Tuesday, October 27, 2009

பிளாக் எழுதி நான் சாதித்ததென்ன?

இது என்னை பரிசோதிச்சு எனக்கு நானே எழுதும் பதிவு. ம்... பிளாக் எழுத ஆரம்பிச்சு ஒரு மாத காலம் ஆவுது. ஆரம்பிச்ச புதுசுல நான் எழுதுன சில பதிவுகளை நண்பர்கள் ஆர்வமா படிச்சுட்டு ஆஹா ஓஹோன்னு புகழ்ந்ததை நம்ம்ம்ம்ம்பி, அடுத்தடுத்த பல பதிவுகளை அரங்கேற்றினேன். பதிவுகளை அரங்கேற்றிவிட்டு படிக்க சொல்லி மெயில் அனுப்பினேன். படித்தாரில்லை, மெயிலுக்கு பதிலுமில்லை.

சரி எல்லாரும் பிஸி போலன்னு 2 நாள் பொறுத்திருந்து பார்த்துட்டு சௌந்தருக்கு போன் செஞ்சேன் (அவந்தான் மாட்டினான்). அப்பிடியே அவன உட்கார வச்சு படிக்க வச்சேன். அன்னையோட அவன் internet பக்கமே வர்றதில்ல, இன்னைக்கு வரைக்கும் 4 நாள் ஆச்சு. அப்பயாவது எனக்கு புரிஞ்சுதா? இல்லை. அடுத்து சீனிவாசன் onlineல் வந்தான். அவனை அப்படியே அமுக்கி என் பிளாக்கிற்கு இழுத்து பதிவுகளை படிக்க வச்சேன். நல்லா இருக்கு ஆனா நீ ஏன் சினிமா அரசியல் ஏதாவது interesting (?!)ஆ எழுத மாட்டேங்குற?-ன்னு டீசன்ட்டா சொல்லி பாத்தான். "அப்பிடி இல்லடா சீனி"-ன்னு ஒரு பத்து நிமிஷம் விளக்கம் குடுத்தேன். அன்னைல இருந்து அவன் நடுசாமத்துக்கு அப்பறந்தான் பூனை போல் onlineல் வர்றான். அப்பவும் நான் அவன புடிச்சு "சீனி, புதுசா பதிவு போட்டிருக்கேன்டா"-ன்னு ஆரம்பிச்சேன், "நீ இன்னும் தூங்கலியாடா"-ன்னான். அப்பவும் எனக்கு புரியல. அவனும் internet கனெக்ஷனையே கட் பண்றத பத்தி யோசிப்பதாக தெரியுது. ஆனாலும் என் பிளாக்ல இது வரைக்கும் பின்னூட்டம் இட்ட ஒரே ஆள் சீனிதாங்குற பெருமை (??) அவனுக்கு உண்டு.

அடுத்து மாதேஸ். எப்போதும் அலுவலகம் வீடு என்றில்லாமல் தமிழ் பிளக்கிலேயே வாழ்றவர். வீடு மாற்றிய பின் internet கனெக்ஷனுக்கு விசாரிச்சுட்டிருந்தார். நான் பிளாக் தொடர்ந்து எழுதுறதை தெரிஞ்சுட்டவர் "internet வீட்டுல எதுக்குங்க வீணா, நீங்க இந்தியா வாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே கனெக்ஷன் வாங்கலாம்"னு சொல்றார் (ஏன்னா இந்தியா வந்துட்டேன்னா பிளாக் எழுத மாட்டேன் இல்ல?). சரி ஆபீஸ்-ல எப்பவுமே பிளாக் தான் படிப்பாரே அங்கயாவது என்னோட பிளாக் படிக்கலாமே-ன்னு போன் பண்ணி கேட்டேன், போன் நம்பரையே மாத்தற யோசனையில இருக்குறதா சொன்னார். என் புத்திய என்ன சொல்ல? அப்பவும் புரியல.

