தமிழ் நாட்டுல நடக்குற அரசியல் அசிங்கங்கள பார்த்து ஒரு பக்கம் வெறுப்புல நொந்து நூடுல்ஸ் ஆகி கெடக்குது மனசு. ரொம்பவே வெளிப்படையா அடிச்சிக்கிறாங்க, நேத்து வரைக்கும் எதிர் நிலையில இருந்துட்டு பதவி வரும்னா இன்னிக்கு அவங்க கூடவே நின்னு சிரிச்சு போஸ் குடுக்குறாங்க, கொள்ளை அடிக்கலாம்னா சட்டத்தையே மாத்துறாங்க இல்லைன்னா புது சட்டத்தையே உருவாக்குறாங்க, தலைவனோட குடும்ப ஆளுங்கதான் கட்சியோட முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்களா இருக்காங்க, அடிச்ச கொள்ளைய மறைக்க எவனை வேணும்னாலும் தற்'கொலை' பண்றானுங்க, மக்கள் முன்னாடி என்ன பேசுறோம்னே தெரியாம வீரா வேசமா பேசுறானுங்க - அதுக்கு கை தட்ட மக்களும் இருக்காங்க, கொள்ளையடிச்சதுல கொஞ்ச பணத்த செலவழிச்சு ஓட்டுக்கு காசு குடுக்குறாங்க. வெளியில 'மக்களுக்காக'-ன்னு சும்மா சொல்றது (அது வெறும் டயலாக்-தான்னு மக்களுக்கும் தெரியுது ஆனா கவலைப்பட ஆளில்லை), ஆனா பண்ற அத்தனையும் பணம் பணம்... பணத்துக்காக மட்டுந்தான். அதனால என்னோட விருப்ப அரசியல் மாற்றங்ககளை இங்க கனவு காண போறேன்.
==========
எங்கள் அரசியல் இயக்கத்தின் பெயர் 'கனவு'க் கட்சி.
எம் இயக்கத்தின் வரலாற்றை சுருக்கமாக சொல்கிறேன்: இந்த இயக்கம் தோன்றியது 'கனவு' ஆண்டில். நடந்து கொண்டிருக்கும் அரசியல் அசிங்கங்களை கண்டு மனம் பொறுக்காமல் மாற்று காண விரும்பிய வெறும் 40 இளைஞர்களால் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மவுனமாக நடக்கும் நிகழ்வுகளை கண்காணித்து வந்த நம் இயக்கம், அரசியல் மாற்று தேடும் இளைஞர்களை ஒருங்கிணைத்து எப்போதும் அவர்களை தொடர்பில் வைத்து இயக்கத்தை பெரிதாக வளர்த்து வந்தது.
எம் இயக்கத்தின் மேல் மட்ட உறுப்பினர்கள், நடக்கும் முக்கிய நிகழ்வுகளை கண்காணித்து, தேவையானபோது ஒன்று கூடி, அலசி ஆராய்ந்து அதன் தீர்வுகளை வடித்து அறிக்கை மூலம் ஊடகம் வாயிலாக தெரிவித்து வந்துள்ளார்கள். அக்கிரமங்களை எதிர்த்து வீதியில் நின்று போராடி எதுவும் நடந்துவிடப் போவதில்லை என்பதை நன்கு அறிந்திருந்ததாலும், போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களை அவதிக்குள்ளாக்க விரும்பாததாலும், அவை அனைத்தும் வெறும் விளம்பரக் கருவி மட்டும்தான் என்பதாலும் இவ்வியக்கம் இதுவரை அத்தகைய நடவடிக்கைகளை எடுத்ததில்லை. பொதுமக்களை சிரமத்துக்குள்ளாக்கி, அடிதடிகளுக்கு வாய்ப்பாக அப்படி ஓரிடத்தில் கூடி யாரையாவது கண்ணா பின்னாவென்று திட்டி கூக்குரலிட்டுவிட்டு பின் (எதுவுமே நடக்காத போதும்) அப்போராட்டம் வெற்றி பெற்றதாக அறிவித்து பிரிந்து செல்வதில் எம் இயக்கத்துக்கு உடன்பாடில்லை.
அப்படி நடந்த அக்கிரமங்களுக்கு அரசியல் தீர்வுகளையும், இனி அப்படி நடக்காமலிருக்க செயல் திட்டங்களையும் அறிக்கையாக அந்தந்த நேரத்தில் எம் இயக்கம் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறது. இப்போது அவை அனைத்தும் கோர்வையாக (தொகுதி வாரியாக) "2006-2011 பிரச்சினைகளும் 'கனவு'க் கட்சியின் தீர்வுகளும்" என்ற புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
தற்போது முதன்முதலாக எம் இயக்கம் அரசியல் கட்சியாக மாறி தேர்தலை சந்திக்கிறது. இது இன்னுமொரு அரசியல் கட்சி அல்ல என்பதை எங்களின் கடந்த ஐந்து ஆண்டுக்கான செயல்பாடுகளே விளக்கும்.
எம் கட்சிக்கு என்னைத் தலைவனாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எமது கட்சி இந்த 2011 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்குகிறது. எங்களை எதிர்த்து நின்று தேர்தலை சந்திப்பவர்களை பற்றியோ அவர்களின் அரசியல் / பண பின் புலங்களைப் பற்றியோ எந்த விவரமும், கவலையும் எங்களுக்கு இல்லை.
எங்கள் கட்சி வேட்பாளர்களின் தகுதியானது பின்வரும் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது (ஜாதி மற்றும் சொத்து மதிப்பு ஒரு வரை முறை அல்ல):
1. பட்டப் படிப்பு படித்தவர்
2. சரளமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச, எழுத தெரிந்தவர்
3. 25 முதல் 45 வயதுக்குள் இருப்பவர்
4. இதற்கு முன் இருமுறைக்கு மேல் எம் கட்சி சார்பிலோ அல்லது பிற கட்சி சார்பிலோ போட்டியிடாதவர்
5. குற்றப் பின்னணி இல்லாதவர் - அதாவது இதுவரை தண்டிக்கப் படாதவரும், காவல் துறையில் எவ்வித விசாரணையும் நிலுவையில் இல்லாதவராகவும் இருப்பவர்
6. தான் போட்டியிடும் தொகுதியில் நிரந்தரமாக (தேர்தலுக்கு பிறகும்) வசிப்பவர்
7. தேர்தல் பணிக்காக கட்சிப் பணத்தைத் தவிர ஒரு பைசா செலவிட முன்வராதவர்
எம் கட்சியின் 2011 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையின் சாராம்சங்கள்:
--> கட்சியின் முதல்வர் வேட்பாளராக 'கனவு உறுப்பினர்' அறிவிக்கப்படுகிறார். அவர் 'கனவு' தொகுதியைச் சார்ந்தவர். அவர் கடந்த 4 ஆண்டுகளாக எம் இயக்கத்தில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். அவர் 1996-ல் M.Sc. கணிதம் முடித்தவர். கடந்த வருடம் முடியும் வரை ஒரு கணித ஆசிரியராக அதே ஊரில் அரசு பள்ளியில் பணியாற்றி வந்தார். அவருக்கு தற்போது வயது 38.
--> அனைத்து அரசு அலுவலகங்களும் கணினி மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அரசு அலுவலக கோப்புக்களும் மாநில அளவில் ஒரியங்கு சேமிப்பில் (centralized storage) கொண்டு வரப்படும்.
--> அரசு அலுவலகங்களையும் சாலைகளையும் நேரடி ஒளி-ஒலி கண்காணிப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
--> அனைத்து அரசு அலுவலகங்களிலும் தொலைபேசி மூலம் நேர-முன் அனுமதி பெரும் முறை அமல்படுத்த வகை செய்யப்படும். அதன் படி, தொலைபேசி மூலம் முன் அனுமதி பெற்று, பொதுமக்கள் நேர விரயமின்றி அந்த அரசு அலுவலகத்தில் தங்கள் வேலையை முடித்து வர வழிவகை ஏற்படுத்தப்படும். முன் அனுமதி பெற்றிருந்தும் அலுவலர் சந்திக்காவிட்டால் அந்த அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
--> போராட்டம் என்ற பெயரில் நகர எல்லையிலோ அல்லது முக்கிய சந்திப்புகளிலோ ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
--> அனைத்து வணிகர்களும் (சிறு வணிகர்கள், கடைகள் உட்பட) தங்களை வணிகர்களாக பதிவு செய்ய வழி செய்யப்படும். அவர்கள் எந்த வித சிறு பரிவர்த்தனையும் கணினியில் பதிந்து ரசீது வழங்க வேண்டும்.
--> விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு எலக்ட்ரானிக் விவசாய அடையாள அட்டை வழங்கப்படும். விவசாய அட்டை வழங்கும் முன் அந்த விவசாயியின் விவசாய நிலங்களின் விவரங்களும், அவற்றின் மதிப்புகளும், நிலத்திற்கான முறையான ஆவணங்களுடன் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு பதிவு செய்யப்பட விவசாயியிடமிருந்தும் அரசாங்கமே குறிப்பிட்ட அளவு விலைபொருட்களை அரசு நிர்ணயிக்கும் விலையில் வாங்கிக்கொள்ளும்.
--> மின்சாரத்திகான உற்பத்தி செலவும் விநியோக செலவும் பல மடங்காக இருக்க அதன் மூலமான வருவாய் மிகவும் மோசமாக இருக்கிறது. வருவாயை பெருக்கும் வகையில் மின்சார உபயோகத்திகேற்ப அதன் கட்டணம் மாற்றியமைக்கப்படும். மட்டுமின்றி மின்சாரம் தடைபடும் ஒவ்வொரு மணி நேரத்திகும் உபயோகத்திலிருந்து குறிப்பிட்ட கட்டணம் கழிக்கப்படும். மேலும் மின்சாரம் தடையின்றி கிடைக்க வழி செய்யப்படும். இது ஒரு நீண்டகால செயல் திட்டமென்பதால் அதுவரை பாட்டரிகளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
--> விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தடையற்ற இலவச மின்சாரம் வீணாக்கப்படுவதை தடுக்க மீட்டர் பொருத்தி உபயோகத்தின் அளவு கண்காணிக்கப்படும்.
--> குறைந்த செலவில் தூய்மையான குடிதண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
--> அரிசிக்கான மானியத்தை குறைத்து மற்ற உணவுப் பொருள்களின் மானியங்களை உயர்த்துவது (ரேஷன் கடை மூலம்). ரேஷன் அட்டைகளை அவரவர் வருவாய்க்கேற்ப வகைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அது இயலாத பட்சத்தில் ஒரு குடும்பம் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ரேஷன் பொருட்களை மானிய விலையில் வாங்க முடியாமல் செய்யும் சட்ட மசோதா கொண்டுவரப்படும்.
--> வீடின்றி தவிப்போர், கூரை வீடுகளில் வாழ்வோர் மற்றும் வீதிகளில் வசிப்போருக்கான இருப்பிட குறைகளை தீர்க்க எங்கள் கட்சி பல நிலைகளில் விவாதித்தும் யோசித்தும் வருகிறது. விரைவில் தீர்வுகள் எட்டப்பட்டு செயல் திட்டம் அறிவிக்கப்படும்.
--> அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டுத்தொகை இரட்டிப்பாக்கப்படும், மேலும் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். வருடா வருடம் ஏலம் மூலம் கம்பெனிகளுக்கு காப்பீடு புதுப்பிக்கப்படும்.
--> அவசர சேவை 108 வாகனங்கள் இரட்டிப்பாக்கப்படும்.
--> தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் வங்கிக் காசோலைகள் மூலம் மட்டுமே மாணவர்களிடம் அல்லது பெற்றோர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும். நேரிடையாக எக்காரணம் கொண்டும் பணமாகவோ வேறு விதமாகவோ கட்டணம் செலுத்துவதோ வாங்குவதோ கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.
--> அரசு தினசரி வேலை வாய்ப்பு மையங்களை அமைத்து அனைத்துவித தினசரி வேலைகளுக்கு பணியாளர்களையும் முதலாளிகளையும் ஒருங்கிணைக்கும். 18 வயதைத் தாண்டிய வேலை வேண்டுவோரும், அன்றைய வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் இதில் குறைந்த அளவில் பணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். அரசு பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ/மானவியரின் தந்தைக்கும் தாய்க்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அவர்கள் இந்த மையங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெற்றுக் கொள்ளலாம்.
--> காவல்துறை முறைப்படுத்தப் படும். அந்தந்த மாவட்ட கலெக்டரின் நேரடி ஒளி-ஒலி கண்காணிப்பில் அனைத்து காவல் நிலையங்களும் கொண்டுவரப்படும். ஒரு இயக்கமோ, கும்பலோ, தனி மனிதனோ பொது மக்கள் அல்லது பொது சொத்திற்கு இடைஞ்சல் / சேதம் தரும் எந்த செயலையும் காவல் துறை அனுமதிக்காது, அவர்களை கடுமையாக தண்டிக்கும். நேர முன்-அனுமதி பெரும் முறை காவல் துறை அலுவலகங்களுக்கும் பொருந்தும். பொதுமக்கள் யாரும் காவல் நிலையத்தில் காத்திருக்க தேவை இருக்கா வண்ணம் இத்திட்டம் செயல் படுத்தப்படும்.
--> அனைத்து நகரங்களிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்படும். மழை, வெயில் காலங்களில் நகரத்தை தூய்மையாகவும் நீர் தேங்காமலும் காத்திருக்க வழிகள் ஏற்படுத்தப்படும்.
--> அனைத்து காண்டிராக்ட்களும் வெளிப்படையான மட்டுமே ஏலம் விடப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அத்திட்டத்தின் கணக்கு வழக்குகள் மக்களுக்கு வெளியிடப்படும்.
--> அனைத்து முக்கியமான பேருந்து மற்றும் ரயில் சந்திப்புகளில் அரசே சுத்தமான இலவச பொது கழிப்பிடங்களை அமைத்து பராமரிக்கும்.
--> அரசின் செயல் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள கட்டணமற்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ள இலவச கால் சென்டர்கள் அமைக்கப்படும். மேலும் அனைத்து அரசு அலுவலக பயன்பாடு மற்றும் என்ன பிற சந்தேகங்களையும் அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அமைச்சர்கள், அதிகாரிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் சந்திக்க நேர முன்-அனுமதியும் இதன் மூலமே பெறலாம்.
--> போலி சட்டசபை மரபுகள் தூக்கி எறியப்பட்டு, உண்மையான சபை முறைகள் காக்கப்படும்.
--> எம் கட்சி கூட்டங்களிலோ, எங்கள் உறுப்பினர் வெற்றி பெற்றால், அதன் பின் வரும் அரசு விழாக்களிலோ எந்தவித ஆடம்பர அலங்கார கட் அவுட்டுக்களும் இடம் பெறாது.
--> வானொலி, பத்திரிக்கை, தொலைகாட்சிகளுக்கு அதன் நிகழ்ச்சி வரைமுறைகள் வகுக்கப்படும். செய்திகள், கலை, பொழுதுபோக்கு, விவாதம், விவசாயம், அரசியல், கல்வி, மருத்துவம் என அனைத்து வகைகளுக்கும் குறிப்பிட்ட பகுதிகள் கண்டிப்பாக ஒதுக்க வேண்டும்.
தவிர, ஒவ்வொரு வேட்பாளரும் தான் போட்டியிடும் தொகுதிக்கான தேர்தல் கொள்கை அறிக்கைகளை தொகுதி வாரியாக வெளியிடுவார்கள் - அவற்றில் அத்தொகுதிக்கான தேவைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல் திட்டங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றை அத்தொகுதி உறுப்பினர் வெற்றி பெற்றால், எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வரா விட்டாலும் வெற்றி பெற்ற அவர் சார்ந்த அந்தத் தொகுதிக்கு அத்திட்டங்களை நிறைவேற்றுவார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மேலே சொன்ன இவை அனைத்தையும் நிறைவேற்றுவோம் என உறுதி கூறுகிறோம். மேலும் விவரங்களுக்கு "2006-2011 பிரச்சினைகளும் 'கனவு'க் கட்சியின் தீர்வுகளும்" புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் எங்களின் திட்டங்களின் நோக்கங்களை உணர்ந்து பாதாளத்தில் கிடக்கும் நம் மாநிலத்தை நிமிரச் செய்ய எங்களுக்கு வாக்களிக்க வேண்டுகிறோம்.
==========
-சமுத்ரன்