Tuesday, November 3, 2009

திரும்பிச் சென்றுவிடு - ஓர் சுய அலசல்

தனியார் கணினித்துறையில் பல வருடங்களாக வேலை செய்யும் நண்பனே! சில நிமிடங்கள் செலவிட்டு, இதை முழுதும் படிக்க முயற்சி செய்! எனக்காக அல்ல, உனக்காக.

கல்லூரிக்கு செல்லும்போது ஒரு 5000 ரூபாய் மாத வருமானத்தில் ஒரு நல்ல வேலை கிடைக்க கடவுளை வேண்டிக்கொண்டாய். இப்போது அதுபோல் குறைந்தது பத்து மடங்கு சம்பளம் வாங்குகிறாய். இந்த வாழ்க்கையும் சம்பளமும் நீ சில வருடங்கள் முன் வரை கனவிலும் நினைத்திராதது. அனைத்து வசதி வாய்ப்புகளும், பொழுதுபோக்கு அம்சங்களும், கை நிறைய சம்பளமும் கொட்டும் பரபரப்பான ஒரு நகரத்தில் வாழ்க்கை. அதாவது நீ நினைத்ததைவிட அதிக சம்பளம், நினைத்ததைவிட சுகமான வேலை, நினைத்ததைவிட அதிகமான விதவிதமான மனிதர்களுடனான பழக்கம், நினைத்ததைவிட அதிக தூர சொகுசு பயணம் - இப்போது நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்.

காவல், காத்தல், கற்பித்தல், பூட்டுதல், இயக்குதல், புதுப்பித்தல், ஆராய்தல், கண்டுபிடித்தல் என பல துறைகளையும் விட்டுவிட்டு எல்லோரும் இந்த துறையை மட்டும் நோக்கி படையெடுத்தீர்கள்... எடுக்குறீர்கள். மற்ற துறைகள் போட்டியின்றி கேட்பாரன்றிக் கிடக்கிறது. அதிலும் வினைபொருள் ஆக்கல், விளைவித்தல், பராமரித்தல் போன்ற சொற்ப வருமானமும் அதிக உடல் உழைப்பும் தேவைப்படும் துறைகளை சீண்ட ஆள் இல்லை. இருக்கட்டும், வாய்ப்புக் கிடைத்தால் யார்தான் விடுவார்கள்? பணம் பணம் பணம். இதுதான் இன்றைக்கு பிரதானம். அதுவும் லட்சக்கணக்கில். இதற்காகத்தான் உன் துறையில் வேலை தேடி, நகரங்களை நோக்கி நீ உள்பட எல்லோரும் படை எடுக்குறீர்கள். உன்னைப்போல வந்து குவிந்திருப்பவர்கள்தான் இந்த நகரம் முழுக்க. வருமானமும் வசதிகளும் பரவலாக எல்லா துறைகளிலும் சீராக இருந்திருக்க வேண்டும், விட்டுத்தள்ளு... அது உன் கைகளில் இல்லை.


சொகுசு வேலை+சம்பளம், வருடத்துக்கு 10-50% வருமான உயர்வு, சிறந்த மருத்துவம், குழந்தைகளுக்கு உலகத்தரத்தில் படிப்பு, பொழுதுபோக்க விதவிதமான இடங்கள், விரும்பிய இடங்களில் இன்பச் சுற்றுலாவிற்கான வாய்ப்பு இப்படியான சகல வசதிகளும் நிறைந்த ஒரு வாழ்க்கைதான் உனது. ஆனால், அதற்காக 100 பேர் தங்கி வாழக்கூடிய ஒரு இடத்தில் 5000 பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட இடத்தில் ஏற்படும் சகஜமான ஒன்றுதான் நீ இருக்கும் நகரங்களில் ஏற்பட்டிருக்கிறது - சுவாசத்தில் சுத்தமில்லை, குளிக்க சுத்தமான நீரில்லை, கண்ணுக்கெட்டிய வரை பசுமை இல்லை, அமைதியான இரைச்சலற்ற சுற்றம் இல்லை, வீட்டை விட்டால் தனிமைச் சுதந்திரம் இல்லை, மனிதாபிமானம் இல்லை, இப்படி பல 'இல்லை'-கள் இருக்கின்றன இங்கு. உண்மையில் இந்த நகரத்தில் எல்லாம் இருந்தன, உன்னைப்போன்றவர்களின் படையெடுப்பினால் இப்போது அவை அனைத்தும் 'இல்லை' என்றாயின.


