பத்து மாத சுமைக்குப் பின்
உன் உயிருடன் விளையாடிய எனது பிறப்பை
இப்போது நினைக்கவே நடுங்குது மனசு
சமீபம் வரை இதை பெரிதாக நினைக்கவில்லை நான்
யாரேனும் சொல்லக் கேட்கும்போது கூட
அதை ஒரு செய்தியாக மட்டுமே மதித்திருக்கிறேன்
என் பிறப்பிற்குப் பின் நீ 'கோமா'வில் சில நாள் வாழ்ந்த அச்சம்பவத்தை
இன்றுவரை எங்குமே நீ பெரிதாக காட்டிக்கொண்டது கூட இல்லை
என்னதான் நினைத்திருப்பாய் அந்தத் தருணத்தில்?
வளரும்போது கேட்டது கிடைக்கும் செல்லப் பிள்ளைதான் நான்
சமீபத்தில் 'எள்ளுருண்டை சாப்பிட ஆசை' என
எங்கோ யாரிடமோ நான் சொல்லியதாய் நியாபகம்...
அடுத்த நாளே என் கண் முன் எள்ளுருண்டை விருந்து
கடும் வேலைகளுக்கிடையிலும் எப்படி, எப்போது அதை செய்தாய்
என்ற ஆராய்ச்சியெல்லாம் நான் செய்ததில்லை!
'உனக்கு என்னம்மா வேணும், வாங்கிட்டு வரேன்?' என நான் கேட்டால்
'எனக்கெதுக்கு கண்ணு, அந்த காசுல நீ எதையாவது வாங்கிக்க'
என்று எப்படி உன்னால் பத்து வருடமாக தொடர்ந்து சொல்ல முடிகிறது?
அதையும் கேட்டுக்கொண்டு நான் இன்னும் எதுவுமே உனக்காக வாங்கியதில்லை!
காமாலையில் நெடுநாள் நான் உணவில் கடும்பத்தியம் காத்தபோது
எனக்காக என்னுடனே நீயும் பத்தியம் காக்க யோசித்ததில்லை!
பலநேரம் எவனையோ திட்ட முடியாமல் உனை திட்டி இருக்கிறேன்
சம்பந்தமேயில்லாத என் கடுகடுப்புப்புக்கு உன்னிடம் ஒரு அதட்டல் கூட இல்லை!
இதற்கெல்லாம் உன்னிடத்தில் மன்னிப்பும் கேட்டதில்லை
இப்போது கேட்கவும் தோணவில்லை
எப்போதும் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும்
'அம்மாதான' என்று ஒருவித உரிமையுடனும் பொறுப்பின்மையுமுடன்தான்
உன்னுடன் இன்றுவரை பேசியும் பழகியுமிருக்கிறேன்.
என்னை இப்படி எதற்கும் அனுமதித்து வளர்த்ததுதான் உன் தவறா?
உண்மையிலேயே என்மேல் உனக்கு
கொஞ்சம் கூட கோபமோ வருத்தமோ இல்லையா?
உன்னைப் போல் - அப்பா போல்,
எங்களால் எம் பிள்ளைகளிடம் இருக்க முடியுமா?
காலம்தான் பதில் சொல்லணும்.
-சமுத்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment