Sunday, October 24, 2010

அம்மா

பத்து மாத சுமைக்குப் பின்
உன் உயிருடன் விளையாடிய எனது பிறப்பை
இப்போது நினைக்கவே நடுங்குது மனசு

சமீபம் வரை இதை பெரிதாக நினைக்கவில்லை நான்
யாரேனும் சொல்லக் கேட்கும்போது கூட
அதை ஒரு செய்தியாக மட்டுமே மதித்திருக்கிறேன்

என் பிறப்பிற்குப் பின் நீ 'கோமா'வில் சில நாள் வாழ்ந்த அச்சம்பவத்தை
இன்றுவரை எங்குமே நீ பெரிதாக காட்டிக்கொண்டது கூட இல்லை
என்னதான் நினைத்திருப்பாய் அந்தத் தருணத்தில்?

வளரும்போது கேட்டது கிடைக்கும் செல்லப் பிள்ளைதான் நான்
சமீபத்தில் 'எள்ளுருண்டை சாப்பிட ஆசை' என
எங்கோ யாரிடமோ நான் சொல்லியதாய் நியாபகம்...
அடுத்த நாளே என் கண் முன் எள்ளுருண்டை விருந்து
கடும் வேலைகளுக்கிடையிலும் எப்படி, எப்போது அதை செய்தாய்
என்ற ஆராய்ச்சியெல்லாம் நான் செய்ததில்லை!

'உனக்கு என்னம்மா வேணும், வாங்கிட்டு வரேன்?' என நான் கேட்டால்
'எனக்கெதுக்கு கண்ணு, அந்த காசுல நீ எதையாவது வாங்கிக்க'
என்று எப்படி உன்னால் பத்து வருடமாக தொடர்ந்து சொல்ல முடிகிறது?
அதையும் கேட்டுக்கொண்டு நான் இன்னும் எதுவுமே உனக்காக வாங்கியதில்லை!

காமாலையில் நெடுநாள் நான் உணவில் கடும்பத்தியம் காத்தபோது
எனக்காக என்னுடனே நீயும் பத்தியம் காக்க யோசித்ததில்லை!
பலநேரம் எவனையோ திட்ட முடியாமல் உனை திட்டி இருக்கிறேன்
சம்பந்தமேயில்லாத என் கடுகடுப்புப்புக்கு உன்னிடம் ஒரு அதட்டல் கூட இல்லை!

இதற்கெல்லாம் உன்னிடத்தில் மன்னிப்பும் கேட்டதில்லை
இப்போது கேட்கவும் தோணவில்லை

எப்போதும் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும்
'அம்மாதான' என்று ஒருவித உரிமையுடனும் பொறுப்பின்மையுமுடன்தான்
உன்னுடன் இன்றுவரை பேசியும் பழகியுமிருக்கிறேன்.

என்னை இப்படி எதற்கும் அனுமதித்து வளர்த்ததுதான் உன் தவறா?
உண்மையிலேயே என்மேல் உனக்கு
கொஞ்சம் கூட கோபமோ வருத்தமோ இல்லையா?

உன்னைப் போல் - அப்பா போல்,
எங்களால் எம் பிள்ளைகளிடம் இருக்க முடியுமா?
காலம்தான் பதில் சொல்லணும்.

-சமுத்திரன்

Wednesday, October 20, 2010

நிஞ்சி

"நிஞ்சி" - "உன்னோட பேர் என்ன?"ன்னு என்னோட மகனைக் கேட்டா, அவனோட பதில் இது.

இதே வயசுள்ள என் நண்பர்ங்களோட குழந்தைங்க எல்லாம் நெறைய வார்த்தைங்க அழகழகா பேசுறத பாத்தா, நம்ம பையனும் எப்போ இப்பிடி பேசுவான்னு ஆசையா இருக்கும். இப்ப இந்த ஒரு மாசமா இவனும் நெறைய பேசறான். என்ன வார்த்தை சொன்னாலும் திருப்பி சொல்றான் அல்லது சொல்ல டிரை பண்றான். பல சமயங்கள்ல எதையாவது அவனாவே நம்மகிட்ட சொல்றதுக்கு டிரை பண்ணுவான், அதையும் கைய கால எல்லாம் ஆட்டி ஆட்டி சொல்லுவான் - அவன் சொல்ல வர்றத அவன் கை-கால் ஆட்டுறத வச்சே புரிஞ்சுக்கலாம். (மோனோ ஆக்டிங்ல   கலக்கப் போறான்).

சமீபத்துல ஒரு நாள், நான் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தேன். மனைவியும் மகனும் ஆளுகொண்ணா அவங்க வேலை ஏதோ பண்ணிட்டு இருந்தாங்க. நான் போன உடனே "ராஜா... பால் வெளையாடலாமா?"-ன்னு கேட்டேன். உடனே என் மனைவி, "அப்பாவ கை கால எல்லாம் கழுவிட்டு வர சொல்லுங்க"ன்னு என்னோட மகனைப் பாத்து சொல்ல, அவன் என்கிட்டே வந்து "அப்பா... அப்பா... கையீ காலு"-ன்னான். "கையீ காலுக்கு என்னம்மா?"-ன்னு கேட்டேன். "அப்பா... கையீ காலு..."-ன்னு சொல்லிட்டு அவனோட கை கால தேச்சு காட்டினான். நானும் விடாம புரியாத மாதிரி இருக்க, அவன் என்னைய கைய புடிச்சு கூட்டிட்டு போயி பாத்ரூம் கதவ தெறந்து என்னை உள்ள கொண்டு போயி விட்டுட்டு வந்துட்டான். :)

சுவாரஸ்யமான இன்னொரு சம்பவம் - போன வாரம் நாங்க மூணு பேரும் நண்பன் வீட்டுக்கு போயிருந்தோம். அவங்க வீட்டுக்கு வந்த இன்னொரு நண்பனோட பையன்கூட இவனுக்கு சண்டை வந்து இவன் அவனை அடிச்சிட்டான். அப்புறமா சமாதானம் ஆயி வெளையாடினாங்க. வீட்டுக்கு வந்ததும் "எதுக்கு அந்த அண்ணாவ அடிச்ச? யாரையும் அடிக்கக் கூடாதுன்னு எத்தன தடவ சொல்றது?"ன்னு குரலை கொஞ்சம் ஏத்தி கேட்டேன். உடனே அவங்க அம்மா பக்கம் திரும்பி "அம்மா... அம்மா... அண்ணா"-ன்னு நிறுத்தினான். மனைவி, "அண்ணாதான், எதுக்கு அண்ணாவ அடிச்சன்னு அப்பா கேக்கறாங்க"ன்னு மனைவி சொல்ல, "அண்ணா கார் ஓட்டி, நானு டேயினு (டிரெயின்) ஓட்டி. அப்பம் (அப்பறம்) அண்ணா டேயினு ஓட்டி. நானு? டமானு. அப்பா... திட்டி..." - முதல் முதலா ஒரு நிகழ்ச்சிய அவனாவே சொன்னான். மனைவி உடனே "அண்ணா டிரெயின ஓட்டினா, நீ கார ஓட்ட வேண்டியதுதான... அதுக்கெல்லாம் அண்ணாவ அடிக்கிறதா?"-ன்னு கேட்க, "அண்ணா கார புங்கி (பிடுங்கி)..."-ன்னு குரலை டல்-லா வச்சுகிட்டு அவன் சொன்னப்ப நானும் மனைவியும் ஆகாயத்துல பறந்துகிட்டிருந்தோம்.

அவருக்கு கார், பஸ், லாரி, பிளைட் ஓட்டுறது மாதிரியே பந்த உதச்சிகிட்டு வெளையாடுறது-ன்னா ரொம்ப பிடிக்கும். பந்து விளையாட என்னை அவன் கூப்பிடுற அழகே தனிதான். 'ஒதைச்சு வெளையாடலாம்'-ன்னு சொல்ல வராது. அதனால, "அப்பா... எந்தி(எந்திரி)... பாங்க(வாங்க)... பால்"-ன்னு சொல்லிகிட்டே கால தூக்கி உதச்சி காட்டுவான். அத திரும்ப திரும்ப ரசிக்கிறதுக்காகவே "என்னப்பா?"-ன்னு கேட்டு அப்படியே உட்கந்திருப்பேன். அவனும் விடாம அதே மாதிரி திரும்ப கூப்பிடுவான். ஆனா 2-3 தடவைக்கு மேல கூப்பிட்டு நான் வரலைன்னா அப்பிடியே கீழ படுத்துட்டு அழ ஆரம்பிச்சுடுவான். :)

இன்னும் இந்த மாதிரி பலப்பல கதைங்க இருக்கு.

"அப்பா, பா........ங்க",
(அவராவே அவர் முகத்த மூடிகிட்டு) "நிஞ்சிய கா...னாம்?"
"அம்மா, தூ...யி, கீ...ழ, போ...லாம்" (கீழ தூரி வெளையாட போலாம்)
"ஈ...ட்டுக்கு போ...லாம்" (வீட்டுக்கு போலாம்)
"பஸ்ல போ...லாம்" (பஸ்ல ஏறி போலாம்)
"அப்பா, ஆபீஸ் போ...ங்க. கேக்(cake) ஆ...ங்கி(வாங்கி) பா...ங்க(வாங்க)"
(குக்கர் விசில் சத்தம் கேக்கும்போது) "அம்மா, ஆ...ப்பு இசிலு. ஆப் பண்ணு போ...ங்க"-ன்னு அவனோட மழலை குரல்ல ஒவ்வொரு வார்த்தையோட மொத எழுத்த ராகம்போட்டு இழுத்து சொல்றத நாள் முழுக்க கேட்டுகிட்டே இருக்கலாம்.

இதுல அப்பப்ப மிமிக்ரி கூட பண்ணுவார். அவன் பசியா இருக்குறப்ப, மனைவி அப்பத்தான் பால் காய வச்சு ஆத்திகிட்டு இருப்பாங்க. இவனுக்கு பசியில பால் ஆற வரைக்கும் பொறுமை இருக்காது "ஊத்தி... ஆத்தி..."-ன்னு அழுதுகிட்டே சொல்லுவான். பால் குடிச்சுட்டு ஜாலியா இருக்குறப்போ, "ராஜா, எப்பிடி அழுதுகிட்டே பால சிக்கிரமா ஆற வைக்க சொன்னீங்க?"-ன்னு கேட்டா அவன் அப்போ எப்பிடி அழுதுகிட்டே "ஊத்தி ஆத்தி"-ன்னு சொன்னானோ அதே மாதிரி முகத்தையும் குரலையும் மாத்தி சொல்லுவான்.

எப்பவாவது அவன் குறும்பு பண்ணி, அதுக்கு நாங்க அவனைத் திட்டி / அடிச்சு புட்டு, அவன் அழறதுக்கும் முன்னாடி எங்க மனம் வாடுறத எப்பிடி நிறுத்துறதுன்னுதான் எங்களுக்கு வழி தெரியல. :)

-சமுத்திரன்

Saturday, October 9, 2010

கொஞ்சம் பிஸியா இருக்கேன்... எதாவது அர்ஜென்ட்டா?

ஆபிஸ்ல, சாங்காலம் மணி 5 இருக்கும். டீ குடிக்க போலாம்னு டீம்ல கூப்பிட்டதால நானும் அவங்க கூட கெளம்பினேன். டீ குடிச்சுகிட்டே அன்னிக்கு நடந்த கிரிக்கெட் பத்தி பேசிட்டு இருந்தோம். ஆளாளுக்கு ரொம்ப ஆர்வமா பேசிட்டு இருந்தோம். பேச்சு சுவாரஸ்யமா போகும்போது என்னோட மொபைல் ரிங் ஆச்சு. கால் பண்றது அம்மா... அட்டெண்ட் பண்ணினேன்.

நான்: அம்மா...
அம்மா: கண்ணு... ஆபிஸ்-லயா இருக்குற?
நான்: ஆமாம்மா... கொஞ்சம் பிஸியா இருக்கேன்... எதாவது அர்ஜென்ட்டா?
அம்மா: அப்பிடியா... இல்ல இல்ல அர்ஜன்ட் எல்லாம் இல்ல...
நான்: சரிம்மா நான் அப்பறம் பண்றேன்...?
அம்மா: சரி கண்ணு. வச்சிடறேன்...?
நான்: சரி சரி.

டீய குடிச்சுட்டு கிரிக்கெட் பத்தின டிஸ்கஷனையும் முடிச்சுட்டு என்னோட சீட்டுக்கு போயிட்டேன். மெயில்ல நண்பருங்க எல்லாம் அப்ப வந்திருந்த ஒரு படத்த பத்தி ரொம்ப காரசாரமா பேசிட்டு இருந்தாங்க. நானும் என் பங்குக்கு ரிப்ளை பண்ணிகிட்டு பிஸியாயிட்டேன். ஒரு மணி நேரம் கழிச்சு (திடீர்னு நெனப்பு வந்து) அம்மாவுக்கு கால் பண்ணினேன்.

நான்: அம்மா...
அம்மா: சொல்லு கண்ணு... எல்லாரும் நல்லா இருக்குறிங்களா?
நான்: நாங்க நல்லா இருக்கோம்மா, நீங்க?
அம்மா: இங்க எல்லாருமே நல்லாருக்குறோம் கண்ணு... தம்பியும் சவிதாவும் நல்லா இருக்காங்களா?
நான்: ம். எல்லாருமே நல்ல இருக்கோம்.
 அம்மா: சரி சரி. என்ன சாப்பாடு,சாப்பிட்டாச்சா?
நான்: சாப்டாச்சும்மா. எதுக்கும்மா கால் பண்ணின?
அம்மா: சும்மாதான் பண்னேன்... ரெண்டு நாளா நீயும் போனே பண்ணல. சரி பேசலாம்னு பண்னேன்.
நான்: அட... ரெண்டு நாளாச்சா? சரி, இங்கயும் விஷயம் ஒண்ணும் இல்ல... அப்பாக்கு நேத்துகூட போன் பண்ணினேன். அங்கியும் விஷயம் ஒண்ணும் இல்லன்னு அப்பா சொன்னாங்க. சரி, வீக் என்டு பேசலாம்னு இருந்துட்டேன்.
அம்மா: ம்ம்ம். சரி சரி. அப்பறம் வேல அதிகமா?
நான்: அப்படி எல்லாம் இல்ல, ஏம்மா?
அம்மா: இல்ல, நானு கால் பண்ணப்ப பிஸின்னு சொன்ன... திரும்ப கால் பண்றேன்னு சொல்லிட்டு இன்னா வரைக்கும் நீ கால் பண்லியா, அதுக்குதான் கேட்டேன்?
நான்: ஓ அதுவா? இல்ல... இங்க ஆபிஸ்ல முக்கியமான வேலையா (?!) இருந்தேன்... அதான் அப்பறமா பேசறேன்னு வச்சுட்டேன்.
அம்மா: அட... அப்பிடின்னா இனிமேல நானு பகல்ல உனுக்கு போன் பண்ல.
நான்: இல்லம்மா... நானு வேலைய நடுவுல உட்டுட்டு வந்தா பிரச்சினைன்னு அப்பறம் பண்றேன்னு சொன்னென்.
அம்மா: ஓ... சரி கண்ணு. ஒடம்ப பாத்துக்க.
நான்: சரிம்மா. நீ என்ன பண்ற?
அம்மா: நானு... கடலக்கா பொறிக்கிறோம்ல? இன்னிக்கு நேரமா பொறிச்சாச்சு, அதான் கடலக்கா அளந்துட்டு இருந்தேன்.
நான்: அப்பிடியா? எத்தன வள்ளம் ஆச்சும்மா?
அம்மா: இன்னு்ந் தெரில, இப்பதான் அளந்துட்டு இருந்தேன். அளந்ததும் மறந்து போச்சு...
நான்: அய்யோ அம்மா... அப்பிடீன்னா எதுக்கு போன எடுத்த? அப்புறமா நாம பேசிக்கலாமில்ல?
அம்மா: அதுக்கென்ன கண்ணு, பரவால்ல. உங்கிட்டதான பேசறேன், சித்த நேரத்துல அளந்துருவேன்.
நான்: ?!?!?!?!?!
அம்மா: கண்ணு, எனக்கு நீ பேசுறது ஒண்ணுமே கேக்கல....
நான்: ஆங் அம்மா. நீ எப்போ வேனும்னாலும் எனக்கு போன் பண்ணும்மா. இன்னைல இருந்து முக்கியமான வேல எதுவும் எனக்கு இருக்காது...

-சமுத்ரன்

Wednesday, October 6, 2010

அம்மாயி... தாத்தா... ஊர்ல... போலாம்...

நாமெல்லாம் சென்னை / பெங்களூர் மாதிரி வெளியூருல வேலை செய்யுற கோஷ்டிங்குறதால, விடுமுறைல சொந்த ஊருக்கு போறது எப்பவுமே விசேஷம்தான். பெங்களூர்ல இருக்கும்போது, ஊருக்கு போறோம்னு முடிவாயிடுச்சின்னா எனக்கும், என் மனைவிக்கும் ரொம்பவும் குஷியாயிடும். அடிக்கடி (மாசத்துக்கு ஒரு தடவையாவது) ஊருக்கு கெளம்பிடுவோம்.
எங்க குஷிக்கு ரெண்டே காரணந்தான்:
1. சொந்தக்காரங்க எல்லாரையும் பாக்கலாம்
2. எங்க மேல எல்லாருமே (இன்னும் குழந்தைங்களா நெனச்சு) பாசத்தை பொழிவாங்க.

அதெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஊர்ல அப்பிடியே வெளில போகும்போது சொந்தக்காரங்க, பக்கத்து வீட்டுக்காரங்க, தெரிஞ்ச்சவங்கன்னு எல்லாருமே நலம் விசாரிப்பாங்க. ஆனா என்ன, எல்லாருமே சொல்லி வச்சா மாதிரி, ஒரே மாதிரியான கேள்விங்க கேப்பாங்க:

கேள்வி: கண்ணு, நல்லா இருக்கீங்களா?
பதில்: நல்லா இருக்கிறங்க

கேள்வி: ம். எப்ப கண்ணு வந்திங்க?
பதில்: நேத்து ராத்திரிங்க.

கேள்வி: எத்தன நாளு கண்ணு லீவு?
பதில்: வழக்கம் போல இன்னிக்கும் நாளைக்குந்தாங்க லீவு (சனி & ஞாயிறு)

கேள்வி: அப்ப... சோமாரக்கெளம (திங்கட்கிழமை) வேலைக்கு போவுனும்?
பதில்: ஆமாங்க, நாளான்னைக்கு காத்தால நேரமா கெளம்பணுங்க. அப்புறம், நீங்க நல்லா இருக்கீங்களா?

கேள்வி: ம். எங்க கண்ணு மழையே பெய்ய மாட்டேங்குது, அங்கயாவது (பெங்களூர்) மழை பேஞ்சுச்சா?"
பதில்: அங்கயும் ஒண்ணும் சொல்லிக்கிறா மாதிரி பேயிலிங்க

கேள்வி கேட்டவர்: ம்ம். அதான பாரு கண்ணு.

இத்தோட பல பேர் முடிச்சுக்குவாங்க. ஆனா சில பேர் அடுத்த கட்டத்துக்கு போவாங்க:

கேள்வி: ஏங்கண்ணு... உங்குளுக்கு அங்க என்ன வேல?
பதில்: அதான், கம்பியூட்டர் வேலதாங்க.

கேள்வி: கம்பியூட்டர்ல அப்பிடி என்ன பண்ணுவிங்க?
பதில்: அது.... ம்ம்ம்ம். அவங்க கேக்குற புரோகிராம் பண்ணி குடுக்குணுங்க.

கேள்வி: ஊஹூம். சேர் சேர்.

நான் மட்டும் தனியா வெளியூருக்கோ வெளி நாட்டுக்கோ போயிட்டு வந்திருந்தேன்னா, அம்மா/சித்தி/அத்தை/பாட்டி எல்லாரும் போன்லையும் சரி, ஊருக்கு திரும்பினதுக்கப்புறமும் சரி, இந்த கேள்விய கண்டிப்பா கேப்பாங்க: "சாப்பாடெல்லாம் பரவாயில்லியா? நம்ம ஊரு சாப்பாடு கெடைக்குதா? அரிசி, பருப்பு, தக்காளி எல்லாம் அங்க என்ன வெல?" :)

எங்க (அப்பாவ பெத்த) பாட்டி, நாங்க சிங்கப்பூர் வந்த பின்னாடியும் இன்னமும் சலிக்காம நான் ஒவ்வொரு தடவ ஊருக்கு போறப்பவும் அதுக்கு முன்னாடி கேட்ட அதே கேள்விய மாறாம கேப்பாங்க. போன தடவ நான் ஊருக்கு போனப்ப நடந்த உரையாடல் இது:

பாட்டி: அங்க எத்தன மணிக்கு பொறப்பட்ட?
நான்: நேத்து சாங்காலம்
பாட்டி: நேத்து சாங்காலம் பொறப்புட்டு, இன்னிக்கு காத்தாலதான் வர முடிஞ்சிச்சா? கப்பல்லையா வந்த?
நான்: ஆமாங்காத்தா. அது கப்பல் இல்ல, எரோபிலான்
பாட்டி: என்ன எளவோ போடா. அங்க பஸ்ஸுல எல்லாம் போவ முடியாதா?
நான்: ஆஹாம், எரோபிலான்லதான் போவ முடியும்.
பாட்டி: அதுவும் நம்ம ஊரு மாதிரிதான் இருக்குதா?
நான்: இத விட நல்லாவே இருக்கும்
பாட்டி: அட, அங்கயும் வெவசாயம் பண்றாங்களா?
நான்: இல்லைங்காத்தா, எல்லாமே இங்க இருந்துதான் போவுது
பாட்டி: வெவசாயம் பண்ணாம எப்பிடிடா பொழைக்கிறாங்க? அப்ப மாடு-கண்ணெல்லாம் அங்க இல்லியா?
நான்: இல்ல.
பாட்டி: ஊடெல்லாம் பாத்துட்டியா - வாடகை எவ்வளவு?
நான்: பாத்தாச்சு, வாடகை அம்பதாயிரம்.
பாட்டி: மாசத்துக்கா? வருசத்துக்கா?
நான்: மாசத்துக்குதாங்காத்தா
பாட்டி: ஊட்டு வாடகையே அம்பதாயிரமா? கம்மியா எல்லாம் இல்லியா?
நான்: இல்லிங்காத்தா. இதுதான் கம்மி அங்க.
பாட்டி: ம். இத்தன காசு போட்டு அதென்னடா வூடு? சம்பளமெல்லாம் சேத்தி தராங்களா?
நான்: அதுக்கு தவுந்தா மாதிரி சம்பளம் சேத்தி தருவாங்காத்தா.
பாட்டி: ம். போயிட்டு ஒரு வருஷம் கழிச்சுதான் வருவீங்கன்னு உங்கப்பன் சொன்னான்?
நான்: இல்ல இல்ல... மூணு-நாலு மாசத்துக்கு ஒரு தடவ வருவோம், பக்கந்தான...?!?!
பாட்டி: என்னமோ... புள்ளைங்கள எல்லாம் பாத்து கூட்டிட்டு போயிட்டு வா.
நான்: சரிங்காத்தா.

எப்ப ஊருக்கு போனாலும் திரும்பி பெங்களூருக்கோ, சிங்கப்பூருக்கோ கெளம்பும்போது மனசு கொஞ்சம் கனமாவே இருக்கும். விருப்பமில்லாம கெளம்பி வருவோம்.

பி. கு.: நம்ம பையனுக்கு ஊருக்கு போறதுன்னா அவ்ளோ குஷி. அவர் ஊர்ல ஜாலியா வெளையாடலாம், ஓடி வெளையாட எல்லை எதுவும் கெடையாது. தாத்தாவும் பாட்டியும் கேட்டதை எல்லாம் செய்வாங்க. தெனமும் சொந்தக்காரங்க யாராவது பாக்குறதுக்கு வந்துட்டே இருப்பாங்க. கூட வெளையாடுறதுக்கு அவரோட வயசுக்கு ஆள் இருக்குது.
எங்ககூட வரும்போது ரொம்ப குஷியா வந்துட்டார், ஆனா
இப்ப சிங்கப்பூர் வந்த பின்னாடி, எப்பவாவது "அம்மாயி... தாத்தா... ஊர்ல... போலாம்..."-ன்னு சொல்லுவான். கஷ்டமா இருக்கும்.
ம்ம்ம்ம். அடுத்த தடவ ஊருக்கு போற வரைக்கும் இந்த பசுமை நெனப்புலேயே காலத்த ஓட்ட வேண்டியதுதான்.

