ஆக. 4 2005 வெள்ளிக்கிழமை இரவு 9 மணி. அப்பா, அம்மா, சித்தப்பா, நண்பர்கள் படை சூழ முதல் முதலாக சென்னை விமான நிலையத்தில் காலடி எடுத்து வைக்கிறேன். வெளிநாடு செல்லும் கனவு பலிக்கப்போகிறது. அன்பான பெற்றோர்கள், பாசமான நண்பர்களை விட்டு 3 மாதத்திற்கு பிரிய போகிறேன்.
"இன்னும் சில மணி நேரத்தில் விமானம் ஏறப்போகிறோம். பயணம் எப்படி இருக்கும்? ஜன்னல் ஓரம் உட்கார்ந்தால் கீழே ஊர் ஊராக வேடிக்கை பார்க்கலாமே"-மனதில் பலவித எண்ணங்கள். நண்பர்கள் வழக்கம் போல் கேலியும் கிண்டலுமாய். இவர்களுடன் இப்படியே ஜாலியாக இதுவரை இருந்துவிட்டோம். இவர்களை எல்லாம் பிரிந்து நான் எப்படி தனியே இருக்கப்போகிறேன்? இதயத்தின் படக்... படக்... துடிப்பு எனக்கு காது வழியே கேட்குமளவுக்கு பலமாக இருக்கிறது. என் அம்மா அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் மனதில் ரொம்பவே கவலை இருந்திருக்க வேண்டும். மூவரும் சகஜமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள ரொம்பவே சிரமப்பட்டது நன்றாக தெரிந்தது. இரவு 10.30 மணி அளவில் உள்ளே செல்ல ஆயத்தமானேன். அப்பா, அம்மா, சில நண்பர்கள் விமானம் கிளம்புவதை பார்வையாளர்கள் பால்கனியிலிருந்து பார்த்துவிட்டுத்தான் கிளம்புவோம் என்பதில் உறுதியாக இருந்தனர். எல்லோருக்கும் டாடா காட்டிவிட்டு பெட்டிகளை உருட்டிக்கொண்டுஉள்ளே சென்றேன்.
கையில் இருக்கும் விமான டிக்கெட்டை பார்த்து வழி காட்ட அங்கங்கே விமான நிலைய ஊழியர்கள் இருந்தனர். டெல்டா விமான சேவைக்கான வரிசையில் போய் நானாக நின்று கொண்டேன். ஒரு பணிப்பெண் வரிசையில் நிற்பவர்களின் பெட்டிகளில் ஏதோ ஒரு tag-ஐ மாட்டிவிட்டுக்கொண்டே வந்தாள். கூடவே ஒவ்வொருவரையும் சில கேள்விகளையும் கேட்டுக்கொண்டே வந்தாள். அதாவது "நீங்கள் வைத்திருக்கும் பெட்டிகளை யார் pack செய்தார்கள்?, வெளிநாட்டிலிருக்கும் யாருக்காவது கொடுக்கச்சொல்லி வேறு யாரும் கொடுத்த பொருட்களை வாங்கிக்கொண்டு வருகிறீர்களா? உங்கள் பெட்டியில் என்ன என்ன இருக்கிறதென்று உங்களுக்கு முழுமையாக தெரியுமா?" போன்ற கேள்விகள். உண்மை எப்படி இருந்தாலும் "பெட்டியில் உள்ளவை எல்லாம் என்னுடையது மட்டும்தான், நான்தான் pack செய்தேன்" என்கிற வகையில் பதில் இருக்க வேண்டும். சிலபேர் "ஆமாம் என் நண்பன் குடுத்தான், அங்க குடுக்கச்சொல்லி" என்று வெகுளியாக சொன்னாலும், அந்த பணிப்பெண் "இல்ல சார், அப்படி சொல்லக்கூடாது, அப்படி யாரும் குடுக்கலன்னு சொல்லுங்க" என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள். ம்ம்ம்ம்ம். இந்த நிலையில் இருக்குது நம் விமான சேவை என நினைத்துக்கொண்டே வரிசையில் நகர்ந்தேன்.
என் முறை வந்தவுடன், அந்த வரிசைக்கு boarding pass கொடுக்கும் பணிப்பெண் என் பாஸ்போர்ட்டை மட்டும் வாங்கிக்கொண்டு ஒரு நிமிடம் எதையோ கணினியில் தேடிவிட்டு "San Antonio?" என்றாள். "yes, San Antonio, U.S." என்றேன். "Seat preference?"
"Means?"
"your preference for seating - inside or window side?"
"oh. yeah. window, window seat".
