Thursday, December 30, 2010

மழலை தரும் வசந்த காலம்

ஒவ்வொருத்தங்க வாழ்க்கையிலையும் (கொறஞ்சது) ஒரு வசந்த காலம் வரும். அப்பிடி வரும் வசந்த காலம் பல பேருக்கு காதல் அனுபவமாத்தான் இருக்கும். எனக்கு அதெல்லாம் குடுத்து வைக்கலிங்க... ஆனா ஒருத்தங்க காதலிச்சிருந்தாலும் இல்லைன்னாலும், அனுபவிச்சே ஆகவேண்டிய வசந்தகாலம்னா அவங்கவங்க கொழந்தையோட மழலைப்பருவத்த ரசிக்கிறதுதாங்க. இதையெல்லாம் அனுபவிக்க தெரியலைன்னா, இப்போ நீங்க இருக்குற பில்டிங்குல அப்பிடியே மேல ஏறி கடைசி மாடிக்குப் போயி, அங்கிருந்து அப்பிடியே குதிச்சிடுங்க. :)

என் பையனும் பெரியவனா வளரும்போது எத்தனை குறும்பு பண்றானோ, நாங்க சொல்றத கேப்பானோ மாட்டானோ... என்ன என்ன சண்டை எல்லாம் வருதோ, தெரியாது. ஆனா, இப்போ அவன் இருக்குற இந்த வயசுல அவன் செய்யுற குறும்புக்கும், சேட்டைக்கும், அவன் பேசுற மழலைக்கும் நாங்க அப்பிடியே சொக்கிக் கெடக்குறோம்னா, அதுல கொஞ்சம் கூட மிகை இல்லங்க. பொறுமையா சொல்றேன், படிங்க.

அவனோட கோவத்த பத்தி மொதல்ல. கோவம் வந்துட்டா இருக்குற எடம் எதுன்னெல்லாம் பாக்க மாட்டான், அங்கியே அப்பிடியே படுத்து பொரலுறது அவனுக்கு வழக்கம். கோவம் எதுக்கு வரும்னா, அவன் கேக்குறது கெடைக்கலன்னாலோ, நெனைக்கிறது நடக்கலன்னாலோ, அவன் ஆசையா வெளையாடுறப்ப யாராவது தொந்தரவு பண்ணாலோ... கோவம் வரும். காலையில தூங்கி எந்திரிக்கும்போது, "அம்மா"-ன்னு குரல் குடுப்பான், உடனே அவங்க அம்மா (அம்மா மட்டுந்தான்) வந்து பெட்ல இருந்து அப்படியே தூக்கிக்கணும். நான் தூக்குறதுக்கு போனா, அவனுக்கு பயங்கர கோவம் வந்துடும் - கட்டில்லியே அழுது பொரலுவான். அவன் சமாதானம் ஆகணும்னா, அவன் கேட்டது கிடைக்கணும்.

மத்தபடி காலையில நான் ஆபிஸ் போற வரைக்கும் என் பக்கத்துலையே ஏதாவது வெளையாடிட்டு இருப்பான். எவ்ளோ அவசரமா இருந்தாலும் கொஞ்ச நேரம் நான் அவன்கூட வெளையாடிட்டு குளிக்க போயிடுவேன், இல்லேன்னா வருத்தப்படுவனே. இதையே நான் வழக்கமா வச்சிகிட்டதால அவனும் பழகிட்டான்.

குளிச்சுட்டு பாத்ரூம விட்டு வெளியில வந்தவுடனே "அப்பா, பாங்க... புது டிரெஸ் போட்டு"-ன்னு என்னை கூட்டிட்டு போயி புது ட்ரெஸ் (துவைச்ச டிரெஸ் எல்லாமே அவனைப் பொருத்த வரைக்கும் புது டிரெஸ்தான்) போட சொல்லுவான். டிரெஸ் பண்ணிட்டு சாமி கும்பிட போயி நிப்பேன், "அப்பா, நானும் சாம்பி கும்பு"-ன்னு ஒடி வந்திடுவான். சாமி கும்பிடும்போது கையை சரியா குவிச்சு வச்சு கும்பிடனும், இல்லைன்னா அவன் நம்ம கைய புடிச்சு சரியா வச்சுவிடுவான். நெத்தி, கழுத்து, நெஞ்சுக்குழி, மேல் வயிறு, அடி வயிறுன்னு அஞ்சு இடத்திலையும் அவனுக்கு திருநீர நாம வச்சு விட சொல்லி கேப்பான் (அவங்க மாமா டிரெயினிங்). அவன் எனக்கும் அவங்க அம்மாவுக்கும் திருநீர் வச்சு விடுவான்.

அடுத்தது சாப்பாடு. "அம்மா, அப்பாக்கு ஆப்பு போட்டு". நான் சாப்பிடுறப்ப, அவனுக்கு என் மடியில இல்லன்னா பக்கத்துல உக்காந்துக்கணும். பசி இருந்தா ஊட்டி விட சொல்லுவான். நான் அவனுக்கு ஊட்டி விட்டா அடுத்த கை அவனுக்கு குடுக்கும்போது என்னோட கைய புடிச்சு அவன் எனக்கும் ஊட்டி விடுவான் - வேண்டாம்னாவெல்லாம் விட மாட்டான். தட்டுல குழம்பு தீந்துடுச்சுன்னா, "அப்பா... கொம்பு போட்டு"-ன்னு தட்டுல குழம்பு ஊத்திக்க சொல்லுவான். சப்பாத்தின்னா, "அப்பா, சப்பாத்தி போட்டு?"-ன்னு கேட்டு அவனே பரிமாறுவான்.

நான் சாப்பிட்டுட்டு கை கழுவின உடனே, என்னோட சாக்ஸ்-ம் ஷூவும் எடுத்து ரெடியா வச்சிட்டு நிப்பான், அத ரெண்டையும் அவன்தான் எனக்கு போட்டு விடணும்னு அடம் வேற. அப்பறம் என்னோட ஆபிஸ் பேக் எடுத்துட்டு வந்து என் கையில குடுத்துட்டு, லிப்ட்டுக்கு ஓடி, லிப்ட்ல கீழ போற பட்டனை அழுத்திட்டு நின்னுக்குவான். லிப்ட் வந்துடுச்சுன்னா, "அப்பா... பாங்க இப்பு வந்நு"-ன்னு அங்க இருந்தே சத்தமா கூப்பிடுவான். அப்பயும் நான் லிப்ட் பக்கத்துல போகலைன்னா, வந்து கைய புடிச்சு இழுத்துகிட்டு போயி லிப்ட்டுகுள்ள என்னைய தள்ளி விட்டு, "உள்ள போங்க... தோ... பட்டன அத்தி"ன்னு லிப்ட்டுக்குள்ள இருக்குற பட்டன்கள காட்டிட்டு, "டாடா, பாய், சி யூ"-ன்னு அனுப்பி வைப்பான். லிப்ட் கீழ போற வரைக்கும் எடத்த விட்டு நகர மாட்டான். என்னிக்காவது அவசரத்துல அவன்கிட்ட சொல்லாம கில்லாம ஆபிஸ்க்கு போயிட்டேன்னா அவ்வளவுதான் - டெர்ரர் ஆயிடுவான். அப்பா-அம்மா அவங்க கொழந்தைய ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கிறத கேள்விப்பட்டிருப்பிங்க; ஆனா என்னைய தெனமும் இவன்தான் கெளப்பி ஆபிஸ்க்கு அனுப்பி வைக்கிறான்னு என் மனைவி அப்பப்ப கிண்டல் பண்ணுவாங்க... இது வரைக்கும் சொன்னதெல்லாம் தெனமும் காலையில நடக்குற வழக்கமான விஷயங்கள்.

வாரக்கடைசின்னா, அவன குளிப்பாட்டுறதுல இருந்து, டிரெஸ் போட்டு விடுறது, ஊட்டி விடுறது, விளையாடுறது, தூங்குறது, பாத்ரூம் கூட்டிட்டு போறது எல்லாமே அப்பாதான். "நான் பண்ணி விடுறேன்"-ன்னு அவங்க அம்மா போனா, "அம்மா ஏனாம்"-ன்னு என்னைய கூப்பிடுவான். "டேய், என்னடா? வார நாள்ல நானு, வாரக்கடைசில அப்பாவா? இரு இரு... திங்கக்கிழமை எங்கிட்டதான வரணும், அப்போ வச்சிக்கிறேன்"-ன்னு மனைவி செல்லமா அவன மெரட்டுவாங்க. வாரக்கடைசில அவங்க அம்மாவுக்கு அவன்கிட்ட இருந்து complete ரெஸ்ட். :)

அவன குளிப்பாட்டுறது ஒரு ஜாலி விஷயம். குளிக்கும்போது தண்ணில வெளையாடலாம்னு அவனும் குஷியா வருவான். அவன் போக்குலயே அவன கொஞ்ச நேரம் வெளையாட விட்டு குளிக்க வைப்பேன். அவன் டேன்ஸ் ஆடினான்னா நானும் ஆடுவேன். பயங்கர ஜாலியாயிடுவான். தண்ணிய லேசா அவன் மேல தெளிச்சா (தண்ணி வேற ஜில்லுன்னு இருக்கும்) "உய்"-ன்னு சத்தமா கத்துவான், பதிலுக்கு என்மேல தண்ணிய தெளிப்பான், நானும் கத்துவேன். நாங்க ரெண்டு பெரும் பாத்ரூம்ல பண்ற கூத்த கேட்டு மனைவி திட்டுவாங்க. சமாதானம் சொல்லிட்டு நாங்க குளியல கண்டின்யூ பண்ணுவோம். அவனுக்கு நான் சோப்பு போடும்போது "கண்ணை மூடிக்கோடா செல்லம், இல்லைனா சோப்பு கண்ணுல பட்டு கண்ணு எரியும்"-ன்னு சொல்லி சோப்பு போடுவேன். கண்ணை இறுக்கி மூடிக்குவான். அவன் குளிச்ச பின்னாடி, என்னையும் குளிக்க சொல்லிட்டு அவன் பக்கெட் தண்ணில வெளையாடுவான், நானும் குளிப்பேன். எனக்கு அவன்தான் தண்ணி ஊத்தி விடணும்னு அடம் புடிப்பான். சரின்னு நான் கீழ உக்காந்துக்குவேன், எனக்கு ஊத்தி விடுவான். எனக்கு குளிப்பாட்டி விடுறதுல அவனுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். நான் எனக்கு சோப்பு போடுறப்போ "அப்பா, கண்ணு இறுக்கி மூடி... சோப்பு... எய்யி..."-ன்னு எனக்கு எச்சரிக்கை குடுப்பான், நானும் கண்ணை இறுக்கி மூடிக்குவேன். இப்பிடி ஒரு வழியா நாங்க குளிச்சுட்டு வெளியில வர ஒரு முக்கா மணி நேரமாவது ஆகும்.

அடிக்கடி எதையாவது விளையாட கூப்பிட்டுகிட்டே இருப்பான், அவன் வெளையாடனும்னு சொல்றததான் நானும், மனைவியும் வெளையாடனும். வேற எதையாவது வெளையாட கூப்பிட்டா அது புதுசா இருந்தாதான் கேப்பான், இல்லைன்னா அவன் சொல்றததான் வெளையாடனும். அப்படி நாங்க வெளையாடுறதுல சில:

* Ball எடுத்துட்டு வந்து, "அப்பா, எந்திங்க". நான் , "எதுக்கும்மா?". அவன், "எந்திங்க... பாங்க... ball கேச்"-ன்னு என்னை எழுப்பி, அவன் ball போட்டு அத நான் catch பண்ணி வெளையாடுவோம்

* ஆளுக்கொரு டேபிள் டென்னில் பேட் வச்சு ரெண்டு பேரும் எதுத்தாப்புல நின்னு ball அடிச்சு வெளையாடுவோம், இல்லைன்னா கால்ல உதச்சு வெளையாடுவோம்; ரெண்டையுமே அழகா வெளையாடுவான்

* அவன் ஓட ரெடியா நின்னுகிட்டு, "அப்பா, பின்னி ஓடி பாங்க. நிஞ்சி புடிங்க"-ன்னு ஓடுவான். ஓடிப் புடிச்சு வெளையாடுவோம் (எப்பவுமே நான்தான் அவன் பின்னாடி ஓடி அவனை பிடிக்கணும்)

* அப்பறம் வாக்கிங் போலாம்னு அப்பிடியே கெளம்பி போவோம். ஆனா அங்கயும் ஓடி புடிச்சு வெளையாடி, அது ஒரு ஜாக்கிங் ஆயிடும். அப்பிடியே ஒரு மணி நேரம் வெளையாடிட்டு ரெண்டு பேரும் டயர்டாயி வீட்டுக்கு வருவோம். இது வாரத்துல 2-3 தடவையாவது நடக்கும். இதனால நாங்க ரெண்டு பேரும் வாக்கிங்ன்னு கெளம்பினா, மனைவி நாங்க ஓட மாட்டோம்னு உறுதி குடுத்தாத்தான் எங்க கூட வருவாங்க

* "அப்பா... கு.த்.த..."-ன்னு குதிர வெளையாட்டு. நான்தான் குதிர, என் முதுகுல ஏறிக்குவான், ஒரு ரவுண்டு வருவோம். அடுத்து அவன் குதிர மாதிரி நின்னுகிட்டு என்னைய அவன் முதுகுல ஏறிக்க சொல்லுவான், விட மாட்டான். என்ன பண்ண? என்னோட முகத்த அவன் முதுகுல வச்சு, "போலாம் ரைட்"-ன்னா ரொம்ப குஷியா என்னை சுமந்துட்டு போறதா நெனச்சுகிட்டு வெளையாடுவான்

* ஒரு புத்தகத்த எடுத்து வந்து வச்சுகிட்டு "அப்பா, இங்க பாங்க, கிட்ட வந்து உக்காந்னு"-ன்னு கிட்ட உக்கார வச்சு அந்த புத்தகத்துல இருக்குற பொம்மைய அடையாளம் காட்ட சொல்லி எங்களை கேக்க வச்சு பதில் சொல்லுவான்

நாங்க ரெண்டு பேரும் இந்த மாதிரி ராத்திரி 12 மணி வரைக்கும் போடுற சத்தத்துல பக்கத்து வீட்டுக்காரங்க இன்னும் போலிஸ் புகார் குடுக்காம இருக்குறது ரொம்பவே ஆச்சர்யம்தான்

இங்க வெளியில கொழந்தைங்க வெளையாடுற எடத்துல தூரியும் (swing) சறுக்கியும் (slide play) இருக்குது. அங்க போயி வெளையாடறதுன்னா இவனுக்கு ரொம்ப இஷ்டம். சில சமயம் அங்க வர்ற மத்த கொழந்தைங்களோட வெளையாடுவான். அவங்க என்ன வெளையாடினாலும் இவனும் அதையே வெளையாடுவான். இதுல அவங்க சைனீஸ் இல்லன்னா இங்கிலிஷ்லதான் பேசுவாங்க, அது ரெண்டும் இவனுக்கு புரியாது. இவன் தமிழ்லதான் பேசுவான், அது அவங்க யாருக்கும் புரியாது. ஆனா எல்லாரும் ஒண்ணா வெளையாடுவாங்க. மத்த பசங்க ஓடுனா, இவனும் அவங்க கூட பின்னாடியே ஓடுவான், நின்னா இவனும் நின்னுக்குவான், அவங்க சிரிச்சா இவனும் கெக்கே பெக்கேன்னு சிரிப்பான், இப்பிடியே அவங்க கூட பேசாமையே இவன்பாட்டுக்கு ஜாலியா அவங்க கூட வெளையாடுவான். இத்தனை நடந்தாலும் நானோ, இல்ல அவங்க அம்மாவோ அவன் பார்வைல இருக்கணும் - எவ்ளோ குஷியா வெளையாடினாலும் எங்கள அப்பப்போ பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு நாங்க அங்கதான் இருக்கோமான்னு செக் பண்ணிக்குவான்.

ஒரு தடவ எனக்கு ப்ளு காய்ச்சல் வந்து ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருந்தேன். அப்போ என்கிட்டே யாரும் வரக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். "அப்பாக்கு காய்ச்சல் வந்துடுச்சுடா குட்டி, காய்ச்சல் நால்லாகற வரைக்கும் நிரஞ்சு குட்டி அப்பாகிட்ட வரக்கூடாது"-ன்னு இவன்கிட்ட சொல்லிட்டோம், அவனும் என் கிட்ட வரல. "அப்பாக்கு காய்ச்சல்"-ன்னு என்னோட கழுத்த தள்ளி நின்னு அப்போ அப்போ தொட்டு தொட்டு பாத்துட்டே இருப்பான். நான் சாப்பிட்டு முடிச்ச உடனே, "அப்பா இந்தாங்க மாத்த"-ன்னு ஓடி போயி மாத்திரைய எடுத்துட்டு வந்து சாப்பிட சொல்லுவான். ஒரு தடவ, மறந்துட்டு என்கிட்ட வந்துட்டான், நான் அவனை நிறுத்தி "அப்பாகிட்ட வரக்கூடாதும்மா, அப்பாக்கு காய்ச்சல் இல்ல?"-ன்னு சொன்னேன். உடனே கொஞ்சம் தள்ளி நின்னு "அப்பா, நிஞ்சி இங்க நின்னு?"-ன்னு 'இங்க நின்னுக்கட்டுமா?'ன்னு கேட்டான், நான் அப்பிடியே அழுதுட்டேன். அந்த ரெண்டு நாளும் அவன்கிட்ட போகாம, அவன தூக்காம, அவன் ஆசையா வர்றப்ப கிட்ட விடாம நான் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சம் இல்ல.

ஒரு நாள் ராத்திரி மனைவிக்கு தலை வலிக்குதுன்னு சொல்லி விக்ஸ் பாட்டில் கேட்டாங்க. சரின்னு லைட்ட போடாம இங்கதான் இருக்கணும்னு நெனச்சு ஒரு டேபிள்ல தேடிட்டு இருந்தேன், அவன் என் பின்னாலையே எந்திரிச்சு வந்து நேரா இன்னொரு டேபிளுக்கு போயி விக்ஸ் பாட்டில் எடுத்துட்டு வந்து "அப்பா.... ஐ"-ன்னு என்கிட்டே காட்டினான் (இத்தனைக்கும் இருட்டு). நாங்க ரெண்டு பெரும் அசந்துட்டோம்.

