Monday, September 28, 2009

நிலா - கவிதை

உன்னை வர்ணிக்க நீண்ட நாட்களாய் வார்த்தைகளை தேடுகிறேன்
இதோ இன்று சிரமமே இன்றி கோர்வைகளாய் வந்து விழுகின்றன

என் நண்பனின் மனதை உன் நிறமாக்கிக் கிடக்கிறாய்
என் தந்தையின் நாணயத்தை உன் வடிவாக்கிக் கொள்கிறாய்
என்னவளின் முகத்தை உனதழகாக்கிக் 'கொல்'கிறாய்

என் அன்னையின் பாசத்தை வளர்பிறையாக வார்க்கிறாய்
என் தனிமையின் கொடுமையை தேய்பிறையாய் குறிக்கிறாய்
என் மகனின் நடையை உன் அசைவாக்கி நகர்கிறாய்

என் தலையின் மேல்தோற்றத்தை பிறையாக்கி சிரிக்கிறாய்
என் தலைவனின் தொடர் வெற்றிகளை ஒளியாக்கி மிளிர்கிறாய்
எம் ஆசையின் எல்லையை உன் உயரமாக்கிப் பற‌க்கிறாய்

நிலவே,
இரவின் அழகை இதமாய் உரித்துக்காட்டுவது உன் கடமை
உறவின் ஆழத்தை உணர்த்திக் காட்டுவது உன் தனிமை
சூரியனின் முன் உன் அடக்கம் எங்களுக்கு கற்றவர் சொல்லும் உவமை

நாட்கள் போயினும் மாறாதிருப்பது உன் இளமை
வாழ்வின் நியதியை ஒவ்வொரு மாதமும் நீ உணர்த்துவது அருமை
அதன் மூலம் தோல்வியில் துவண்டவர்களுக்கு நீ ஊட்டுவது மனவ‌லிமை
உன்னை பற்றி எழுத எழுத, அட அந்த வார்த்தைகள் கூட இனிமை!
-சமுத்ரன்

கோலி வெளையாட சேத்திக்குங்கடா...!

1986. அரசு துவக்கப்பள்ளி. நான் முதல் வகுப்பு. என் பெரியப்பா பையன் அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு. வீட்டிலிருந்து பள்ளிக்கு ஒரு கி.மீ தூரம். காலையும் மாலையும் நடந்து பள்ளிக்கு இருவரும் ஒன்றாகவே சென்று வருவோம். காலை பள்ளிக்கு வர 15 முதல் 20 நிமிடம் ஆகும், ஆனால் மாலையில் பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு வர, குறைந்தது 2 மணி நேரம் ஆகும். காரணம், கோலி. நான் ஆடவில்லை என்றாலும் ஆடுறவங்கள பார்த்துகிட்டு உட்கார்ந்திருப்பேன். என்க்கும் ஆட வேண்டும் என ஆசை. ஆனால் விளையாட‌ என்னிடம் கோலி குண்டுகள் இல்லை. அவற்றை வாங்க அப்பா அம்மாவிட‌ம் காசு கேட்கவோ பயம். எப்படியோ என் தாத்தா பாட்டியிடம் மிட்டாய் வாங்குவதாக பொய் சொல்லி 25 பைசாவாக வாங்கி வாங்கி ஓரிரு மாதத்திற்குள் ஒரு ரூபாய் சேர்த்துவிட்டேன்.

அது ஒரு திங்கள்கிழமை காலை. நானும் என் பெரியப்பா பையனும் வழக்கம்போல நடந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தோம். எனக்கு அவன் அண்ணன் முறை என்றாலும் நான் அவனை "வாடா போடா" என்றுதான் (இன்றும்) கூப்பிடுவேன்.

நான்: டேய், இன்னிக்கு சாங்காலம் என்னையும் கோரி (கோலி குண்டு) வெளையாட சேத்திக்குங்கடா.

அண்ணன்: கோரி குண்டு வெச்சிருக்கியா?

நான்: எங்கிட்ட ஒர்ருவா (ஒரு ரூபாய்) இருக்குது, எத்தன கோரி குண்டு வாங்கலாம்?

அண்ணன்: ஒர்ருவாயா.... தெரியில ஆனா நெறையா வரும். ஒரு கோரி குண்டு 5 காசு.

நான்: நீ வாங்குனப்ப எப்டி கணக்கு போட்ட‌?

அண்ணன்: ம்... செரி (சரி), பத்து வாங்கிக்க, அடிக்கிறதுக்கு பெருசா ஒரு கோரி வேணும், அதொண்ணு வாங்கிக்க, அது பத்து காசு.

நான்: நீ இன்னிக்கு எத்தன கோரி கொண்டாந்துருக்குற (கொண்டு வந்திருக்கிற)?

அண்ணன்: பன்னண்டு.

நான் (விரல்விட்டு): ஒன்னு, ரண்டு, மூனு, நாலு, அஞ்சு, ஆறு, ஏலு, எட்டு, ஒம்போது, பத்து.. ம்... பத்து.. பத்து.. பதினொண்ணு, பன்னண்டு. என்னோட‌ (என்ன விட) உங்கிட்ட ரண்டு கோரி சேத்திருக்குமா (அதிகமா இருக்குமா)? செரி, நான் பத்து வாங்கிக்கிறேன். மீதி காசு இருந்துச்சுன்னா முட்டாயீ (மிட்டாய்) வாங்குவேன்.

அண்ணன்: டே டே, எனுக்கு?