அப்புறம் ராம். நான் அனுப்புற வீடியோ லிங்கை அரை மணி நேரம் பார்த்து இமெயிலுக்கு பதில் அனுப்புவான் ஆனா என்னோட பிளாக் படிச்சியாடான்னா "பிஸியா இருக்கேன்டா, இந்த வீக் என்ட் ட்ரை பண்றேன்"னான். ட்ரை பண்றானா? என்ன எல்லாரும் ஒரே பிஸியா இருக்காங்கன்னு நெனச்சுட்டு என்னோட பதிவ திருப்பி திருப்பி நானே படிச்சு பார்த்து "எவ்ளோ நல்லா இருக்கு, இந்த இடத்துல ஒரு இன்டெரெஸ்டிங் ட்விஸ்ட், எப்பிடிடா முத்து, உன்னால மட்டும்?"ன்னு மெச்சிட்டு இருந்தேன். அப்புறம் கணேஷ்க்கு போன் பண்ணேன், "என்னப்பா பதிவு எதாவது படிச்சியா?"-ன்னு. "நான் இன்னும் படிக்கல, ஆனா எங்க அப்பாக்கு லிங்க்க அனுப்பி வச்சேன், என்னடா எதோ ஒரு home sick கிறுக்கி வச்சிருக்கறத எல்லாம் எனக்கு அனுப்பிட்டு இருக்கன்னு கேட்டார்"னான். "சரி நான் அப்புறம் பேசுறேன்"-னு நானே போன வச்சுட்டேன்.

நாம யாரு, மெயில் அனுப்புறத நிறுத்தறதா இல்ல. ஆர்வத்துல என்னோட offshore teamக்கு அநுப்புன  official இமெயில்ல கூட பிளாக் லிங்கை போட்டு அனுப்பிட்டேன்னா பாருங்களேன். அஞ்சு நிமிஷம் கழிச்சு offshore teamலருந்து ஒருத்தர் 'என்ன language இது'ன்னு ரிப்ளை பண்ணார் (அவருக்கு தமிழ் பறைய வரும், but படிக்க அறியில்லா), அப்பதான் தெரிஞ்சுது நான் ரொம்ப ஆர்வக்கோளாறுன்னு. "சரி, நம்ம டீம்லதான் ஒரு தமிழ் ஆளு இருக்காரே, அவர் எங்க?"-ன்னேன். "ஓ அவரா, இப்போதான் ஒரு நிமிஷம் முன்னாடி தலைவலின்னு பர்மிஷன் போட்டுட்டு வீட்டுக்கு போறார்"னாங்க. "எதுவும் சொன்னாரா?"-ன்னு ஆவலா கேட்டேன் "ஆமா, முத்து எப்போ இந்தியா வருவார்?"-ன்னு கேட்டுட்டு போனார்னாங்க, அப்போதான் எனக்கு கொஞ்சம் பொறி தட்டுச்சு நம்ம பிளாக்க ஓப்பன் பண்ணியிருப்பாரோன்னு.

இப்ப கூட சௌந்தருக்கு போன் பண்ணினேன் , "எங்கடா இருக்க?"ன்னேன், "வீட்டுக்கு போயிட்டிருக்கேன் தோ பக்கதுல போயிட்டேன்?"னான். "அது ஒண்ணுமில்ல, கவிதை ஒண்ணு எழுதினேன் படிக்க ஆளே இல்லடா, வந்து படிடா"ன்னேன், "வீட்டுக்கு வந்தா படிக்கிறேன்"னான், "வீட்டுக்கு வர எவ்ளோ நேரம்டா ஆகும்னேன்", "ஆபீஸ்ல இன்னிக்கு புரடக்ஷன் மூவ் இருக்கும் போல இருக்கு, நான் இப்போ திரும்பி ஆபீஸ்க்கு போறேன்"ன்னான் (நான்தான் கெடச்சனாடா உனக்கு? - அவன் மனசாட்சியும் கூடவே பேசுச்சு). "திடீர்னு என்னடா உனக்கு புரடக்ஷன் மூவ்"னு கேட்டேன், "இல்லடா இப்போதான் நெனப்பு வந்துச்சு, நானே அப்புறம் உனக்கு போன் பண்றேன் நீ பண்ணாத உனக்கு எதுக்கு வீண் சிரமம்..."ன்னு டொக்னு போன வச்சுட்டான். அட, அப்பகூட இந்த பாழா போன புத்திக்கு தெரியலங்க.

ஆனா இப்போ என் மனைவிக்கு போன் பண்ணி பிளாக்ல புதுசா ஒரு பதிவு போட்டிருக்கேன்னு ஆரம்பிச்சேன், முடிக்க கூட இல்ல - "ஏங்க... மாமா பேசுறாங்களாம்"னு எங்க அப்பாகிட்ட போன குடுத்துட்டு "அப்புறமா பேசுறேன்னு சொல்லிருங்க மாமா, நான் சமையல் செய்யபோறேன்"னுட்டு போயிட்டா, மத்தியானத்துல என்ன சமையல் பண்றாங்கன்னு யோசிக்கும்போதுதாங்க இந்த மரமண்டைக்கு புரிஞ்சுது. புரிஞ்சுட்டிருக்கும்போதே எங்க அப்பா போன்ல "சொல்லு ராஜா"ன்னாங்க. அது வந்துங்கப்பா பிளாக்ல புதுசா ஒரு கவிதைய பதிவா போட்டிருக்கென்னேன். எங்க படி பார்ப்போம்னாங்க, படிச்சேன். நல்லா இருக்கே இப்பவே வந்து பிரிண்ட் போட்டுட்டு வர்றேன்னு கிளம்பி 20 கி. மீ பஸ்ஸுல வந்து பிரிண்ட் போட்டுட்டு போறாங்க. அவருக்காவது புரிஞ்சுதே என்னோட தவிப்புன்னு இப்போதான் கொஞ்சம் நிம்மதி.

இது எல்லாத்துலயும் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னன்னா நான் எப்போ பதிவு போட்டிருக்கேன்னு சொன்னாலும் சரின்னு உக்காந்து படிக்கிறது ரூபகா மட்டும்தான். என்மேல அப்பிடி என்ன பரிதாபமோ தெரியல.

இவங்கள எல்லாரையும் தண்டிக்க ஒரே வழி நான் தொடர்ந்து எழுதனும், எழுதனும் எழுதிட்டே இருக்கனும். இதவிட்டா அவங்கள பழி வாங்க வேற வழியே இல்ல.

5 comments:

  1. Hi Muthu,

    You are doing a very good job. Don't get demotivated just because no response/comments for your writing :-) Who knows there might be hundreds read your articles and leave no response. I would suggest to place "page hits" gadget to record number of visits.

    Keep the good work...and think differently...

    -SP

    ReplyDelete
  2. Dai, really i was busy.. but i read all ur postings.. definitely i will not miss even a single one.. superb... no waords to express my happiness.. i read the same to shobana, amma and appa too.. all enjoyed the blog.. keep it up man...

    ReplyDelete
  3. Thanks SP and Ram. With a little exaggeration, I wrote this just for fun. Thanks again for the appreciations.

    ReplyDelete
  4. கணேஷ் அப்பா சொன்னது போல், ஒரு சில பதிவுகள் உன் Home sick-யை பிரதிபலித்தாலும்..
    கனவுதேசம், நிலா கவிதை, 356 நாட்கள், என்னை மன்னித்து விடு-சிறுகதை இவைகள் மிகவும் அருமை...

    Blog என்பது, அந்தந்த காலகட்டங்களில் அவரவருக்குள் ஏற்படும் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை பலர் அறிய குறித்து வைக்கும் ஒரு திறந்த டைரியே..
    இதை எத்தனைபேர் படித்தார்கள் என்பதைவிட, எந்த சூழலில் எப்படி எழுதப்பட்டது என்பதே முக்கியம்.. ஆதலால் உன் எழுத்துப் பணி இனிதே தொடரட்டும்....

    ReplyDelete
  5. சரிதான், ஓ.கே.டா சீனி. உனது பாராட்டுகு நன்றி.

    ReplyDelete