பார்வை ரெண்டும் சந்திக்கும் வேளையில்
பெண்மையை புகழ்ந்துபார், அங்கு
பொய்யும் அழகு
பொங்கியெழும் தோழன் முன்
மௌனத்ததை பரிசளித்துப்பார்
பொறுமையும் அழகு
வெற்றியாளனை விலக்கி
வெற்றிக்கான இலக்கினை மட்டும் பார்
பொறாமையும் அழகு
உண்மையான உழைப்பின் ஒரு பங்கு ஊதியத்தை
வறியோர்க்கு வழங்கிப்பார், அன்றைக்கு
உறக்கமும் அழகு
இல்லாத உறவின் நெருக்கத்தை
காதலியின் காதில் கிசுகிசுத்துப்பார்
ஊடலும் அழகு
இரவில் வீடு திரும்பும்போது விவாதம் செய்யாத
காலில்லா அந்த ஆட்டோ முதலாளியைப்பார்
ஊனமும் அழகு
மீறுவதற்கான வழிகள் இருந்தும்
அதன் வரையறை வரை சென்று திரும்பிப்பார்
கொள்கையும் அழகு
சுகமான தருணத்தில்
இதமாக சீண்டிப்பார்
கோபமும் அழகு
துவண்ட நட்புக்கு
தோள் கொடுத்துப்பார்
கண்ணீரும் அழகு
இயல்பான அனைத்தையும்
நிதமும் இரசிக்கப் பழகு
இம்சைகூட அழகு!
-சமுத்ரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment