உன்னை வர்ணிக்க நீண்ட நாட்களாய் வார்த்தைகளை தேடுகிறேன்
இதோ இன்று சிரமமே இன்றி கோர்வைகளாய் வந்து விழுகின்றன
என் நண்பனின் மனதை உன் நிறமாக்கிக் கிடக்கிறாய்
என் தந்தையின் நாணயத்தை உன் வடிவாக்கிக் கொள்கிறாய்
என்னவளின் முகத்தை உனதழகாக்கிக் 'கொல்'கிறாய்
என் அன்னையின் பாசத்தை வளர்பிறையாக வார்க்கிறாய்
என் தனிமையின் கொடுமையை தேய்பிறையாய் குறிக்கிறாய்
என் மகனின் நடையை உன் அசைவாக்கி நகர்கிறாய்
என் தலையின் மேல்தோற்றத்தை பிறையாக்கி சிரிக்கிறாய்
என் தலைவனின் தொடர் வெற்றிகளை ஒளியாக்கி மிளிர்கிறாய்
எம் ஆசையின் எல்லையை உன் உயரமாக்கிப் பறக்கிறாய்
நிலவே,
இரவின் அழகை இதமாய் உரித்துக்காட்டுவது உன் கடமை
உறவின் ஆழத்தை உணர்த்திக் காட்டுவது உன் தனிமை
சூரியனின் முன் உன் அடக்கம் எங்களுக்கு கற்றவர் சொல்லும் உவமை
நாட்கள் போயினும் மாறாதிருப்பது உன் இளமை
வாழ்வின் நியதியை ஒவ்வொரு மாதமும் நீ உணர்த்துவது அருமை
அதன் மூலம் தோல்வியில் துவண்டவர்களுக்கு நீ ஊட்டுவது மனவலிமை
உன்னை பற்றி எழுத எழுத, அட அந்த வார்த்தைகள் கூட இனிமை!
-சமுத்ரன்
No comments:
Post a Comment