என் முகம் உன் பார்வையில் இருந்தபோது
சின்ன பரு கூட முளைக்கும் முன் அழிக்கப்படும்
இங்கு மணிக்கணக்கில் தேடுகிறேன்
கண்ணாடியில் என் முகமே தெரியவில்லை
என்னை எனக்கு காட்ட கண்ணாடி வேண்டாம்
நீ என் முன்னாடி வேண்டும்
ஓய்ந்து அந்தி மாலை வீடு திரும்புகையில்
வாசலிலேயே புன்னகைப் பந்தி வைத்து புத்துயிர் ஊட்டுவாய்
இங்கு நான் ஓய்ந்த போதெல்லாம் அலைபேசியில் உன் குரலும்
அதன் வழியே நான் காணும் உன் முகமும்
என் சோர்வைத் தகர்க்க போதுமானதாயில்லை
தினமும் என் விருப்பம் அறிந்து சமைத்து வைத்து
அளந்து (உணவு கட்டுப்பாடு) அதில் ஆசை கலந்து பரிமாறுவாய்
இடைவிடா என் கெஞ்சலில் உணவுக் கட்டுப்பாட்டை தளர்த்துவாய்
இங்கு அதே உணவு வகைகள் கண் முன்னே இருக்கிறது
அளவில்லாமல் அதை புசிக்கும் வாய்ப்பும் வாய் முன்னே இருக்கிறது
இன்று புரிகிறது எனக்கு - அந்த உணவோ, ருசியோ விஷயமல்ல
அதில் நான் எனை அறியாமல் கொண்டாடிய உன் அன்பு
நம் குழந்தைக்கு நீ பாடிய தாலாட்டில்
அவனை விட நான் தூங்கியதுதான் அதிகம்
இன்றும் நான் படுக்கையில் என் காதுகளில் ரீங்காரமாய் உன் குரல்
அனைத்தையும் மறந்து உறங்கச் செய்கிறது
விடியலையே பார்த்ததில்லை நான்
ஆம், விடிந்தும் வெகுநேரம் நான் உறங்க
செல்லமாய் கடிந்து எனை எழுப்புவாய்
உன்னை ஏமாற்றி இழுத்துப் போர்த்தி நான் தூங்குவேன்
விடாமல் எழுப்பி எனை வேலைக்கு அனுப்புவாய்
இங்கே எழுப்பவே ஆளில்லை, நான் விடிந்தபின் தூங்குவதுமில்லை
சில நாள் நான் தாமதமாக வீடு வருவேன்
அன்று மிளகாய் பொடியை மூக்கின் மேல் தெளித்து நிற்பாய்
இன்று தினமும் நான் முன்னமாகவே வீடு வருகிறேன்
மிளகாய் பொடியை என் மூக்கின் மேல் தெளித்தாற்போல் உணர்கிறேன்
சில சமயம் சிறு சண்டையில் நான் உன்னை திட்டிவிடுவேன்
இருவரும் பேசிக் கொள்ளாமல் சில நிமிடங்கள் ஓடும்
பின் ஏதும் நடக்காததுபோல் நமை அறியாமல் பேசிக்கொள்வோம்
இன்று நமக்குள் சண்டை ஏதுமில்லை ஆனால் மணிக்கணக்கில் பேசிக்கொள்வதில்லை
"என்ன செய்வது, காலத்தின் கட்டாயம்" என நான் சொல்ல மாட்டேன்
இந்த விளையாட்டை தொடங்கி வைத்தவன் நான்தான்
முடித்து வைக்க வேண்டியவனும் நான்தான்
பொறுக்க வேண்டியது இன்னும் சில நாட்கள் மட்டும்தான்!
-சமுத்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment