Saturday, August 14, 2010

சிங்கப்பூர் பத்தி வாங்க நீங்களும் தெரிஞ்சிக்கலாம்

இங்கு நான் வந்து ஒன்றரை மாதங்கள் ஆகின்றது. என் பார்வையில் சிங்கப்பூர்.

 
நாடு:
ரொம்ப சிறிய நாடு (தீவு). எங்கும் கட்டிடங்கள்தான், இருந்தும் எங்கேயும் பச்சை பசேல் என்று மரங்கள். நேர்த்தியான ரோடுகள். அரசு பேருந்துகள் எல்லா இடங்களையும் இனைக்கின்றன. இரயில்களும் அப்படித்தான். ஆங்கிலம், மலாய், தமிழ் மற்றும் சீன மொழிகள் சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன.

 
மக்கள்:
  • சீன, மலேஷிய மற்றும் இந்திய (குறிப்பாக தமிழ்) மக்கள்தான் சிங்கப்பூர் முழுக்க நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் பலர் சிங்கப்பூர் குடி உரிமை பெற்றவர்கள்.
  • எங்கும் மக்கள் கூட்டம்தான். ஆனால் யாருக்கும் எந்த தொந்தரவும் பிரச்சினையும் இல்லை.
  • அவரவர் அவரவர்களின் வழியில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக, வார நாட்களில் காலையில் ஓட்டமும் நடையுமாகத்தான் வேலைக்கு செல்கிறார்கள். யாரும் யாருடனும் பேசவே மாட்டார்கள். நிரம்பி வழியும் இரயில்களில் கூட குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு மௌனம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் மாலையில் தெரிந்தவர்களுடன் பேசி, அரட்டை அடித்து செல்கின்றனர்.
  • பத்தில் ஐந்து பேர்  எப்பவும் செல்போனிலேயே இருக்கிறார்கள். ஒன்று SMS அனுப்பிக்கொண்டிப்பார்கள் அல்லது FM கேட்டுக்கொண்டிருப்பார்கள் அல்லது MP3 player-ல் பாட்டு கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
  • ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம், அதில் மூழ்கியிருப்பார்கள். இளம் ஜோடிகள் பொது இடங்களில் மிகவும் ரொமான்டிக் மூடில்தான் இருக்கிறார்கள். அணைத்தபடிதான் சுற்றி வருவார்கள், அவ்வப்போது முத்த மழையும் இருக்கும்.
  • பல பெண்கள் வயது வித்தியாசமில்லாமல் அரை குறை ஆடைகளில்தான் எப்போதுமே இருக்கிறார்கள்.
  • சீன மக்களில் மிகவும் வயதானவர்களைக் காண முடி்கிறது (70 - 80 வயதுகளில்). அவர்கள் எந்த தடுமாற்றமுமின்றி யாருடைய தயவும் இன்றி ரொம்பவே உற்சாகமாக காணப்படுகிறார்கள். அவர்களில் பலர் இன்னும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
  • நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களில் அதிகமாக தென் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்.
  • தமிழர்களில் பலர் கட்டிட வேலைகளும், மர வேலைகளும், சாலை & பாலம் கட்டும் பணிகளும் செய்யும் தொழிலாளர்களாக உள்ளனர். நீண்ட காலமாக இங்கேயே வாழும் தமிழர்கள் நிறைய உள்ளனர்.
  • வீட்டு வாடகை மிக மிக அதிகம் என்பதால், திருமணமான பல தமிழர்கள் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர். அதை சிங்கப்பூர் அரசாங்கமும் முறையாக அனுமதிக்கிறது.
  • திருமணமாகதவர்கள் 2, 3 பேர் சேர்ந்து மேன்ஷன் போன்ற விடுதிகளில் அறை எடுத்து தங்கி வருகின்றனர்.
  • ஆண் பெண் பேதமில்லாமல் ஏறக்குறைய அனைவருமே ஏதாவது ஒரு வேலையில் இருக்கின்றனர்.
  • பலர் (குறிப்பாக தமிழர்கள்) வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் இரட்டை சம்பளத்துக்காக ஓவர் டைம் வேலை பார்க்கிறார்கள்.

 
சுற்றி வந்ததில்:
  • ஷப்பிங் காம்ப்ளக்ஸ், ஓட்டல்கள், பார்கள் மற்றும் சில்லரைக் கடைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன.
  • சீன மற்றும் மலேஷிய ஓட்டல்கள்தான் எங்கும் அதிகமாக இருக்கின்றன. லிட்டில் இந்தியா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தடுக்கி விழுந்தால் தமிழ் நாடு ஓட்டல்தான் எனும் அளவுக்கு நம்ம ஊர் ஓட்டல்கள். ஓட்டலைப் பொறுத்து விலைகளும் மாறுகின்றன.
  • சிங்கப்பூரில் அனைத்துப் பொருட்களும் இந்தியாவையும் மலேஷியாவையும் விட விலை ரொம்ப அதிகம். எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டும் விலை குறைவு. குறிப்பாக டி.வி.க்கள் விலை ரொம்ப ரொம்பக் குறைவு. அதனால் இங்கிருந்து இந்தியாவிற்கு பலர் டி.வி். வாங்கிச் செல்கின்றனர்.
  • நாட்டில் எந்த மூலையில் (பைப் மூலமாக) கிடைக்கும் தண்ணீரும் மிகவும் சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட குடி நீர்தான் (குளியலறையில் குளிக்கும் நீர் உட்பட). அதனால் தண்ணீர் பிரச்சினை இல்லை, எங்கும் தாராளமாக தண்ணீர் அருந்தலாம்.
  • ஊர் ரொம்பவே சுத்தமாக காணப்படுகிறது. இரயில்களிலும் பேருந்துகளிலும் உணவு உண்ணவும், தண்ணீர் அருந்தவும் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • சட்டங்கள் இங்கு மிகக் கடுமையாகவும் உறுதியாகவும் கடைபிடிக்கப்படுகின்றன. அங்கங்கே அதை மீறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் பிடி பட்டால் எந்தக் கருணையும் கிடையாது. அதற்கான தண்டனையும் கடுமையானது.
  • சிங்கப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் வீடுகள் அனைத்துமே (குறிப்பிட்ட சிலவற்றைத் தவிர) அரசாங்கத்தால் கட்டப்பட்டவை. அதனால் அனைத்து வீடுகளின் அமைப்பும் சில வகைகளில் அடங்கிவிடும்.
  • வீடு மற்றும் அலுவலக கட்டிடங்கள் அனைத்தும் 20 மாடிகள் வரை உள்ளன. அதே போல் லிப்ட் இல்லாத கட்டிடங்களே இல்லை.
  • மழையும் வெயிலும் இங்கு அன்றாட நிகழ்வுகள். எல்லாருடைய கையிலும் குடை கட்டாயம் இருக்கும். ஏறக்குறைய தினமும் மழை பெய்கிறது, பெரும்பாலும் அது கன மழையாகத்தானிருக்கும். மழை விட்ட அடுத்த கனம் எங்குமே மழை பெய்த சுவடே இருக்காது. மழையைக் கண்டு யாரும் ஓடுவதோ இல்லை மழை வருகிறதென்று ஒரு வேலையை ஒத்திப் போடுவதோ இல்லை (ஏனெனில் இங்கு மழை ஆரம்பிதால் பல சமயம் மணிக்கணக்கில் விடாமல் கனமாக பெய்யும்).

 
போக்குவரத்து:
  • குளிரூட்டப்பட்ட இரயிலும் பேருந்தும் எல்லா இடங்களையும் இணைக்கின்றன.
  • இரயிலும் பேருந்திலும் போய் வர ஏ.டி.எம் அட்டை வடிவில் பிரீ-பெய்டு எலக்ட்ரானிக் அட்டை விற்கப்படுகிறது.
  • எவ்வளவு கூட்டத்தையும் எந்த வித பிரச்சினையின்றி சமாளிக்கும் வகையில் இரயிகளும் பேருந்துகளும் வடிவமைக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் குறைந்த நேர இடைவெளியில் இயக்கப்படுகின்றன.
  • சொந்தமாக பலர் கார் வைத்திருக்கிறார்கள். வாடகைக் கார்களும் மிக மிக அதிகம், மீட்டர் சொல்லும் கட்டனம்தான். பிஸியான காலை மற்றும் மாலை நேரங்களில் வாடகை அதிகம். இரவில் அதைவிட அதிகம்.