நான்: ம்... குடுப்பேன் வா. ஏன்டா, அன்னிக்கு உங்காத்தா (உங்க பாட்டி) உனுக்கு ஆறு முட்டாயீ குடுத்துச்சுன்னு சொன்ன‌, எனுக்கு குடுத்தியா?

அண்ணன்: ம்... உங்கப்பா கோடதான் அன்னிக்கு நெய் பிஸ்கேட்டு வாங்கிட்டு வந்தாங்கலாமா, நீ எங்கிட்ட சொல்லகோட இல்ல‌.

(சிறிது நேரம் இருவரும் மௌனம்...)

நான்: இன்னிக்கு என்னய‌ வெளயாட்டுல சேத்திக்கிறியா, ஒரு முட்டாயீ தாறேன்?

அண்ணன்: செரி, உனுக்கு கோரி குண்டு வெளயாடத் தெரியுமா?

நான்: ம்... தெரியுன்டா, நீங்க ஆடறத டெய்லி பாக்கறன்ல. நேத்தெல்லாம் அதே மாரி (மாதிரி) எங்கூட்டு (எங்க வீட்டு) வாசல்ல‌ கல்ல வச்சு இலுத்து இலுத்து அடிச்சு பாத்தேன்.

அண்ணன்: தோத்துகிது போயிட்டீன்னா அப்பறம் அழுவ கூடாது.

நான்: இல்ல இல்ல.... நல்லா அடிப்பன்டா. எப்டியாவுது அடிச்சு ஜெவிச்சுருவேன்.

அண்ணன்: அழுதுகிட்டு போயி ஊட்டுல வொளறீட்டின்னா (உளறிவிட்டால்) அப்பறம் கோரி வெளையாடறம்னு உங்கப்பாவுக்கு தெரிஞ்சுச்சுன்னா, ரண்டு பேரும் செத்தோம்.

நான்: (சிறிய நேர யோசனைக்குப் பிறகு) ஏன்டா, தோத்துட்டன்னா பத்து கோரியும் புடுங்கிவீங்களா?

அண்ணன்: அடிச்சு மண்ணு மேட்ட வுட்டு வெளில வந்த கோரிய‌ பூரா அடிச்சவன் எடுத்துக்கலாம்.

நான் (மனதுக்குள்): இர்ரா, இன்னிக்கு அப்பிடியே குறி பாத்து அடிச்சு எல்லா கோரியும் நான் ஜெவிக்கிறேன்.

மதியம் பள்ளி அருகிலிருந்த அந்த கட்டில்கடையில் நானும் அண்ணனும் கோலிகள் வாங்கினோம். மீதிக்கு மிட்டாயும் வாங்கினேன். இருவரும் முதல் முறையாக சண்டை இல்லாமல் மிட்டாய் சாப்பிட்டோம். அன்று வகுப்பு முழுவதும் எனக்கு கோலி விளையாடும் நினைப்புதான். எப்படா பள்ளி முடியும் என காத்திருந்தேன்.

அந்த மாலை வேலையும் வந்தது. "டேய், பெல்லடீ" ஆசிரியரின் குரல் தேனாக ஒலிக்கிறது. "டிங் டிங் டிங்". "ஓஓஓஓ........" என்று பீரிட்டுக்கொண்டு பள்ளியிலிருந்து எல்லோரும் பையை தோளில் போட்டுக்கொண்டு எதிலிருந்தோ தப்பித்தவர்கள் போல் ஓடுகிறார்கள்!!! குறிப்பிட்ட சில மாணவர்கள் மட்டும் அங்கங்கே நிமிட தாமதம் இன்றி குழுக்களாக பிரிந்து கோலி விளையாட ஆரம்பிக்கின்றனர். கோலி விளையாட மிகச்சிறிய இடமே போதும் என்பதால், எங்கள் பள்ளியின் முன்புறமிருந்த‌ சற்றே பரந்த மணல் தரை போதுமானதாக இருந்தது. என் வேண்டுகோளும் எப்படியோ ஏற்றுக்கொள்ளப்பட்டு நானும் என் அண்ணன் இருந்த குழுவுடன் இணைகிறேன். அந்த குழுவில் (மட்டுமல்ல, மற்ற எல்லா குழுவிலும்) விளையாடுபவர்கள் எல்லாரும் இரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படிப்பவர்கள். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு புதுசு என்பதாலோ என்னவோ அவர்கள் யாரும் கோலி விளையாட வருவதில்லை. ஆனால் நான் ஒன்றாம் வகுப்பில் இரு ஆண்டுகள் படிப்ப‌வன் என்பதால், இரண்டாம் வகுப்பு படிக்கும் அனைவரும் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள்தான் (ஒன்றாம் வகுப்பில் பெயில் எல்லாம் இல்லைங்க, 5 வயது ஆகாமலே பள்ளியில் சேர்ந்து விட்டேன், அவர்களும் ஒன்றாம் வகுப்பில் உட்கார வைத்தார்கள். பின் அடுத்த வருடம் 5 வயது ஆன பின்பு, மறுபடியும் ஒன்றாம் வகுப்பு படித்தேன் :( என்ன செய்ய?).

நானும் கோலி விளையாடுகிறேன். ம்... நான் எங்கோ குறி வைக்க, என் விரலில் இருந்து புறப்பட்ட கோலி வேறு எங்கோ செல்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் பணையம் வைக்கும் இரண்டு கோலிகளையும் இழந்து வருகிறேன். இயன்ற அளவு முயற்சி செய்தும் பத்து கோலிகளையும் இழந்தேன். எவ்வளவோ கெஞ்சியும் அழுதும் ஜெயித்தவன் அவற்றை திருப்பித் தர மறுத்துவிட்டான். ஜெயித்தவன் மேல் வந்த கோவம் அழுகையாக மாறியது. அழுதுகொண்டே எல்லாரையும் திட்டிக்கொண்டு அண்ணனை விட்டுவிட்டு தனியே வீட்டுக்கு வந்துவிட்டேன். அம்மாவிடமோ அப்பாவிடமோ இதை தெரியாமல் பார்த்துக் கொண்டேன். பின்னாளில் நாங்கள் கோலி விளையாடுவது அப்பாவுக்குத் தெரிந்து நன்றாக டோஸ் வாங்கியது வேறு கதை.

Sunday, September 27, 2009

"கனவு தேசம்"

"Onsite". சம்பளத்துக்கு கணினித்தொழில் செய்றவுங்களுக்கு இது ஒரு மந்திர சொல். அதுவும் "அமெரிக்கா" என்றால் சொர்க்கத்துக்கே போறா மாதிரி... அப்பிடி என்ன அமெரிக்காவுல இருக்குது? இந்த "கனவு தேச"த்தில எல்லாருமே கால் பதிக்க விரும்பும் காரணம் என்ன? அங்கே போனவர்களில் பலர் திரும்பி இந்தியா வரமாட்டேன்னு அடம் பிடிக்கும் மர்மம் என்ன? நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் உண‌ர்வுப்பற்றும் உறவுப்பற்றும் அதிகமாக இருக்கும் எந்த இந்தியனுக்கும் மேற்சொன்ன "கனவு தேச" கருத்துக்களில் மாறுபாடு இருந்தாலும், அந்த நாடு பிற நாட்டு மக்களை தன் வசம் ஈர்க்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. காரணம் என்னவாக இருக்கலாம்?


1. முழு முதற் காரணம் "பணம்":
இந்தியாவில் செய்யும் அதே வேலையை அங்கே செய்தால் கிடைக்கும் பன்மடங்கு அதிகமான‌ பணம்.


2. மிகவும் சீர்படுத்தப்பட்ட தூய்மையான கட்டமைப்பு:
சாலைகளில் ஆரம்பித்து, பொதுக் கழிப்பிட அறைகள் வரை சீரானவை, ஒழுங்குபடுத்தப் பட்டவை மற்றும் மிக முக்கியமாக சுத்தமானவை. மேலும் ஒரு இடத்தின் சீதோஷ்ண நிலையில் இருந்து இன்னொரு இடத்துக்கான பாதையுடன் கூடிய தொலைவை கணக்கிட்டு காட்டும் கருவிகள் வரை மக்களுக்கு பயனுள்ள, மக்களுடன் ஒன்றி இருக்கும் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி.


3. கட்டுப்பாடற்ற ஆனால் சட்டத்திற்குட்பட்ட சுதந்திரம்:
"இந்தியாவுல இல்லாத சுதந்திரமா?"ன்னு கேட்க நினைச்சாலும், இந்தியாவில் சாத்தியப்படாத "அனைவருக்கும் ஒரே சட்டம்" அங்கு 95% அமலில் இருக்குது. அமெரிக்காவின் சட்டங்களை ஒரு வரியில சொல்லனும்னா "மத்தவங்கள தொந்தரவு செய்யாம 'யாரும்' 'எதுவும்' செய்யலாம்".

4. பிரபலமான சுற்றுலா தளங்கள்:
மக்களை மெய் சிலிர்க்க வைக்கும் பல்வேறு வகையான கேளிக்கை மையங்களும் கலை-விளையாட்டு அரங்குகளும் அருங்காட்சியகங்களும் விற்பன்ன அரங்குகளும் மிகப் பிரபலமான சுற்றுலாத் தளங்களாக‌ ஏராளமாக‌ அந்நாடு முழுவதும் விரவிக் கிடக்கின்றன.


5. பண்பாக‌ பேசும் மக்கள்:
அமைதியாக பண்பாக‌ பேசும் மக்கள் (பழகும் மக்கள்னு சொல்ல முடியாது, ஏன்னா யாரும் புதியவர்களிடம் அவ்வளவு சீக்கிர‌மா ஒன்றிப் பழக மாட்டங்க). மேலதிகாரிகளின் கனிவான பேச்சு, நாம் சொல்லும் காரணங்களை வாய் பிளந்து கேட்டுவிட்டு "சரி" என்று சொல்லும் பாங்கு - இவை இந்தியாவில் தன் மேலதிகாரியிடம் சுத்தமாக எதிர்பார்க்க முடியாதது. குடுத்த வேலையை 'முடிக்க முடியல', 'தப்பா செஞ்சுட்டேன்' போன்ற விஷயங்கள அழகான வார்த்தைகள போட்டு (மேலதிகாரியாவே இருந்தாலும்) ரொம்ப சுலபமா சமாளிக்கலாம் / தப்பிச்சுகலாம்.

குறிப்பு: அப்புற‌ம் எதையுமே மறைக்காத அந்த பொண்ணுங்க (இதுக்கும் மேல இந்த பாயிண்ட் பத்தி வேண்டாம் :)).

6. தரமான எலக்ட்ரானிக் பொருட்கள்:
விலை குறைவான, தரமான எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் அதற்கான மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவை. எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருளையும் வாங்கிய பின் பிடிக்கலைன்னா ஒரு மாதத்திற்குள் திருப்பித்தந்துவிட்டு மாற்றுப்பொருளையோ அல்லது பணத்தையோ எந்த பிரச்சினையுமின்றி வாங்கிச்செல்லலாம்.

7. சீரான அரசு நிர்வாகம்:
மக்களின் அனைத்து வகையான‌ தேவைகளையும் அதற்கான வழிமுறைகளையும் எளிமைப்படுத்திய அரசு நிர்வாகம் - உதாரணமாக‌ பேருந்து, ரயில், விமானம் போன்ற கனரக போக்குவரத்து மற்றும் அதன் நேர மற்றும் விலைகளின் அட்டவணையில் தொடங்கி ஒவ்வொரு இடத்தின் முகவரி-வரைபடத்துடனான‌ ஒருங்கிணைக்கப்பு வரை யாரும் எங்கிருந்தும் துல்லியமாக‌ அறியும் வகையிலானவை.


8. சொகுசு வாழ்க்கை:
மேலே இருக்குற காரணங்களே ஒருத்தனோட சொகுசு வாழ்க்கைக்கு போதுமானது, ஆனா அங்க சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க எந்த அடிதடியோ போட்டியோ இல்ல. ஏன்னா, அவங்கவங்க தன்னோட தனிமையை அனுபவிக்கிறதோட இல்லாம, அடுத்தவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையை தொந்தரவு செய்யிறதில்ல‌.

சொகுசுதான்! எல்லாமே சொகுசுதான். சரி சரி... இவை எல்லாமே அமெரிக்காவில் மட்டும் கொட்டி கிடக்க காரணங்கள் என்ன, அதையும் பார்க்கலாம்:

1. அவர்களின் கலாச்சாரம்:
எந்த நேரத்திலும் யாரும் யாரையும் (ஆண் பெண் வித்தியாசமில்லாம) சார்ந்து இருக்குற‌தில்ல... அடுத்தவரின் விருப்பு வெருப்புக்கு முழு மரியாதை கொடுக்குறாங்க... இறந்த காலத்திலயோ இல்ல எதிர் காலத்திலயோ வாழாம அப்போ இருக்குற இடத்தையும் மனதையும் பணத்தையும் அங்கயே அப்போவே (நிகழ்காலத்துல) அனுபவிக்கிறாங்க... சேமிக்கிறேன்னு சொல்லி பணம்-பொருளை யாரும் பதுக்குறது இல்லை, அதனால தாராளமா எல்லா பணமும், பொருளும் பொதுமக்கள் வர்த்தகத்துலயே இருக்கு.

2. மக்கள் தொகை:
ரொம்ப ரொம்ப கம்மியான மக்கள் தொகை. அதுவும் 90%-க்கும் மேல் நல்ல வசதி படைத்தவர்கள். மிகப்பெரிய நிலப்பரப்பு.

3. அமெரிக்கா மற்ற நாடுகள் மேல செலுத்தும் ஆதிக்கத்தால கிடைக்கும் முதலீடுகளும், அதனால் மலிவான விலையில் கிடைக்கும் பல அத்தியாவசிய‌ பொருட்களும்.

4. எல்லாவற்றிற்க்கும் மேலாக‌, தன் கடமையை இயன்ற அளவு நேர்மையாக செய்யும் அரசாங்கம்.

சரி... அமெரிக்காவுல நீண்ட நாள் இருக்குறதால என்ன மாதிரியான எண்ணங்கள் ஒரு தமிழனுக்கு தோணும்னு பாக்கலாம்:

1. எது செய்தாலும் சட்ட திட்டங்களை பாக்கனும் (எதுக்கும் ஒரு லிமிட் இருக்குல்ல?), அதனால வாழ்க்கையே ஒரு எந்திரம் மாதிரி இருக்குற‌தா தோணும். போகப்போக அதுவே பழகிட்டாலும், ஒரு கட்டத்துல வெறுமையா மாறிடும். உதாரணத்துக்கு தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கனும்னு ஆசை இருந்தா நாம நம்ம வீட்டு முன்னாடியோ இல்ல நாம நெனைகிற இடத்துலயோ அத பண்ண முடியாது. ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு 10-20 மைல் தள்ளி ஏதாவது ஒரு இடத்துல ஒன்னுகூடி வெடி வெடிச்சுக்கலாம் அதுவும் தீபாவளி அன்னிக்கேன்னா முடியாது. அதுக்கும் கூட அனுமதி வாங்கனும், இல்லைன்னா கண்ணாடி எண்ணனும் (அங்க எல்லாம் கம்பி கிடையாது கண்ணாடி அறைதான்). இவனுங்க அனியாயத்துக்கு ரூல்ஸ் (rules) பாக்குறனுங்கடான்னு தோணும். இத்தனை நாளா சொகுசு வாழ்க்கையா இருந்தது திடீர்னு 'இது எனக்கு பிடிக்கல விடு நான் எங்க‌ ஊருக்கே போறேன்'னு தோண ஆரம்பிச்சுடும்.

2. நாம நம்மலோட வருங்கால சேமிப்பை மனசுல வச்சு வச்சு ஒவ்வொரு இடத்துலயும் செலவு பண்றதால அமெரிக்கர்கள்ட்ட இருந்து ஒரு அன்னியமாவே வாழ்ந்துட்டு இருப்போம் (மனதளவிலும் சரி, வெளி இடங்களிலும் சரி).

3. கவர்ச்சிப் பொண்ணுங்கள பாத்தா, பொது இடம்னு கூட பக்காம வச்ச கண்ணு வாங்காம பாக்குறதால (கூடவே பொறந்தது என்னிக்கும் போகாது) சுத்தி இருக்குறவங்களோட ஏளனப் பார்வைக்கு ஆளாகனும்.

4. என்னதான் சொகுசா வாழ்ந்தாலும் 'இது ஒரு அன்னிய நாடு, இவங்கெல்லாம் அன்னிய மக்கள்' என்ற எண்ணம் மனசுல இருந்துட்டே இருக்கும்.

5. சொந்தம் நட்பு வட்டங்களின் முக்கிய நிகழ்வுகளான திருமண‌ம், குழந்தை பிறப்பு மாதிரி விஷேஷங்கள்ல கலந்துக்க முடியாம போறப்போ, ஏதும் துக்க நிகழ்ச்சிகள்ள பங்கேற்க முடியலங்குறப்போவும், ஒரு குற்ற உணர்ச்சி வரும். சிலருக்கு அப்பா அம்மா சகோதர சகோதரிகள் மற்றும் முக்கிய நண்பர்கள பிரிஞ்சு ரொம்ப நாள் இருக்க முடியாதுங்கறது புரியும்.

6. இந்த மாதிரி கட்டமைப்பு இந்தியாவுல எப்போ வரும்க‌ற ஏக்கம் கண்டிப்பா மேலொங்கி நிக்கும். ("நீங்கல்லாம் அமெரிக்கா அமெரிக்கான்னு அங்க போயி அமெரிக்கனுக்கு வேலை செஞ்சுட்டு, இந்தியாவ குற்றம் சொல்றியா"ன்னு யாரும் கேட்டாங்கன்னா அவங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லைங்க‌றதையும் தாண்டி, இப்பிடியா மூஞ்சில அடிச்சா மாதிரி கேக்குறதுன்னு அவங்க மேல கோபம் வரும்).

7. எதுவும் எதிர்பாராத பிரச்சினை என்று வந்து, அப்ப கை கொடுக்க கூட‌ யாருமில்லங்குற ஒரு இக்கட்டான‌ நிலை வரும்போது 'என் இந்தியாவை விட மிகச்சிறந்த நாடு உலகத்துலயே இல்ல'-ன்னு தோணும்.

8. நண்பர்கள் யாராவது இந்தியாவில் எடுத்த புகைப்படமோ இல்ல வீடியோவோ இமெயில்ல‌ அனுப்புனா, 'இதெல்லாம் இல்லாம எவ்ளோ கஷ்டம இருக்கு தெரியுமா?'‍ன்னு மனசு அழும்.

9. முக்கியமா சோறு. என்னதான் ஹோட்டல்ல சாப்பிட்டாலும், மனைவி சமச்சு போட்டாலும் (திருமணமானவங்க), ஊருக்கு போயி பழைய சாப்பாட்டயாவது அம்மா கையால‌ சாப்பிடனும்னு மனசு ஏங்கும்.

மொத்தத்துல, பொருளை ஈட்டும் நோக்கத்தோட‌ ஒரு குறிப்பிட்ட காலம் அமெரிக்கா போகலாம், தங்கலாம், அதன் சுகங்கள அனுபவிக்கலாம், ஆனால் சம்பாதித்துவிட்டு சொந்த நாட்டில்தான் நிரந்தர வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். எவருக்கும் அவரோட‌ சொந்த நாட்டுல வாழ்ற‌துல இருக்குற திருப்தியும் நிம்மதியும் அந்நிய நாட்டுல‌ முழுமையா கிடைக்காதுங்கறது மட்டும் உறுதி. இதையெல்லாம் தாண்டி அங்கேயே தன் எஞ்சிய‌ வாழ்க்கையை வாழ‌ நினைத்து இந்தியா திரும்ப மறுக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன். அது அவர்களுடைய‍ விருப்பம். அவர்கள் மேல் என்னால் பரிதாபப் பட மட்டுமே முடிகிறது.

மீண்டும் சந்திப்போம்!

Saturday, September 26, 2009

நெனச்சேன் நான் அப்போவே நெனச்சேன்...

"ஏன் இவ்ளோ லேட்?"

"அதான் போகும்போதே சொன்னேன் இல்ல?"

"..."

"ஏற்கனவே சாப்பிட்டிருப்பீங்களே?"

"எப்பிடி கரெக்டா சொல்ற‌?"

"இத கூட புரிஞ்சுக்கலைன்னா அப்புறம் நான் என்ன பொண்டாட்டி?"

"ம்..."

"வந்தவுடனே சொல்றேன்னு சொன்னீங்களே. சொல்லுங்க‌."

"..............."

"என்ன ஆச்சு? இன்னிக்கும் ஆபிஸ்ல வேலைன்னு சொன்னது பொய்தானே?"

"அதான பாத்தேன், கண்டுபிடிச்சிட்டியா?"

"பொண்டாட்டிகிட்ட பொய் சொல்ற அளவுக்கு அப்பிடி என்ன காரணம்ன்னு கேக்குறேன்"

"இவ்ளோ சொல்றியே, இதையும் நீயே சொல்லேன்"

"பிரண்ட்ஸ் கூட, குடி கும்மாளமா..?"

"பாதிதான் கரக்ட்"

"அப்பிடின்னா, ஏதாவது பொன்னு கின்னு?"

"வீட்டுக்கு வந்த உடனே பேசறதுக்கு வேற விஷயமே இல்லியா உனக்கு? எல்லாம் நாளைக்கு பாத்துக்களாம்..."

"இப்போ சொல்ல போறீங்களா இல்லியா?"

"ம்..... உனக்கு இப்போ என்ன தெரியனும்?"

"யாரவ‌?"

"கூட வேலை செய்றவ, அப்பா‍ அம்மா சொந்தம் பந்தம் இல்லாத ஒரு அனாதை பொண்ணு"

"அதனால‌? கல்யாணமாயி பொண்டாட்டி புள்ளன்னு எதுக்கு அப்புறம்? நெனச்சேன், அடிக்கடி ஆபிஸ்ல வேலை வேலைன்னு டெய்லி லேட்டா வர்றது... புள்ளைங்ககிட்ட கூட சரியா முகம் குடுத்து பேசாதப்போவே நெனச்சேன்"

"இப்போ எதுக்கு இப்பிடி பொலம்பிட்டு இருக்க?"

"'சாரோட வீட்டப் பாக்கலாம்னு வந்தேன்'-னு சொல்லி அன்னிக்கு மினுக்கிகிட்டு வீட்டுக்கே வந்ததுமில்லாம பொண்டாட்டி பக்கத்துல இருக்குறதுகூட கண்டுக்காம‌ உரசிகிட்டே நின்னாளே, அவதானே? நெனச்சேன்... நான் அன்னிக்கே நெனசேன்... வெட்கங்கெட்டவ‌."

"இப்போ எதுக்கு தேவை இல்லாம அர்ச்சனை பண்ற?"

"இல்லங்க, உங்களுக்கு தெரியாது ஒரு பொண்டாட்டியோட‌ மனசு என்ன பாடு படும்னு."

"ம்? அப்டியா? அது ஒரு சீரியல்தான? அந்த கதைல என்ன நடந்தா என்ன? ரெஸ்ட் எடுக்கலாம்னு ஆபிஸ்க்கு லீவு போட்டா, என்ன சீரியல் பாக்க வச்சுட்ட‌... எனக்கு தலையும் புரியல காலும் புரியல. ஏதோ நீ சொன்னேன்னு இன்னிக்கு இந்த சீரியல்ல நடந்தத சொல்லிட்டேன், நாளைக்கு மீதிய நீயே பாத்துக்கோ..." - தன் மனைவியை மெல்ல அணைத்தான்.

"அய்யோ விடுங்க... மத்தியானத்துல போயி... நேரம் காலமே தெரியாது உங்களுக்கு. இதுக்குதான் ஆபிஸுக்கு லீவு போட்டீங்களா?" என்றவளிடம் "இதுக்கெல்லம் எதுக்கு நேரம் காலம்?" என்றான். செல்லமாக முறைத்துக்கொண்டு அவனிடமிருந்து விடுபட்டு "என்ன வெயிலு... எவ்ளோ கூட்டங்க இந்த காய்கறி வாங்கறதுக்குள்ள, அப்பப்பா?" - வாங்கி வந்த காய் கறிகளை உள்ளே எடுத்து சென்றாள்.

Friday, September 18, 2009

உறவுகளும் உணர்வுகளும்...

உறவுகளும் உணர்வுகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஏதோ ஒருவருக்கு நடக்கும் ஒரு நிகழ்வும், நம் உணர்வுகளுடன் நெருங்கிப் பழகிய ஒருவருக்கு நடக்கும் நிகழ்வும் உண்டாக்கும் பாதிப்புகளின் வேறுபாட்டை எல்லோருமே மிக‌ எளிமையாக உணரலாம். அதிலும் சம்பந்தப்பட்டவர் த‌ன் அம்மாவோ, அப்பாவோ, ச‌கோதரனோ, சகோதரியோ, துணையோ அல்லது நம் குழ்ந்தையோ எனும்போது அதன் தாக்கம் மிக வலுவானதாக இருக்கும். அதனை வார்த்தைகளில் விவரிப்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல. அப்படிப்பட்ட நிகழ்வுகள்தான் நம்மை ஒரு எதிர்பார்ப்புடன் வாழவைக்கின்றன.

அந்த வகையில், குழந்தை எனும் புது உறவின் வருகையும் அதனால் எனக்கு ஏற்பட்ட‌ உணர்வுக‌ளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்ததன் விளைவு, இந்த பதிவு.

உறவிலும் நட்பு வட்டத்திலும் பலருடைய குழந்தை பேற்றின் மகிழ்ச்சியை ஏற்கனவே பகிர்ந்திருந்தாலும், என் குழந்தை என்று வரும்போது அந்த மகிழ்ச்சியின் தாக்கம் அளவிட முடியாததாக இருந்தது.

ஒருமாதிரியான‌ சந்தோஷ உணர்வு என் மனைவி கர்ப்பமான‌து உறுதியான‌ அன்றே ஆட்கொண்டது. பிரசவ நாள் நெருங்க நெருங்க.......... அந்த‌ உணர்வுகளை சொல்ல வார்த்தைகளே இல்லை. அதன் வெளிப்பாடுதான் பிரவசத்திற்கு 10 நாட்கள் முன்னதாகவே விடுமுறை வாங்கி எனது மனைவியை கூடவே இருந்து கவனித்துக்கொண்டது.

2008-ம் ஆண்டு, அக்டோபர் 26 ம் நாள். அடுத்த நாள் தீபாவளி. பண்டிகைக்காக வாங்கிய பட்டாசுகளை முந்தின நாள் மாலையே வெடித்து கொண்டாடிக் கொண்டிருந்தோம். திடீரென தோன்றிய பிரசவ அறிகுறிகள் எங்களை அடுத்த 45 நிமிடங்களில் மருத்துவமனையில் நிறுத்தியிருந்தது. மருத்துவர் பரிசோதித்துவிட்டு காலை வரை காத்திருக்க சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதுவரை இருந்த exitement காணாமல் போய் ஒருவித பயம் வந்தது (அதற்கு முக்கிய காரணம், எல்லோரும் சொல்லும் அந்த பிரசவ வலி). இருந்தும் அதை வெளிக்காட்டாமல், என் மனைவிக்கு தெம்பூட்டுவதே என் குறிக்கோளாக இருந்தது. அந்த இரவு, தான் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் 12 மணி நேரத்தை விட மிக‌ நீ....ண்ட‌ நேரம் எடுத்துக்கொண்டது. பின்னர் மருத்துவமனை வராண்டா பெஞ்சில் சாய்ந்து அப்படியே தூங்கியும் விட்டேன். ஆனால் என் மனைவி தூங்கவேயில்லை.

ஒரு வழியாக விடிந்தது. அக்டோபர் 27. தீபாவளி. எங்கள் வாழ்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய‌ நாள்.

மருத்துவர் பரிசோதித்தார். ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியத்தை தனியாக‌ என்னிடமும் என் மனைவியிடமும் விளக்கினார். ஏற்றுக்கொண்டு நான் கையொப்பமிட்ட‌ பின், ஆபரேஷன் அறைக்கு என் மனைவியை அழைத்து சென்றனர். என் மனைவி ஓரக் கண்ணில் மகிழ்ச்சியையும் பயத்தையும் கலந்து ஒரு பார்வை என்னை பார்த்துக்கொண்டே உள்ளே சென்றாள். கடவுள் மற்றும் மருத்துவரின் மேல் இருந்த அபார நம்பிக்கையாலும் இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தையை பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பாலும், இப்போது பயம் போய் முழுமையான சந்தோஷம் என்னை ஆட்கொண்டது.


என் வாரிசைக் காண அப்போது என் நெருங்கிய நண்பனும் அங்கு வந்தான். 4, 5 மணி நேரம் ஆனாலும் அவனுடன் நிற்காமல் அரட்டை அடிப்பேன். ஆனால் அன்று எதுவுமே பேசாமல் அந்த நிமிடங்களை சந்தோஷம் கலந்த ஆவலுடன் கழித்தேன். அவனும் அதை உணர்ந்தவனாய் எதுவுமே பேசாமல் நின்றிருந்தான். 30 நிமிடம் நொடியில் போனது. இதோ எனக்கே எனக்கான ஒரு பிஞ்சு வரப்போகிறது. "இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்" - என யாரையாவது கேட்க வேண்டும் என தோன்றியது. அப்பா, அம்மா, அத்தை, மாமா, சித்தப்பா என அங்கு நின்றிருந்த‌ எல்லோருக்கும் இதே உணர்வுதான் அப்போது இருந்திருக்குமா, தெரியவில்லை. 30 நிமிடத்திற்கு மேல் ஆனவுடன் மீண்டும் பயம் வந்தது. ஏன் இவ்வளவு லேட் ஆகுது? வழக்கமா இவ்வளவு நேரம் ஆகுமா இல்ல ஏதும் பிரச்சினையா? லேசான கண்ணீர்! சுற்றும் முற்றும் பார்த்துக் கொள்கிறேன். எல்லோரும் அவரவர் நினைவுகளில். யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. எல்லாரும் தாமதம் ஆவதை எண்ணித்தான் இப்படி இருக்கிறார்களா, இல்லை ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தான் இருக்கிறார்களா? 30 நிமிஷமா நான் யாரையும் என்ன செய்கிறார்கள் என்று கவனித்திருக்கவில்லை. முதல் 30 நிமிடத்தை தாண்டிய பின், ஒவ்வொரு நிமிடமும் ஒரு மணி நேரம் போல் தோன்றியது. வெளியில் பட்டாசு வெடிக்கும் சத்தம் (தீபாவளி). அவர்கள் மேல் கோபம், மருத்துவமனை அருகில் இப்படி வெடி வெடிக்கிறர்களே என்று.

45 நிமிடம் கடந்து நர்ஸ் ஒருவர் வருவதும் அவரது கையில் ஒரு குழந்தை இருப்பதும் அந்த அறைகுறை கண்ணாடியில் பார்த்தவுடன், என் மனம் பறப்பதற்கு ஆயத்தமான‌து. அந்த நர்ஸ் வெளியில் வந்து குழந்தையைக் காட்டி "பையன்" என்று பிறந்த நேரத்தைச் சொன்னார். நான், "சவி எப்படி இருக்கு?" - ன்னு நர்ஸிடம் கேட்டேன். "அவங்க நல்லா இருக்காங்க சார், நீங்க முதல்ல உங்க குழந்தைய பாருங்க" என்றார். அம்மா, அத்தை உள்பட எல்லோருக்கும் முகத்தில் பெரும் புன்னகை!


குழந்தை "வீல் வீல்" என நிற்காமல் அழுது கொண்டிருந்தது. உறவினர்கள் அனைவரும் "அழாதடா செல்லம்... புஜ்ஜீ... ராஜா..." என கொஞ்ச ஆரம்பித்தனர். அது அழுகையை நிறுத்துவதாய் இல்லை. நானும் கொஞ்சினேன். என் கொஞ்சலைக் கேட்டு அழுகையை நிறுத்த வேண்டும் என மனம் விரும்பியது. ம்ம்ம்ம்ம்ம்ம். நடக்கவில்லை. குழந்தையின் பிஞ்சு விரல்களை தொட்டுப் பார்த்து மகிழ்ந்தேன். இப்போது எனக்கு ச‌வியை பார்க்க வேண்டும்... சுமார் 45 வினாடிகள் கழித்து, நர்ஸ் குழந்தையுடன் உள்ளே சென்று விட்டார். அப்பா, மாமா, மற்றும் செல்போன் வைத்திருந்த அனைவரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டிருந்தனர். பெண் உறவினர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர் - குழந்தை நல்லா கலரு, முகம் அவங்க ஜாடை, கை - கால் இவங்க ஜாடை, மூக்கு அவங்க மாதிரி என ஒவ்வொரு கோணத்தில் ரசித்தனர். நண்பனுடன் இப்போதுதான் பேசுகிறேன், அவனும் வழக்கமான ச்ந்தோஷமும் கிண்டலும் கலந்து வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பினான். நானும் என் நண்பர்களுக்கு SMS மூலம் தகவல் அனுப்பினேன். வாழ்த்துக்கள் call-களாகவும், SMS-களாகவும் வந்த வண்ணம் இருந்தன. call செய்த எல்லோரிடமும், "thanks... நல்லா இருக்காங்க, அப்புறம் பேசுறேன்" என சொல்லி வைத்து விடுகிறேன்.

15 நிமிடம் கழித்து சவியை பார்க்கிறேன். மயக்கமாக இருந்தாள். மயக்கம் தெளிய 2, 3 மணி நேரம் ஆகும் என்றனர். தனி அறை ஒதுக்கப்பட்டு படுக்கையில் தாயையும் சேயையும் அருகருகே படுக்க வைத்தனர். 3 மணி நேரம் கடந்தவுடன் கண் விழித்தாள். பாதி மயக்கம் (உறவினர்கள் வேறு வேலைகளில் மும்முரமாய் இருந்தனர்)... அவளுக்கு பக்கத்தில் குழந்தை, நன்றாக தூங்கிக்கொண்டிருந்தது. குழந்தையை கொஞ்சியபடி அதன் அருகில் நான். என்னை பார்த்தார். புன்னகை மூலம் எனது மகிழ்ச்சியை சொன்னேன். அவளும் பதிலுக்கு புன்னகை செய்துவிட்டு, "பையன் யார் மாதிரி இருக்கான்?" ன்னு கேட்க (குழந்தையை கண்டிப்பாக பிறந்தவுடன் பார்த்திருப்பாள்), "என்னை மாதிரின்னு எல்லாரும் சொல்றாங்க..." என்றேன் நான். சிரித்துவிட்டு "சந்தோஷமா?" என்றாள், "ஆமாம்" என தலை ஆட்டிவிட்டு, "உனக்கு?" என சைகையில் கேட்டேன், "எனக்கும்தான்" என பதில் சைகை செய்தாள். சில வினாடிகளில் மீண்டும் மயக்கமானாள்.

வெளியில் வந்து அமர்கிறேன். பக்கத்தில் அப்பா. அவரது முகத்தில் மகிழ்சியின் தாண்டவம். ஏனோ, அப்பாவையும் அம்மாவையும் இதே தருணத்தில் பின்னோக்கி பார்க்கிறேன். இதே மாதிரிதானே நான் பிறந்த போதும் அவர்கள் இருந்திருப்பார்கள். பலமுறை என் அப்பாவையும் அம்மாவையும் படுத்தி இருக்கிறேன். அவர்கள் மீது கோபப்பட்டும் இருக்கிறேன். இப்போது அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் கேட்கவில்லை. அப்பாவும் அம்மவும் என் கண்களுக்கு புதுமையாக தெரிகிறர்கள். அதற்குப் பிறகும் என் அம்மா அப்பாவிடம் சண்டை போட்டிருக்கிறேன், சண்டை போடுகிறேன், ஆனால் உடனே நானே போய் சமரசம் செய்துகொள்வேன்...

இப்போதும் வெளியில் அதே பட்டாசு வெடிக்கும் சத்தம். ஆனால் இப்போது "கொண்டாடுங்க, எல்லாரும் ஜாலியா தீபாவளிய கொண்டாடுங்க" என்கிறது மனசு. "உலகமே உன் மகன் பொறந்த நாள கொண்டாடுது" என்றார் அங்கிருந்த ஓர் உறவினர். "ஆமாம்" என சிரித்தேன். அன்று இரவு அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு வண்ண‌ வெடி வெடித்து மகிழ்ந்தனர். இரவு 12 மணியைத் தாண்டியும் வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அன்று இரவு முழுவதும் ஈரோடு நகரமே வண்ண மயமாக காட்சி அளித்தது, எங்கள் மனமும்தான்.

இப்போது என் மகனுக்கு 11 வது மாதம். குடும்பத்தை பிரிந்து அமெரிக்காவில் 3 மாதம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம். ஊர் திரும்பும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

எனக்கும் என் மகனுக்குமான நிகழ்வுகளை பிரிதொரு முறை சொல்கிறேன்.

குறிப்பு: இது எனது கன்னிப் பதிவு

தோ.... நானும் வந்துட்டேன்

இத்தனை நாள் வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்து பலதரப்பட்ட‌ BLOGs படிச்சுட்டு கமன்ட் போட்டுட்டு மட்டும் இருந்தேன்... அது ரொம்ப ஈஸியாவும் ஜாலியாவும் இருந்துச்சு. இப்போ தோ, நானும் இற‌ங்கிட்டேன். வாங்க எல்லோருமா சேந்து கலக்குவோம்!!!