ஒரு மாதிரி பார்த்தாள் (ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டேனோ?), சிரித்து வைத்தேன். ஒன்றும் பேசாமல் என் 2 பெரிய பெட்டிகளும் (check-in baggage) அதற்கான எடை வரம்புக்குள் இருக்கிறதா என சரிபார்த்துவிட்டு rolling belt வழியே அவற்றை எங்கோ அனுப்பி விட்டாள் (அவற்றை நாம் போகும் விமானத்தின் அடிப்பகுதியில் அதாவது டிக்கியில் வைத்துவிடுவார்கள்). பின்னர் San Antonio செல்லும் வரை இந்த விமானம் மற்றும் 2 தொடர் விமானங்களுக்கான (connecting flights) boarding pass-களை பாஸ்போர்ட்டுடன் சேர்த்து என் கையில் கொடுத்தாள். அதனை வாங்கிக்கொண்டு எனக்கு முன்னால் நின்றிருந்தவர் எந்தப் பக்கம் சென்றாரோ அதே திசையில் எனது கைப்பெட்டியுடன் (carry bag) நானும் சென்றேன்.
Escalator வழியாக மேல் மாடிக்கு சென்றேன். அங்கே பாதுகாப்பு சோதனைக்காக ஒரு பெரிய வரிசை நின்றது. நானும் சென்று நின்று கொண்டேன். எந்த நாட்டுக்கு செல்பவராக இருந்தாலும் எந்த விமானத்திற்கு செல்பவராக இருந்தாலும் இந்த சோதனையை கடந்தாக வேண்டும். அந்த நீ......ண்ட வரிசை நகர்ந்து என் முறை வருவதற்குள் ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். போட்டிருக்கும் பேண்ட் சட்டை தவிர அனைத்தையும் கழட்டி தனியே ஒரு பெட்டியில் வைத்து அவற்றை லேசர் சோதனையும் என்னை தனியே மெட்டல் டிடெக்டர் சோதனையும் செய்தனர். என் கைப்பெட்டியில் பிளேடு இருந்தது அந்த லேசர் சோதனையில் தெரிந்துவிட்டதால், அதனை எடுத்து குப்பையில் போட வேண்டியதாகி விட்டது. மேலும் நடந்து சென்று என் விமானம் புறப்படும் terminal ஐ அடைந்தேன்.
ஆக. 5 அதிகாலை 12.30 மணி. விமானம் புறப்பட இன்னும் 1.20 மணி நேரம் இருக்கிறது. அப்படியே ஓரிடத்தில் அமர்ந்து வருவோர் போவோரை எல்லாம் பராக்கு பார்த்துக்கொண்டிருக்கிறேன். மணி 1.15. விமானத்தில் ஏற அழைப்பு வருகிறது. எல்லாரும் தானாக ஒரு வரிசையில் நிற்கிறோம். boarding pass-ஐ சரி பார்த்துவிட்டு ஒவ்வொருவராக உள்ளே அனுப்புகிறார்கள். ஒரு சிறிய பாதை வழியாக சென்று விமானத்தின் கதவு வழியே உள்ளே செல்கிறோம். அனைவரையும் அந்த விமானத்தின் பணியாளர்களில் ஒருவர் "Welcome sir, have a good flight" சிரித்தபடி வரவேற்கிறார்.
உள்ளே நான் நினைத்ததைவிட அழகாக அதன் உள் கட்டமைப்பு. ஒவ்வொரு seat-க்கும் அதிக இடைவெளி, அகலமான seat என பார்க்கவே அருமையாக இருக்கிறது. எனது seat எண்ணை நோக்கி அப்படியே நடந்து பின்னாடி போகிறேன். முதல் இருபது வரிசை கடந்த பின் நம்ம ஊர் அரசு பேருந்து seat போல வரிசை ஆரம்பிக்கிறது. இப்போதுதான் புரிகிறது முதலில் இருப்பவை business class seats என்று.
இது் economic class. "இந்த மாதிரி seat-லதான் நான் உக்காரனுமா? எனக்கு வேற கால் முன்னாடி சீட்ல இடிக்குமே? 2-3 மணி நேரம்னா பரவால்ல, 10 மணி நேரமாச்சே?"-புலம்பல்ஸ். ஒரு வரிசைக்கு 2-4-2 என மூன்று பிரிவாக 8 பேர் அமரும் வகையில் இருக்கிறது. ஆண்டவனை வேண்டிக்கொண்டு மேலும் நடந்து என் இருக்கையை அடைகிறேன். என் இருக்கை நடு பிரிவில் இடது ஓரமாக இருந்தது. "என்னடா இது? window seatதான கேட்டோம்? இங்க எப்பிடி? அய்யோ, இப்ப வேடிக்க பாக்க முடியாதே?" என புலம்பிக்கொண்டே என் கைப்பெட்டியை மேலே உள்ள rack-ல் வைத்துவிட்டு என் இருக்கையில் அமர்கிறேன்.
சிறிது நேரத்தில் ஒரு அழகான பெண் (அட கேரளா...) வருகிறாள். "அப்பாடா, ஒரு அழகான பொண்ணுப்பா. எங்க உக்காருதுன்னு பாத்து வச்சுக்கனும், அப்பப்போ பாத்துக்கலாம்" - என் கண் பார்த்து முடிப்பதற்குள் என் மனம் கணக்கு போட்டுவிட்டது. அந்த பெண் என் வரிசை வந்ததும் அவளது கைப்பையை மேலே rackல் வைத்துவிட்டு "Excuse me" என்கிறாள் என்னிடம். அதுவரை அந்த பெண்ணை கவனிக்காத மாதிரி, சிவாஜியின் பாவனையில் "yes" என்றேன். "thats my seat" என் பக்கத்து இருக்கையை கை காட்டினாள். "அய்யய்யோ, நமக்கு பக்கத்து seatஆ?". எழுந்து அந்த பெண்ணுக்கு வழி விட்டேன். "நமக்கு புதுசா ஒரு பொண்ணுகிட்ட கடலை போடறதுன்னா சுத்தமா வராது. site அடிக்க மட்டும்தான் வரும், இப்போ அதுக்கும் வழி இல்லாம போச்சே. அட ச்ச..."
30 நிமிடம் கழித்து விமானம் கிளம்பத் தயாரானபோது இதயத்தில் படபடப்பு மீண்டும் அதிகரிக்கிறது. பெல்ட் போட சொல்லி எல்லோரிடமும் பணிப்பெண் வேகமாக சொல்லிச் செல்கிறாள், சரி என பெல்ட்டை எடுத்தால் அது புது விதமாக இருக்கிறது. எப்படி போட்டாலும் மாட்ட மாட்டேன் என்கிறது. அதை வைத்துக்கொண்டு நான் முழிப்பதை பார்த்து பக்கத்திலிருந்த பெண் "this way" என சரியான முறையை சைகை செய்கிறாள். "thanks" என்றேன். அவ்ளோதான் அந்த பெண்ணிடம் நான் போட்ட கடலை.
விமானம் புறப்படுகிறது. பேருந்து போலவே (குலுக்கல்களுடன்) புறப்படும் போது இருக்கிறது, மெல்ல மெல்ல வேகம் எடுத்து சிறிது தூரத்தில் சக்கரங்களின்றி பறக்க ஆரம்பித்தவுடன் குலுக்கல்களின்றி (ஆனால் இஞ்சினின் இரைச்சலுடன்) மேல் நோக்கி பறக்கிறது. என் இருக்கையில் இருந்தவாறு எட்டி எட்டி ஜன்னலை பார்க்கிறேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. உள்ளே பார்த்தால், பல பேர் என்னை வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றனர். சரி, என மற்றவர்கள் போல் நானும் உறங்க முயன்றேன். குளிரடித்தது. வேறு யாருக்கும் குளிரவில்லை போல. எழுந்து நான் கொண்டு வந்திருந்த சிகப்பு நிற சால்வையை எடுத்து போர்த்திக்கொள்கிறேன். இப்பவும் என்னை வேடிக்கையாக பார்க்க சில பேர். "என்னடா நான் போர்த்திக்கிறத அப்பிடி பாக்குறீங்க? எனக்கு குளுருதுடா?" என மனதில் எண்ணிக்கொண்டே அமர்ந்து உறங்கி்விட்டேன். ரொம்ப நேரம் தூங்கி இருக்க வேண்டும். விழித்தால் 'ர்ர்ர்ர்ர்ர்ர்' என்னும் எஞ்சினின் சத்தம் மட்டும் கேட்கிறது, லேசாக காது அடைத்த மாதிரி இருக்கிறது. எச்சிலை விழுங்கிப் பார்க்கிறேன், ம்ம்.. என்ன செய்தாலும் அப்படியேதான் இருக்கிறது.
என் அருகிலிருக்கும் பெண் இப்போது ஒரு நீல நிற சால்வையை போர்த்திக்கொண்டு இருந்தாள். என்னை எழுப்பவே இல்லை, எப்ப இதை அவள் பெட்டியிலிருந்து எடுத்திருப்பாள்? - தெரியவில்லை. சுற்றிலும் பார்த்தால் எல்லோருமே அதே நீல நிற சால்வையை போர்த்தியிருந்தனர். "flightல போகும்போது நில நிற சால்வைதான் எடுத்துட்டு வரனும் போல"ன்னு நினைத்துக் கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் சிறிதாக ஒரு பேப்பரை பணிப்பெண்கள் கையில் கொடுக்கிறார்கள், அதை அனைவரும் முகத்தில் வைத்து துடைத்துக் கொள்கிறார்கள். நானும் துடைக்கிறேன், அது வெது வெதுப்பாக ஈரமாக இருக்கிறது. முதலில் ஒரு மாதிரி இருந்தாலும் "இப்பிடித்தான் மூஞ்சி கழுவிக்கனும் போல"ன்னு துடைத்துக்கொள்கிறேன். அனைவருக்கும் சாப்பாடு கொடுத்துக்கொண்டு வருகிறார்கள். வேண்டாம் என சொல்லாமல் எல்லாருமே வாங்கி சாப்பிடுகின்றனர், யாரும் பல் துலக்கியதுபோல் தெரியவில்லை.
என்னிடமும் வந்து "veg or omelet?" என்கிறாள் அந்த பணிப்பெண். omelet என்றேன். ஆம்லெட்டுடன் சிறிய ரொட்டியும், விரும்பிய soft drinkம் கொடுக்கிறார்கள். பசியில்லை என்றாலும் உணவு நன்றாகத்தான் இருக்கிறது (ஆம்லெட்டின் வாசனைதான் வித்தியாசமாக இருக்கிறது). சாப்பிட்டாச்சு (ஷ்... அதான் யாருமே பல்ல வெலக்கலன்னு ஒரு 'பிட்'ட போட்டிருக்கோம்ல... அப்பிடித்தான் நாங்களும்).
சில பேர் அங்கும் இங்கும் உளவுகிறார்கள். "சரி, எவ்ளோ நேரந்தான் உக்கார்ந்தே இருக்குறது"-ன்னு எழுந்து வந்தால் ஒரு மூலையில் toilet. "அதான, இது இல்லாம எப்படி?". சிறிது நேரத்தில் எனக்கும் உணர்வு வர (அது என்னன்னு கேட்கப்பிடாது), நானும் வரிசையில் நின்று 10நிமிடம் கழித்து உள்ளே செல்கிறேன். "அப்பாடா" என்றபின் பார்த்தால் தண்ணி இல்லை, வெறும் பேப்பர்தான். "அய்யோ, கருமம் கருமம்". முடித்துவிட்டு திரும்ப வந்து இருக்கையில் அமர்கிறேன் (இப்ப உக்கார ஒரு மாதிரி இருக்குது).
விமானம் பறக்கும் திசை, வேகம், உயரம், கடந்து வந்த தூரம், இன்னும் போக வேண்டிய தூரம்-நேரம், வெப்பநிலை, சேரும் இடத்தில் தற்போதைய நேரம் என மாறி மாறி முன்னால் இருக்கும் டிவி போன்ற சற்றே பெரிய திரையில் காண்பிக்கிறார்கள். பிறகு ஆங்கில சப் டைட்டிலுடன் அண்ணாமலை படம் போட்டார்கள். தலைவர் படம் என்றவுடன் குஷியாக பார்த்தேன் (அருகிலிருந்த பெண் அவளுடைய லேப்டாப்பில் ஏதோ ஆங்கில படம் பார்த்துக்கொண்டு வந்தாள்).
விமானம் பாரிஸ் விமான நிலையத்தை நெருங்குகின்றது. பெல்ட்டை திரும்ப அணிய வலியுருத்துகிறார்கள். விமானம் புறப்படும் போது இருந்த படபடப்பு திரும்ப தொற்றிக்கொள்கிறது. சத்தமின்றி இறங்கும் விமானம், சக்கரங்கள் தரையில் உருள ஆரம்பித்தவுடன் பேருந்துபோல குலுங்கியபடியே அதி வேகமாக ஓடுகிறது. சிறிது தூரத்திற்குள் அதனை நிறுத்துகிறார் விமான ஓட்டி. விமானம் நின்றவுடன் எல்லோரும் நீல நிற சால்வையை அப்படியே seatல் போட்டுவிட்டு கிளம்புகின்றனர். அப்போதுதான் எனக்கு புரிகிறது அந்த சால்வை விமானத்திலேயே ஒவ்வொரு பயணிக்கும் கொடுக்கப்பட்டதென்று. "எனக்கு ஏன்டா எவனும் குடுக்கல?"ன்னு நினைத்துக்கொண்டே என் இருக்கையிலிருந்து எழுந்து கவனிக்கிறேன், இருக்கையில் எனக்கான நீல நிற சால்வை, அதன்மேல் உட்கார்ந்துதான் இவ்வளவு நேரமும் வந்திருக்கிறேன். அட ராமா.
குறிப்பு: தொடர் விமானத்தை பிடிப்பதும் இதே போன்ற நடைமுறைகளை கொண்டதுதான் என்றாலும் அப்போது கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என்ற தகவலுடன் விடைபெறுகிறேன் (போரடித்தது போதும்). மீண்டும் சந்திப்போம் (மறுபடியுமா?).
-சமுத்ரன்
No comments:
Post a Comment