-சமுத்திரன்.

Tuesday, October 5, 2010

எந்திரன்

நம்ம தலைவர் படத்த பாக்க மூணு வருஷமா வெயிட் பண்ணிட்டு இருந்தோம். செப்டம்பர் 30-ம் தேதி படமும் வந்தாச்சு (அக்டோபர் 1-ம் தேதிதான் உண்மையான ரிலீஸ்-ன்னாலும், இங்க சிங்கபூர்ல ஒரு நாள் முன்னாடியே ரிலீஸ்), இன்ப அதிர்ச்சியா மொத நாளே டிக்கெட்டும் கெடச்சு (செப்டம்பர் 30) படத்தையும் பாத்தாச்சு.


பெரிய ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாம, படம் போடுவதற்கு 30 நிமிடம் முன்னாடியே எல்லாரும் தியேட்டருக்குள்ள போனோம். ரஜினி படத்த மொத தடவையா, ரிலீஸ் ஆன மொத நாள், அதுவும் மொத ஷோ பாக்குறேன். உள்ளுக்குள்ள ஒரே குஷி. படம் போட நேரம் இருந்ததால உள்ள பாட்டு போட்டாங்க. எல்லாரும் கண்ணா பின்னான்னு ஆப்பரேட்டர பாத்து திட்டி ஒரே கத்தல் - ஏன்னா அது விஜய் பாட்டு. ஆனா ஆப்பரேட்டர் எதை பத்தியும் கவலைபடாம வில்லு பட பாட்டா போட்டுத் தள்ளினான். என்னென்ன கெட்ட வார்த்தை இருக்கோ, எல்லாமே விஜய் மேல அர்ச்சனையா மாறுச்சு.

படம் போட சில நிமிடங்களுக்கு முன்னாடி சில அன்பர்கள் நெறைய பூக்கள உள்ள எடுத்திட்டு வந்தாங்க, சில நொடிகள்ல எல்லார் கையிலயும் பூ. சரியா ராத்திரி 8 மணிக்கு படம் போட்டாங்க (நேரா படம், எந்த விளம்பரமும் போடல). ஒரே கத்தல், தியேட்டரே அதிருச்சு. ரஜினி பேரு போடும்போது தியேட்டர் முழுக்க பூ மழைதான், எல்லாரும் எந்திரிச்சு ஆடினோம். படத்துல எடுத்த உடனே தலைவர் சீரியஸா ரோபோவ உருவாக்கிட்டு இருக்குறா மாதிரி சீன் ஆரம்பிச்சுது (படம் இங்கு ஆங்கில சப்டைட்டிலுடன் ஓடியது), எல்லாரும் பேயாட்டம் போட்டோம், ஆனா தலைவரே சீரியஸா இருந்ததால எல்லாரும் உடனே சீரியஸா படம் பாக்க ஆரம்பிச்சோம். ரோபோவ தலைவர் அறிமுகப்படுத்தி, அதுவும் தலைவர் மாதிரி நடந்தப்போ தியேட்டருக்குள்ள பூகம்பமே வந்தா மாதிரி இருந்துச்சு. 'காதல் அணுக்கள்' பாட்டுல, தலைவரோட ஸ்லோ மோஷன் நடைக்கு செம்ம கை தட்டல்.

கடவுள் பத்தின கேள்விக்கு ரோபோ பதில் சொல்ற சீனுக்கு, 'ஓ'-ன்னு எல்லாரும் செம்ம கத்தல். அப்பறம் ரோபோ செய்யும் ஒவ்வொரு சேட்டைக்கும் தியேட்டர் அதகளம்தான். அதுவும் சேரியில் ரோபோ ரஜினியின் அவதாரம் உச்சம். சிட்டி ரோபோவோட டேன்ஸ்-க்கும் (Dance) தியேட்டர அதகளம் பண்ணிட்டாங்க. கதை மெல்ல ஐஸ்வர்யா ராயை நோக்கி செல்லும்போது ரசிகர்கள் ரொம்பவே அமைதியாயிட்டாங்க. இங்க சிங்கப்பூர்ல, எந்த படத்துக்கும் இடைவேளை பிரேக் விடுறதில்ல. அதனால படம் நான் ஸ்டாப்பா போயிட்டிருந்துச்சு.

ஐஸ்வர்யா கூட பிரச்சினை பண்ற ஒரு ரவுடி கூட சண்டை போடாம, தலைவர் அவன்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடும்போது - என்ன நடக்குது; எப்பிடி ரியாக்ஷன் பண்றதுன்னு தெரியாம எங்களுக்கு குழப்பம். இதுல ஒரு ரஜினிகிட்ட இருந்து ஐஸ்வர்யாவ இன்னொரு ரஜினி கடத்தும்போது தியேட்டர்ல பெருசா எந்த ரியாக்ஷனும் இல்ல. ரஜினிக்கும் ரஜினிக்கும் இடையே பிரச்சினைங்குறதால, கொஞ்ச நேரம் தியேட்டர் அமைதியா இருந்துச்சு.

தலைவரோட வில்லத்தனம் (ரோபோ) ஆரம்பமான பின்னாடிதான் தியேட்டர்ல விசில் சத்தம் மறுபடியும் கேட்க ஆரம்பிச்சுது. திரைல இருக்குற அத்தன கேரக்டரும் ரஜினிதான் - ஆனா அதுக்கு ரசிகர்கள்கிட்ட பெரிய கரகோஷம் இல்ல. மனித ரஜினி'ய கண்டுபிடிக்குற சீன் பட்டாசு - ரெண்டு நிமிஷத்துக்கு படத்துல வசனமே கேக்கல. 'அரிமா அரிமா' பாட்டு முழுசும் ரசிகர்கள் செம்ம ஆட்டம் போட்டாங்க. படம் அதுக்கப்புறம் கிராபிக்ஸ் கலக்கல்தாங்குறதால பலபேர் அமைதியாயிட்டாங்க (மெய் மறந்துட்டாங்க?). சில பேர் கிராபிக்ஸ்க்கும் விசில் அடிச்சு கை தட்டினாங்க.

climax காட்சியும், வசனமும், தலைவர் நடிப்பும் "நச்"ன்னு இருந்துது. தியேட்டர்ல எல்லாருமே எந்திரிச்சு நின்னு கை தட்டினாங்க (இந்த மாதிரி சில படங்களுக்குதான் நான் பாத்திருக்கேன் - உதாரணம்: அபியும் நானும்).

தியேட்டர விட்டு வெளில வரும்போது மனசுக்கு எதோ ஒண்ணு ஏமாற்றமா இருந்துது. படம் நல்லாத்தான் இருக்குது - யோசிச்சு பாத்தாலும் ஏமாற்றத்துக்கு காரணம் தெரியல. மறுபடியும் படம் பாக்க குடும்பத்தோட போகும்போது தெரிஞ்சிடும். எது எப்படியோ, ரஜினி படம் மொத நாள் மொத ஷோ பாக்குறது ஒரு திருவிழால கலந்துகிட்ட மாதிரி செம்ம ஜாலிதான். இதுவே சென்னைல / தமிழ்நாட்டுல மொத நாள் மொத ஷோ பாத்திருந்தா இன்னும் கலக்கலா இருந்திருக்கும்னு சொல்லித் தெரிய வேண்டியதில்ல.

பி.கு: மனசுக்குள்ள முதல்-பாதில வர்ற சிட்டி ரோபோ நெனப்பாவே இருந்ததால, அன்னிக்கு ராத்திரி எனக்கு தூக்கமே வரல. அந்த கேரக்டர இன்னும் கொஞ்ச நேரம் காட்டி இருக்கலாமோ?

-சமுத்திரன்.