உள்ளாட்சித் தேர்தல்
அசுரர்களை ஆடவிட்டு அராஜகத்தை அரங்கேற்றிய
ஆளுங்கட்சியை கண்டு எங்களுக்கு அச்சமில்லை!
அரிவாளும் ஆயுதமுமாய்
கொடுவாளுடன் கொடூரமுமாய்
வாக்குச்சாவடியை சூரையாடிய
ரவுடி என்னும் அசுரனைக் கண்டுகூட
என்குலை அசையவில்லையடா!
அமைதியை ஆக்குவோம் என்றும்
அராஜகத்தை அறுப்போம் என்றும்
அச்சத்தை அண்டவிடோம் என்றும்
சத்தமாய் சத்தியபிரமாணம் எடுத்துவிட்டு
சண்டாளர்களின் கொலை வெறியாட்டங்களை
வெட்கமின்றி வேடிக்கையிட்டு
ரவுடிகளுக்கு வழிவிட்டதோடல்லாமல்
நீ காத்து நிக்க வேண்டிய மக்களையே
பேய் போல கொலை தாக்குதல் தொடுத்துக் கலைத்த காவல் துறையே
உன்னைப் பார்த்துதானடா இன்று ஊரே அஞ்சுகிறது...
அங்கே நீ கலைத்தது மக்களை அல்ல
காவல்துறை மீதி எமக்கிருந்த கொஞ்ச நஞ்ச காதலை.
ஆயிரம் நடப்பினும் நம்மை காத்து நிக்க
இருக்கிறான் என் காக்கி வீரன் - என நம்பி அல்லவா
சனநாயக கடமையாற்ற சாவடி நோக்கி வந்தோம்?
ஊக்கியிட்டு உளவவிடப்பட்ட ஊமைப் பொம்மையாய் நடந்துகொண்டாயே!
'எனை இப்படி ஊமைகளாய் ஆட்டுவிக்கும் கட்சியை
மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் ஏற்றிவிட்டாய்,
மறுபடியும் விரல் நுனியில் மை பூசி
முகத்தில் கரி பூசிக்கொள்ள வந்துவிட்டாயா?' - என
சாவடி முன் எம்மீது காவடி எடுத்துவிட்டாயோ?
எப்படியாயினும் எமை காப்பது உன் கடமையல்லவா?
"இனி இங்கு தேர்தல் நடத்த இராணுவம் தேவை"
இது வெறும் கூக்குரல் அல்ல!
எமை காத்திட நீ உண்டு என நம்பி
அயல்நாட்டு சதியிலிருந்து நம்மை காத்திட
வெளிநோக்கி துப்பாக்கி ஏந்தி நிற்கும் நம் இராணுவ நண்பனை
உள்நோக்கி காவல் காக்க வைத்துவிடாதே!
- சமுத்ரன்
No comments:
Post a Comment