு வந்துடுவான். அவ்ளோ நல்லவன்.

அப்பறம் நானு: எதுக்குங்க என்னை பத்தி? எனக்கு தற்பெருமை எல்லாம் பிடிக்காதுங்க. என்னங்க? நம்பிக்கை இல்லன்னா, முதல் பாராவுல முதல் வரிய மறுபடியும் படிச்சு பாருங்க. சும்மாவா சொல்றோம்?

-சமுத்ரன்