அவனோட சேட்டைகள்ல இன்னும் சில:

* அவனுக்கு முன்னாடி நான் அவங்க அம்மாவையோ, இல்ல அவங்க அம்மா என்னையவோ திட்டுறத உடுங்க, லேசா குரலை ஏத்திகூட பேசுறதுக்கு இல்ல "அப்பா.... அம்மாட்ட பேச ஏணாம்..."-ன்னு எங்களை பேசவே விட மாட்டான். மீறி நாங்க பேசினோம், அவ்ளோதான் - ரெண்டு பேருக்கும் அடி விழும். அவன்பாட்டுக்கு வெளையாடிட்டு இருக்கான்... நம்மள கவனிக்கலன்னு நெனச்சு பேசிட்டு இருப்போம். ஆனா எங்க குரல்ல கொஞ்சம் வித்தியாசம் தெரிஞ்சுச்சுன்னா போதும், உடனே எங்கள திரும்பி பாப்பான்

* அவன் ஏதாவது தப்பு பண்ணிட்டா, அவனே அதை சொல்லிடுவான் - கார ஒச்சிட்டேன் (கார உடைச்சிட்டேன்), அம்மாவ அச்சிட்டேன் (அப்பாவ அடிச்சிட்டேன்), பெட்ல ஒண்ணு உட்டுட்டேன்

* காலையில பால் தேய்க்க அவங்க அம்மாவோட மல்லு கட்டுற விதம்

* அவன தூங்க வக்கிறது இன்னும் சுவாரஸ்யம். கட்டிலுக்கு போன பின்னாடி, தூக்கம் வரலைன்னா, "அப்பா, தட்டி"-ன்னு அவனை நெஞ்சு மேல லேசா தட்டி விட சொல்லுவான். சில சமயம் அவன் நம்மள தட்டி விட்டு தூங்க சொல்லுவான். "அப்பா, கத சொல்லுங்க"ன்னு கதை நல்லா கேப்பான். "பாட்டு ஏணும்"-ன்னு பாட்டு பாட சொல்லி கேப்பான். பல சமயம் அவனுக்கு முன்னாடி நாங்க தூங்கிட்டா, அப்படியே அமைதியா படுத்துகிட்டே ஏதாவது அவன் பாட்டுக்கு பேசிட்டு/வெளையாடிட்டு இருந்துட்டு அப்படியே தூங்கிடுவான். தூக்கத்துல இருந்து அவன் எந்திரிச்சுட்டான்னா (காலையிலையோ இல்ல ராத்திரிலையோ) அப்ப நாங்க ரெண்டு பேரும் தூங்கிட்டு இருந்தோம்னா எங்களை தொந்தரவு செய்யவே மாட்டான். அப்படியே சமத்தா அவன் பாட்டுக்கு பேசிகிட்டு படுத்திருப்பான். எங்கள்ல யாராவது முழிச்ச உடனே, சந்தோஷமா "அம்மா, நிஞ்சி எந்திட்டேன்"-ன்னு ஆசையா கட்டி புடிச்சுக்குவான்

* அவனா விரும்பினாலொழிய நாம சொல்றோமேன்னு போன்ல யாராயிருந்தாலும் ஒரு வார்த்தை கூட பேச மாட்டான், தலைகீழா நின்னாலும் முடியாது

* வெளியில நடந்து போகும்போது, ரோட்ட கடக்க வேண்டி இருந்தா, "பாத்து போடா செல்லம், வண்டி எதுவும் வரப் போகுது"-ன்னு அவன் கைய புடிப்பேன். அவன் உடனே அவங்க அம்மாவையும் "அம்மா... அம்மா, சிக்கிரம் பாங்க"-ன்னு கைய புடிச்சு கூட்டிட்டு போவான்

* அவனுக்கு கார், பஸ், லாரி, டிராக்டர் இந்த மாதிரி வாகன பொம்மைனா உயிரு. அந்த வகையில புதுசா ஏதாவது வாங்கிட்டு வந்தா பயங்கர குஷியாயிடுவான். அடுத்த ரெண்டு நாளைக்கு அந்த பொம்மையதான் வெளையாடுவான். குட்டிக்கரணம் போட்டாலும் அத யார்கிட்டயும் குடுக்க மாட்டான். கையில புடிச்சுகிட்டே தூங்குவான், நல்லா தூங்கின பின்னாடிதான் அவன் கையில இருந்து அத வாங்க முடியும். காலையில தூங்கி எந்திரிச்ச உடனே மொத வேலையா அந்த பொம்மைய கேட்டு அழ ஆரம்பிச்சுடுவான்

* வெளியில போகும்போது சில சமயம், நாம அவன தூக்கிகிட்டே போகணும்னு அடம் பிடிப்பான். "அப்பாக்கு/அம்மாக்கு முதுகு வலிக்குதுப்பா"ன்னு ஒரு சீன் போட்டாதான் விடுவான்

* அடுப்புல குக்கர் விசில் சத்தம் கேட்ட உடனே, அவன் வெளையாடுறத விட்டுட்டு, "அம்மா... ஆப்பு இஸ்ஸிலு வந்நு... போங்க, ஆப் பண்ணுங்க"-ன்னு வெரட்டுவான்

* நாம அவனுக்கு என்ன செஞ்சாலும் அதை திருப்பி நமக்கும் செய்யனும்னு ஆசப் படுவான். அது ஓகேதான். ஆனா அவன் என் மேல குதிர ஏறுறா மாதிரி அவன் மேல நான் ஏறனும்னு அடம் பிடிக்கிறது, நான் மல்லாக்க படுத்துகிட்டு அவன என் வயித்து மேல படுக்க வச்சு தட்டி குடுத்து தூங்க வைக்கிறா மாதிரி அவனும் (எனக்கு டயர்டா இருக்கும்போது) மல்லாக்க படுத்துட்டு என்னை அவன் வயித்து மேல படுத்து தூங்க சொல்லி அடம் பிடிக்கிறது, நான் அவனை குளிப்பாட்டினா மாதிரி அவன் என்னை குளிப்பாட்டுவேன்னு அடம் பிடிக்கிறது இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கும்... ஆனா இப்பல்லாம் அவன் கேக்குற எதையும் நான் செய்ய மாட்டேன்னு சொல்றதுல்ல. அவன் அந்த மாதிரி நாம பண்ணத நமக்கே ஆசையா திருப்பி பண்ணும்போது சந்தோஷமா இருக்கும்

* அவங்க அம்மா அவனுக்கு தலைக்கு எண்ணெய் வச்சுவிட்டா, உடனே என்னோட தலைக்கும் தேய்க்க சொல்லி பாட்டில எடுத்துட்டு வந்துருவான். சில சமயம் அவனே அவன் கைல எண்ணைய ஊத்தி என் தலையில தேச்சும் விடுவான். அதுவே நாங்க எண்ணெய் தேச்சு குளிக்கிறப்போ, நான் அவனுக்கு தேச்சு விட்டா, அவன் எனக்கு தேச்சு விடுவான்

* அவனுக்கு சில சமயம் சளி பிடிச்சு உடம்பு சரியில்லைன்னா, அவன் அந்த 'சிரப்' குடிக்கிறது தனி கதை. பல சமயம் சாப்பாடு சாப்பிட்ட உடனே, அவனே வந்து "அம்மா மந்து"-ன்னு மருந்து கேட்டு வாங்கி குடிப்பான். சில சமயம் மருந்து கசக்கும், அப்போ எல்லாம் குடிக்க மாட்டேன்னு அடம் புடிப்பான், அந்த மாதிரி நேரத்துல நான் அவன் கைய இறுக்கி புடிச்சுக்குவேன், மனைவி அவனுக்கு வாயில மருந்து ஊத்துவாங்க, குடிக்க மாட்டேன்னு கத்துவான், விடாம மருந்த வாயில ஊத்திடுவோம். ஆனா இதுல விசேஷம் என்னன்னா, அடுத்த வேலைக்கு (அதே) மருந்து சாப்பிட கூப்பிட்டா, "அப்பா, பாங்க.. நிஞ்சி கைய புடிச்சு"-ன்னு அவனாவே என்னைய கூப்பிட்டு அவன் கைய இறுக்கி புடிச்சுக்க சொல்லுவான். ஆனா மருந்து குடிக்கும்போது திமிரிக்கிட்டு குடிக்கமாட்டேன்னு கத்துவான். அந்த நேரத்துல இவன் பண்றது சிரிப்பாவும் ஜாலியாவும் இருக்கும்

* எப்பவாவது நாங்க டிவி போட்டாலும், பெருசா கண்டுக்க மாட்டான். அவன் பாட்டுக்கு வெளையாடிட்டு இருப்பான். National Geo சானல்ன்னா விரும்பி பாப்பான். மத்தபடி Mr. Bean & ரஜினி வந்தா அவங்க பேர சொல்லி கத்துவான் (பீன் மாமா, அஜ்ஜி தாத்தா), அவனுக்கு ரொம்ப பிடிக்கும்

* வீட்டுல சில சமயம் போரடிக்கிறப்ப வெளிய வராண்டாவுல வந்து நின்னு (எங்க வீட்டுக்கு முன்னாடி ரோடு) வேடிக்கை பாப்போம். அப்போ, ரோட்டுல போற வர்ற வண்டிங்கள பாத்து ஜாலியாயிடுவான். "அப்பா.... எல்லோ காரு" (yello car), "பின்னி எட்டு காரு போருச்சு" (அதுக்கு பின்னாடி red car போயிடுச்சு), "பூ கார் திப்பி போது" (blue car திரும்பி போகுது), "அப்பா.... பஸ்சு", "கூல் பஸ்சு பின்னி போச்சு" (ஸ்கூல் பஸ்சு பின்னாடி போகுது), "அக்கா செப்பல்லு போட்டு, பூஷட்ட (புது சட்டை) போட்டு, பேக்கு தொப்பல்ல மாட்டி அங்க போறாங்க", "அந்த கார் இஸ்சு (reverse) போது"... இப்பிடி அலுக்காம தொடர்ந்து ரன்னிங் கமெண்ட்டரி குடுத்துட்டே இருப்பான்

* எப்பவாவது கடற்கரைக்கு போனோம்னா, அங்க இருக்குற மணல்ல அவன் பாட்டுக்கு நேரம் போறதே தெரியாம (மணிக்கணக்குல) மணலை அள்ளி கடல்ல வீசி எரிஞ்சுக்கிட்டு வெளையாடுவான்

* நான் புத்தகம்னு எடுத்து வச்சு எதையும் படிக்க ஆரம்பிச்சா, கிட்ட வந்து உக்காந்து ஒரு நிமிஷம் அப்பிடியே என்னை பாப்பான். அப்பறம் அந்த புத்தகத்த அவன் படிக்கணும்னு அழுது அடம் புடிக்க ஆரம்பிச்சுடுவான். அவன் அத வாங்கி ஸ்டைலா படிக்கிறா மாதிரி act பண்ணுவான். அடுத்தடுத்த பக்கத்தை எல்லாம் திருப்பி படிப்பான். ஆனா, புத்தகத்த எப்பிடி அவன் கிட்ட குடுத்தாலும் (அதுல படம் இருந்தாலும் இல்லைன்னாலும்) புத்தகத்த நேரா திருப்பிக்குவான்

* அதே மாதிரி எழுதுறது. நாம் ஏதாவது எழுதினோம்னா அதே பேனாவும் பேப்பரும் வேணும்னு அடம் பிடிப்பான். சரின்னு குடுத்தா, வாங்கி கோடு கோடா போடுவான் (இப்போ A போட்டு பழகிட்டான்)

இது எல்லாத்துக்கும் மேல அவன் பேசுற மழலை பேச்சு... அந்த அழக விவரிக்க முடியாதுங்க. அவங்கவங்க கேட்டுதான் அனுபவிக்கனும்.

ஒரு குழந்த வளந்து ஆளான பின்னாடி ஆயிரத்தெட்டு பிரச்சினைங்க இருக்குது. இப்பல்லாம் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிட்டாலே பிரச்சினைதான். அத படி, இத படி, அத கத்துக்க, இத கத்துக்க, மார்க் ஏன் கொறஞ்சுபோச்சுன்னு டார்ச்சர் ஆரம்பிச்சுடுது. அதனால ஸ்கூல் போற வரைக்கும் நம்ம கொழந்தைய கொழந்தையா, சந்தோஷமா வச்சுக்கிறது ரொம்ப முக்கியம். இப்பவே அத படி, இத எழுது, உனக்கென்ன எப்ப பாத்தாலும் வெளையாட்டு, அமைதியா உக்காந்து டிவி பாரு, என்னை தொந்தரவு பண்ணாத-ன்னு அவங்கள நோகடிக்கக் கூடாதுங்குறது என்னோட எண்ணம். இப்போ இருக்குற வாழ்க்கை முறையில அவங்களுக்கு வீட்டுல இருக்கும்போது வெளையாட அவங்க வயசுல வேற குழந்தைங்க இல்ல. அவங்களுக்கு பிரச்சினை இதுதான் - நெனச்ச நேரத்துல என்கூட வெளையாட ஆள் வேணும். நமக்கு ரெண்டாவது கொழந்த வர்ற வரைக்கும் அதுக்கு வாய்ப்பு இல்ல :). அதனால அவங்களுக்கு நாமதான் இன்னொரு கொழந்தையா அவங்க கூட வெளையாடனும் (எப்பிடி நம்ம தத்துவம்?).

இதுல பல நல்ல விஷயங்களும் இருக்குது:

* கொழந்தைங்க நம்ம கூட வெளையாடுறதுனால பாதுகாப்பான வெளையாட்ட மட்டுமே வெளையாடுவாங்க

* அவங்களுக்கு வெளையாடனும்னு தோணுறப்போ நம்மகிட்ட எந்த தயக்கமும் இல்லாம கேப்பாங்க

* கொழந்தைங்க கூட நமக்கிருக்குற attachment அதிகமாகும்

* நாமளும் கொழந்தையா மாறி அவங்ககூட வெளையாடும்போது, நமக்கிருக்குற வேற எந்த கவலையும் மறந்து போகும் (நமக்கும் வேற relax தேடி ஓட வேண்டியதில்ல)

* சும்மா டிவி முன்னாடியோ, இல்ல வீடியோ கேம்ஸ் முன்னாடியோ, இல்ல லேப்டாப் முன்னாடியோ கொழந்தைங்கள பாழாக்க வேண்டிய அவசியமில்ல

* கொழந்த எதுல ஆர்வமா இருக்குது, எதுல திறமையா இருக்குதுன்னு (எதுல தடுமாறுராங்கன்னும்) ஈசியா கண்டுபிடிக்கலாம், அதுல அவங்கள ஊக்குவிக்கலாம் / வழி நடத்தலாம்

* நமக்கு இது மிகப்பெரிய உடற்பயிர்ச்சி (அவங்க கூட வெளையாடிப் பாருங்க தெரியும்)

கொழந்த இருக்குறவங்க அவங்க கூட வெளையாடித்தான் பாருங்களேன், அப்பறம் சொல்லுங்க நான் சொல்றது சரியான்னு.

இதுல பலபேர் கொஞ்சம் வளந்த உடனே கொழந்தைங்கள விடுதியில தங்கி படிக்க விட்டுட்டு இவங்க தனியா வாழறாங்க, இதுல எனக்கு உடன்பாடு இல்ல. என்னதான் தேவையோ/கஷ்டமோ இருந்தாலும் கொழந்தைய விடுதியில விட்டு அவங்களையும் கொடுமைப் படுத்த தேவை இல்ல. என்னைப் பொருத்தவரைக்கும் அவங்க அந்த கொழந்தையோட வாழ்க்கைய பாழாக்குறதும் இல்லாம தங்களோட வாழ்க்கையையும் வீணடிக்கிறாங்க. அப்படிப்பட்ட கொழந்தைங்க மனதளவுல பாதிச்சு பின்னாடி வேண்டாத காரியங்கள செய்ய காரணமாயிடுது.

நம்ம கொழந்தைங்களோட சேந்து வாழ்க்கைய கொண்டாடலாம் வாங்க.


குறிப்பு: இந்த பதிவு விரைவில் அப்பாவாகவிருக்கும் என் நண்பர்கள் L.சுரேஷ் மற்றும் சீனிவாசனுக்கு (7G)ம், சமீபத்தில் அப்பாவான நண்பன் அருண்குமாருக்கும் சமர்ப்பணம்.

-சமுத்ரன்

Wednesday, December 1, 2010

சென்னையில் நானும் நண்பர்களும்

நாலு வருசத்துக்கு முன்னாடி திரும்பிப் பாக்குறேன். சென்னையில நண்பர்களோட கும்பலா பட்டைய கெளப்பிய நாட்கள்.

கோடம்பாக்கம், டிரஸ்ட்புறத்துலதான் நாங்க ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தோம். 2004-ம் வருட ஆரம்பத்துல 4 பேர் சேந்து அந்த வீட்ட வாடகைக்கு எடுத்தோம். அந்த வீட்டுல ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு பெட் ரூம், ஒரு டாய்லெட்+பாத்ரூம் - அவ்ளோதான். அப்புறமா எங்க நண்பர்ங்க, அவங்க நண்பர்ங்கன்னு அப்புறம் அவங்க சகோதரர்னு வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க. ஒவ்வொருத்தரும் படிப்ப முடிச்சுட்டு வேலை தேடி சென்னைக்கு வர்றவங்கதான். உண்மையிலேயே அவங்களால வெளியில தங்க வசதி பத்தாதுங்குற பட்சத்துலதான் அந்த வீட்டுல தங்கிக்க அனுமதிப்போம். இல்லன்னா ஒரு வாரத்துல வேற இடம் பாக்க சொல்லிடுவோம். வீட்டுக்கு வந்த புதுசுல வேலை கிடைக்கிற வரைக்கும் பணத்துக்கு கஷ்டப்படுற நண்பர்களுக்கு எல்லாருமா சேந்து உதவியும் பண்ணி இருக்கோம். வேலை தேடுறப்போ, அதே டெக்னாலஜில இருக்குற நண்பர்ங்க அந்த வேலை தேடும் நண்பர்க்கு சரியான பாதைய சொல்லிக்குடுத்து உதவி பண்ணுவோம். அந்த வீட்டுக்கு வந்து நினச்ச வேலை கிடைக்காம திரும்பினவங்க யாருமே இல்ல. இப்பிடியே ஒவ்வொருத்தரா சேந்து ஒரு கட்டத்துல மொத்தமா 22 பேர் அந்த வீட்டுல இருந்தோம். ஆனாலும் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்ததில்ல (பிரச்சினையே இல்லை என்பதைவிட, பிரச்சினை என்று ஒன்று முளைத்தவுடன் கில்லி எரிவதை ஒரு வழக்கமாகவே வைத்தோம்).

இதை என்னோட ஆபிஸ் நண்பர்ங்ககிட்ட சொன்னப்ப யாருமே என்னை நம்பல. "22 பேர் எப்படி ஒண்ணா சண்டை சச்சரவு இல்லாம இருக்க முடியும்? அத்தனை பேரும் அந்த சின்ன வீட்டுல எங்க, எப்பிடி தூங்குறது? அட, காலையில பாத் ரூம் போகவே சண்டை வருமே?"-ன்னு கேட்டாங்க. ஆனா உண்மை என்னன்னா, எங்க யாருக்கும் அடிதடி, பிரச்சினை வந்ததே இல்ல. இவங்க கேட்ட பின்னாடிதான் யோசிச்சேன், எங்க 22 பேருக்கும் காலையில அந்த ஒத்த டாய்லெட்ட பயன்படுத்துறதுல கூட எந்த பிரச்சினையும் இருக்கல. 

அவங்க அவங்க கெடச்ச இடத்துல படுத்து தூங்கிடுவோம். ஹால்ல பாதி பேர், பெட் ரூம்ல கொஞ்சம் பேர், வராண்டால கொஞ்சம் பேர்ன்னு கெடச்ச எடத்துல தூங்கிடுவோம். பல சமயம் ஒருத்தன் மேல கால/கைய போட்டு படுத்திருப்போம். தூக்கத்துல சில சமயம் உதைச்சிருப்போம்/உதை வாங்கியிருப்போம், ஆனா யாரும் எதையும் சிரியஸா எடுத்துக்க மாட்டாங்க. லேட் நைட்-ல யாராவது வந்தாங்கன்னா லைட் இல்லாம நகர முடியாது. வீடு முழுக்க கேப் இல்லாம எல்லாரும் படுத்திருப்போம். கேப் பாத்து கால வச்சுதான் நடக்கணும்.

அந்த சமயத்துலதான் "ஆட்டோகிராப்" படம் வந்துச்சு. அதோட சிடி-ய ஒருத்தன் வாங்கிட்டு வந்து வீட்டுல போட்டுட்டான். தெனமும் நைட்டு ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு போனா, ஒருத்தன் அந்த சிடி-ய போட்டு பாத்துட்டு இருப்பான். அப்படியே எல்லாரும் படத்துல உக்காந்துடுவோம். இன்டர்வல் வரைக்கும்தான் படத்த பாப்போம் (ரெண்டாம் பாதி சோகம், செண்டிமெண்ட் - அது எங்களுக்கு பிடிக்காது), அதுக்கும் மேல நேரா கிளைமேக்ஸ்தான் பாப்போம். அந்த மொத பாதி படத்தோட வசனம் எல்லாம் எங்க எல்லாருக்கும் அத்துப்படி.

தினமும் ஒருத்தன் மாட்டுவான். யாராவது அவன ஏதாவது ஒரு விஷயத்துல வம்புக்கு இழுப்பாங்க, அவனும் பதில் பேச முடியாம லேசா முழிச்சுட்டான்னா... அவ்ளோதான், அன்னிக்கு அவன் முடிஞ்சான். எல்லாருமா சேந்து அவன ஓட்டி தள்ளிடுவாங்க (உங்க வீட்டு கிண்டல் எங்க வீட்டு கிண்டல் இல்லங்க). மொத்தத்துல யாரையும் "டல்"லா இருக்கவோ / கவலையோட இருக்கவோ விட மாட்டாங்க.

வாரக்கடைசின்னா ஜாலியோ ஜாலிதான். சனிக்கிழம ஆளாளுக்கு ஊரு சுத்த கெளம்பிடுவோம். (பல சமயம்) சாயங்காலம் ஆச்சுன்னா ஒண்ணா சேந்து கிரிக்கெட் வெளையாட பக்கத்துல இருக்குற அரசு துவக்கப் பள்ளிக்கு போயிடுவோம். அங்க போனா, அந்த சின்ன கிரவுண்ட்ல ஏற்கனவே பத்து டீம் வெளையாடிட்டு இருக்கும். நாங்க பிட்ச்-க்கு எடம் பாத்து பதினோராவது டீமா அதுலயே வெளையாடுவோம். ஆனா அத்தனை டீம் ஆடினாலும் அவங்க அவங்க ஆடுற பந்த மட்டுந்தான் கரெக்ட்டா பீல்டு பண்ணுவாங்க. ஆடி களச்சு அப்படியே போயி பரோட்டா கடைல ஆளுக்கு 4 பரோட்டா கொட்டிகிட்டு வீட்டுக்கு போயிடுவோம்.

ஞாயித்துக்கெளம காலைல 2 பேர் போயி 3-4 கிலோ கோழி கறி வாங்கிட்டு வருவாங்க. 2 பேர் வெங்காயம், பூண்டு உரிக்க சொன்னா உரிப்பாங்க. 2 பேர பாத்திரம் கழுவ விடுவோம். அரிசி சோறு வச்சு ஒருத்தன் கோழிய சமைச்சுடுவான் (நானும் பல நாள் சமைச்சிருக்கேன்). எங்களோட கோழி கறி சமையல் ருசி தெரிஞ்ச நண்பர்ங்க, அன்னிக்கு கரெக்ட்டா டைமுக்கு வந்துடுவாங்க. எல்லாரும் ஒண்ணா வட்டமா உக்காந்து சோத்தையும் கோழியையும் ஒரு புடி புடிச்சுட்டு, அப்பிடியே உண்ட மயக்கத்துல ஒரு பகல் தூக்கத்த போடுவோம். சாங்காலம் அப்பிடியே மெல்ல எந்திரிச்சு, அத்தன பேரையும் கெளப்பி ஏதாவது ஒரு தியேட்டருக்கு போயிடுவோம் (அதிகமா உதயம், மினி உதயம், காசி தியேட்டர்தான் போவோம்).

இதையெல்லாம் நெனைக்க நெனைக்க..... ஸ்ஸ்ஸ்ஸ்!!! என்னமா என்ஜாய் பண்ணியிருக்கோம் போங்க. அதெல்லாம் ஒரு காலம். இதுல இன்னும் ஆச்சரியம் என்னன்னா, எங்க யாருக்கும் தம் / தண்ணி அடிக்கிற பழக்கமே இல்லை (ஒன்றிரண்டு பேரத் தவிர, அவங்களும் அடிக்கடி தண்ணியடிக்கிற ஆளுங்க இல்ல. அப்படியே அடிச்சாலும் வீட்டுல அடிக்க மாட்டாங்க), அப்புறம் ஒருத்தனுக்கும் பொண்ணுங்க பழக்கமும் இல்ல ("சுத்தம், மொத்ததுல நீங்க யாரும் உருப்படவே இல்லை"ன்னு முனகுறது கேக்குது, விடுங்க.. நாங்க அப்பிடியே வளந்துட்டோம், என்ன பண்ண?).

இப்பிடி வாரக்கடைசியில நண்பர்களோட கிரிக்கெட் வெளையாடுறது, சமைக்கிறது - சாப்பிடுறது, ஊர் சுத்துறது, சினிமா போறது, அரட்டை அடிக்கிறது, கிரிக்கெட் பாக்குறது, தூங்குறது-ன்னு பட்டைய கெலப்புவோம். செய்றது எல்லாம் எதுவும் பிளான் பண்ணினதா இருக்காது, ஆனா நெனச்சவுடனே இருக்குறவங்க எல்லாரும் சேந்து கெளம்பிடுவோம். எந்த விஷயமானாலும் (300-400 கி.மீ. போறதுன்னா கூட) அப்படியே நெனச்ச நேரத்துல கெளம்ப வேண்டியதுதான் - போகும்போது அப்படியே போன் பண்ணி வீட்டுல அப்பா-அம்மாகிட்ட சொல்லிட்டு போய்கிட்டே இருப்பேன். வீட்டுலயும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.

மாயா ஜால் எதுத்தாப்புல இருக்குற பீச்சுல போயி பல தடவ ஆட்டம் போட்டது, பாண்டிச்சேரி டிரிப் போனது - அதுவும் அங்க போயி ஒரு பைட் சீன் சினிமா ரேஞ்சுக்கு எல்லாரும் சேந்து எடுத்தது, ரூம்மேட் சகோதரி கல்யாணத்துக்கு திருநெல்வேலி போனது இப்பிடி நாங்க எல்லாம் ஒண்ணா சேந்து போட்ட ஆட்டமெல்லாம் என்னிக்கும் மறக்கவே முடியாது. அதே மாதிரி அப்போ வந்த ஒரு படத்த கூட விட்டது கெடையாது - ரிலீஸ் ஆன வாரத்துலயே எப்படியும் பாத்துடுவோம். மொக்கை படத்த கூட விட்டதில்ல. வாரத்துல எப்படியும் ஒரு படம் பாத்துடுவோம் (சில சமயம் 2-3 படம் பாத்த வாரமெல்லாம் உண்டு).

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பொறுப்ப சிறப்பா செஞ்சாங்க. ஒருத்தன் வீட்டுக்கு தேவையான பொருள பாத்து வாங்குறதுல கில்லாடி, ஒருத்தன் பணத்த தேவைக்கு மட்டும் சிக்கனமா செலவு பண்றதுல கில்லாடி. ஒருத்தன் எல்லாரையும் அரவனைக்கிரதுல கில்லாடி, ஒருத்தன் யாரும் கோபப்பட்டால் எளிதில் சமாதானப்படுத்துவதில் கில்லாடி, ஒருத்தன் டைம்-பாஸ் காமெடி பண்றதுல கில்லாடி, ஒருத்தன் ரெண்டு பேருக்கான பிரச்சினைய தீக்குறதுல கில்லாடி. ஒருத்தன் எதையும் பாசிட்டிவ்வா மட்டுந்தான் பேசுவான், ஒருத்தன் எல்லார்கிட்டயும் பாலிஷா பேசுறதுல கில்லாடி, ஒருத்தன் எல்லாரையும் ஒருங்கினைக்கிறதுல கில்லாடி, ஒருத்தன் சமையல்ல கில்லாடி. இப்பிடி ஆளாளுக்கு ஒரு விதத்துல "பலே"ன்னாலும், எல்லாரும் சொல்லி வச்சா மாதிரி சாப்பிடுறதுல கில்லாடிங்க, எவ்ளோ சமைச்சாலும் காலி ஆயிடும். :)  அதே மாதிரி நல்லத சொன்னா எல்லாரும் தட்டாம செய்வாங்க.

நாங்க இப்பிடி ஆட்டம் போட்ட அந்த வீட்டுக்கு எதேச்சையா ஒரு நாள் வர்ற யாருக்கும் அந்த வீட்டுலயே தங்கிக்கனும்னுதான் தோணும். வீட்டுக்கு வந்துட்டு போன பல நண்பர்கள் என்கிட்டே இத சொல்லி கேட்க சந்தோஷமா இருந்துச்சு. நான் சென்னை வந்த புதுசுல, நட்பு அடிப்படையில நண்பர்கள் எடுத்திருந்த ஒரு வாடகை வீட்டுல நானும் என் நண்பனும் தங்கவேண்டிய நிலை இருந்துச்சு, அப்ப "எதுக்குடா இங்க வந்தோம்"ன்னு நாங்க நினைக்கும்படி ஆயிடுச்சு. ஆனா, நாம இருந்த இந்த வீட்டுக்கு வந்த யாரையும் அப்படி நினைக்க வைக்கலங்குறதே பெரிய சந்தோஷமா இருக்குது - அதுக்கு அந்த வீட்டிலிருந்த அத்தனை நண்பர்களும் மிக முக்கிய காரணம்.

இப்போ ஆளாளுக்கு ஒரு பக்கம் போயாச்சு, அந்த வீட்டையும் காலி பண்ணியாச்சு. அந்த நண்பர்கள் கிட்ட பேசிக்கூட பல நாட்கள் ஆச்சு. ஆனா அந்த வீடும் அங்க எங்களுக்கு இருந்த மித மிஞ்சிய நட்பும் என்னிக்கும் எங்க யாருக்கும் மறக்காது.

-சமுத்ரன்

Sunday, October 24, 2010

அம்மா

பத்து மாத சுமைக்குப் பின்
உன் உயிருடன் விளையாடிய எனது பிறப்பை
இப்போது நினைக்கவே நடுங்குது மனசு

சமீபம் வரை இதை பெரிதாக நினைக்கவில்லை நான்
யாரேனும் சொல்லக் கேட்கும்போது கூட
அதை ஒரு செய்தியாக மட்டுமே மதித்திருக்கிறேன்

என் பிறப்பிற்குப் பின் நீ 'கோமா'வில் சில நாள் வாழ்ந்த அச்சம்பவத்தை
இன்றுவரை எங்குமே நீ பெரிதாக காட்டிக்கொண்டது கூட இல்லை
என்னதான் நினைத்திருப்பாய் அந்தத் தருணத்தில்?

வளரும்போது கேட்டது கிடைக்கும் செல்லப் பிள்ளைதான் நான்
சமீபத்தில் 'எள்ளுருண்டை சாப்பிட ஆசை' என
எங்கோ யாரிடமோ நான் சொல்லியதாய் நியாபகம்...
அடுத்த நாளே என் கண் முன் எள்ளுருண்டை விருந்து
கடும் வேலைகளுக்கிடையிலும் எப்படி, எப்போது அதை செய்தாய்
என்ற ஆராய்ச்சியெல்லாம் நான் செய்ததில்லை!

'உனக்கு என்னம்மா வேணும், வாங்கிட்டு வரேன்?' என நான் கேட்டால்
'எனக்கெதுக்கு கண்ணு, அந்த காசுல நீ எதையாவது வாங்கிக்க'
என்று எப்படி உன்னால் பத்து வருடமாக தொடர்ந்து சொல்ல முடிகிறது?
அதையும் கேட்டுக்கொண்டு நான் இன்னும் எதுவுமே உனக்காக வாங்கியதில்லை!

காமாலையில் நெடுநாள் நான் உணவில் கடும்பத்தியம் காத்தபோது
எனக்காக என்னுடனே நீயும் பத்தியம் காக்க யோசித்ததில்லை!
பலநேரம் எவனையோ திட்ட முடியாமல் உனை திட்டி இருக்கிறேன்
சம்பந்தமேயில்லாத என் கடுகடுப்புப்புக்கு உன்னிடம் ஒரு அதட்டல் கூட இல்லை!

இதற்கெல்லாம் உன்னிடத்தில் மன்னிப்பும் கேட்டதில்லை
இப்போது கேட்கவும் தோணவில்லை

எப்போதும் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும்
'அம்மாதான' என்று ஒருவித உரிமையுடனும் பொறுப்பின்மையுமுடன்தான்
உன்னுடன் இன்றுவரை பேசியும் பழகியுமிருக்கிறேன்.

என்னை இப்படி எதற்கும் அனுமதித்து வளர்த்ததுதான் உன் தவறா?
உண்மையிலேயே என்மேல் உனக்கு
கொஞ்சம் கூட கோபமோ வருத்தமோ இல்லையா?

உன்னைப் போல் - அப்பா போல்,
எங்களால் எம் பிள்ளைகளிடம் இருக்க முடியுமா?
காலம்தான் பதில் சொல்லணும்.

-சமுத்திரன்

Wednesday, October 20, 2010

நிஞ்சி

"நிஞ்சி" - "உன்னோட பேர் என்ன?"ன்னு என்னோட மகனைக் கேட்டா, அவனோட பதில் இது.

இதே வயசுள்ள என் நண்பர்ங்களோட குழந்தைங்க எல்லாம் நெறைய வார்த்தைங்க அழகழகா பேசுறத பாத்தா, நம்ம பையனும் எப்போ இப்பிடி பேசுவான்னு ஆசையா இருக்கும். இப்ப இந்த ஒரு மாசமா இவனும் நெறைய பேசறான். என்ன வார்த்தை சொன்னாலும் திருப்பி சொல்றான் அல்லது சொல்ல டிரை பண்றான். பல சமயங்கள்ல எதையாவது அவனாவே நம்மகிட்ட சொல்றதுக்கு டிரை பண்ணுவான், அதையும் கைய கால எல்லாம் ஆட்டி ஆட்டி சொல்லுவான் - அவன் சொல்ல வர்றத அவன் கை-கால் ஆட்டுறத வச்சே புரிஞ்சுக்கலாம். (மோனோ ஆக்டிங்ல   கலக்கப் போறான்).

சமீபத்துல ஒரு நாள், நான் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தேன். மனைவியும் மகனும் ஆளுகொண்ணா அவங்க வேலை ஏதோ பண்ணிட்டு இருந்தாங்க. நான் போன உடனே "ராஜா... பால் வெளையாடலாமா?"-ன்னு கேட்டேன். உடனே என் மனைவி, "அப்பாவ கை கால எல்லாம் கழுவிட்டு வர சொல்லுங்க"ன்னு என்னோட மகனைப் பாத்து சொல்ல, அவன் என்கிட்டே வந்து "அப்பா... அப்பா... கையீ காலு"-ன்னான். "கையீ காலுக்கு என்னம்மா?"-ன்னு கேட்டேன். "அப்பா... கையீ காலு..."-ன்னு சொல்லிட்டு அவனோட கை கால தேச்சு காட்டினான். நானும் விடாம புரியாத மாதிரி இருக்க, அவன் என்னைய கைய புடிச்சு கூட்டிட்டு போயி பாத்ரூம் கதவ தெறந்து என்னை உள்ள கொண்டு போயி விட்டுட்டு வந்துட்டான். :)

சுவாரஸ்யமான இன்னொரு சம்பவம் - போன வாரம் நாங்க மூணு பேரும் நண்பன் வீட்டுக்கு போயிருந்தோம். அவங்க வீட்டுக்கு வந்த இன்னொரு நண்பனோட பையன்கூட இவனுக்கு சண்டை வந்து இவன் அவனை அடிச்சிட்டான். அப்புறமா சமாதானம் ஆயி வெளையாடினாங்க. வீட்டுக்கு வந்ததும் "எதுக்கு அந்த அண்ணாவ அடிச்ச? யாரையும் அடிக்கக் கூடாதுன்னு எத்தன தடவ சொல்றது?"ன்னு குரலை கொஞ்சம் ஏத்தி கேட்டேன். உடனே அவங்க அம்மா பக்கம் திரும்பி "அம்மா... அம்மா... அண்ணா"-ன்னு நிறுத்தினான். மனைவி, "அண்ணாதான், எதுக்கு அண்ணாவ அடிச்சன்னு அப்பா கேக்கறாங்க"ன்னு மனைவி சொல்ல, "அண்ணா கார் ஓட்டி, நானு டேயினு (டிரெயின்) ஓட்டி. அப்பம் (அப்பறம்) அண்ணா டேயினு ஓட்டி. நானு? டமானு. அப்பா... திட்டி..." - முதல் முதலா ஒரு நிகழ்ச்சிய அவனாவே சொன்னான். மனைவி உடனே "அண்ணா டிரெயின ஓட்டினா, நீ கார ஓட்ட வேண்டியதுதான... அதுக்கெல்லாம் அண்ணாவ அடிக்கிறதா?"-ன்னு கேட்க, "அண்ணா கார புங்கி (பிடுங்கி)..."-ன்னு குரலை டல்-லா வச்சுகிட்டு அவன் சொன்னப்ப நானும் மனைவியும் ஆகாயத்துல பறந்துகிட்டிருந்தோம்.

அவருக்கு கார், பஸ், லாரி, பிளைட் ஓட்டுறது மாதிரியே பந்த உதச்சிகிட்டு வெளையாடுறது-ன்னா ரொம்ப பிடிக்கும். பந்து விளையாட என்னை அவன் கூப்பிடுற அழகே தனிதான். 'ஒதைச்சு வெளையாடலாம்'-ன்னு சொல்ல வராது. அதனால, "அப்பா... எந்தி(எந்திரி)... பாங்க(வாங்க)... பால்"-ன்னு சொல்லிகிட்டே கால தூக்கி உதச்சி காட்டுவான். அத திரும்ப திரும்ப ரசிக்கிறதுக்காகவே "என்னப்பா?"-ன்னு கேட்டு அப்படியே உட்கந்திருப்பேன். அவனும் விடாம அதே மாதிரி திரும்ப கூப்பிடுவான். ஆனா 2-3 தடவைக்கு மேல கூப்பிட்டு நான் வரலைன்னா அப்பிடியே கீழ படுத்துட்டு அழ ஆரம்பிச்சுடுவான். :)

இன்னும் இந்த மாதிரி பலப்பல கதைங்க இருக்கு.

"அப்பா, பா........ங்க",
(அவராவே அவர் முகத்த மூடிகிட்டு) "நிஞ்சிய கா...னாம்?"
"அம்மா, தூ...யி, கீ...ழ, போ...லாம்" (கீழ தூரி வெளையாட போலாம்)
"ஈ...ட்டுக்கு போ...லாம்" (வீட்டுக்கு போலாம்)
"பஸ்ல போ...லாம்" (பஸ்ல ஏறி போலாம்)
"அப்பா, ஆபீஸ் போ...ங்க. கேக்(cake) ஆ...ங்கி(வாங்கி) பா...ங்க(வாங்க)"
(குக்கர் விசில் சத்தம் கேக்கும்போது) "அம்மா, ஆ...ப்பு இசிலு. ஆப் பண்ணு போ...ங்க"-ன்னு அவனோட மழலை குரல்ல ஒவ்வொரு வார்த்தையோட மொத எழுத்த ராகம்போட்டு இழுத்து சொல்றத நாள் முழுக்க கேட்டுகிட்டே இருக்கலாம்.

இதுல அப்பப்ப மிமிக்ரி கூட பண்ணுவார். அவன் பசியா இருக்குறப்ப, மனைவி அப்பத்தான் பால் காய வச்சு ஆத்திகிட்டு இருப்பாங்க. இவனுக்கு பசியில பால் ஆற வரைக்கும் பொறுமை இருக்காது "ஊத்தி... ஆத்தி..."-ன்னு அழுதுகிட்டே சொல்லுவான். பால் குடிச்சுட்டு ஜாலியா இருக்குறப்போ, "ராஜா, எப்பிடி அழுதுகிட்டே பால சிக்கிரமா ஆற வைக்க சொன்னீங்க?"-ன்னு கேட்டா அவன் அப்போ எப்பிடி அழுதுகிட்டே "ஊத்தி ஆத்தி"-ன்னு சொன்னானோ அதே மாதிரி முகத்தையும் குரலையும் மாத்தி சொல்லுவான்.

எப்பவாவது அவன் குறும்பு பண்ணி, அதுக்கு நாங்க அவனைத் திட்டி / அடிச்சு புட்டு, அவன் அழறதுக்கும் முன்னாடி எங்க மனம் வாடுறத எப்பிடி நிறுத்துறதுன்னுதான் எங்களுக்கு வழி தெரியல. :)

-சமுத்திரன்

Saturday, October 9, 2010

கொஞ்சம் பிஸியா இருக்கேன்... எதாவது அர்ஜென்ட்டா?

ஆபிஸ்ல, சாங்காலம் மணி 5 இருக்கும். டீ குடிக்க போலாம்னு டீம்ல கூப்பிட்டதால நானும் அவங்க கூட கெளம்பினேன். டீ குடிச்சுகிட்டே அன்னிக்கு நடந்த கிரிக்கெட் பத்தி பேசிட்டு இருந்தோம். ஆளாளுக்கு ரொம்ப ஆர்வமா பேசிட்டு இருந்தோம். பேச்சு சுவாரஸ்யமா போகும்போது என்னோட மொபைல் ரிங் ஆச்சு. கால் பண்றது அம்மா... அட்டெண்ட் பண்ணினேன்.

நான்: அம்மா...
அம்மா: கண்ணு... ஆபிஸ்-லயா இருக்குற?
நான்: ஆமாம்மா... கொஞ்சம் பிஸியா இருக்கேன்... எதாவது அர்ஜென்ட்டா?
அம்மா: அப்பிடியா... இல்ல இல்ல அர்ஜன்ட் எல்லாம் இல்ல...
நான்: சரிம்மா நான் அப்பறம் பண்றேன்...?
அம்மா: சரி கண்ணு. வச்சிடறேன்...?
நான்: சரி சரி.

டீய குடிச்சுட்டு கிரிக்கெட் பத்தின டிஸ்கஷனையும் முடிச்சுட்டு என்னோட சீட்டுக்கு போயிட்டேன். மெயில்ல நண்பருங்க எல்லாம் அப்ப வந்திருந்த ஒரு படத்த பத்தி ரொம்ப காரசாரமா பேசிட்டு இருந்தாங்க. நானும் என் பங்குக்கு ரிப்ளை பண்ணிகிட்டு பிஸியாயிட்டேன். ஒரு மணி நேரம் கழிச்சு (திடீர்னு நெனப்பு வந்து) அம்மாவுக்கு கால் பண்ணினேன்.

நான்: அம்மா...
அம்மா: சொல்லு கண்ணு... எல்லாரும் நல்லா இருக்குறிங்களா?
நான்: நாங்க நல்லா இருக்கோம்மா, நீங்க?
அம்மா: இங்க எல்லாருமே நல்லாருக்குறோம் கண்ணு... தம்பியும் சவிதாவும் நல்லா இருக்காங்களா?
நான்: ம். எல்லாருமே நல்ல இருக்கோம்.
 அம்மா: சரி சரி. என்ன சாப்பாடு,சாப்பிட்டாச்சா?
நான்: சாப்டாச்சும்மா. எதுக்கும்மா கால் பண்ணின?
அம்மா: சும்மாதான் பண்னேன்... ரெண்டு நாளா நீயும் போனே பண்ணல. சரி பேசலாம்னு பண்னேன்.
நான்: அட... ரெண்டு நாளாச்சா? சரி, இங்கயும் விஷயம் ஒண்ணும் இல்ல... அப்பாக்கு நேத்துகூட போன் பண்ணினேன். அங்கியும் விஷயம் ஒண்ணும் இல்லன்னு அப்பா சொன்னாங்க. சரி, வீக் என்டு பேசலாம்னு இருந்துட்டேன்.
அம்மா: ம்ம்ம். சரி சரி. அப்பறம் வேல அதிகமா?
நான்: அப்படி எல்லாம் இல்ல, ஏம்மா?
அம்மா: இல்ல, நானு கால் பண்ணப்ப பிஸின்னு சொன்ன... திரும்ப கால் பண்றேன்னு சொல்லிட்டு இன்னா வரைக்கும் நீ கால் பண்லியா, அதுக்குதான் கேட்டேன்?
நான்: ஓ அதுவா? இல்ல... இங்க ஆபிஸ்ல முக்கியமான வேலையா (?!) இருந்தேன்... அதான் அப்பறமா பேசறேன்னு வச்சுட்டேன்.
அம்மா: அட... அப்பிடின்னா இனிமேல நானு பகல்ல உனுக்கு போன் பண்ல.
நான்: இல்லம்மா... நானு வேலைய நடுவுல உட்டுட்டு வந்தா பிரச்சினைன்னு அப்பறம் பண்றேன்னு சொன்னென்.
அம்மா: ஓ... சரி கண்ணு. ஒடம்ப பாத்துக்க.
நான்: சரிம்மா. நீ என்ன பண்ற?
அம்மா: நானு... கடலக்கா பொறிக்கிறோம்ல? இன்னிக்கு நேரமா பொறிச்சாச்சு, அதான் கடலக்கா அளந்துட்டு இருந்தேன்.
நான்: அப்பிடியா? எத்தன வள்ளம் ஆச்சும்மா?
அம்மா: இன்னு்ந் தெரில, இப்பதான் அளந்துட்டு இருந்தேன். அளந்ததும் மறந்து போச்சு...
நான்: அய்யோ அம்மா... அப்பிடீன்னா எதுக்கு போன எடுத்த? அப்புறமா நாம பேசிக்கலாமில்ல?
அம்மா: அதுக்கென்ன கண்ணு, பரவால்ல. உங்கிட்டதான பேசறேன், சித்த நேரத்துல அளந்துருவேன்.
நான்: ?!?!?!?!?!
அம்மா: கண்ணு, எனக்கு நீ பேசுறது ஒண்ணுமே கேக்கல....
நான்: ஆங் அம்மா. நீ எப்போ வேனும்னாலும் எனக்கு போன் பண்ணும்மா. இன்னைல இருந்து முக்கியமான வேல எதுவும் எனக்கு இருக்காது...

-சமுத்ரன்

Wednesday, October 6, 2010

அம்மாயி... தாத்தா... ஊர்ல... போலாம்...

நாமெல்லாம் சென்னை / பெங்களூர் மாதிரி வெளியூருல வேலை செய்யுற கோஷ்டிங்குறதால, விடுமுறைல சொந்த ஊருக்கு போறது எப்பவுமே விசேஷம்தான். பெங்களூர்ல இருக்கும்போது, ஊருக்கு போறோம்னு முடிவாயிடுச்சின்னா எனக்கும், என் மனைவிக்கும் ரொம்பவும் குஷியாயிடும். அடிக்கடி (மாசத்துக்கு ஒரு தடவையாவது) ஊருக்கு கெளம்பிடுவோம்.
எங்க குஷிக்கு ரெண்டே காரணந்தான்:
1. சொந்தக்காரங்க எல்லாரையும் பாக்கலாம்
2. எங்க மேல எல்லாருமே (இன்னும் குழந்தைங்களா நெனச்சு) பாசத்தை பொழிவாங்க.

அதெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஊர்ல அப்பிடியே வெளில போகும்போது சொந்தக்காரங்க, பக்கத்து வீட்டுக்காரங்க, தெரிஞ்ச்சவங்கன்னு எல்லாருமே நலம் விசாரிப்பாங்க. ஆனா என்ன, எல்லாருமே சொல்லி வச்சா மாதிரி, ஒரே மாதிரியான கேள்விங்க கேப்பாங்க:

கேள்வி: கண்ணு, நல்லா இருக்கீங்களா?
பதில்: நல்லா இருக்கிறங்க

கேள்வி: ம். எப்ப கண்ணு வந்திங்க?
பதில்: நேத்து ராத்திரிங்க.

கேள்வி: எத்தன நாளு கண்ணு லீவு?
பதில்: வழக்கம் போல இன்னிக்கும் நாளைக்குந்தாங்க லீவு (சனி & ஞாயிறு)

கேள்வி: அப்ப... சோமாரக்கெளம (திங்கட்கிழமை) வேலைக்கு போவுனும்?
பதில்: ஆமாங்க, நாளான்னைக்கு காத்தால நேரமா கெளம்பணுங்க. அப்புறம், நீங்க நல்லா இருக்கீங்களா?

கேள்வி: ம். எங்க கண்ணு மழையே பெய்ய மாட்டேங்குது, அங்கயாவது (பெங்களூர்) மழை பேஞ்சுச்சா?"
பதில்: அங்கயும் ஒண்ணும் சொல்லிக்கிறா மாதிரி பேயிலிங்க

கேள்வி கேட்டவர்: ம்ம். அதான பாரு கண்ணு.

இத்தோட பல பேர் முடிச்சுக்குவாங்க. ஆனா சில பேர் அடுத்த கட்டத்துக்கு போவாங்க:

கேள்வி: ஏங்கண்ணு... உங்குளுக்கு அங்க என்ன வேல?
பதில்: அதான், கம்பியூட்டர் வேலதாங்க.

கேள்வி: கம்பியூட்டர்ல அப்பிடி என்ன பண்ணுவிங்க?
பதில்: அது.... ம்ம்ம்ம். அவங்க கேக்குற புரோகிராம் பண்ணி குடுக்குணுங்க.

கேள்வி: ஊஹூம். சேர் சேர்.

நான் மட்டும் தனியா வெளியூருக்கோ வெளி நாட்டுக்கோ போயிட்டு வந்திருந்தேன்னா, அம்மா/சித்தி/அத்தை/பாட்டி எல்லாரும் போன்லையும் சரி, ஊருக்கு திரும்பினதுக்கப்புறமும் சரி, இந்த கேள்விய கண்டிப்பா கேப்பாங்க: "சாப்பாடெல்லாம் பரவாயில்லியா? நம்ம ஊரு சாப்பாடு கெடைக்குதா? அரிசி, பருப்பு, தக்காளி எல்லாம் அங்க என்ன வெல?" :)

எங்க (அப்பாவ பெத்த) பாட்டி, நாங்க சிங்கப்பூர் வந்த பின்னாடியும் இன்னமும் சலிக்காம நான் ஒவ்வொரு தடவ ஊருக்கு போறப்பவும் அதுக்கு முன்னாடி கேட்ட அதே கேள்விய மாறாம கேப்பாங்க. போன தடவ நான் ஊருக்கு போனப்ப நடந்த உரையாடல் இது:

பாட்டி: அங்க எத்தன மணிக்கு பொறப்பட்ட?
நான்: நேத்து சாங்காலம்
பாட்டி: நேத்து சாங்காலம் பொறப்புட்டு, இன்னிக்கு காத்தாலதான் வர முடிஞ்சிச்சா? கப்பல்லையா வந்த?
நான்: ஆமாங்காத்தா. அது கப்பல் இல்ல, எரோபிலான்
பாட்டி: என்ன எளவோ போடா. அங்க பஸ்ஸுல எல்லாம் போவ முடியாதா?
நான்: ஆஹாம், எரோபிலான்லதான் போவ முடியும்.
பாட்டி: அதுவும் நம்ம ஊரு மாதிரிதான் இருக்குதா?
நான்: இத விட நல்லாவே இருக்கும்
பாட்டி: அட, அங்கயும் வெவசாயம் பண்றாங்களா?
நான்: இல்லைங்காத்தா, எல்லாமே இங்க இருந்துதான் போவுது
பாட்டி: வெவசாயம் பண்ணாம எப்பிடிடா பொழைக்கிறாங்க? அப்ப மாடு-கண்ணெல்லாம் அங்க இல்லியா?
நான்: இல்ல.
பாட்டி: ஊடெல்லாம் பாத்துட்டியா - வாடகை எவ்வளவு?
நான்: பாத்தாச்சு, வாடகை அம்பதாயிரம்.
பாட்டி: மாசத்துக்கா? வருசத்துக்கா?
நான்: மாசத்துக்குதாங்காத்தா
பாட்டி: ஊட்டு வாடகையே அம்பதாயிரமா? கம்மியா எல்லாம் இல்லியா?
நான்: இல்லிங்காத்தா. இதுதான் கம்மி அங்க.
பாட்டி: ம். இத்தன காசு போட்டு அதென்னடா வூடு? சம்பளமெல்லாம் சேத்தி தராங்களா?
நான்: அதுக்கு தவுந்தா மாதிரி சம்பளம் சேத்தி தருவாங்காத்தா.
பாட்டி: ம். போயிட்டு ஒரு வருஷம் கழிச்சுதான் வருவீங்கன்னு உங்கப்பன் சொன்னான்?
நான்: இல்ல இல்ல... மூணு-நாலு மாசத்துக்கு ஒரு தடவ வருவோம், பக்கந்தான...?!?!
பாட்டி: என்னமோ... புள்ளைங்கள எல்லாம் பாத்து கூட்டிட்டு போயிட்டு வா.
நான்: சரிங்காத்தா.

எப்ப ஊருக்கு போனாலும் திரும்பி பெங்களூருக்கோ, சிங்கப்பூருக்கோ கெளம்பும்போது மனசு கொஞ்சம் கனமாவே இருக்கும். விருப்பமில்லாம கெளம்பி வருவோம்.

பி. கு.: நம்ம பையனுக்கு ஊருக்கு போறதுன்னா அவ்ளோ குஷி. அவர் ஊர்ல ஜாலியா வெளையாடலாம், ஓடி வெளையாட எல்லை எதுவும் கெடையாது. தாத்தாவும் பாட்டியும் கேட்டதை எல்லாம் செய்வாங்க. தெனமும் சொந்தக்காரங்க யாராவது பாக்குறதுக்கு வந்துட்டே இருப்பாங்க. கூட வெளையாடுறதுக்கு அவரோட வயசுக்கு ஆள் இருக்குது.
எங்ககூட வரும்போது ரொம்ப குஷியா வந்துட்டார், ஆனா
இப்ப சிங்கப்பூர் வந்த பின்னாடி, எப்பவாவது "அம்மாயி... தாத்தா... ஊர்ல... போலாம்..."-ன்னு சொல்லுவான். கஷ்டமா இருக்கும்.
ம்ம்ம்ம். அடுத்த தடவ ஊருக்கு போற வரைக்கும் இந்த பசுமை நெனப்புலேயே காலத்த ஓட்ட வேண்டியதுதான்.

-சமுத்திரன்.

Tuesday, October 5, 2010

எந்திரன்

நம்ம தலைவர் படத்த பாக்க மூணு வருஷமா வெயிட் பண்ணிட்டு இருந்தோம். செப்டம்பர் 30-ம் தேதி படமும் வந்தாச்சு (அக்டோபர் 1-ம் தேதிதான் உண்மையான ரிலீஸ்-ன்னாலும், இங்க சிங்கபூர்ல ஒரு நாள் முன்னாடியே ரிலீஸ்), இன்ப அதிர்ச்சியா மொத நாளே டிக்கெட்டும் கெடச்சு (செப்டம்பர் 30) படத்தையும் பாத்தாச்சு.


பெரிய ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாம, படம் போடுவதற்கு 30 நிமிடம் முன்னாடியே எல்லாரும் தியேட்டருக்குள்ள போனோம். ரஜினி படத்த மொத தடவையா, ரிலீஸ் ஆன மொத நாள், அதுவும் மொத ஷோ பாக்குறேன். உள்ளுக்குள்ள ஒரே குஷி. படம் போட நேரம் இருந்ததால உள்ள பாட்டு போட்டாங்க. எல்லாரும் கண்ணா பின்னான்னு ஆப்பரேட்டர பாத்து திட்டி ஒரே கத்தல் - ஏன்னா அது விஜய் பாட்டு. ஆனா ஆப்பரேட்டர் எதை பத்தியும் கவலைபடாம வில்லு பட பாட்டா போட்டுத் தள்ளினான். என்னென்ன கெட்ட வார்த்தை இருக்கோ, எல்லாமே விஜய் மேல அர்ச்சனையா மாறுச்சு.