 
இன்னும் வருகிறது...

 
-சமுத்ரன்

Friday, August 13, 2010

பொறுக்க வேண்டியது இன்னும் சில நாட்கள் மட்டும்தான்!

என் முகம் உன் பார்வையில் இருந்தபோது
சின்ன பரு கூட முளைக்கும் முன் அழிக்கப்படும்
இங்கு மணிக்கணக்கில் தேடுகிறேன்
கண்ணாடியில் என் முகமே தெரியவில்லை
என்னை எனக்கு காட்ட கண்ணாடி வேண்டாம்
நீ என் முன்னாடி வேண்டும்

ஓய்ந்து அந்தி மாலை வீடு திரும்புகையில்
வாசலிலேயே புன்னகைப் பந்தி வைத்து புத்துயிர் ஊட்டுவாய்
இங்கு நான் ஓய்ந்த போதெல்லாம் அலைபேசியில் உன் குரலும்
அதன் வழியே நான் காணும் உன் முகமும்
என் சோர்வைத் தகர்க்க போதுமானதாயில்லை

தினமும் என் விருப்பம் அறிந்து சமைத்து வைத்து
அளந்து (உணவு கட்டுப்பாடு) அதில் ஆசை கலந்து பரிமாறுவாய்
இடைவிடா என் கெஞ்சலில் உணவுக் கட்டுப்பாட்டை தளர்த்துவாய்
இங்கு அதே உணவு வகைகள் கண் முன்னே இருக்கிறது
அளவில்லாமல் அதை புசிக்கும் வாய்ப்பும் வாய் முன்னே இருக்கிறது
இன்று புரிகிறது எனக்கு - அந்த உணவோ, ருசியோ விஷயமல்ல
அதில் நான் எனை அறியாமல் கொண்டாடிய உன் அன்பு

நம் குழந்தைக்கு நீ பாடிய தாலாட்டில்
அவனை விட நான் தூங்கியதுதான் அதிகம்
இன்றும் நான் படுக்கையில் என் காதுகளில் ரீங்காரமாய் உன் குரல்
அனைத்தையும் மறந்து உறங்கச் செய்கிறது

விடியலையே பார்த்ததில்லை நான்
ஆம், விடிந்தும் வெகுநேரம் நான் உறங்க
செல்லமாய் கடிந்து எனை எழுப்புவாய்
உன்னை ஏமாற்றி இழுத்துப் போர்த்தி நான் தூங்குவேன்
விடாமல் எழுப்பி எனை வேலைக்கு அனுப்புவாய்
இங்கே எழுப்பவே ஆளில்லை, நான் விடிந்தபின் தூங்குவதுமில்லை

சில நாள் நான் தாமதமாக வீடு வருவேன்
அன்று மிளகாய் பொடியை மூக்கின் மேல் தெளித்து நிற்பாய்
இன்று தினமும் நான் முன்னமாகவே வீடு வருகிறேன்
மிளகாய் பொடியை என் மூக்கின் மேல் தெளித்தாற்போல் உணர்கிறேன்

சில சமயம் சிறு சண்டையில் நான் உன்னை திட்டிவிடுவேன்
இருவரும் பேசிக் கொள்ளாமல் சில நிமிடங்கள் ஓடும்
பின் ஏதும் நடக்காததுபோல் நமை அறியாமல் பேசிக்கொள்வோம்
இன்று நமக்குள் சண்டை ஏதுமில்லை ஆனால் மணிக்கணக்கில் பேசிக்கொள்வதில்லை

"என்ன செய்வது, காலத்தின் கட்டாயம்" என நான் சொல்ல மாட்டேன்
இந்த விளையாட்டை தொடங்கி வைத்தவன் நான்தான்
முடித்து வைக்க வேண்டியவனும் நான்தான்
பொறுக்க வேண்டியது இன்னும் சில நாட்கள் மட்டும்தான்!

-சமுத்திரன்

Monday, August 2, 2010

எனக்கு நீயும் ஒரு நெருங்கிய நண்பனே

உன்ன படத்துல பாத்தா உடம்பு காத்துல பறக்குது
சிம்பிளா பப்ளிக்ல பாத்தா மனசும் காத்துல பறக்குது
அட போப்பா, உன்ன நெனச்சாலே சும்மா ஜிவ்-ன்னு இருக்குது

நீ பேசினத கேட்டா என்னை அறியாம எனர்ஜி ஏறுது
மத்தவங்க உன்ன புகழக்கண்டா சந்தோசம் எகிறுது
மத்தவங்க உன்ன திட்டக்கேட்டா சிரிப்பா இருக்குது

நீ தத்துவம் சொன்னா எனக்கு தைரியம் சொல்றா மாதிரி இருக்குது
நீ பஞ்ச் பேசினா என் எதிரிகிட்ட பேசுறா மாதிரி இருக்குது

நீ சிரிச்சா என் மனசுக்கு ரெக்கை முளைக்குது
நீ கலங்குனா என் மனசு தாங்க மறுக்குது

நீ ஜெயிச்சா நான் ஜெயிச்சதா மனம் கொண்டாடுது
நீ தோத்தா உன் அடுத்த வெற்றிக்கு மனம் ஏங்குது

உன்கிட்ட உள்ளதும் இல்லாததும் - ரெண்டுமே அழகாத்தான் இருக்குது
நீ பண்ற எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சதா அமையுது

உன்ன எப்பவும் கொண்டாடவே மனசு துடிக்குது
'நடிகன நடிகனாப் பாருங்கடா'-ன்னு சமுதாயம் அத தடுக்குது

நான் உன்ன நேர்ல பாத்ததும் இல்ல பேசினதும் இல்ல
ஆனா எனக்குள் நீயும் ஒரு நெருங்கிய நண்பன்தான்






















-சமுத்திரன்

சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்கள்

தில்லாலங்கடி: சிங்கப்பூர் வந்து தியேட்டர்ல நான் பாத்தா மொத படம். என்னத்த சொல்ல? எதோ இன்னும் ஒரு டைம் பாஸ் படம் - அவ்வளவுதான். ஜெயம் ரவி வழக்கம் போல அவரோட வேலைய நல்லா பண்ணி இருக்காரு. அவங்க அண்ணன் வழக்கத்துக்கு மாறா மோசமான இயக்கம் (காப்பி). தமன்னா நடிப்புல நல்ல முன்னேற்றம். வடிவேலுவ பாக்கவே அருவருப்பா இருக்குது, அவரோட உடம்ப பாத்துக்கணும், இல்லைன்னா சுத்தமா பீல்ட் அவுட் ஆக வேண்டியதுதான். சந்தானம் கலக்கல்ஸ். பாட்டெல்லாம் கேக்கவே முடியல. "சொல் பேச்சு கேக்கும் சுந்தரி பாட்டு கஷ்டப்பட்டு நல்லா படமாக்கி இருந்தாங்க. முதல் பாதி - தியேட்டர்ல ஜாலி, ரெண்டாம் பாதி - செம்ம மொக்கை (குறிப்பா க்ளைமேக்ஸ்).


களவானி: இந்த படத்தோட ரொம்ப பெரிய வெற்றியால, நான் ரொம்ப எதிர்பார்த்து பாக்க போனேன். ஆனா படத்துல அந்த லோக்கேஷனத் தவிர சொல்லிக்கிற படி எதுவுமே இல்லை. பருத்தி வீரன் படம் வந்து ஹிட் ஆனதும் ஆச்சு, ஆளாளுக்கு தாடி வச்ச வெட்டிப் பய ஹீரோ + காதல்னு கத பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க. அதுவும், சின்ன பசங்க காதல்ங்கறதால என்னால சரியா படத்தோட ஒன்றவே முடியல. இயக்கமும் வசனமும் பல இடங்கள்ல படு சொதப்பல். "இன்னொரு படம்"-னு போக வேண்டியது, அழகான கதாநாயகி + கஞ்சா கருப்பு காமெடினால பொழச்சுகிட்டுதுன்னு நெனக்கிறேன்.

மதராசப்பட்டினம்:
பழைய சென்னைய ரொம்ப அழகா காட்டி இருக்காங்க. படம் ரொம்பவே நல்லா இருந்தது. இதுல நடிச்ச அத்தனை பேரும் கலக்கலா நடிச்சிருக்காங்க, முக்கியமா எமியா வர்ற அந்த லண்டன் ஹீரோ-இன். நம்ம வட நாட்டு நடிகைகள எல்லாம் தூக்கி சாப்பிட்டுட்டாங்க அவங்க. பல காட்சிகள்ல கண்லயே நடிக்கிறாங்க. ஆர்யாவும் அருமை. ஆர்யாவும் எமியும் தங்களோட காதல சொல்லிக்கிற சீன் + இசை அற்புதம். என்னமோ போங்க, இந்த படம் என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சு.
-சமுத்ரன்

முரளி - கிரிக்கெட் உலகில் மற்றொரு சகாப்தம்


முரளிய இலங்கை டீம்ல இருக்கும் ஒரு சாதாரண ஸ்பின் பவுலராதான் 1999 ம் ஆண்டு வரைக்கும் எனக்கு தெரியும். அதுவும் 1996 - 99 ஆண்டுகள்ல இந்தியா இலங்கைகிட்ட செம மாத்து வாங்கினப்ப கூட எனக்கு அவரைப் பற்றி தெரியாது, அப்ப நமக்கு கிரிக்கெட் அறிவும் கொஞ்சம் கம்மி (இப்ப மட்டும் என்ன வாழுது?). 1999 ம் ஆண்டு உலககோப்பைலதான் முரளியப்பத்தி பெருசா பேசிக்கிட்டாங்க, ஆனாலும் நம்ம கங்குலியும் திராவிட்டும் அந்த உலககோப்பை போட்டியில முரளிய உண்டு இல்லைன்னு பண்ணினதால அப்பவும் நான் அவரை இவ்ளோ பெரிய ஆளா வருவாருன்னு எதிர்பாக்கல... அவரோட ஸ்பின்னிங்கும் அப்படி ஒண்ணும் மிரளவைக்கும் ரகமாவும் எனக்கு தோணல. எப்பவாவது விக்கெட் எடுக்கும் ஒரு சாதாரண பவுலாரகத்தான் தெரிஞ்சார் (நம்ம கும்ப்ளே கூட 2000 க்கு அப்புறமா பல தடவ விக்கெட் எடுக்கறப்ப அந்த பவுலிங்ல என்ன இருக்குன்னு விக்கெட் விழுந்துச்சுன்னு எனக்கு இன்னிக்கு வரைக்குமே புரியல). ஆனாலும் முரளிக்கு அப்போ அப்போ திடிர்னு நல்லா பந்து ஸ்விங் ஆகும், அதுல சில விக்கெட்டும் விழுந்தத பாத்து அசந்திருக்கேன். ஆனா அவருடைய ஆரம்ப கால பவுலிங்க இப்போ பாத்தா பெரிய பெரிய பேட்ஸ்மேன் கூட இவரோட பவுலிங்ல தவுடு திண்ணிருக்காங்க. இவர கண்டாலே மெரண்டு போயிருந்த டீம்களும் இருந்திருக்கு.

சத்தமே இல்லாம மேட்சுக்கு மேட்ச் விக்கெட் எடுத்துட்டே வந்து அப்போ ஆஸ்திரேலியால கலக்கிட்டிருந்த வார்னேக்கு சவாலா வந்துட்டார் (விக்கெட் கணக்குல). வழக்கமா ஆஸ்திரேலியாகாரனுங்களுக்கு ஆசியா டீம் ஒண்ணு அவங்கள ஜெயிச்சுட்டாலே புடிக்காது. இதுல அவங்க நாட்டுக்காரன் ஒருத்தன் வச்சிருக்குற ரெக்கார்டுக்கு போட்டியா ஆசியால இருந்து ஒருத்தன் போயி நின்னா, சும்மா இருப்பானுங்களா? முரளியோட ஸ்பெஷல் கூக்ளி பவுலிங்தான் (அத பத்தி வெளக்கமா தெரிஞ்சுக்க இங்க போங்க). அப்படி அவர் பவுலிங் பண்ணும்போது, பந்தை எறிகிறார்னு முரளிய அசிங்கப்படுத்தி, அவரோட பவுலிங் மூவ்மென்ட்ஸ டெஸ்ட் பண்ணனும்னு அனுப்பி வச்சாங்க (அந்த கொடுமைய கீழ இருக்குற படத்துல கொஞ்சம் பாருங்க).
அந்த தடைகளையெல்லாம் வெற்றிகரமா முறியடிச்சு (அதுவும் அவ்ளோ ஈஸியா நடக்கல) அவங்க முகத்துல கரிய புசினாரு. இன்னும் சந்தேகம் இருக்குற ரசிகர்களுக்காக அவரே டீவில எல்லாம் வந்து பவுலிங் போட்டு காமிச்சு பொறுமையா வெவரமா சொல்லி நிரூபிச்சார்னு கேள்விபட்டேன். ஆஸ்திரேலியாவால அவரையும் ஒண்ணும் பண்ண முடியல, அவரோட விக்கெட் வேட்டையும் நிறுத்த முடியல, வார்னே ரெக்கார்டையும் பாதுகாக்க முடியல. அவ்ளோ பெரிய ஜாம்பவான் வார்னேவே முட்டி மோதி பாத்துட்டு (வயசு வேற ஆயிடுச்சு, டீம்ல பாலிடிக்ஸ் வேற பாவம்), கிரிக்கெட்ட வுட்டு போயிட்டார். முரளி சர்வ சாதாரணமா கட கடன்னு விக்கெட் எடுத்து தள்ளுனாரு. இவர் அப்புறமா டி20 வந்தப்ப கூட இவரோட பவுளிங்க்ல பெருசா ரன் அடிக்க முடியல, டி20-லயும் கலக்கினாரு.

டெஸ்ட்ல இப்போ 800 விக்கெட். ஒரு நாள் போட்டில 515 விக்கெட். மொத்தமா 1315 விக்கெட். கிரிக்கெட்ல ஒருத்தனும் இந்த ரெக்கார்ட இனிமேல் நெனச்சு கூட பாக்க முடியாது. 1992ல ஆட வந்தவர், 18 வருஷம் (பிட்நெஸ்ல இருந்து) கலக்கி இருக்காரு. சாதாரணமா அவர பாத்துகிட்டு இருந்த எனக்கு அவர் ரொம்ப ஸ்பெஷலா தெரிய ஆரம்பிச்சது, விஜய் டீவி, காபி வித் அனு-ல அவரோட பேட்டிய பாத்தப்புறம்தான் (அட, அவரும் நம்ம ரஜினி ரசிகர்ங்க).