நீ இந்த நகருக்கு வந்தாய். பின் திருமணம் செய்து ஒரு பெண்ணையும் கூட்டிட்டு வந்தாய். அப்புறம் குழந்தை. உன்னைப் போல உன் துறையை நோக்கி வேலை தேடி வந்து பின் இப்படி குடும்பம் என்று நகரத்தை ஆக்கிரமித்தவர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? நீயே கணக்கிட்டுக்கொள். மேலும் இதற்கு ஒரு முடிவும் இல்லாமல், உனது நண்பன், அவனது நண்பன், உன் தம்பி, உன் நண்பனின் தம்பி, அவனது நண்பனின் தம்பி, உன் தம்பியின் நண்பன், இப்படி இன்னும் பலர் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வந்து கொண்டுதானே இருக்கிறார்கள் இந்த நகரத்தை நோக்கி? எல்லோரும் நகரத்தை நோக்கினால், கிராமங்களை யார் நோக்குவது? மற்ற துறைகளின் நிலை என்ன? இது எங்கே போய் முடியும்? அந்த முடிவாவது உன் கையில் இருக்கிறதா? ஆம், இருக்கிறது.


வேலை தேடி சென்ற பத்து-பன்னிரெண்டு ஆண்டுகளில் நீ சொந்த ஊர் திரும்பியாக வேண்டும். ஆமாம், உனது சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுவிட வேண்டும். உனக்கு வாரி வழங்கிய துறைக்கு நீ நன்றிக்கடனாக எதுவும் செய்ய வேண்டிய நிலையில் அந்தத்துறை இல்லை, எனவே நீ எங்கிருந்து புறப்பாட்டாயோ அந்த இடத்திற்கே மீண்டும் செல்வதே அதற்கு தீர்வு. உன் உடம்பில் இரத்ததிற்கு பிடித்தமான இடம் உன் மூளை என்பதற்காக, இரத்தம் அனைத்தும் மூளைக்கே செல்ல முடிவெடுத்தால் உன் நிலைமை? மற்ற உறுப்புகளின் இயக்கம்? அப்படித்தான் இதுவும். கேட்பதற்கு கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் இருக்கலாம், இதில் உள்ள உண்மைகளை நீ விரைவில் புரிந்துகொள்வாய்.

உனக்கு சொந்த ஊர் எது? நீ பிறந்து வளர்ந்த ஊர், உன் அப்பா பிறந்து வளர்ந்த ஊர் இதில் ஏதோ ஒன்று இன்னும் கிராமமாகவோ, அல்லது வளர்ச்சியற்ற ஒரு சிறிய ஊராகவோ, நகரமாகவோ இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உன்னுடன் தொடர்புடைய ஒரு இடத்திற்குத்தான் நீ இப்போது குடிபெயர வேண்டும். இப்போது இருக்கும் சொகுசான நகரத்தையும் வேலையையும் விட்டுவிட்டு வசதிகளற்ற உன் சொந்த ஊருக்கு செல்ல உனக்கு விருப்பமில்லை என்பது புரிகிறது, அதாவது:


1. சம்பளம் + சொகுசு வேலை: உனக்கு இந்த சம்பளம் இல்லை, இன்னும் பல லட்சம் கொடுத்தாலும் போதாது. நீ நினைத்த வெறும் 5000 ரூபாய் சம்பளத்தில் அரசு வேலை கிடைத்திருந்தால்? "அதான் இல்லையே" - அதுதான் இப்போது பிரச்சினை. வாழும் காலம் முழுக்க அமெரிக்கன் என்றவன் இளிச்சவாயனாகவே இருக்க வேண்டும், பணத்தை வாரி வாரி வழங்க வேண்டும், உன் பண மோகமும் தணியக்கூடாது, நீ மட்டும் லட்சங்களாக சம்பாதிக்க வேண்டும், மற்ற துறையில் சொற்ப சம்பளத்துக்கு வேலை செய்து பொருட்களை உனக்கு விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

இப்போது மற்ற துறைகளில் வேலைசெய்ய விரும்புவோர் கூட்டமின்றி காற்று வாங்குவதால் வெறும் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு பொருளுக்காக நீயும் உன் துறை நண்பர்களும் அடித்துக்கொண்டு அலையும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லையடா. பல நாடுகளை, பலதரப்பட்ட மக்களை படித்த நீ பக்குவமான முறையில் முயன்றால் உன் சொந்த ஊரில் உனக்கு ஏற்ற துறையில் காலூன்றி வெல்லலாம். அதன் முதலீட்டுக்குத் தேவையான பணம் உன்னிடம் ஏற்கனவே இருப்பதே போதும், மனம்தான் தேவை.


2. மருத்துவ வசதி: நகரத்தில் இருக்கும் மருத்துவ வசதி உன் சொந்த ஊரில் இல்லை. அதனால் சொந்த ஊருக்கு போக மாட்டேன் என்கிறாய். நாகரிகம் என்று சொல்லி கண்ட கண்ட நோய்களை விலைக்கு வாங்குவதும் பரப்புவதும் முக்கியமாக நீதான். உன்னைபோன்ற படித்த அனைவரும் நகரம் நகரம் என்று நகரத்தை நோக்கி ஓடித்தான் உன் சொந்த ஊரில் ஒரு வசதியும் இல்லை, இருந்தும் இன்னும் பல ஜீவன்கள் அங்கு வாழ்கின்றன. அவர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்குத்தான் ஏதாவது வேலை செய்து பிழைக்கிறார்கள். ஒன்று இல்லை என்பதற்காக அது இருக்கும் இடத்தை நாடி அலையும் சுயநலவாதியாக இனிமேலும் இல்லாமல், இல்லாததை உருவாக்கும் பயனாளியாக இரு. உன் ஊரில் இருந்து படித்து் மிகச்சிறந்த மருத்துவராக ஏதோ ஒரு நகரத்தில் உன் நண்பனும் உன்னைப்போல் பணத்துக்காக அலைந்து கொண்டிருப்பான், அவனையும் ஊர் திரும்பச் செய். இல்லாத மருத்துவ வசதியை உன் சொந்த ஊருக்கு ஏற்படுத்த நீயே தூண்டுகோளாக இரு.


3. குழந்தைகளுக்கு உலகத்தரத்தில் கல்வி: உலகத்தரத்தில் கல்வி என் சொந்த ஊரில் இல்லை. இப்போது இருக்கும் அதீத போட்டி நிறைந்த உலகத்தில் என் குழந்தையும் ஜெயிக்க வேண்டாமா? அதனால் என் சொந்த ஊரில் உள்ள ஏதோ ஒரு பள்ளியில் என் குழந்தையை படிக்க வைக்க மாட்டேன் என்கிறாய்.

எந்த கல்வி உலகத்தரம்? எந்த கல்வி போட்டிபோடும் உலகை வெல்ல வழி செய்கிறது? ஆங்கிலம் பேசி, நல்ல் மதிப்பெண் பெற்றுவிட்டால் போதுமா? எங்கேயோ, கண்ணுக்கு தெரியாத எவனுடனோ பிழைப்புக்காக பேசவேண்டி, ஆங்கில மோகத்தில் நிகழ்காலத்தில் அக்குழந்தையின் இயல்பினை கொலை செய்து அடுத்த தலைமுறையின் மனநிலையில் விஷத்தைக் கலக்கிறாய். ஆங்கிலம் தேவைதான், அதற்காக ஆங்கிலம் ஆங்கிலம் என நாக்கில் நுழையாத உலகின் ஏதோ ஒரு மூலையில் இருப்பவனின் பாஷையில் குழந்தையை குளிப்பாட்டுவது புத்திசாலித்தனமல்ல. குழந்தையை குழந்தையாக இருக்க விடாமல் 3 வயதில் நடனம், 4 வயதில் கராத்தே, 5 வயதில் குங்பூ. என்ன இது? அது யாருடன் போய் சண்டை போடப் போகிறது? அதன் இயல்பை விற்று எதற்கு நளினம், நடனம்? 'மாலை முழுதும் விளையாட்டு' எங்கே, விளையாட்டு சுதந்திரம் எங்கே? அட விளையாட இடம்தான் எங்கே? சேர்ந்து விளையாட அக்கம் பக்கத்து குழந்தைகள் எங்கே? அதற்கான சூழல் எங்கே? கணினியிலும், டீவியிலும் வீடியோ கேம் இருக்கே அதை விளையாடட்டும் என்கிறாய் நீ.


நீ மட்டும் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று உன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாய். நாளை உன் மகனோ பேரனோ இப்படி ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவர்களும் ஒரு நகரத்திலிருந்து உன்னை பார்க்க இன்னொரு நகரத்திற்குதான் வர வேண்டுமா? அப்படி அவர்கள் வருவதால்தான் என்ன பயனை காணப் போகிறார்கள்? அல்லது வயதான பின் நீ உன் சொந்த ஊருக்கு சென்று விடுகிறேன் என்கிறாயா? இப்போதே அங்கு செல்ல மனமில்லாத உனக்கு, வயதான பின் எந்த கடையில் மனதை விற்றுவிட்டு அங்கு செல்வாய்?

எல்லாமே மனசுதான். அரசாங்கம் செய்ய வேண்டியது கிடக்கட்டும், முதலில் நீ செய்ய வேண்டியதை செய். உன்னை 'போதும்' என்று நினைக்க சொல்லவில்லை, கிடைத்ததற்கும் சேர்த்ததற்கும் பலனாக உன்னைப்போல் வேலை தேடி வரும் நண்பர்களுக்கு அந்த நகரத்தில் வழிவிட்டு, உன் சொந்த ஊரில் குடியேறி உன் அனுபவங்களை அங்கு விதைக்க சொல்கிறேன். சம்பாதிக்கனும், போட்டி போடனும், சொத்து சேர்க்கனும், ஜெயிக்கனும்னு நினைக்கிறது தப்பில்லை, இயல்பு மாறாமல் அதை நம் சொந்த ஊரில் இருந்து செய்வதும் அதன் வளர்ச்சியில் பங்கு பெறுவதும்தான் பிறந்த ஊருக்கு நாம் செய்யும் பெருமை.

-சமுத்ரன்

4 comments:

  1. good post!!! ..anaa theervu ??? ... ,vivasaya pinpulano alathu vyabara pinpulano iruntha yosika kooda vendam 5 allathu 6 varushathula kelambitalam ...papom nijathula nadakuthanu...

    ReplyDelete
  2. :) Thanks for the comments Balaji (manly). We should seriously think about the solution, if the proposed solution in this post is not suitable, then we should do something else. But definitely what ever is happening currently is not for good.

    ReplyDelete
  3. Great one.. it's the time for every one to look back and......Move forward.. ha..ha

    ReplyDelete
  4. Thanks for your comments Jayakumar. I have just visited your blog. பதிவு ஒவ்வொன்றும் சாட்டை அடி. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

    ReplyDelete