படம் போட சில நிமிடங்களுக்கு முன்னாடி சில அன்பர்கள் நெறைய பூக்கள உள்ள எடுத்திட்டு வந்தாங்க, சில நொடிகள்ல எல்லார் கையிலயும் பூ. சரியா ராத்திரி 8 மணிக்கு படம் போட்டாங்க (நேரா படம், எந்த விளம்பரமும் போடல). ஒரே கத்தல், தியேட்டரே அதிருச்சு. ரஜினி பேரு போடும்போது தியேட்டர் முழுக்க பூ மழைதான், எல்லாரும் எந்திரிச்சு ஆடினோம். படத்துல எடுத்த உடனே தலைவர் சீரியஸா ரோபோவ உருவாக்கிட்டு இருக்குறா மாதிரி சீன் ஆரம்பிச்சுது (படம் இங்கு ஆங்கில சப்டைட்டிலுடன் ஓடியது), எல்லாரும் பேயாட்டம் போட்டோம், ஆனா தலைவரே சீரியஸா இருந்ததால எல்லாரும் உடனே சீரியஸா படம் பாக்க ஆரம்பிச்சோம். ரோபோவ தலைவர் அறிமுகப்படுத்தி, அதுவும் தலைவர் மாதிரி நடந்தப்போ தியேட்டருக்குள்ள பூகம்பமே வந்தா மாதிரி இருந்துச்சு. 'காதல் அணுக்கள்' பாட்டுல, தலைவரோட ஸ்லோ மோஷன் நடைக்கு செம்ம கை தட்டல்.

கடவுள் பத்தின கேள்விக்கு ரோபோ பதில் சொல்ற சீனுக்கு, 'ஓ'-ன்னு எல்லாரும் செம்ம கத்தல். அப்பறம் ரோபோ செய்யும் ஒவ்வொரு சேட்டைக்கும் தியேட்டர் அதகளம்தான். அதுவும் சேரியில் ரோபோ ரஜினியின் அவதாரம் உச்சம். சிட்டி ரோபோவோட டேன்ஸ்-க்கும் (Dance) தியேட்டர அதகளம் பண்ணிட்டாங்க. கதை மெல்ல ஐஸ்வர்யா ராயை நோக்கி செல்லும்போது ரசிகர்கள் ரொம்பவே அமைதியாயிட்டாங்க. இங்க சிங்கப்பூர்ல, எந்த படத்துக்கும் இடைவேளை பிரேக் விடுறதில்ல. அதனால படம் நான் ஸ்டாப்பா போயிட்டிருந்துச்சு.

ஐஸ்வர்யா கூட பிரச்சினை பண்ற ஒரு ரவுடி கூட சண்டை போடாம, தலைவர் அவன்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடும்போது - என்ன நடக்குது; எப்பிடி ரியாக்ஷன் பண்றதுன்னு தெரியாம எங்களுக்கு குழப்பம். இதுல ஒரு ரஜினிகிட்ட இருந்து ஐஸ்வர்யாவ இன்னொரு ரஜினி கடத்தும்போது தியேட்டர்ல பெருசா எந்த ரியாக்ஷனும் இல்ல. ரஜினிக்கும் ரஜினிக்கும் இடையே பிரச்சினைங்குறதால, கொஞ்ச நேரம் தியேட்டர் அமைதியா இருந்துச்சு.

தலைவரோட வில்லத்தனம் (ரோபோ) ஆரம்பமான பின்னாடிதான் தியேட்டர்ல விசில் சத்தம் மறுபடியும் கேட்க ஆரம்பிச்சுது. திரைல இருக்குற அத்தன கேரக்டரும் ரஜினிதான் - ஆனா அதுக்கு ரசிகர்கள்கிட்ட பெரிய கரகோஷம் இல்ல. மனித ரஜினி'ய கண்டுபிடிக்குற சீன் பட்டாசு - ரெண்டு நிமிஷத்துக்கு படத்துல வசனமே கேக்கல. 'அரிமா அரிமா' பாட்டு முழுசும் ரசிகர்கள் செம்ம ஆட்டம் போட்டாங்க. படம் அதுக்கப்புறம் கிராபிக்ஸ் கலக்கல்தாங்குறதால பலபேர் அமைதியாயிட்டாங்க (மெய் மறந்துட்டாங்க?). சில பேர் கிராபிக்ஸ்க்கும் விசில் அடிச்சு கை தட்டினாங்க.

climax காட்சியும், வசனமும், தலைவர் நடிப்பும் "நச்"ன்னு இருந்துது. தியேட்டர்ல எல்லாருமே எந்திரிச்சு நின்னு கை தட்டினாங்க (இந்த மாதிரி சில படங்களுக்குதான் நான் பாத்திருக்கேன் - உதாரணம்: அபியும் நானும்).

தியேட்டர விட்டு வெளில வரும்போது மனசுக்கு எதோ ஒண்ணு ஏமாற்றமா இருந்துது. படம் நல்லாத்தான் இருக்குது - யோசிச்சு பாத்தாலும் ஏமாற்றத்துக்கு காரணம் தெரியல. மறுபடியும் படம் பாக்க குடும்பத்தோட போகும்போது தெரிஞ்சிடும். எது எப்படியோ, ரஜினி படம் மொத நாள் மொத ஷோ பாக்குறது ஒரு திருவிழால கலந்துகிட்ட மாதிரி செம்ம ஜாலிதான். இதுவே சென்னைல / தமிழ்நாட்டுல மொத நாள் மொத ஷோ பாத்திருந்தா இன்னும் கலக்கலா இருந்திருக்கும்னு சொல்லித் தெரிய வேண்டியதில்ல.

பி.கு: மனசுக்குள்ள முதல்-பாதில வர்ற சிட்டி ரோபோ நெனப்பாவே இருந்ததால, அன்னிக்கு ராத்திரி எனக்கு தூக்கமே வரல. அந்த கேரக்டர இன்னும் கொஞ்ச நேரம் காட்டி இருக்கலாமோ?

-சமுத்திரன்.

Saturday, August 14, 2010

சிங்கப்பூர் பத்தி வாங்க நீங்களும் தெரிஞ்சிக்கலாம்

இங்கு நான் வந்து ஒன்றரை மாதங்கள் ஆகின்றது. என் பார்வையில் சிங்கப்பூர்.

 
நாடு:
ரொம்ப சிறிய நாடு (தீவு). எங்கும் கட்டிடங்கள்தான், இருந்தும் எங்கேயும் பச்சை பசேல் என்று மரங்கள். நேர்த்தியான ரோடுகள். அரசு பேருந்துகள் எல்லா இடங்களையும் இனைக்கின்றன. இரயில்களும் அப்படித்தான். ஆங்கிலம், மலாய், தமிழ் மற்றும் சீன மொழிகள் சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன.

 
மக்கள்:
  • சீன, மலேஷிய மற்றும் இந்திய (குறிப்பாக தமிழ்) மக்கள்தான் சிங்கப்பூர் முழுக்க நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் பலர் சிங்கப்பூர் குடி உரிமை பெற்றவர்கள்.
  • எங்கும் மக்கள் கூட்டம்தான். ஆனால் யாருக்கும் எந்த தொந்தரவும் பிரச்சினையும் இல்லை.
  • அவரவர் அவரவர்களின் வழியில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக, வார நாட்களில் காலையில் ஓட்டமும் நடையுமாகத்தான் வேலைக்கு செல்கிறார்கள். யாரும் யாருடனும் பேசவே மாட்டார்கள். நிரம்பி வழியும் இரயில்களில் கூட குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு மௌனம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் மாலையில் தெரிந்தவர்களுடன் பேசி, அரட்டை அடித்து செல்கின்றனர்.
  • பத்தில் ஐந்து பேர்  எப்பவும் செல்போனிலேயே இருக்கிறார்கள். ஒன்று SMS அனுப்பிக்கொண்டிப்பார்கள் அல்லது FM கேட்டுக்கொண்டிருப்பார்கள் அல்லது MP3 player-ல் பாட்டு கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
  • ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம், அதில் மூழ்கியிருப்பார்கள். இளம் ஜோடிகள் பொது இடங்களில் மிகவும் ரொமான்டிக் மூடில்தான் இருக்கிறார்கள். அணைத்தபடிதான் சுற்றி வருவார்கள், அவ்வப்போது முத்த மழையும் இருக்கும்.
  • பல பெண்கள் வயது வித்தியாசமில்லாமல் அரை குறை ஆடைகளில்தான் எப்போதுமே இருக்கிறார்கள்.
  • சீன மக்களில் மிகவும் வயதானவர்களைக் காண முடி்கிறது (70 - 80 வயதுகளில்). அவர்கள் எந்த தடுமாற்றமுமின்றி யாருடைய தயவும் இன்றி ரொம்பவே உற்சாகமாக காணப்படுகிறார்கள். அவர்களில் பலர் இன்னும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
  • நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களில் அதிகமாக தென் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்.
  • தமிழர்களில் பலர் கட்டிட வேலைகளும், மர வேலைகளும், சாலை & பாலம் கட்டும் பணிகளும் செய்யும் தொழிலாளர்களாக உள்ளனர். நீண்ட காலமாக இங்கேயே வாழும் தமிழர்கள் நிறைய உள்ளனர்.
  • வீட்டு வாடகை மிக மிக அதிகம் என்பதால், திருமணமான பல தமிழர்கள் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர். அதை சிங்கப்பூர் அரசாங்கமும் முறையாக அனுமதிக்கிறது.
  • திருமணமாகதவர்கள் 2, 3 பேர் சேர்ந்து மேன்ஷன் போன்ற விடுதிகளில் அறை எடுத்து தங்கி வருகின்றனர்.
  • ஆண் பெண் பேதமில்லாமல் ஏறக்குறைய அனைவருமே ஏதாவது ஒரு வேலையில் இருக்கின்றனர்.
  • பலர் (குறிப்பாக தமிழர்கள்) வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் இரட்டை சம்பளத்துக்காக ஓவர் டைம் வேலை பார்க்கிறார்கள்.

 
சுற்றி வந்ததில்:
  • ஷப்பிங் காம்ப்ளக்ஸ், ஓட்டல்கள், பார்கள் மற்றும் சில்லரைக் கடைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன.
  • சீன மற்றும் மலேஷிய ஓட்டல்கள்தான் எங்கும் அதிகமாக இருக்கின்றன. லிட்டில் இந்தியா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தடுக்கி விழுந்தால் தமிழ் நாடு ஓட்டல்தான் எனும் அளவுக்கு நம்ம ஊர் ஓட்டல்கள். ஓட்டலைப் பொறுத்து விலைகளும் மாறுகின்றன.
  • சிங்கப்பூரில் அனைத்துப் பொருட்களும் இந்தியாவையும் மலேஷியாவையும் விட விலை ரொம்ப அதிகம். எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டும் விலை குறைவு. குறிப்பாக டி.வி.க்கள் விலை ரொம்ப ரொம்பக் குறைவு. அதனால் இங்கிருந்து இந்தியாவிற்கு பலர் டி.வி். வாங்கிச் செல்கின்றனர்.
  • நாட்டில் எந்த மூலையில் (பைப் மூலமாக) கிடைக்கும் தண்ணீரும் மிகவும் சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட குடி நீர்தான் (குளியலறையில் குளிக்கும் நீர் உட்பட). அதனால் தண்ணீர் பிரச்சினை இல்லை, எங்கும் தாராளமாக தண்ணீர் அருந்தலாம்.
  • ஊர் ரொம்பவே சுத்தமாக காணப்படுகிறது. இரயில்களிலும் பேருந்துகளிலும் உணவு உண்ணவும், தண்ணீர் அருந்தவும் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • சட்டங்கள் இங்கு மிகக் கடுமையாகவும் உறுதியாகவும் கடைபிடிக்கப்படுகின்றன. அங்கங்கே அதை மீறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் பிடி பட்டால் எந்தக் கருணையும் கிடையாது. அதற்கான தண்டனையும் கடுமையானது.
  • சிங்கப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் வீடுகள் அனைத்துமே (குறிப்பிட்ட சிலவற்றைத் தவிர) அரசாங்கத்தால் கட்டப்பட்டவை. அதனால் அனைத்து வீடுகளின் அமைப்பும் சில வகைகளில் அடங்கிவிடும்.
  • வீடு மற்றும் அலுவலக கட்டிடங்கள் அனைத்தும் 20 மாடிகள் வரை உள்ளன. அதே போல் லிப்ட் இல்லாத கட்டிடங்களே இல்லை.
  • மழையும் வெயிலும் இங்கு அன்றாட நிகழ்வுகள். எல்லாருடைய கையிலும் குடை கட்டாயம் இருக்கும். ஏறக்குறைய தினமும் மழை பெய்கிறது, பெரும்பாலும் அது கன மழையாகத்தானிருக்கும். மழை விட்ட அடுத்த கனம் எங்குமே மழை பெய்த சுவடே இருக்காது. மழையைக் கண்டு யாரும் ஓடுவதோ இல்லை மழை வருகிறதென்று ஒரு வேலையை ஒத்திப் போடுவதோ இல்லை (ஏனெனில் இங்கு மழை ஆரம்பிதால் பல சமயம் மணிக்கணக்கில் விடாமல் கனமாக பெய்யும்).

 
போக்குவரத்து:
  • குளிரூட்டப்பட்ட இரயிலும் பேருந்தும் எல்லா இடங்களையும் இணைக்கின்றன.
  • இரயிலும் பேருந்திலும் போய் வர ஏ.டி.எம் அட்டை வடிவில் பிரீ-பெய்டு எலக்ட்ரானிக் அட்டை விற்கப்படுகிறது.
  • எவ்வளவு கூட்டத்தையும் எந்த வித பிரச்சினையின்றி சமாளிக்கும் வகையில் இரயிகளும் பேருந்துகளும் வடிவமைக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் குறைந்த நேர இடைவெளியில் இயக்கப்படுகின்றன.
  • சொந்தமாக பலர் கார் வைத்திருக்கிறார்கள். வாடகைக் கார்களும் மிக மிக அதிகம், மீட்டர் சொல்லும் கட்டனம்தான். பிஸியான காலை மற்றும் மாலை நேரங்களில் வாடகை அதிகம். இரவில் அதைவிட அதிகம்.

 
இன்னும் வருகிறது...

 
-சமுத்ரன்

Friday, August 13, 2010

பொறுக்க வேண்டியது இன்னும் சில நாட்கள் மட்டும்தான்!

என் முகம் உன் பார்வையில் இருந்தபோது
சின்ன பரு கூட முளைக்கும் முன் அழிக்கப்படும்
இங்கு மணிக்கணக்கில் தேடுகிறேன்
கண்ணாடியில் என் முகமே தெரியவில்லை
என்னை எனக்கு காட்ட கண்ணாடி வேண்டாம்
நீ என் முன்னாடி வேண்டும்

ஓய்ந்து அந்தி மாலை வீடு திரும்புகையில்
வாசலிலேயே புன்னகைப் பந்தி வைத்து புத்துயிர் ஊட்டுவாய்
இங்கு நான் ஓய்ந்த போதெல்லாம் அலைபேசியில் உன் குரலும்
அதன் வழியே நான் காணும் உன் முகமும்
என் சோர்வைத் தகர்க்க போதுமானதாயில்லை

தினமும் என் விருப்பம் அறிந்து சமைத்து வைத்து
அளந்து (உணவு கட்டுப்பாடு) அதில் ஆசை கலந்து பரிமாறுவாய்
இடைவிடா என் கெஞ்சலில் உணவுக் கட்டுப்பாட்டை தளர்த்துவாய்
இங்கு அதே உணவு வகைகள் கண் முன்னே இருக்கிறது
அளவில்லாமல் அதை புசிக்கும் வாய்ப்பும் வாய் முன்னே இருக்கிறது
இன்று புரிகிறது எனக்கு - அந்த உணவோ, ருசியோ விஷயமல்ல
அதில் நான் எனை அறியாமல் கொண்டாடிய உன் அன்பு

நம் குழந்தைக்கு நீ பாடிய தாலாட்டில்
அவனை விட நான் தூங்கியதுதான் அதிகம்
இன்றும் நான் படுக்கையில் என் காதுகளில் ரீங்காரமாய் உன் குரல்
அனைத்தையும் மறந்து உறங்கச் செய்கிறது

விடியலையே பார்த்ததில்லை நான்
ஆம், விடிந்தும் வெகுநேரம் நான் உறங்க
செல்லமாய் கடிந்து எனை எழுப்புவாய்
உன்னை ஏமாற்றி இழுத்துப் போர்த்தி நான் தூங்குவேன்
விடாமல் எழுப்பி எனை வேலைக்கு அனுப்புவாய்
இங்கே எழுப்பவே ஆளில்லை, நான் விடிந்தபின் தூங்குவதுமில்லை

சில நாள் நான் தாமதமாக வீடு வருவேன்
அன்று மிளகாய் பொடியை மூக்கின் மேல் தெளித்து நிற்பாய்
இன்று தினமும் நான் முன்னமாகவே வீடு வருகிறேன்
மிளகாய் பொடியை என் மூக்கின் மேல் தெளித்தாற்போல் உணர்கிறேன்

சில சமயம் சிறு சண்டையில் நான் உன்னை திட்டிவிடுவேன்
இருவரும் பேசிக் கொள்ளாமல் சில நிமிடங்கள் ஓடும்
பின் ஏதும் நடக்காததுபோல் நமை அறியாமல் பேசிக்கொள்வோம்
இன்று நமக்குள் சண்டை ஏதுமில்லை ஆனால் மணிக்கணக்கில் பேசிக்கொள்வதில்லை

"என்ன செய்வது, காலத்தின் கட்டாயம்" என நான் சொல்ல மாட்டேன்
இந்த விளையாட்டை தொடங்கி வைத்தவன் நான்தான்
முடித்து வைக்க வேண்டியவனும் நான்தான்
பொறுக்க வேண்டியது இன்னும் சில நாட்கள் மட்டும்தான்!

-சமுத்திரன்

Monday, August 2, 2010

எனக்கு நீயும் ஒரு நெருங்கிய நண்பனே

உன்ன படத்துல பாத்தா உடம்பு காத்துல பறக்குது
சிம்பிளா பப்ளிக்ல பாத்தா மனசும் காத்துல பறக்குது
அட போப்பா, உன்ன நெனச்சாலே சும்மா ஜிவ்-ன்னு இருக்குது

நீ பேசினத கேட்டா என்னை அறியாம எனர்ஜி ஏறுது
மத்தவங்க உன்ன புகழக்கண்டா சந்தோசம் எகிறுது
மத்தவங்க உன்ன திட்டக்கேட்டா சிரிப்பா இருக்குது

நீ தத்துவம் சொன்னா எனக்கு தைரியம் சொல்றா மாதிரி இருக்குது
நீ பஞ்ச் பேசினா என் எதிரிகிட்ட பேசுறா மாதிரி இருக்குது

நீ சிரிச்சா என் மனசுக்கு ரெக்கை முளைக்குது
நீ கலங்குனா என் மனசு தாங்க மறுக்குது

நீ ஜெயிச்சா நான் ஜெயிச்சதா மனம் கொண்டாடுது
நீ தோத்தா உன் அடுத்த வெற்றிக்கு மனம் ஏங்குது

உன்கிட்ட உள்ளதும் இல்லாததும் - ரெண்டுமே அழகாத்தான் இருக்குது
நீ பண்ற எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சதா அமையுது

உன்ன எப்பவும் கொண்டாடவே மனசு துடிக்குது
'நடிகன நடிகனாப் பாருங்கடா'-ன்னு சமுதாயம் அத தடுக்குது

நான் உன்ன நேர்ல பாத்ததும் இல்ல பேசினதும் இல்ல
ஆனா எனக்குள் நீயும் ஒரு நெருங்கிய நண்பன்தான்






















-சமுத்திரன்

சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்கள்

தில்லாலங்கடி: சிங்கப்பூர் வந்து தியேட்டர்ல நான் பாத்தா மொத படம். என்னத்த சொல்ல? எதோ இன்னும் ஒரு டைம் பாஸ் படம் - அவ்வளவுதான். ஜெயம் ரவி வழக்கம் போல அவரோட வேலைய நல்லா பண்ணி இருக்காரு. அவங்க அண்ணன் வழக்கத்துக்கு மாறா மோசமான இயக்கம் (காப்பி). தமன்னா நடிப்புல நல்ல முன்னேற்றம். வடிவேலுவ பாக்கவே அருவருப்பா இருக்குது, அவரோட உடம்ப பாத்துக்கணும், இல்லைன்னா சுத்தமா பீல்ட் அவுட் ஆக வேண்டியதுதான். சந்தானம் கலக்கல்ஸ். பாட்டெல்லாம் கேக்கவே முடியல. "சொல் பேச்சு கேக்கும் சுந்தரி பாட்டு கஷ்டப்பட்டு நல்லா படமாக்கி இருந்தாங்க. முதல் பாதி - தியேட்டர்ல ஜாலி, ரெண்டாம் பாதி - செம்ம மொக்கை (குறிப்பா க்ளைமேக்ஸ்).


களவானி: இந்த படத்தோட ரொம்ப பெரிய வெற்றியால, நான் ரொம்ப எதிர்பார்த்து பாக்க போனேன். ஆனா படத்துல அந்த லோக்கேஷனத் தவிர சொல்லிக்கிற படி எதுவுமே இல்லை. பருத்தி வீரன் படம் வந்து ஹிட் ஆனதும் ஆச்சு, ஆளாளுக்கு தாடி வச்ச வெட்டிப் பய ஹீரோ + காதல்னு கத பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க. அதுவும், சின்ன பசங்க காதல்ங்கறதால என்னால சரியா படத்தோட ஒன்றவே முடியல. இயக்கமும் வசனமும் பல இடங்கள்ல படு சொதப்பல். "இன்னொரு படம்"-னு போக வேண்டியது, அழகான கதாநாயகி + கஞ்சா கருப்பு காமெடினால பொழச்சுகிட்டுதுன்னு நெனக்கிறேன்.

மதராசப்பட்டினம்:
பழைய சென்னைய ரொம்ப அழகா காட்டி இருக்காங்க. படம் ரொம்பவே நல்லா இருந்தது. இதுல நடிச்ச அத்தனை பேரும் கலக்கலா நடிச்சிருக்காங்க, முக்கியமா எமியா வர்ற அந்த லண்டன் ஹீரோ-இன். நம்ம வட நாட்டு நடிகைகள எல்லாம் தூக்கி சாப்பிட்டுட்டாங்க அவங்க. பல காட்சிகள்ல கண்லயே நடிக்கிறாங்க. ஆர்யாவும் அருமை. ஆர்யாவும் எமியும் தங்களோட காதல சொல்லிக்கிற சீன் + இசை அற்புதம். என்னமோ போங்க, இந்த படம் என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சு.
-சமுத்ரன்

முரளி - கிரிக்கெட் உலகில் மற்றொரு சகாப்தம்


முரளிய இலங்கை டீம்ல இருக்கும் ஒரு சாதாரண ஸ்பின் பவுலராதான் 1999 ம் ஆண்டு வரைக்கும் எனக்கு தெரியும். அதுவும் 1996 - 99 ஆண்டுகள்ல இந்தியா இலங்கைகிட்ட செம மாத்து வாங்கினப்ப கூட எனக்கு அவரைப் பற்றி தெரியாது, அப்ப நமக்கு கிரிக்கெட் அறிவும் கொஞ்சம் கம்மி (இப்ப மட்டும் என்ன வாழுது?). 1999 ம் ஆண்டு உலககோப்பைலதான் முரளியப்பத்தி பெருசா பேசிக்கிட்டாங்க, ஆனாலும் நம்ம கங்குலியும் திராவிட்டும் அந்த உலககோப்பை போட்டியில முரளிய உண்டு இல்லைன்னு பண்ணினதால அப்பவும் நான் அவரை இவ்ளோ பெரிய ஆளா வருவாருன்னு எதிர்பாக்கல... அவரோட ஸ்பின்னிங்கும் அப்படி ஒண்ணும் மிரளவைக்கும் ரகமாவும் எனக்கு தோணல. எப்பவாவது விக்கெட் எடுக்கும் ஒரு சாதாரண பவுலாரகத்தான் தெரிஞ்சார் (நம்ம கும்ப்ளே கூட 2000 க்கு அப்புறமா பல தடவ விக்கெட் எடுக்கறப்ப அந்த பவுலிங்ல என்ன இருக்குன்னு விக்கெட் விழுந்துச்சுன்னு எனக்கு இன்னிக்கு வரைக்குமே புரியல). ஆனாலும் முரளிக்கு அப்போ அப்போ திடிர்னு நல்லா பந்து ஸ்விங் ஆகும், அதுல சில விக்கெட்டும் விழுந்தத பாத்து அசந்திருக்கேன். ஆனா அவருடைய ஆரம்ப கால பவுலிங்க இப்போ பாத்தா பெரிய பெரிய பேட்ஸ்மேன் கூட இவரோட பவுலிங்ல தவுடு திண்ணிருக்காங்க. இவர கண்டாலே மெரண்டு போயிருந்த டீம்களும் இருந்திருக்கு.

சத்தமே இல்லாம மேட்சுக்கு மேட்ச் விக்கெட் எடுத்துட்டே வந்து அப்போ ஆஸ்திரேலியால கலக்கிட்டிருந்த வார்னேக்கு சவாலா வந்துட்டார் (விக்கெட் கணக்குல). வழக்கமா ஆஸ்திரேலியாகாரனுங்களுக்கு ஆசியா டீம் ஒண்ணு அவங்கள ஜெயிச்சுட்டாலே புடிக்காது. இதுல அவங்க நாட்டுக்காரன் ஒருத்தன் வச்சிருக்குற ரெக்கார்டுக்கு போட்டியா ஆசியால இருந்து ஒருத்தன் போயி நின்னா, சும்மா இருப்பானுங்களா? முரளியோட ஸ்பெஷல் கூக்ளி பவுலிங்தான் (அத பத்தி வெளக்கமா தெரிஞ்சுக்க இங்க போங்க). அப்படி அவர் பவுலிங் பண்ணும்போது, பந்தை எறிகிறார்னு முரளிய அசிங்கப்படுத்தி, அவரோட பவுலிங் மூவ்மென்ட்ஸ டெஸ்ட் பண்ணனும்னு அனுப்பி வச்சாங்க (அந்த கொடுமைய கீழ இருக்குற படத்துல கொஞ்சம் பாருங்க).
அந்த தடைகளையெல்லாம் வெற்றிகரமா முறியடிச்சு (அதுவும் அவ்ளோ ஈஸியா நடக்கல) அவங்க முகத்துல கரிய புசினாரு. இன்னும் சந்தேகம் இருக்குற ரசிகர்களுக்காக அவரே டீவில எல்லாம் வந்து பவுலிங் போட்டு காமிச்சு பொறுமையா வெவரமா சொல்லி நிரூபிச்சார்னு கேள்விபட்டேன். ஆஸ்திரேலியாவால அவரையும் ஒண்ணும் பண்ண முடியல, அவரோட விக்கெட் வேட்டையும் நிறுத்த முடியல, வார்னே ரெக்கார்டையும் பாதுகாக்க முடியல. அவ்ளோ பெரிய ஜாம்பவான் வார்னேவே முட்டி மோதி பாத்துட்டு (வயசு வேற ஆயிடுச்சு, டீம்ல பாலிடிக்ஸ் வேற பாவம்), கிரிக்கெட்ட வுட்டு போயிட்டார். முரளி சர்வ சாதாரணமா கட கடன்னு விக்கெட் எடுத்து தள்ளுனாரு. இவர் அப்புறமா டி20 வந்தப்ப கூட இவரோட பவுளிங்க்ல பெருசா ரன் அடிக்க முடியல, டி20-லயும் கலக்கினாரு.

டெஸ்ட்ல இப்போ 800 விக்கெட். ஒரு நாள் போட்டில 515 விக்கெட். மொத்தமா 1315 விக்கெட். கிரிக்கெட்ல ஒருத்தனும் இந்த ரெக்கார்ட இனிமேல் நெனச்சு கூட பாக்க முடியாது. 1992ல ஆட வந்தவர், 18 வருஷம் (பிட்நெஸ்ல இருந்து) கலக்கி இருக்காரு. சாதாரணமா அவர பாத்துகிட்டு இருந்த எனக்கு அவர் ரொம்ப ஸ்பெஷலா தெரிய ஆரம்பிச்சது, விஜய் டீவி, காபி வித் அனு-ல அவரோட பேட்டிய பாத்தப்புறம்தான் (அட, அவரும் நம்ம ரஜினி ரசிகர்ங்க).

அவர் ஒரு சாதாரண கிரிக்கெட் வீரர் இல்லங்குறதுக்கு பல காரணங்கள், அவற்றில் சில:
* வெளையாட்டுல எந்த இக்கட்டான நெலமையிலயும் ஒரு புன்னகையோடதான் இருப்பார் (அவரோட பவுலிங்க, எதிரணி அடிச்சு தாளிக்கும்போது கூட). ஒரு சாம்பிள் சொல்லனும்னா, அவரோட கடைசி மேட்ச்ல இந்தியாக்கு 2வது இன்னின்க்ஸ்ல 8 விக்கெட் போயிடுச்சு, அவர் இன்னும் ஒரு விக்கெட் எடுத்தா 800 ஆயிடும். எல்லாருக்கும் செம்ம டென்ஷன். ஆனா, 9வது விக்கெட் அவரோட பவுலிங்லையே ரன்-அவுட். ஆனா முகத்துல அப்பவும் அந்த மாறாத புன்னகைதான் (இன்னொரு விக்கெட் இருக்குதில்ல?). அந்த புன்னகைக்கு நான் (இந்தியனா இருந்தாலும்) எப்பவும் அடிமைங்க.
* பவுலிங்கின் போது ரொம்ப ஆக்ரோஷமா இருக்குற அவரோட முகம், பந்த போட்ட உடனே புன்னகைக்கு மாறிடும்.

* எதிரணிகாரங்ககிட்ட எப்பவுமே மொறைச்சுகிட்டதில்லை, தேவை இல்லாத வம்புக்கும் போனதில்ல.
* எவ்ளோ பெரிய பேட்ஸ்மேன் விக்கெட்ட எடுத்தாலும், அவர் அதை கொண்டாடுற விதம் அவுட்டான அந்த பேட்ஸ்மேனுக்கே புடிக்கும். பீல்டிங்கிலும் ரொம்ப திறமையானவர்.
* பந்த எறியிறதா சொல்லி டெஸ்ட் பண்ணப்போ கூட புன்னகை மாறாம அதை ஏத்துக்கிட்டது. அந்த நிகழ்ச்சிய இப்போ எப்பிடி பாக்குறீங்கன்னு கேட்டபோது "அந்த காலகட்டம் ரொம்ப கஷ்டம்தான்... ஆனா எனக்கு மடியில கனமில்ல, அதனால பயமில்ல. என்னை பொருத்தவரைக்கும், சொல்றவங்க சொல்லிட்டுதான் இருப்பாங்க... நம்ம மனசாட்ச்சிக்கு நாம கரெக்ட்டா இருந்தா, எந்த தடை வந்தாலும் ஈஸியா ஜெயிச்சுடலாம்"-ன்னு ரொம்ப அழகா சொன்னார். அந்த காலகட்டத்துல சில ஆஸ்திரேலியா வீரர்கள் தனக்கு முன்னாலேயே அவரை அசிங்கமா கிண்டல் பண்ணினாங்கன்னு சொன்னப்ப, என் மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு.
* வேற நாடுக்காரங்களோட அணி மாறி விளையாட்டும் போது எப்பிடி தன்னை தயார்படுத்திக்கிறார்-ன்னு அவரோட விளக்கம் (அந்த பேட்டியில அழகா சொல்லி இருப்பார்).
* யாரும் எளிதா எட்ட முடியாத ரெக்கார்ட் பண்ணப்ப கூட ஆணவமில்லாம இருக்குறாரு.
* முக்கியமா அவரோட கடைசி டெஸ்ட். அந்த தொடருக்கு முன்னாடி அவர் 792 விக்கெட் எடுத்திருந்தாரு. இன்னும் 8 விக்கெட் எடுத்தா 800. 792 விக்கெட் எடுத்தா, யாருக்கும் அந்த 800 மைல்கல்லையும் எட்டனும்னு ஆசை கண்டிப்பா இருக்கும். ஆனா, 'தில்'லா முதல் டெஸ்ட் போட்டியோட ரிட்டையர்ட் ஆகுறதா தொடருக்கு முன்னாடியே அறிவிச்சார் (ஆனா அந்த 8 விக்கெட்ட அந்த மொத மேட்ச்சுலையே எடுத்துட்டார்ங்குறது இன்னும் இன்னும் ஸ்பெஷல்).


கிரிக்கெட்டும் கிரிக்கெட் ரசிகர்களும் முரளிய ரொம்பவே மிஸ் பண்ணபோறோம். இருந்தாலும் முரளிக்கு ரொம்ப சந்தோசமா ஒரு சல்யூட்.

-சமுத்திரன்

Monday, July 26, 2010

இமெயில் - ரிப்ளை & கால் அட்டெண்ட் பண்ணவோமே!!!

அந்த காலத்துல ஒருத்தர் இன்னொருத்தர்கிட்ட ஏதாவது சொல்லன்னும்னாலோ இல்ல எதுவும் கேட்கனும்னாலோ இல்ல நலம் விசாரிக்கனும்னாலோ கடிதம் எழுதினாங்க. அதுக்கு பதில் கடிதம் எழுதுவாங்க. ஒரு தகவல் பரிமாற்றத்துக்கு பல நாட்கள் பிடிச்சுது. அப்புறம் அது டெலிபோன் அச்சு. அது மூலமா சில மணி நேரத்துல தொடர்பு கொண்டு பேச முடிஞ்சுது.

இப்போ இமெயில் & செல்போன். ரெண்டுமே உறவுகள தொடர்புல வச்சிருக்குறதுக்கு ரொம்பவே பயன்படுது. குறிப்பா இமெயில். எந்த நாட்டுல இருந்தும் யாருக்கும் எதுவும் தெரியப்படுத்தவோ தெரிஞ்ச்சுக்கவோ (சில சமயம் முக்கியமான தகவல் பரிமாற்றத்துக்கும்) செலவே இல்லாம இமெயில் மூலமா தகவல் சொல்ல முடியும். இன்னும் ஒரு படி மேலே போயி இமெயில் என்பது ஒரு அதிகார பூர்வ ஊடகமாகவே ஆகிவிட்டது. கணினித் துறைன்னு மட்டுமில்ல, பல துறைகள்லயும் வேலைக்கு ஆள் எடுக்குறதுல இருந்து தொழிலாளர்களுக்கு வேலையை பகிர்ந்தளிக்கிறது அது இதுன்னு எத எடுத்தாலும் இமெயில்தான் எல்லாமே. ஒரு தொழிலாளி அந்த கம்பெனிய விட்டே வேற கம்பெனிக்கு போயிட்டாலும், ஏதும் தேவை வந்தால் இமெயில் மூலம்தான் பழைய கம்பெனிய தொடர்பு கொண்டாக வேண்டும். ஆக, இமெயில் என்பது நம் வாழ்க்கையில முக்கிய அங்கம்.

சரி, எதுக்கு இந்த வரலாறு இப்போன்னு யோசிக்கிறிங்க. நானே சொல்லிடறேன். எனக்கு சில (நெருங்கிய) நண்பர்கள் இருக்காங்க. அதுவும் அவங்க வேலை செய்றது எல்லாம் நம்ம துறையில்தான். ஆனா பாருங்க - நாம எதாவது இமெயில் அனுப்பினா, கெணத்துல போட்ட கல்லு மாதிரி ஒரு பதிலும் இருக்காது. மெயில படிச்சானா, இல்லியான்னே தெரியாது. நாமளும் கொஞ்ச நாள் பாத்துட்டு அடுத்த மெயில் அனுப்புவோம். இப்பவும் எந்த ரியாக்ஷனும் இருக்காது. சரின்னு நாமளும் விட்டுருவோம்; அவன்கிட்ட இருந்து எதுவும் நடக்க வேண்டியது இருந்தாலோ இல்ல அவன எதிர்பாத்து எதுக்காவது கத்துகிட்டு இருந்தாலோ, வேற எதாவது ஏற்பாடு செஞ்சுக்குவோம் (வேற வழி?). என்னிக்காவது அவன்கிட்ட போன்ல பேசும்போது அந்த இமெயில பத்தி கேட்டோம்னா "மெயில பாத்தேன், ரிப்ளை பண்ண மறந்துட்டேன்"ன்னு சொல்லுவான். இல்லன்னா "மெயில அப்பவே படிச்சேன்டா, ரிப்ளை பண்ணல, கொஞ்சம் பிஸிடா ... இப்போ அதுக்கென்ன?"ம்பான்.

இந்த மாதிரி நான் என்னோட ஒரு நண்பனை மட்டும் சொல்லல. என்னோட நெறைய நண்பர்கள் இப்பிடித்தான் இருக்காங்க. இவனுக்கு ரிப்ளை பண்ணக்கூடாதுன்னு மெயில படிச்சுட்டு டெலிட் பண்றவங்க யாரும் இல்லை, ஏன்னா எனக்கு எல்லாரையுமே நல்லா தெரியும் (நெருங்கிய நண்பர்கள்தான்).

கொஞ்சம் யோசிச்சு பாத்தா நாம பலப்பல விஷயங்களுக்கு மெயில் அனுப்புறோம். உதவியோ ஆலோசனையோ கேட்டு இருக்கலாம். சந்தோஷமான அல்லது சோகத்த பகிர்ந்துக்கற விஷயமா இருக்கலாம். அழைப்பிதழா இருக்கலாம். இன்பர்மேஷனா இருக்கலாம். பக்கத்து வீட்டுலயே இருந்தாகூட சில சமயம் சில விஷயங்கள சொல்றத விட எழுதுறது ஈஸியா இருக்கும். ஒரு எமர்ஜென்சி விஷயமா இருக்கலாம் (குரூப் மெயில்). நலம் விசாரிக்கிறதாக் கூட இருக்கலாம். எதுவா இருந்தா என்ன? படிச்சுமுடிச்சுட்டு ஒரு வரி (ஒரு வார்த்தையாவது) ரிப்ளை பண்றதுக்கு என்ன? அனுப்பினவனுக்கு ஒரு மரியாதையாவாவது இருக்குமில்ல? யாரும் நம்ம வீட்டுக்கு வந்தா கண்டுக்காம இருப்போமா?அதே மாதிரிதான், இமெயில் மூலமா தெரிஞ்சவரோ தெரியாதவரோ நம்மள தேடி வர்றாங்க, அவங்கள உபசரிக்க வேண்டாம், வாங்கன்னாவது கேட்கலாமில்ல? அட அதகூட விடுங்க - யாராவது நம்மகிட்ட பேசும்போது எந்த ரியாக்ஷனும் இல்லாம கம்முன்னா இருப்போம்? "ம்ம்ம்"ன்னோ இல்ல "சரி"-ன்னோ சொல்றதில்ல? அந்த மாதிரிதான். அட நிங்க பிஸின்னா கூட, "நான் இப்போ பிஸி"-ன்னாவது ஒரு ரிப்ளை பண்ணலாமில்ல? அதுக்கு மிஞ்சிப் போனா ஒரு பத்து வினாடி ஆகுமா? அதுக்கு கூடவா நமக்கு டைம் இல்ல?

அதே மாதிரி வர்ற எல்லா விதமான இமெயிலுக்கும் ரிப்ளை பண்ணிட்டு இருக்கக்குடாது. எதுக்கு/யாருக்கு ரிப்ளை பண்ணனும்/பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சிருக்கணும். சில பேர் அவங்க இமெயில் அக்கவுன்ட்ட பாக்குறதே இல்ல. இவங்க இதுக்கும் மேல. வீட்ட பூட்டிட்டு எங்கயோ போயிட்டா மாதிரி (இமெயில் அக்கவுண்ட்டே இல்லாதவங்கள உடுங்க). அவங்களை எல்லாம் என்ன பண்றது?

செலவில்லாம ஒரு விஷயத்த பகிர்ந்துக்க இமெயில் எவ்ளோ நல்ல விஷயம்? இண்டர்நெட்ல தேவை இல்லாம எவ்ளோ நேரம் செலவு பண்றோம்? நம்ம உறவுகள, அவங்க எண்ணங்கள பகிர்ந்துக்க இந்த இமெயில தினமும் ஒரு சில நிமிடங்கள் பயன்படுத்தினா என்ன?


அதே மாதிரி சிலர செல்போன்ல கால் பண்ணினா எடுக்க மாட்டாங்க. திருப்பி நமக்கு கால் பண்ணவும் மாட்டாங்க. (சில சமயம் எடுத்தாலும் "டேய் மச்சி, நான் இப்போ கொஞ்சம் பிசிடா... ஒன அவர்-ல நானே போன் பண்றேன்"-ன்னு சொல்லுவாங்க; ஒரு மணி நேரம் என்ன ஒரு நாளே வெயிட் பண்ணினாலும் நம்மள கால் பண்ண மாட்டாங்க). எதோ தெரியாத நம்பர்ல இருந்து வந்த கால்-னா கூட பரவாயில்ல. யார் பண்ணி இருக்காங்கன்னு தெரியும், "எதுக்கோ கால் பண்ணி இருக்கானே, நாம அட்டெண்ட் பண்ணலையே, கூப்பிட்டு என்னன்னு கேக்கலாம்"-ன்னு கொஞ்சம் கூட கவலைப்படுறது கிடையாது. திரும்பவும் நாமலே கால் பண்ணினாலும் திரும்பவும் பிஸி. அட கருமமே... இது எதோ ஒரு நாள்-(இல்ல எப்பவாவது)ன்னா பரவாயில்ல. எப்பவுமே இப்பிடித்தான்னா என்ன பண்றது?

நமக்கு தெரிந்தவர்களையும் நெருங்கினவர்களையும் விட்டு விலகி, அதுவும் அவங்களுக்கு ஒரு தேவைங்கற நேரத்துல அவங்களோட தொடர்பு எல்லைக்கு வெளில நின்னுகிட்டு என்ன பிஸியா இருந்து என்ன பிரயோசனம்? அப்பிடி சம்பாதிச்சுதான் என்ன புண்ணியம்?

............. யோசிக்கலாமே!!!

-சமுத்திரன்.

Sunday, July 25, 2010

சிங்கப்பூர் - என்ன கொடுமை சார் இது?

உணவு... உடை... உறைவிடம்...

இது மூணு்ல உறைவிடம் எவ்ளோ முக்கியம்னு சிங்கப்பூர் வந்த மொத ரெண்டே வாரத்துல தெரிஞ்சு போச்சு. சாப்பாடு & உடை பிரச்சினை இல்ல. தங்குறதுக்கு எடம் பாக்குறதுக்குள்ள மனசும் ஒடம்பும் பட்ட பாட்ட சொல்ல முடியாது - அப்பப்பா. வெளக்கமாவே சொல்றேன் - அதுக்குதான இந்த பதிவு.

சிங்கப்பூருக்கு நான் வந்தப்ப, எங்க கம்பெனில மொத 5 நாள் ஓட்டல்ல தங்குறதுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தாங்க (5 நாளுக்குள்ள ஒரு வீடு பாத்து போயிடுங்க, வீடு பாக்குறது இங்க ரொம்ப சுலுவம்ன்னுட்டானுங்க). யப்பா, இங்க வந்து பாத்தாத்தான் தெரியுது, வீடு பாக்குறது எவ்ளோ கஷ்டமான வேலைன்னு. வீடு எல்லாம் இருக்குது, ஆனா இவனுங்க சொல்ற ஒரு மாச வாடகைல ஒரு கிரவுண்ட் நெலமே நம்ம ஊர்ல வாங்கிடலாம். அட, எனக்கு குடுக்குற சம்பலத்துல பாதிய வாடகையா கேக்குறாங்கங்க. இப்பிடி வாடகை எல்லாம் தாறு மாறா ஏறினது எல்லாம் கடந்த 2 மாசத்துலதான்னு சொல்றானுங்க. என்ன கருமமோ. சரி விஷயத்துக்கு வருவோம்.

கம்பெனில குடுத்த 5 நாள் (ஒட்டல்ல தங்குறதுக்கு) முடிஞ்சு போச்சு, வீடும் கெடச்ச பாடில்ல. வீடு கெடைக்கிற வரைக்கும் யார்கூடவாவது தங்கிக்கலாம்னு பாத்தாலும் அதுக்கும் எங்கியும் வாய்ப்பு இல்ல. இங்க இருக்குற நண்பர்களும் எவ்ளவோ ட்ரை பண்ணி பாத்தாங்க - எதுவும் கெடைக்கல. எங்க கம்பெனில இதுக்கும் மேல என்னா ஆனாலும் ஓட்டல்ல தங்கறதுக்கு பணம் கெடயாதுன்னுட்டாங்க (நல்லா இருங்க, எனக்கும் காலம் வரும்டீ - revenge). இங்க இருக்குற ஓட்டல் வாடகைல, நாம  நம்ம கை காசு போட்டு ஒரு வாரம் கூட தங்க முடியாது.

என்னோட நல்ல நேரம்; நம் நண்பர் ஒருவர் இந்தியால இருந்து அவரோட கம்பெனில வேலை விஷயமா ஒரு வாரம் சிங்கப்பூர் வந்தார். அவரோட பெருந்தன்மையால, அவங்க கம்பெனி மூலமா அவருக்கு புக் பண்ணி இருந்த ஓட்டல்ல நானும் அந்த 1 வாரம் தங்கிக்கிட்டேன். அவர் கிளம்பற நாளும் வந்திடுச்சு. இன்னும் ஒரு எடமும் கெடைக்கல. வேற வழி இல்லாம, நண்பர் சுரேஷ், என்னை அவரோட ரூமுக்கு (எக்ஸ்ஷ்ட்ரா லக்கேஜா) கூட்டிட்டு போயிட்டார். அங்க ஒரு 2 நாள். அப்புறமா என் கூட வேலை செய்ற நண்பர் ரூமுல ஒரு வார அக்ரிமென்ட்ல தங்கினேன். அதுவும் முடியற நாள் வந்துடுச்சு. சிங்கப்பூர் மேல அடங்காத வெறுப்பு. வேலைய உட்டுட்டு திரும்பி ஊருக்கு போயிடலாமான்னு கூட யோசிச்சேன். prestige எடம் கொடுக்கல. ஒரு வழியா கல்லூரி நண்பர் சிவசங்கர் மூலமா அவரோட நண்பர் வீட்டுல ஒரு ரூம் கிடைச்சு, நான் வீடு பாக்குற வரைக்கும் தங்கியிருக்க அனுமதிச்சிருக்காங்க. இன்னிக்கு வரைக்கும் வீடு பாத்துகிட்டேதான் இருக்கேன், அமையல.

திரும்பி பாத்தா, மொத்தமா 3 வாரம்(தான்) ஓடி இருக்கு. ஆனா இந்த 3 வாரத்துல நான் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமில்ல. என்கிட்ட 2 பெரிய பெட்டி, 2 bag + 1 laptop இருக்குது. ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போறப்ப, அத்தன பெட்டியையும் தூக்கிட்டு போகனும். நண்பர்கள் அப்பப்ப உதவி பண்ணாங்க. இல்லைன்னா நான் என்ன பண்ணி இருப்பேன்னு தெரியல.

அடுத்த நாள் எங்க தங்குவேன்னு தெரியாது. அடுத்த நாளும் வந்திடும், எங்க போகப்போறோம்னு தெரியாது. ஏதாவது ஒரு ரூம் போலாம்னு பிளான் பண்ணவே முடியாது; அதா இதான்னு இழுத்துட்டே இருக்கும், ஏதாவது காரணத்தால கடைசி நாள் அந்த ரூமும் இல்லைன்னு ஆயிடும். ஒவ்வொரு நாளும் நரகம்தான் (அந்த வலி அனுபவிச்ச எனக்கு மட்டும்தாங்க தெரியும்). நான் அப்பப்ப பொலம்பினப்ப, நண்பர் சுரேஷ் எனக்கு குடுத்த தைரியம்தான் எப்படியோ சமாளிக்க வச்சுது. ஆனா தங்குறதுக்கு solid-ஆ ஒரு எடம் அமைஞ்ச உடனே மனசுக்குள்ள ஒரு திருப்தியும் நிம்மதியும் வந்துச்சு பாருங்க - ரூம் குடுத்த நண்பர் தெய்வமா தெரிஞ்சார், அவர் நல்லா இருக்கட்டும்.

இத்தன கஷ்டத்தையும் சமாளிச்சுட்டு நான் இங்க அப்பிடி என்னத்த கிழிக்கப் போறேன்னு உங்களுக்கு தோணும், எனக்கும் அதேதான் தோணுது. நண்பர்கள் எல்லாருமே, "வீடு கெடைக்கிற வரைக்கும்தான் இந்த பிரச்சினை, அதுக்கு அப்புறம் நல்லா இருக்கும்"-ங்குறாங்க, அதையும்தான் பாப்போம்.

-சமுத்ரன்

Sunday, July 18, 2010

மலேஷியா சுறுப்ப பயணம் - பகுதி 2

மொத நாள் கோலாலம்பூர சுத்தி பாத்துட்டு, அன்னிக்கு ராத்திரி பஸ்ல ஏறி 'லங்காவி' தீவுக்கு கெளம்பினோம். மனசுக்குள்ள ஒரு கேள்வி -> ஏறக்குறைய ரெண்டர நாள் அந்த தீவுல என்ன பண்ணப் போறோம்? அப்பிடியே பஸ்ல நல்லா தூங்கியாச்சு. அடுத்த நாள் காலங்கத்தால ஒரு கடலோரத்துல கொண்டு போயி வுட்டான். அங்கிருந்து கப்பல் (ferry) வழியா அந்த தீவுக்கு போனோம். 
கப்பல்ல போறது ரொம்ப புதுசா இருந்துச்சு. ஒரு தீவ முன்ன-பின்ன பாத்தது வேற இல்லியா, அதனால அத பாக்க ரொம்ப ஆர்வமா இருந்துச்சு. ferryல போவும்போது மதேஷும் சுந்தரும் அவங்கவங்க மிஸ்ஸஸ்ஸோட கடலை போட ஆரம்பிச்சிட்டாங்க (எனக்கு கொஞ்சம் நஞ்சம் இல்லைங்க, நெறையவே பொறாமைங்க). தூங்கிப் பார்த்தேன்! தூக்கம் வரல (எப்பிடி வரும்?), கேமராவ தூக்கிட்டு புறப்பட்டுட்டேன். கொஞ்ச நேரம் பாத்தேன், அவங்க கடலைய நிறுத்தின பாடில்ல (நமக்குதான் யாரும் உருப்பட்டா புடிக்காதே). கிட்ட போயி, "வெளில வந்து பாருங்க, பாக்குறதுக்கு சூப்பரா இருக்கு"-ன்னேன். உடனே கடலைய உட்டுட்டு அவங்களும் ஆளுக்கு ஒரு கேமராவ கைல எடுத்துகிட்டாங்க (முத்து... எப்பிடிடா? என்னமோ போடா).

லோக்கல் டூர்-னாலே பலவிதமான angle-ல படம் (படுத்தி) எடுப்போம், இங்க வந்து சும்மாவா இருப்போம்?. background-ல கடல்... ஆளாளுக்கு போஸ் குடுக்க ஆரம்பிச்சோம். கூட வந்தவனெல்லாம் ஒரு மாதிரியா எங்கள பாக்கற வரைக்கும் பலவிதமான போஸ்ல போட்டோ எடுத்தோம். ("கொஞ்சம் சிரிங்க", "இன்னும் கொஞ்சம் கிட்ட வாங்க", "பின்னாடி glar அடிக்குதுங்க, இந்த பக்கம் தள்ளி வாங்க"-ன்னு ஒண்ணுமே இல்லாததுக்கு வழக்கம்போல கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ?!). இதுல வேற, நான் ஒருத்தன்கிட்ட என் கேமராவ குடுத்து 'என்னை ஒரு போட்டோ எடு'-ன்னு கேட்டேன், (வேற வழி இல்லாம) அவனும் எடுத்தான்.

ஒரு மணி நேரத்துல தீவுக்கு போயாச்சு (மணி காலைல 8). 'லங்காவி' தீவோட மொத்த சுற்றளவு சுமார் 60 கி.மீ. இருக்கும்னு சொன்னாங்க. வாடகைக்கு ஒரு காரை எடுத்துட்டு (அதுக்கே 2 மணி நேரம் ஆயிடுச்சு)  நாங்க புக் பண்ணி இருந்த ஓட்டலுக்கு போனோம். குளிச்சு, லஞ்ச் முடிச்சுட்டு கெளம்பி நேரா Cable Car-க்கு கெளம்பினோம். போற வழி என்னமா இருக்குது... அந்த தீவு முழுக்க அப்பிடித்தான். சும்மா பச்ச பசேல்னு பாக்குறதுக்கே கண்ணுக்கு இதமா இருந்துச்சு. மனசுக்கும் சாந்தமா அவ்ளோ அமைதியா இருந்துது. அந்த ஊரு மக்களும் ரொம்ப வெகுளியா இருக்காங்க. அருமையான இடம்ங்க.

சரி, Cable கார்க்கு வருவோம். Cable கார்ல நம்மள ஏத்திக்கிட்டு கீழ இருந்து ஒரு பக்கா ஒயரமான மலைக்கு இழுத்துட்டு போறாங்க பாருங்க... பட்டாசு போங்க. செம த்ரில். அத பத்தி சொன்னா புரியாதுங்க, அனுபவிச்சு பாக்கனும். அதுல போவும்போது தலை, கை, கால் எல்லாம் ஒரு மாதிரி 'கிர்ர்ர்ர்'-ன்னு ஆவுது (தண்ணி போட்டா இப்பிடித்தான் இருக்குமோ?), காது அடைக்குது, நெஞ்சுல ஏதோ பண்ணுது - ஆனாலும் அது நல்லாத்தான் இருக்குது.

சுந்தர் என்னை மாதிரியே பயம் இல்லாத மாதிரி முகத்த வச்சுகிட்டு வந்தார். ஆனா மாதேஷ் முகத்துல நல்ல பயம், இதையே சாக்கா வச்சு அவரோட மிஸ்ஸஸ்ஸ அப்பப்போ அணைச்சுகிட்டார் (இதுக்காகவே அவர் பயந்தா மாதிரி நடிச்சாரோ?). ஆனாலும் அவர் பயந்து நடுங்குரத பாக்கவே ஜாலியா இருந்துச்சு. என் நேரம்!!! என்னோட மிஸ்ஸஸ்ஸ கூட்டிட்டு போக முடியாம போச்சு. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... சரி, அத உடுங்க ம்ம்ம், அவனவன் கவலை அவனவனுக்கு பெருசு.

கம்பி ஏதாவது அறுந்து, கார் அவ்ளோ ஆழத்துல கீழ விழுந்தா நாங்கெல்லாம் என்ன ஆஆஆஆ....ஆவோம்னு (?!) ஒருத்தர் மாத்தி ஒருத்தர் (ரொம்பவே நெகட்டிவா) பேசிகிட்டே போனோம், அது ஜாலியாவும்(?!) இருந்துச்சு. என் பக்கத்துல உக்காந்திருந்த சுந்தர் 'உம்'-ன்னே வந்தார். ஏன்னா, அவரோட மிஸ்ஸஸ் அவர் பக்கத்துல உக்காந்தா கார் பாலன்ஸ் இருக்காதுன்னு பிரிச்சு எதுத்தாப்ல இருந்த சீட்ல உக்கார வச்சுட்டோம் (ஹல்லோ, இதுல எந்த பிளானும் இல்லைங்க). இருந்தாலும் அவர், அவரோட மிஸ்ஸஸ் பயப்படுறத பாத்து உள்ளுக்குள்ள சந்தோஷப்பட்டா மாதிரி தெரிஞ்சுது, ஆனா வெளில காட்டிக்கல (பத்த வைக்க பாக்குறியே, பரட்ட). அப்பிடியே ஒரு கால் மணி நேரம், ஒரு மலை மேல போயி எறக்கிவுடுறாங்க (அப்பாடா-ன்னு இருந்துச்சு).

அவ்ளோ ஒயரத்துல இருந்து எங்க பாத்தாலும் அடர்ந்த காடுகள் + மலைகள் + கடல் + கடல் நடுவுல மலை மலையா தீவுகள். என்னமா இருக்குது போங்க. அங்க இருந்து திரும்பவும் Cable கார்ல ஏறி அதுக்கும் அந்தப்பக்கம் இருக்குற இன்னொரு மலை மேல கொண்டு போயி விட்டாங்க. அட.... நம்ம அஜித்தோட பில்லா படத்துல வர்ற arrow bridge அங்கதாங்க இருக்குது... அதுவும் ரெண்டு பெரிய மலைங்களுக்கு நடுவதான் இருக்குது. அந்த பாலத்துல நடக்கும்போது பாலம் லேசா ஆடுது, அதனால மொதல்ல நடக்குறதுக்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு, அப்புறமா பழகிடுச்சு. பாலத்துல ஒரு ரவுண்டு போனது நல்ல அனுபவம்.

கடைசியா, Cable கார்லயே ரொம்ப பாதுகாப்பா திரும்ப கீழ கூட்டிட்டு வந்து விட்டுடுறாங்க. மொத்தமா இதுக்கு கட்டணம் 25 மலேஷியா ரிங்கிட்தான் (இந்திய மதிப்புல சுமாரா 350 ரூபாய்). அனுபவிக்கிறதுக்கு என்னமா செஞ்சு வச்சிருக்கானுங்க, நம்ம ஊர்ல இப்பிடி எல்லாம் என்னைக்குதான் வர்றதோ?

அப்புறமா ஒரு கடற்கரைக்கு போனோம். அங்க கொஞ்ச நேரம் அப்பிடியே எதுவும் பேசாம உக்காந்திருந்தோம். சில கொழந்தங்க அந்த கடற்கரை மணல்ல வெளையாடுறத பாத்துட்டு இருந்தேன். என்னடா கொஞ்ச நேரமா சத்தத்தையே காணோம்னு திரும்பிப் பாத்தா, மதேஷும் சுந்தரும் ஆளுக்கொரு பக்கம் அவங்கவங்க மிஸ்ஸஸ்ஸோட "கண்ணும் கண்ணும் நோக்கியா"-ன்னு ரொமான்ஸ்ல எறங்கிட்டாங்க. கூப்பிட்டு பாத்தேன், அதுக்கு மாதேஷ், "முத்து, பீச்ச சுத்தி பாக்கனும்னு சொன்னீங்கள்ல, போயிட்டு வாங்க"-னாரு. "நான் எப்பங்க அப்பிடி சொன்னேன்???". பதில் இல்ல. சரி, டூர் வந்துட்டு இதெல்லாம் சகஜம்னு மனச தேத்திக்கலாம்னு பாத்தா, நம்ம பொலப்புதான் இவிங்கள பாத்து பொறாமைப்படுறதுலையே போயிரும்போல இருக்கே. நீங்களே கொஞ்சம் என் நெலமைய யோசிச்சு பாருங்க. இதுக்குதான், சௌந்தர் / சீனி / கோபால் -ன்னு யாரையாவது கூட வாங்கடான்னு கூப்பிட்டேன். எல்லாருமே கடைசில கால வாரிட்டாங்க. அப்பறம் வேற என்ன பண்றது? அவரு சொன்னா மாதிரியே நான் 'பீச்'-அ ஒரு ரவுண்டு வந்தேன். அவங்களாவே ஒரு வழியா எந்திருச்சு வந்தவுடனே (எவ்......ளோ நேரம்?) 'டின்னர்'க்கு கெளம்பிட்டோம்.

ஆனா, அன்னிக்கு மத்தியானம் உலகத்துக்கே தெரிஞ்ச முக்கியமான ஒரு விஷயம் எங்களுக்கு மட்டும் அது வரைக்கும் தெரியவே தெரியாது. அன்னிக்கு மதியம் 3 மணிக்கு மலேஷியா முழுக்க சுனாமி எச்சரிக்கை விட்டிருக்காங்க, அப்புறமா வாபஸ் வாங்கிட்டாங்களாம். விஷயம் தெரிஞ்சதும் 'பக்'-ன்னு ஆயிடுச்சு.

அடுத்த நாள் காலைல 'Island Hopping'-க்கு கெளம்பினோம். ஒரு சின்ன மோட்டார் படகுல (பத்து பேர் உக்காந்து போறா மாதிரி இருக்குது) அந்த தீவ சுத்தி கூட்டிட்டு போனாங்க. அன்னிக்கு சரியான மழை. ரொம்ப நேரமா மழை பின்னி எடுக்குது. இப்போதைக்கு நிக்கிறா மாதிரியும் தெரியல. நாங்களும் 'என்னடா இது'-ன்னு பொலம்பிகிட்டே படகுல ஏறினோம். 

கடல்ல பயங்கர அலை. எதையும் கண்டுக்காம படகோட்டி வேகமா படக ஓட்றான். சொல்லனுமா? படகு அப்பிடியே air-ல பறந்து உழுவுது, அப்புறம் அடுத்தடுத்த அலைமேல ஏறி திரும்ப ஒரு ஆட்டு ஆட்டி உழுவுது. கேப்பே இல்லாம ஆட்டுன ஆட்டுல, உசுர கைல புடிச்சுட்டு, பயங்கரமா கத்த ஆரம்பிச்சிட்டோம். ஆனா அந்த படகோட்டி, எதையும் கண்டுக்கல. 'எப்பிடியும் இன்னிக்கு ஆப்புதாண்டி'-ன்னு தோனுச்சு. இப்போ நெனச்சா கூட பயங்கரமா இருக்குது. ஆனா கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா அலை எதுவும் இல்லை, அங்க அமைதியா படகு போச்சு. அப்பிடியே கொண்டு போயி ஒரு கரைல எறக்கி விட்டான்.

அந்த சின்ன கடற்கரைல, மணல் வெள்ளையா இருக்குதுங்க, கடற்கரை ரொம்ப அழகா இருந்துச்சு. அங்க மக்கள் யாருமே இல்லை. ஆனா நாங்க போனதுக்கப்புறம் சிலர் வந்தாங்க. எல்லாருமே எங்கள மாதிரி சுற்றுலா வந்தவங்கதான்.

எங்க பாத்தாலும் மலை தீவுங்கதான் (ஒவ்வொரு மலையும் ஒரு தீவு). அந்த கடல் + வெள்ளை மணல் + கடற்கரை + மழை + மலை (தீவு) + மலை மேல இருந்த மேகங்கள் எல்லாமா சேந்து பாக்குறதுக்கு சும்மா சொர்க்கம் மாதிரி இருந்துச்சு. செம்ம குஷியாயிட்டோம். மழைக்கு நாங்க போட்டிருந்த முக்காட்டை எல்லாம் எடுத்து தூர போட்டுட்டு, free-யா மழைல நனைஞ்சுகிட்டு கடல்ல குதிச்சுட்டோம். மனசு கொழந்தையா மாறிடுச்சு (அடடா இதையெல்லாம் ஆராயக்கூடாது... அப்பிடியே ஒரு flow-ல சொல்லிட்டேன்). நீச்சல், குதிக்கிறது, ஓடுறது-ன்னு நல்லா ஆட்டம் போட்டோம்.

நேரம் போகப் போக அந்த இடம் இன்னும் அழகா தெரிஞ்சுது. அந்த எடத்த விட்டு வர்றதுக்கு எங்களுக்கு மனசே இல்லங்க. 1 மணி நேரம் கழிச்சு திரும்ப எங்கள படகு மூலமா  fresh water lake-ன்னு ஒரு எடத்துல கொண்டு போயி விட்டான். அந்த ஏரி மலைகளுக்கு நடுவுல இருக்குதுங்க. நாலு பக்கமும், மலை அந்த மலைகளுக்கு வெளிய கடல், உள்ள இந்த ஏரி. இந்த ஏரியோட தனித்துவம் என்னான்னா, நாலு பக்கமும் கடல் இருந்தாலும், இந்த ஏரி தண்ணி உப்பு கரிக்காது. இந்த ஏரில பெடல் போட், நீச்சல் எல்லாமே போலாம், ரொம்ப பாதுகாப்பாவும் இருந்துச்சு. இந்த ஏரில இருக்குற ஒரு மலை பாக்குறதுக்கு கர்பினிப்பெண் படுத்திருக்குறா மாதிரி இருக்குது (கீழ படத்த பாருங்க).

மறுபடியும் அப்பிடியே படகுல சுத்தி காட்டிட்டு, திருப்பி கொண்டு வந்து விட்டுட்டாங்க. அது வரைக்கும் மழை பெஞ்சுட்.........டே இருந்துச்சு.

மீதி நேரத்துல ரெண்டு கடற்கரை, ஒரு கோயில்னு ஒரு ரவுண்டு வந்துட்டு அடுத்த நாள் அங்கயிருந்து மனசே இல்லாம பினாங்கு தீவுக்கு மாதேஷ் குடும்பமும் நானும் புறப்பட்டோம் (சுந்தர் குடும்பம் அப்படியே சிங்கப்பூருக்கு விமானம் ஏறிட்டாங்க).2 நாள் போனதே தெரியலங்க.

லங்காவி தீவு பற்றிய சில பல குறிப்புகள்:
1. எந்த பக்கம் போனாலும் அழகுதான். கடற்கரை, பசுமை, அமைதி, சுத்தம், சுகாதாரம் இப்பிடி அடுக்கிகிட்டே போகலாம். எங்களுக்கு அங்க இருந்து கெளம்ப மனசே இல்லைங்கறதுதான் உண்மை.
2. அந்த தீவுக்கு வந்தவுடனே, ஒரு காரை வாடகைக்கு எடுத்துக்கிட்டு நாமலே ஓட்டிக்கிட்டு தீவுக்குள்ள போறதுதான் நல்லது. இந்திய டிரைவிங் லைசன்ஸ் வச்சிருந்தாலே போதும், காரை வாடகைக்கு எடுக்க முடியும். டிரைவிங் ரூல்ஸ்ம் இந்தியா மாதிரிதான் (ஆனா போலிஸ் அப்பிடி இல்லிங்க, ஜாக்கிரதை). கார் இருந்தா அங்க நாம நெனச்ச நேரத்துக்கு நெனச்ச எடத்துக்கு கார எடுத்துகிட்டு போயிட்டே இருக்கலாம். செலவும் கம்மி. டேக்ஸி எல்லாம் ரொம்ப காஸ்ட்லி. காரை ஒரு புரோக்கர்கிட்ட பேரம் பேசித்தான் வாடகைக்கு எடுக்ககனும், அதுக்குன்னே அங்க நெறைய பேர் இருக்காங்க. ரெண்டு பேர் மட்டுமே போனா, பைக் கூட வாடகைக்கு எடுத்துக்கலாம். அது இன்னும் செலவு கம்மி. நாங்க, 5 பேர் போறா மாதிரி ஒரு காரை (sentra) ஒரு நாளைக்கு 130 மலேஷியா ரிங்கிட்டுக்கு வாடகைக்கு எடுத்தோம்.

3. நெறைய தமிழ் மக்கள் இருக்குறாங்க. சில பேர் ஓட்டல்லயும் சில பேர் சிறு தொழில் செஞ்சுகிட்டும் வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்குறாங்க.
4. இங்கயும் விவசாயம் இருக்கு, பூர்வீக மக்கள் நெறையவே இருக்காங்க. அவங்களெல்லாம் ரொம்ப வெகுளியா இருக்குறாங்க.
5. மலேசியாவுக்கும் 'லங்காவி' தீவுக்கும் எந்த விதமான ரோடு பாதையும் இல்ல. எது/யார் வந்தாலும் போனாலும் விமானம் மூலமாகவோ, இல்ல கப்பல் மூலமாகவோதான் வரணும் போகணும்.
6. இந்த தீவுக்கு தினமும் நெறைய சுற்றுலா பயணிகள் வர்றாங்க. அதுவும் ஜோடியாதான் வர்றாங்க (அதனால அவங்க எப்பவும் ரொமான்ஸ் மூடுலதான் இருக்குறாணுங்க). நம்மள பொறுத்த வரைக்கும், தனியா போனாலும் சரி இல்ல ஜோடியா போனாலும் சரி, ஒரு 2-3 நண்பர்கள் / உறவினர்கள் குடும்பம் சேந்து gang-ஆ போனா நல்லா enjoy பண்ணலாம்.
7. ஜாலியா வெளையாடுறதுக்குன்னு நெறைய games / options இருக்கு. ஆனாலும் எதுவுமே செய்யாம சும்மா ஒரு கடற்கரையில அப்பிடியே உக்காந்து இருக்குறதுகூட இங்க இனிமையா இருக்கும்ங்க.
8. லங்க்காவி தீவுன்னாலே கழுகுதான் ரொம்ப பேமஸ். அந்த மலை தீவுகள்ல நெறைய கழுகுகள் இருக்குன்னு நினைக்கிறேன். அதோட நினைவா அங்க பிரம்மாண்டமான கழுகு சிலை ஒன்னு வச்சிருக்காங்க. அந்த சிலையோட வடிவமும் அத வச்சிருக்குற இடமும் அட்டகாசமா இருக்குதுங்க.

பினாங்கு தீவு மற்றும் புத்ரஜெயா நகரம் பற்றி அடுத்த பகுதியில்...

-சமுத்திரன்

Saturday, July 3, 2010

மலேஷியா - சுற்றுலா கட்டுரை 1

இந்த சுற்றுலாவிற்கு நானும் எனது நண்பர்களும் தயாரானதே ஒரு பெரிய கதை. அதை விடுத்து, மலேஷியா சுற்றுலாவின் சாராம்சத்தை சொல்கிறேன்.

திருச்சிலருந்து விமானம் வழியா கோலா லம்பூர் வந்தப்ப, காலைல மணி 1. ஊரே ஒளி வெள்ளத்துல மெதந்துச்சு. சாலைல பூரா வரிசையா வெளக்கு. மின் தடையே இந்த ஊர்ல (ஏன் நாட்டுலயே) இல்லயாம்பா. வந்த மொத நாளே வாயை பொளந்துட்டு காருல ஏறி ஊருக்குள்ள வந்தோம் (வழக்கம்போல விமான நிலையத்த, ஊர உட்டு ரொம்ப தூரம் தள்ளி வச்சிருக்காங்க).

அடுத்த நாள் காலங்கத்தால 5.30 மணிக்கே எழுப்பி, ரெட்டை கட்டிடத்த (petronas towers) பாக்க டிக்கெட் வாங்கனும்னு என்னையும் சுந்தரையும் அனுப்பி வச்சுட்டாங்க. சுமாரா ஒரு 7 மணிக்கு அங்க போனா, அங்க ஒரு 200 பேர் ஏற்கனவே வந்து வரிசைல நின்னுட்டிருந்தான். நாங்களும் போயி தூங்கிட்டே நின்னுட்டிருந்தோம். 9 மணிக்கு வந்து டிக்கெட் குடுக்க ஆரம்பிச்சான். அட....... காசு எதுவும் இல்லப்பா... சும்மாவே டிக்கெட் தரான். நமக்கு தோதான நேரத்த சொன்னா, ஒரு ஆளுக்கு 5 டிக்கெட் வரைக்கும் தரான். ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுந்தான் மேல ஏறி பாக்க அனுமதி, அதனாலதான் அப்பிடி கூட்டம்னு புரிஞ்சுது. வாங்கிட்டு வந்தா, அவ்ளோ நேரம் நின்னதால கால் பயங்கர வலி + பசி. சரவண பவன் பக்கத்துலயே இருந்துச்சு, சாப்பிட்டுட்டு எல்லாருமா மதியானம் திரும்ப அங்க போனோம்.
அம்மா..டி!!! காலைல தூக்கம் + பசில சரியா பாக்கல, அந்த கட்டிடங்கள் ரண்டும் என்னா ஒயரம்?! ரண்டுக்கும் நடுவுல அடுத்தடுத்ததா 2 மாடிகளுக்கு இணைப்பு பாளம் வேற. பாக்குறதுக்கே அவ்ளோ அழகு. அந்த கட்டிடத்துல மொத்தமா 84 மாடியாம். டிக்கெட் எடுத்திருந்தா அந்த இணைப்பு தளம் வரைக்கும் (34வது மாடின்னு நினைக்கிறேன்) கூட்டிட்டு போயி காட்டுறான். இடையில அந்த கோபுரம் பத்தியும், பெட்ரொனஸ் (petronas) கம்பெனி பத்தியும் வீடியோல சொல்றான் (அடடா, விளம்பரம் ஆச்சுல்ல). மேல ஏறி பாத்தா, அந்த ஊரே பூறா அவ்ளோ அழகா தெரியுது. எங்க கேமராவுக்கு அங்கதான் மலேஷியாவுல மொத வேல குடுத்தோம். எந்த கட்டிடத்த பாத்தாலும் சாதரணமாவே 50-60 மாடிதான். 10-15 மாடி கட்டிடத்த குடிசை-ன்னு சொல்றங்களோ என்னமோ...




அடுத்தது நாங்க போனது முருகன் கோயில்.
கேள்விப்பட்ட மாதிரியே ரொம்ப ஒயரமான முருகன் சிலை. ஆனா, அந்த சிலைக்கு யாரும் பூஜை செய்றதில்ல. அந்த சிலைக்கு பின்னாடி இருக்குற குகைல இருக்குற சாமிகளையும், சிலைக்கு பக்கத்துல இருக்குற மண்டபத்துல இருக்குற சாமி சிலைக்குந்தான் பூஜை பன்றாங்க.
அவ்ளோ பெரிய முருகன் சிலைக்கு அந்த முகந்தான் கொள்ளை அழகு. ரசிச்சு முகத்த செதுக்கி இருக்காங்க. பின்னாடி இருக்குற குகை அவ்ளோ பெரிசு போங்க. நாங்க எதிர்பார்க்கவே இல்ல. சின்ன ஓட்டைங்க வழியா உள்ள விழற சூரிய ஒளி ரொம்பவே அருமை. குகையோட செவுரெல்லாம் (அட, சுவர்-ங்க) இயற்கையா அழகா இருக்கு. கண்டிப்பா நம்ம குடும்பம், நண்பர்ங்க எல்லாம் இங்க வந்து பாக்கனுங்க.

அந்த ஊர்ல இருக்குறவங்கள்ள 50%க்கும் மேல ரொம்ப நல்லா தமிழ் (தஞ்சாவூர், புதுக்கோட்டை வழக்கு தமிழ்) பேசுராங்கப்பா. கோயிலுக்கு பக்கத்துல இருக்குற அத்தன ஓட்டலும் தமிழ் ஓட்டல்தான். அங்கதான் நாங்க மத்தியானம் சாப்பாடு சாப்பிட்டோம், ருசி சொல்லிகிறா மாதிரி இல்லைன்னாலும், வயித்துக்கு மோசமில்லை (தமிழ்-லாம் நல்லா பேசறீங்க, சாப்பாட்டு ருசிய கொஞ்சம் நமக்கேத்தா மாதிரி பண்ணுங்களேம்பா).

அடுத்ததா நாங்க அன்னைக்கு ராத்திரி கெளம்புனது 'லங்காவி' (Langkawi)-ங்குற தீவுக்கு. அத பத்தி அடுத்த பகுதில பாப்போம்.

-சமுத்ரன்