அவர் ஒரு சாதாரண கிரிக்கெட் வீரர் இல்லங்குறதுக்கு பல காரணங்கள், அவற்றில் சில:
* வெளையாட்டுல எந்த இக்கட்டான நெலமையிலயும் ஒரு புன்னகையோடதான் இருப்பார் (அவரோட பவுலிங்க, எதிரணி அடிச்சு தாளிக்கும்போது கூட). ஒரு சாம்பிள் சொல்லனும்னா, அவரோட கடைசி மேட்ச்ல இந்தியாக்கு 2வது இன்னின்க்ஸ்ல 8 விக்கெட் போயிடுச்சு, அவர் இன்னும் ஒரு விக்கெட் எடுத்தா 800 ஆயிடும். எல்லாருக்கும் செம்ம டென்ஷன். ஆனா, 9வது விக்கெட் அவரோட பவுலிங்லையே ரன்-அவுட். ஆனா முகத்துல அப்பவும் அந்த மாறாத புன்னகைதான் (இன்னொரு விக்கெட் இருக்குதில்ல?). அந்த புன்னகைக்கு நான் (இந்தியனா இருந்தாலும்) எப்பவும் அடிமைங்க.
* பவுலிங்கின் போது ரொம்ப ஆக்ரோஷமா இருக்குற அவரோட முகம், பந்த போட்ட உடனே புன்னகைக்கு மாறிடும்.

* எதிரணிகாரங்ககிட்ட எப்பவுமே மொறைச்சுகிட்டதில்லை, தேவை இல்லாத வம்புக்கும் போனதில்ல.
* எவ்ளோ பெரிய பேட்ஸ்மேன் விக்கெட்ட எடுத்தாலும், அவர் அதை கொண்டாடுற விதம் அவுட்டான அந்த பேட்ஸ்மேனுக்கே புடிக்கும். பீல்டிங்கிலும் ரொம்ப திறமையானவர்.
* பந்த எறியிறதா சொல்லி டெஸ்ட் பண்ணப்போ கூட புன்னகை மாறாம அதை ஏத்துக்கிட்டது. அந்த நிகழ்ச்சிய இப்போ எப்பிடி பாக்குறீங்கன்னு கேட்டபோது "அந்த காலகட்டம் ரொம்ப கஷ்டம்தான்... ஆனா எனக்கு மடியில கனமில்ல, அதனால பயமில்ல. என்னை பொருத்தவரைக்கும், சொல்றவங்க சொல்லிட்டுதான் இருப்பாங்க... நம்ம மனசாட்ச்சிக்கு நாம கரெக்ட்டா இருந்தா, எந்த தடை வந்தாலும் ஈஸியா ஜெயிச்சுடலாம்"-ன்னு ரொம்ப அழகா சொன்னார். அந்த காலகட்டத்துல சில ஆஸ்திரேலியா வீரர்கள் தனக்கு முன்னாலேயே அவரை அசிங்கமா கிண்டல் பண்ணினாங்கன்னு சொன்னப்ப, என் மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு.
* வேற நாடுக்காரங்களோட அணி மாறி விளையாட்டும் போது எப்பிடி தன்னை தயார்படுத்திக்கிறார்-ன்னு அவரோட விளக்கம் (அந்த பேட்டியில அழகா சொல்லி இருப்பார்).
* யாரும் எளிதா எட்ட முடியாத ரெக்கார்ட் பண்ணப்ப கூட ஆணவமில்லாம இருக்குறாரு.
* முக்கியமா அவரோட கடைசி டெஸ்ட். அந்த தொடருக்கு முன்னாடி அவர் 792 விக்கெட் எடுத்திருந்தாரு. இன்னும் 8 விக்கெட் எடுத்தா 800. 792 விக்கெட் எடுத்தா, யாருக்கும் அந்த 800 மைல்கல்லையும் எட்டனும்னு ஆசை கண்டிப்பா இருக்கும். ஆனா, 'தில்'லா முதல் டெஸ்ட் போட்டியோட ரிட்டையர்ட் ஆகுறதா தொடருக்கு முன்னாடியே அறிவிச்சார் (ஆனா அந்த 8 விக்கெட்ட அந்த மொத மேட்ச்சுலையே எடுத்துட்டார்ங்குறது இன்னும் இன்னும் ஸ்பெஷல்).


கிரிக்கெட்டும் கிரிக்கெட் ரசிகர்களும் முரளிய ரொம்பவே மிஸ் பண்ணபோறோம். இருந்தாலும் முரளிக்கு ரொம்ப சந்தோசமா ஒரு சல்யூட்.

-சமுத்திரன்