2. வண்ணத்துப்பூச்சி: நீண்ட நாட்களுக்கு முன்பே வெளிவந்த, யாருமே பார்த்திராத நாடகப்பாணியிலான ஒரு படம். ஆறு முதல் எட்டு வயதே இருக்கும் ஒரு பெண் குழந்தைதான் கதையின் மையம். சென்னையில் கதை துவங்குகிறது. வேலை வேலை என எப்போதும் பிஸியான அப்பா அம்மா, பெரும் வசதி படைத்த வெறும் இயந்திரமான வாழ்க்கை - இரண்டுமே அக்குழந்தைக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.
அப்பா அம்மாவைத் தவிர எந்த உறவுமே தெரியாத அந்தக் குழந்தை, ஒரு விடுமுறையில் தன் தாத்தாவைப் பார்க்க அவர் இருக்கும் கிராமத்திற்கு செல்கிறாள். கரடு முரடான அதே சமயம் வெள்ளந்தியான அக்கிராம மக்களுடன் இந்தக் குழந்தையின் பிணைப்பும், அதன் விளைவுகளும் என்பதே இப்படத்தின் கரு. நன்றாக வந்திருக்க வேண்டிய படம், அதன் நாடகத்தனத்தால் தத்தளிக்கிறது. ஆனாலும் வித்தியாசமான களம், அந்தக் குழந்தையின் குரல் மற்றும் நடிப்பிற்காக ஒருமுறை பார்க்கலாம்.
3. திரு திரு துரு துரு: மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் படம். மில்லிய த்ரில்லிங் கலந்த, ஒரு கலகலப்பான 'feel good' காதல் கதை. மெளலியைத் தவிர அனைவரும் புதியவர்கள். ஆனால் நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் பின்னி பெடலெடுக்கிறார்கள். குறிப்பாக நாயகி சர்வ சாதாரணமாக நடித்திருக்கிறார்.
காட்சிகள் படு இயல்பாக நகர்கின்றன. நாயகனும் நாயகியும் காதல் வயப்படுவது ரொம்பவே யதார்த்தம். பாடல்களை படம் பார்க்கும்போது பிடிக்கவில்லை, மறுமுறை கேட்கும்போது பிடித்திருந்தது. திரைக்கதையில் அங்கங்கே தொய்வு, படத்தொகுப்பிலாவது சரி செய்திருக்கலாம். நாயகனும் நாயகியும் மிகப் பொருத்தமான தேர்வு. இருவருக்குமே நல்ல எதிர்காலம் உண்டு. ஒரு அழகான கைக்குழந்தையும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் ஒரு பெண் என்பது பாராட்டத்தக்கது. வரவேற்கப்பட வேண்டிய ஒரு நல்ல படம்.
4. நியூட்டனின் மூன்றாம் விதி: எஸ் ஜே சூர்யாவின் திரைப்படங்களை பார்ப்பதில்லை என ஒரு வைராக்கியத்தில் இருந்தேன், என் தனிமை இப்படத்தைப் பார்க்க வைத்தது.
எதிர்பார்த்தது போலவே படத்தின் ஆரம்பத்தில் அவரின் வழக்கமான பாணியில் காதல் காட்சிகள். ஆனால் போகப்போக கதை வேறு பாதையில் சென்றது எதிர்பாராத ஆச்சரியம். அதன்பின் படம் விறிவிறுப்பாகவே சென்றது. படமும் நன்றாகவே இருந்தது. பிறகு படம் ஏன் ஓடவில்லை என தெரியவில்லை (என்னை போலவே எல்லோரும் எஸ் ஜே சூர்யாவிற்கு பயந்து படம் பார்க்கவில்லையா எனத் தெரியவில்லை). சில இடங்களில் சூர்யாவின் நடிப்பு அசத்தலாக இருந்தது. இன்னும் பார்க்காதவர்கள் வாய்ப்பு கிடைத்தால் தாராளமாக பார்க்கலாம்.
5. ஈரம்: ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் + த்ரில்லர் படம்.
ஒரே சீரான திரைக்கதை. இந்த வகைப் படங்களில் யாரும் லாஜிக் பார்க்க போவதில்லை என்றாலும் காட்சிகளும் காரணங்களும் நம்பும்படி இருக்க வேண்டும். அந்த வகையில் இது ஏமாற்றவில்லை. சில இடங்களில் நாயகியின் கண்களே பேசுகின்றன, நல்ல நடிப்பு. அந்த போலீஸ் அதிகாரியின் நடிப்பும் தேர்ந்த நடிகரின் நடிப்பு போல இருந்தது. நாயகியின் கணவன் பாத்திரம் ஏதோ முழுமை பெறாதது போன்ற ஒரு உணர்வு. பாடல்கள் ரசிக்கும்படி இல்லை. மற்றபடி தாராளமாக பார்க்கலாம்.
6. யாவரும் நலம்: இதுவும் சஸ்பென்ஸ் + த்ரில்லர் வகை. எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட திரைக்கதை. மாதவன் மிக நன்றாக நடித்துள்ளார்.
சில காட்சிகள் நம்பும்படியாக இல்லை என்றாலும், திரைக்கதை அமைப்பில் அவை காணாமல் போய் விடுகின்றன. இருந்தும் இந்த படம் ஏன் ரசிகர்களை முழுமையாக சென்றடையவில்லை எனத் தெரியவில்லை. முதல் பாதியில் நாயகனுக்கு மட்டும் lift இயங்க மறுப்பது, ஆணி அடிப்பதில் சிக்கல் போன்ற சில காட்சிகளின் தேவையற்ற நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இந்த படத்தை ஒரு இரவு நேரத்தில் பார்த்துவிட்டு அந்த இரவு பயத்தில் தூக்கம் வராமல் தவித்தேன். த்ரில்லரை ரசிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.
-சமுத்ரன்
No comments:
Post a Comment