சேகரும் மலர்விழியும் ஒரே கம்பெனியில் வேலை செய்யும் நீண்ட நாள் நண்பர்கள். ஒரு மாலை வேலையில் shopping சென்றுவிட்டு நடந்துகொண்டே அவர்களது உரையாடல் (மலர்விழிதான் ஆரம்பித்தாள்):
"டேய், உன்கிட்ட ஒண்ணு கேட்பேன், நீ உண்மைய சொல்லனும்..."
"ஒண்ணு என்ன ரெண்டு கூட கேளு,என்னிக்கு நான் பொய் சொல்லி இருக்கேன்?"
"அது சரி. காலேஜ்ல நாம பழக ஆரம்பிச்சதிலருந்து, இப்போ ஆறு வருஷம் ஆச்சு. இத்தன நாள் பழக்கத்துல என்ன தெரிஞ்சுகிட்ட?"
"ஒரு பொண்ணுகூட ரொம்ப நாள் பழகுறது கஷ்டம்னு தெரிஞ்சுகிட்டேன்."
"ப்ச்! சீரியஸ்-ஆ கேக்குறேன்ல, சொல்லுடா."
"அப்ப நான் சொன்னது ஜோக்குங்குற.... "
"கடி போடாத, சொல்லு."
"சரி, நீ என்ன தெரிஞ்சுகிட்டேன்னு சொல்லு, அத base பண்ணி நான் சொல்றேன்."
"எப்பவும் கிண்டலும் கேலியும் பண்ணிட்டு எல்லாரையும் சந்தோஷமா வச்சிருக்குறது உன்கிட்ட ரொம்ப பிடிக்கும். எனக்கு personal-ஆ சந்தோஷத்தையும் சோகத்தையும் பகிர்ந்துக்க ஒரு நல்ல தோழன் கிடைச்சிருக்கான்னு புரிஞ்சுகிட்டேன்."
"அப்டியா யாரு அது, எனக்கு தெரியாம?"
"எப்ப பாத்தாலும் உனக்கு வெளையாட்டுதான். படுத்தாம, என்னை பத்தியாவது என்ன நினைக்கிறேன்னு சொல்லேன்."
"என்னோட friends-ல நீ மட்டும்தான் பொண்ணு, உன்ன பத்தி பெருசா சொல்றதுக்கு ஒண்ணும் இல்லன்னாலும் என்னோட friends-ல உன்னை ரொம்ப பிடிக்கும்."
"உண்மையாவா?"
"நான் ஏற்கனவே சொன்னேன் இல்ல? நான் என்னிக்குமே பொய் சொன்னதில்லன்னு."
"ம்... ரொம்ப நாளா உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்னு நெனச்சுட்டிருக்கேன், அது உனக்கும் தெரியும்னு நினைக்கிறேன், சொல்லட்டுமா?"
"என்ன, லவ்வா?"
"நான் ஆமான்னு சொன்னா நீ என்ன சொல்லுவ?"
"யாரந்த பாக்கியசாலின்னு கேட்பேன்."
"ம்... உங்க தாத்தா"
"அய்யய்யோ, அப்ப எங்க பாட்டி நெலம?"
"வெளையாடாத, வெக்கத்த விட்டு கேக்குறேன் சொல்லு..."
"அப்பிடி அவசரப்பட்டு உன்கிட்ட இல்லாததை எல்லாம் விட்டுடாத, யோசிச்சு நாளைக்கு சொல்றேன்."
"டேய் என்ன அழ வைக்காத. இப்பவே சொல்லு. என்னால இந்த விஷயத்துல wait பண்ண முடியாது."
"தயவுசெஞ்சு அழ மட்டும் செய்யாத. என்னோட இந்த தயக்கத்துக்கான காரணத்த நாளைக்கு சொல்றேன், நீயே புரிஞ்சுப்ப."
......
அவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. பேசாமலேயே அவளை வழக்கம்போல் அவளது வீட்டில் விட்டுவிட்டு அவன் சென்றுவிட்டான். எப்போதும் சொல்லும் "bye" கூட அன்று சொல்லவில்லை அவள்.
எப்போதும் மனதில் பட்டதை உடனே சொல்லிவிடும் அவன் ஏன் யோசிப்பதாக சொன்னான் என அவளுக்கு புரியவில்லை. ஒருவேளை என்னை அவனுக்கு பிடிக்கவில்லையா? அவசரப்பட்டுவிட்டேனோ? அவன் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைக்கும்போதே அவளுக்கு மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது.
அடுத்த நாள் மலர்விழி அவளது இருக்கையில் இருக்க, சேகர் அவளின் டேபிள் மேல் அவளிடமிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு கடிதத்தை வைத்துவிட்டு சென்றுவிட்டான்... ஒன்றும் புரியாமல் அவசரமாக அதனை எடுத்து படித்தாள்:
"உன்னை முதலும் கடைசியுமாக ஏமாற்றுவதற்கு sorry. உன்னை எனக்கு பிடிக்கும், ஆனால் நான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே office-ல உன் பக்கத்திலிருக்கும் friend-டிடம் என் மனதை பறிகொடுத்துவிட்டேன், அவளை விட்டு வேறொரு பெண்ணை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதை உன் முகம் பார்த்து சொல்ல தைரியம் இல்லாமல்தான் இந்த லட்டர். என்னை மன்னித்துவிடு."
இதை அவள் எதிர்பார்க்கவில்லை, அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. அழுகையை தீவிரப்படுத்துவது போல் அவள் அருகில் அமர்ந்திருக்கும் அகிலா "ஏன் அழற?" என்றாள். அவளை முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டாள். இப்போது சேகர் அவள் அருகில் வந்தான். அவனை நிமிர்ந்து பார்க்கும் சக்தி அவளிடத்தில் இல்லை. தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணி உள்ளுக்குள் குமுறினாள்.
இப்போது சேகர் பேசினான்: "ஆமா மலர், அதுல நான் எழுதி இருக்குறதெல்லம் உண்மைதான். ஆனா இது உனக்கு எழுதினதில்ல, அது அவங்களுக்கு எழுதின லட்டர்" என மலர்விழியிடம் இருந்து கடிதத்தைப் பிடுங்கி அவள் அருகில் அமர்ந்திருக்கும் அவள் friend அகிலாவிடம் கொடுத்தான். இப்போதுதான் மலர்விழிக்கு புரிந்தது சேகரின் விளையாட்டு. "டாய்....... உன்னை..." என்று அவள் கத்த, அவன் சிரித்தபடியே விலகி ஓட, மலர்விழி அவனைத் துரத்தினாள். அகிலாவுக்கு ஒன்றும் புரியவில்லை, விழித்தபடி கையில் கடித்தத்துடன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
-சமுத்ரன்
Subscribe to:
Post Comments (Atom)
nala iruku machi ....good one
ReplyDelete