Wednesday, October 6, 2010

அம்மாயி... தாத்தா... ஊர்ல... போலாம்...

நாமெல்லாம் சென்னை / பெங்களூர் மாதிரி வெளியூருல வேலை செய்யுற கோஷ்டிங்குறதால, விடுமுறைல சொந்த ஊருக்கு போறது எப்பவுமே விசேஷம்தான். பெங்களூர்ல இருக்கும்போது, ஊருக்கு போறோம்னு முடிவாயிடுச்சின்னா எனக்கும், என் மனைவிக்கும் ரொம்பவும் குஷியாயிடும். அடிக்கடி (மாசத்துக்கு ஒரு தடவையாவது) ஊருக்கு கெளம்பிடுவோம்.
எங்க குஷிக்கு ரெண்டே காரணந்தான்:
1. சொந்தக்காரங்க எல்லாரையும் பாக்கலாம்
2. எங்க மேல எல்லாருமே (இன்னும் குழந்தைங்களா நெனச்சு) பாசத்தை பொழிவாங்க.

அதெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஊர்ல அப்பிடியே வெளில போகும்போது சொந்தக்காரங்க, பக்கத்து வீட்டுக்காரங்க, தெரிஞ்ச்சவங்கன்னு எல்லாருமே நலம் விசாரிப்பாங்க. ஆனா என்ன, எல்லாருமே சொல்லி வச்சா மாதிரி, ஒரே மாதிரியான கேள்விங்க கேப்பாங்க:

கேள்வி: கண்ணு, நல்லா இருக்கீங்களா?
பதில்: நல்லா இருக்கிறங்க

கேள்வி: ம். எப்ப கண்ணு வந்திங்க?
பதில்: நேத்து ராத்திரிங்க.

கேள்வி: எத்தன நாளு கண்ணு லீவு?
பதில்: வழக்கம் போல இன்னிக்கும் நாளைக்குந்தாங்க லீவு (சனி & ஞாயிறு)

கேள்வி: அப்ப... சோமாரக்கெளம (திங்கட்கிழமை) வேலைக்கு போவுனும்?
பதில்: ஆமாங்க, நாளான்னைக்கு காத்தால நேரமா கெளம்பணுங்க. அப்புறம், நீங்க நல்லா இருக்கீங்களா?

கேள்வி: ம். எங்க கண்ணு மழையே பெய்ய மாட்டேங்குது, அங்கயாவது (பெங்களூர்) மழை பேஞ்சுச்சா?"
பதில்: அங்கயும் ஒண்ணும் சொல்லிக்கிறா மாதிரி பேயிலிங்க

கேள்வி கேட்டவர்: ம்ம். அதான பாரு கண்ணு.

இத்தோட பல பேர் முடிச்சுக்குவாங்க. ஆனா சில பேர் அடுத்த கட்டத்துக்கு போவாங்க:

கேள்வி: ஏங்கண்ணு... உங்குளுக்கு அங்க என்ன வேல?
பதில்: அதான், கம்பியூட்டர் வேலதாங்க.

கேள்வி: கம்பியூட்டர்ல அப்பிடி என்ன பண்ணுவிங்க?
பதில்: அது.... ம்ம்ம்ம். அவங்க கேக்குற புரோகிராம் பண்ணி குடுக்குணுங்க.

கேள்வி: ஊஹூம். சேர் சேர்.

நான் மட்டும் தனியா வெளியூருக்கோ வெளி நாட்டுக்கோ போயிட்டு வந்திருந்தேன்னா, அம்மா/சித்தி/அத்தை/பாட்டி எல்லாரும் போன்லையும் சரி, ஊருக்கு திரும்பினதுக்கப்புறமும் சரி, இந்த கேள்விய கண்டிப்பா கேப்பாங்க: "சாப்பாடெல்லாம் பரவாயில்லியா? நம்ம ஊரு சாப்பாடு கெடைக்குதா? அரிசி, பருப்பு, தக்காளி எல்லாம் அங்க என்ன வெல?" :)

எங்க (அப்பாவ பெத்த) பாட்டி, நாங்க சிங்கப்பூர் வந்த பின்னாடியும் இன்னமும் சலிக்காம நான் ஒவ்வொரு தடவ ஊருக்கு போறப்பவும் அதுக்கு முன்னாடி கேட்ட அதே கேள்விய மாறாம கேப்பாங்க. போன தடவ நான் ஊருக்கு போனப்ப நடந்த உரையாடல் இது:

பாட்டி: அங்க எத்தன மணிக்கு பொறப்பட்ட?
நான்: நேத்து சாங்காலம்
பாட்டி: நேத்து சாங்காலம் பொறப்புட்டு, இன்னிக்கு காத்தாலதான் வர முடிஞ்சிச்சா? கப்பல்லையா வந்த?
நான்: ஆமாங்காத்தா. அது கப்பல் இல்ல, எரோபிலான்
பாட்டி: என்ன எளவோ போடா. அங்க பஸ்ஸுல எல்லாம் போவ முடியாதா?
நான்: ஆஹாம், எரோபிலான்லதான் போவ முடியும்.
பாட்டி: அதுவும் நம்ம ஊரு மாதிரிதான் இருக்குதா?
நான்: இத விட நல்லாவே இருக்கும்
பாட்டி: அட, அங்கயும் வெவசாயம் பண்றாங்களா?
நான்: இல்லைங்காத்தா, எல்லாமே இங்க இருந்துதான் போவுது
பாட்டி: வெவசாயம் பண்ணாம எப்பிடிடா பொழைக்கிறாங்க? அப்ப மாடு-கண்ணெல்லாம் அங்க இல்லியா?
நான்: இல்ல.
பாட்டி: ஊடெல்லாம் பாத்துட்டியா - வாடகை எவ்வளவு?
நான்: பாத்தாச்சு, வாடகை அம்பதாயிரம்.
பாட்டி: மாசத்துக்கா? வருசத்துக்கா?
நான்: மாசத்துக்குதாங்காத்தா
பாட்டி: ஊட்டு வாடகையே அம்பதாயிரமா? கம்மியா எல்லாம் இல்லியா?
நான்: இல்லிங்காத்தா. இதுதான் கம்மி அங்க.
பாட்டி: ம். இத்தன காசு போட்டு அதென்னடா வூடு? சம்பளமெல்லாம் சேத்தி தராங்களா?
நான்: அதுக்கு தவுந்தா மாதிரி சம்பளம் சேத்தி தருவாங்காத்தா.
பாட்டி: ம். போயிட்டு ஒரு வருஷம் கழிச்சுதான் வருவீங்கன்னு உங்கப்பன் சொன்னான்?
நான்: இல்ல இல்ல... மூணு-நாலு மாசத்துக்கு ஒரு தடவ வருவோம், பக்கந்தான...?!?!
பாட்டி: என்னமோ... புள்ளைங்கள எல்லாம் பாத்து கூட்டிட்டு போயிட்டு வா.
நான்: சரிங்காத்தா.

எப்ப ஊருக்கு போனாலும் திரும்பி பெங்களூருக்கோ, சிங்கப்பூருக்கோ கெளம்பும்போது மனசு கொஞ்சம் கனமாவே இருக்கும். விருப்பமில்லாம கெளம்பி வருவோம்.

பி. கு.: நம்ம பையனுக்கு ஊருக்கு போறதுன்னா அவ்ளோ குஷி. அவர் ஊர்ல ஜாலியா வெளையாடலாம், ஓடி வெளையாட எல்லை எதுவும் கெடையாது. தாத்தாவும் பாட்டியும் கேட்டதை எல்லாம் செய்வாங்க. தெனமும் சொந்தக்காரங்க யாராவது பாக்குறதுக்கு வந்துட்டே இருப்பாங்க. கூட வெளையாடுறதுக்கு அவரோட வயசுக்கு ஆள் இருக்குது.
எங்ககூட வரும்போது ரொம்ப குஷியா வந்துட்டார், ஆனா
இப்ப சிங்கப்பூர் வந்த பின்னாடி, எப்பவாவது "அம்மாயி... தாத்தா... ஊர்ல... போலாம்..."-ன்னு சொல்லுவான். கஷ்டமா இருக்கும்.
ம்ம்ம்ம். அடுத்த தடவ ஊருக்கு போற வரைக்கும் இந்த பசுமை நெனப்புலேயே காலத்த ஓட்ட வேண்டியதுதான்.

-சமுத்திரன்.

No comments:

Post a Comment